Friday, March 16, 2012

வேசி வீட்டுத் திண்ணை - சிறுகதை

வருடம் முழுவதும் செய்யும் வேலையை மறந்து ஒருநாள் பொழுதை கழிக்கவும், உலகை மறப்பதற்கும், மடியில் படுத்து உறங்கவும், ஓடிப்பிடித்து விளையாடவும், காமம் கொண்ட உடலை உணவு கொடுத்து அடக்கவும் வேசி ஒருத்தி கொழும்பு நகரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து வந்தாள்.

1764ம் ஆண்டு பைபஸ் என்ற ஆங்கிலேயர் மெட்ராஸ் கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து கண்டியை ஆண்டு வந்த ராஜாவுடன் நல்லுறவு அமைக்க சிலோன் அனுப்பி வைக்கப்பட்டார். கண்டிராசா ஆங்கிலேயர்களை வணிகம் செய்ய அழைத்தார். ஆங்கிலேயர்கள் கொழுப்பில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார்.  ஆங்கில அரசாங்கம் துறைமுகத்திலிருந்து இறக்குமதி, ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டது.

வேசி வீட்டு திண்ணையில் பல தலைகள் தெரிந்தது. திண்ணையானது நீளமாகவும், அகலமாகவும் பலர் அமர்ந்து கொள்ளும் இடம் கொண்டது. யானைதந்தம், காட்டில் விளைந்த மிளகு, ஜப்பான் காப்பரில் செய்யப்பட்டிருந்த சமையல்பாத்திரங்கள், மதுரா முத்துமாலை மற்றும் பலவிதமான பொருட்களை கைகளில் தூக்கிப்பிடித்துக் கொண்டு சிறுவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தனர். இக்கூட்டத்தினுள் ரமணசிங்கா இலங்கபட்டை எண்ணெய் பாட்டிலை கையில் பிடித்திருந்தான். அவன் முதலாளி குணசேனா வேசி வீட்டு திண்ணை முன்னேயிருந்த தோட்டத்தினுள் திரிந்து கொண்டிருந்தார்.

 வேசி கதவை திறந்து வெளியே வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், தோட்டத்தின் முன்பு வரிசையாய் நின்று கொண்டிருந்த ஊர்தலைவர்கள், தொப்பை வைத்த இலவங்கபட்டை தோட்ட முதலாளிகள், உடல்பசி தேடி வந்தவர்கள் வேசியை பார்த்தனர். தலைக்கு கொண்டை போட்டு, அதன்மீது பூவை சுற்றி, கண்களுக்கு மை இட்டு, முலைக்காம்பு சேலை நுனியில் தெரியும் படி இறுக்கமாய் சேலை கட்டியிருந்தாள் வேசி.

வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

இலவங்கபட்டை சிலோனில் கொழும்பு, மதுரா, கேளி போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்தது. 12,000 பேருக்கும் மேல் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இலவங்கபட்டை காடுகளில் பயிரிடுவதால் வேலை பார்ப்பவர்களின் உயிர்களுக்கு யானை, எருமை, கரடி போன்ற விலங்குகளால் உயிருக்கு பாதிப்பு இருந்தது. அதற்காக இலங்கபட்டை பயிரிடும் தோட்டத்தை சுற்றி வேலிகள் போடப்பட்டிருக்கும். 

குணசேனாவிற்கு இலங்கபட்டை தோட்டம் காட்டின் பல இடங்களில் இருந்தது. அங்கு வேலை செய்வோரின் பெயர் கொண்ட புத்தகம் ரமணசிங்காவிடம் இருக்கும். இலங்கபட்டை பற்றி ரமணசிங்காவிற்கு குணசேனா கற்று கொடுத்தார். இலவங்கபட்டை யில் இருவகைகள். ஒன்று நல்ல மணமும் உணவுக்கு சுவையை தரக்கூடியது, இன்னொன்று இருபத்திஜந்து அடி முதல் முப்பது அடி வளரும் சுவையற்றது உணவுக்கு உதவாது. நல்லவகை இலவங்கபட்டை பயிரிட்ட மூன்று வருடங்களில் ஜந்தடி முதல் ஆறாடி உயரம் வரை மரம் போல் வளரும். கிளைகள் வரும். பூக்கள் வரும். பூக்களிலிருந்து வரும் பழங்கள் புளிப்பு சுவை கொண்டது. யானைகள் இப்பழங்களை சாப்பிடுவதற்கு ஆள் இல்லாத இரவு நேரங்களில் தோட்டத்திற்கு வரும். 

