Friday, October 15, 2010

மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி (சவால் சிறுகதை)

மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி2999ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம்தேதி,


ரோடுநம்பர் 12, பஞ்சாராகில்ஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தான் சிவா. மழை லேசாக தூரல் போட்டுக் கொண்டிருந்தது. இரவு பத்துமணி என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை. சிகப்புநிற பேக்-ரவுண்ட் நிறத்தின் மீது வெள்ளை நிறத்தில் 'சிகப்புவிளக்கு' என்று எழுதியிருந்த ஃப்ளக்ஸ்-போர்டு தொங்கவிடப்பட்டிருந்த வீட்டின் வாசற்கதவை திறந்து வீட்டினுள் சென்றான் சிவா.


"உங்களுக்கு எந்த ரகம் வேணும். 18யிலிருந்து 20வதா, 21லிருந்து 25, 26லிருந்து 30பதா இல்ல 31க்கு மேலேயா. நாங்க அரசாங்க அனுமதி பெற்ற நிறுவனம். எங்களிடம் இருக்கும் பெண்களுக்கு பாலியல் நோய்கள் கிடையாது. முறையான செக்ஸ் பயிற்சி பெற்றவங்க. அவங்க நிச்சயம் உங்களை சந்தோசப் படுத்துவாங்க" என்ற கூறிய ரிசப்ஷனிஸ்ட் சிவாவிடம் போட்டோ ஆல்பத்தை கொடுத்தாள்.


போட்டோவில் பெண்கள் பிங்கினியில் இருந்தனர். அதுவே அவர்களின் அதிகபட்ச ஆடையாக இருந்தது. ஒவ்வொரு பக்கங்களாக திருப்பினான். போட்டோ ஆல்பத்தின் கடைசி பக்கமும் வந்தது.


"உங்க பிறப்பு எண்ணை சொல்லுங்க?" என்று கேட்டாள் ரிசப்ஷனிஸ்ட்.


சிவா பதினைந்து இலக்க பிறப்பு எண்ணை ரிசப்ஷனிஸ்டிடம் கூறினாள். பிறப்பு எண்ணை கணிணியில் கொடுத்த உடன் சிவா பற்றிய முழுவிவரத்தையும் கணிணி தெரிவித்தது.


"வேற ஆல்பம் இருக்கா?"


"இல்லை. எங்களிடம் இப்ப இவ்வளவுதான்"


சிவா அறையை நோட்டமிட்டான். ஒரு பெண் கடற்கரை மணலில் ஆடையில்லாமல் படுத்திருக்கும் புகைப்படம் சுவரில் தொங்கியது. ஆடையில்லாவிட்டாலும் அந்தபெண் தன் இளமைகளை மறைத்தேயிருந்தாள். அவளை பார்த்தவுடன் சிவாவிற்கு பிடித்துப்போனது.


"சார், நீங்க ஓரினசேர்க்கையாளரா?"


சிவா அவளை ஏறஇறங்க பார்த்தான்.


"எங்களோட ஜீப்லிகில்ஸ் ஆபிஸ்ல நிறைய பேர் இருக்காங்க. நம்ம முதல்வர் சீனிவாசரெட்டியோட பாய் ப்ரெண்ட் பரந்தாமன் கூட அங்க அடிக்கடி வருவார்"


அப்படியெல்லாம் நான் கிடையாது என்பது போல் தலையை ஆட்டிவிட்டு சுவரில் இருந்த பெண்ணின் படத்தை காட்டினான்.


"அவங்க பெயர் காமினி. இப்ப வேற கஸ்டம்மர் கூட இருக்காங்க. நாளை மறுநாள் இரவு 10:30 மணி ஸ்லாட் காலியா இருக்கு. அதில் புக் செய்யவா?"


"நாளைக்கு காலையில ஃப்ரியா இருக்கா?"


"அவங்களுக்கு நாளைக்கு விடுமுறை. இரண்டு நாளைக்கு ஒருக்க தான் வேலை பார்ப்பாங்க. அவங்களும் மனுஷங்கதான?"


"பார்க்கிறது தேவ.... பிழைப்பு, இதுல உங்களுக்கு நேரம், ஸ்லாட், புக்கிங்க், என்னங்கடி கதவிடுறீங்க?"


"ஹாலோ மிஸ்டர் கொஞ்சம் மரியாதையா பேசுங்க. நாங்களாவது உடலவித்து சம்பாதிக்கிறோம். உன்னமாதிரி நாங்க ஒண்ணும் 35 வயசாகியும் வேலையில்லாம அரசாங்கம் கொடுக்கிற ஓசி பணத்தில ஜீவனம் செய்யல. விஷம் வச்சி கொன்னுட்டு நாட்டுக்காக செத்துட்டான்னு சொல்ற JAC கூட்டத்தோட சேர்ந்து போராட்டத்துல கலந்துட்டு போலீஸால நான்குமுறை கைது செய்யப்பட்டிருக்க"


"தெருக்கு தெரு விபச்சார விடுதி நடத்தி பணம் சம்பாதிக்கிற நீங்களும் உங்க அரசாங்கமும் சீ..... தூ......"


"நீ இப்ப வெளிய போறீயா இல்ல போலீஸ்க்கு போன் செய்யவா?"


சிவா சிகப்புவிளக்கு கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கட்டிடத்தின் மாடியை பார்த்தான். அவன் புகைப்படத்தில் பார்த்த பெண் நின்று கொண்டிருந்தாள்.


***********


கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு எழுந்து சென்று அறைக்கதவை திறந்தான் சிவா.


"உனக்கு எப்படி என் வீடு தெரிந்தது?"


"உன்னை பின் தொடர்ந்து வந்தேன்"


"உன் பெயர்..............., வாய்க்குள