குணசேனா காட்டில் வளர்ந்தவர். அவருக்கு காட்டை நன்கு தெரிந்திருந்தது. வீசும் காற்றை வைத்து நடக்கப்போவதை கணித்துவிடுவார். ஒருநாள் இரவில் பறவைகளின் கீச்சுச்சப்தம், மரக்கிளைகள் ஒடியும் சப்தம் கேட்டு எழுந்தவர் கையில் தீபந்தத்துடன் தோட்டத்தினுள் நடந்து சென்றார். பத்து யானைகள் இலவங்கபட்டை மரத்திலிருந்த பழங்களை பறித்து சாப்பிட்டிக் கொண்டிருந்தது. யானைகள் பழங்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல் மரத்தையே ஒடித்துப்போட்டுவிடும். அதிகநஷ்டம் உண்டாகும். குணசேனா கையிலிருந்த தீ பந்தத்தை கொண்டு யானையை விரட்ட முயன்றனர். யானைகள் அசையாது ஒவ்வொரு பழமாக தின்று மரத்தை சாய்த்து கொண்டிருந்தது. குணசேனா தோட்டத்திலிருந்த கூலியை அனுப்பி மிஸ்டர்நார்தை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ்டர்நார்த் ஸ்கார்லாந்த் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு யானை வேட்டை பிரியர். தன் இருபது வருட சிலோன் வாழ்க்கையில் சுமார் இருநூறு யானைகளையாவது சுட்டுக்கொன்றிருப்பார். கையில் துப்பாக்கியுடன் தோட்டத்திற்கு வந்து பத்து யானைகளையும் சுட்டுக் கொன்றார். குணசேனா இதை கொண்டாடுவதற்கு மறுநாள் மிஸ்டர்நார்த்தை தோட்டத்திற்கு அழைத்து பனைமரத்து கள் விருந்தளித்தார். 

கொன்ற யானைகளிலிருந்து எடுக்கப்பட்ட துதிக்கைகளை ரமணசிங்கா வேசி வீட்டுற்கு எடுத்துச்சென்றான். திண்ணையில் அமர்ந்து கொண்டு தோட்டத்தை வேடிக்கை பார்த்தான். அவ்வாறு பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா ஒரு அநாதை. குணசேனா அவனை எடுத்து வளர்த்தார். குணசேனா ஒவ்வொரு முறை வேசி வீட்டிற்கு வரும் போதும் ரமணசிங்காவை கூடவே அழைத்து வருவார். அவன் கையில் வேசிக்கு கொடுக்க வேண்டிய பரிசுப்பொருள் இருக்கும். வேசி ஆண்களின் முகம் பார்த்தோ இல்லை புஜங்களின் பலம் பார்த்தோ அவர்களை தேர்தெடுப்பது இல்லை. அவர்கள் கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் கொண்டே ஆண்களை தேர்ந்தெடுத்தாள். தன்னை புரிந்த ஆண் தனக்கு விருப்பமான பரிசுப்பொருளை கொண்டு வந்திருப்பான் என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது. குணசேனா வேசியை பார்க்கவரும் நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைப்பார். பரிசுப்பொருளை வாங்க வெளியே வந்த வேசியின் வயிறு பெரிதாய் இருந்தது.  

வேசி மாசமாய் இருப்பது ஊரில் பலருக்கு தெரிய வந்தது. கர்ப்பகாலங்களில் வேசி யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பது ஊரின் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ரமணசிங்கா அதனால் தினமும் பார்க்க வருவான். இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசுவார்கள். தினமும் இலவங்க மரங்களுடன் பேசிப்பேசி அலுத்துப் போயிருந்தவனுக்கு அவளுடனான பேச்சு ஆனந்தத்தை அளித்தது. சூரியன் மறையும்வரை அவளுடன் பேசிவிட்டு செல்கையில் திரும்பி திண்ணையை பார்த்து செல்வான்.

வேசி இதுவரை ஏழுமுறை கருத்தரித்து ஏழு ஆண்பிள்ளைகள் பெற்றிருக்கிறாள். ஏழில் ஒன்றும் உயிருடன் இல்லை. பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிட்டாள். ஊர்காரர்களுக்கு வேசியின் செயல் கிறுக்குத்தனமாக தெரிந்தாலும் வேசியிடம் அதற்கான உறுதியான காரணங்கள் இருந்திருக்கலாம். வேசிக்கு பெண்குழந்தை பிறந்தது.

கூர்மையான கத்தியால் இலவங்க மரத்தில் மேலிருந்து கீழாக கீறினால் பிசுபிசுவென்று கீறும் இடத்திலிருந்து வரக்கூடாது. அவ்வாறு இருப்பவை அறுவடைக்கு தயாரானவை. அம்மரங்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட மரத்தின் சொரசொரப்பான வெளிப்பகுதி நீக்கப்படும். இவ்வாறு நீக்கப்பட்ட இலவங்கப்பட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கட்டப்பட்டு பெரிய மூடைகள் ஆக்கப்படும். இம்மூடைகள் பத்திரமாக குடோனில் கொண்டு சேர்க்கப்படும்.

ஆங்கில அதிகாரி ஒருவன் குடோனில் இலவங்கபட்டைகளின் தரத்தை பரிசோதனை செய்தான். அவன் அருகில் ரமணசிங்கா, குணசேனா நின்று கொண்டிருந்தனர். காவிநிறத்திலிருக்கும் இலவங்கபட்டை நல்லமணமும் இனிப்பு சுவையும் கொண்டது. அடர்காவிநிறத்திலிருக்கும் இலவங்கப்பட்டை மணமற்ற கசப்பு சுவை கொண்டது. 2500 மூடைகள் காவிநிற இலவங்கப்பட்டை ஜரோப்பாவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் ஏற்றமதி செய்ய வேண்டுமென்று ஆங்கில அதிகாரி கூறினான்.

தென் அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு இஞ்ச் இலவங்கபட்டை தினமும் உணவில் கலந்து சாப்பிட அளிக்கப்பட்டது. சுரங்கத்திலிருந்து வெளியாகும் நச்சுவாயுவை சுவாசிப்பதனால் ஏற்படும் சுவாச கோளாறுகளை இலங்கம் சரி செய்தது. இலவங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு குணசேனா ஒவ்வொரு மூடையிலும் கொஞ்சம் மிளகு சேர்த்து கட்டச்சொன்னார். மிளகு தரும் வெப்பம் இலவங்கபட்டை நமத்துப்போகாமல் பாதுகாப்பதோடு இலவங்கத்தின் சுவையையும் அதிகரித்தது. இந்த ஏற்றுமதியால் குணசேனாவிற்கு நல்ல லாபம் கிடைத்தது.

வேசியின் மகளுக்கு யார் அப்பா? என்ற கேள்விக்கான பதிலை ஊரிலுள்ள ஒவ்வொரு ஆணும் தன் பெயரை சொல்லிக் கொண்டான். வேசிக்கு மட்டும் யார் அப்பா என்பது தெரிந்திருந்தது. அது பற்றி வேசி யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வேசி தன் மகளுக்கு பிலோமி என்று பெயரிட்டாள். பிலோமி பிறந்த பின்பு வேசி எவருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. அவள் வீட்டிற்கு வரும் ஆண்கள் உண்டு, உறங்கி, பிலோமியுடன் விளையாடிச் சென்றனர்.

தொடர்மழையால் மழைநீர் குளங்கள் அமைத்திருந்தன. குளங்கள் எங்கும் கொசுக்கள் முட்டை பொரித்து கொழும்பு நகரெங்கும் குண்டு கொசுக்கள் மனிதர்களை கடித்துத்திரிந்தன. ஊரெங்கும் காலரா பரவியது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்தவர்கள் இறந்தனர். ஆங்கிலேயர்கள் காலரா பரவியிருக்கும் கொழும்பு நகர வீதிகளில் நடந்து செல்ல பயந்தனர். தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மிஸ்டர்நார்த் இறந்து போனார். அவர் சடலத்தை சென்று பார்த்து வந்த குணசேனாவிற்கு காலரா தொற்றிக் கொண்டது. நாளிற்கு இருபதுமுறை வயிற்றுப்போக்கு போனது. காட்டிலிருந்து பச்சிலை அறைத்து தின்று பார்த்தார் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. காய்ச்சலும் கூடிக்கொண்டே சென்றது. ரமணசிங்காவிடம் தன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகிறது சீக்கிரமே சாகப்போவதாக கூறினார்.

ரமணசிங்கா குணசேனாவை பல்லக்கில் வைத்து வேசி வீட்டிற்கு கூட்டிச் சென்றான். வேசி வீட்டு முற்றம், திண்ணை, தோட்டம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. வேசி குணசேனாவிற்கு சுடுநீரில் தேன்கலந்து கொடுத்தாள். வயிற்றுப்போக்கு நின்றது. பாலை சூடு செய்து அதில் மிளகு, இலவங்கம் சேர்த்து சாப்பிட்டதில் காய்ச்சலும் சரியானது. குணசேனாவின் உடல் நன்கு தேறியிருந்தது. பிலோமியுடன் விளையாடினார். வேசி, ரமணசிங்கா, குணசேனா திண்ணையில் அமர்ந்து கதை பேசினர். உற்சாகமான பேச்சு குணசேனாவை பூரணமாக குணமாக்கியது. பிலோமியுடன் விளையாடும் போது பிலோமியின் தொடையில் பெரிய மச்சம் ஒன்று இருப்பதை பார்த்தார். தன்னைப்போல் பிலோமி தொடையிலும் இது போன்ற மச்சம் இருப்பது கண்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தார். குணசேனா மறுநாள் கிழம்பி தன் தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.

குணசேனாவை ஒருவாரமாக காணவில்லை. எங்கு சென்றார் என்ற விவரமும் சரியாக தெரியவில்லை. ஆதிவாசியினர் குணசேனாவின் உடல் காட்டின் உட்பகுதியில் யானையின் பாததடங்களுக்கு அடியில் கிடந்தாக கூறி ரமணசிங்காவிடம் கொடுத்துச் சென்றனர்.

பிலோமி ருதுவானாள். ஊரே அவளின் சடங்கை செய்தது. ரமணசிங்கா குணசேனாவின் சார்பாக செய்யவேண்டிய சடங்குகளை செய்தான்.  மறுநாள் காலை வேசிவீட்டு கிணற்றில் வேசியின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

பழையது போல் திண்ணையில் பல தலைகள் தெரிந்தன. அதில் ரமணசிங்காவும் அமர்ந்து கையில் இலவங்க எண்ணெய் பாட்டிலை பிடித்திருந்தான். பிலோமி கதவை திறந்து வெளியே வந்தாள். பரிசுகளை வைத்து ஆண்களை தேர்வுசெய்யும் வழக்கத்தையே அவளும் கடைப்பிடித்தாள். இலவங்க எண்ணெய் பிலோமிக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா தேர்வு செய்யப்பட்டான். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர். ரமணசிங்கா பிலோமியின் இரண்டு கன்னத்தில் முத்தமிட்டு குணசேனா தங்கியிருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தான். இலவங்கபட்டை பிலோமியின் வாழ்க்கையில் புதிய பாதையை ஏற்படுத்தியது. தினமும் பரிசு கொடுத்து முத்தமிட்டு செல்வது ஊரின் வழக்கமாகிப்போனது.
---------------------------------------முற்றும்-----------------------------------------------
கிரகம்.

இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. http://solvanam.com/?p=19499

பார்வைகள்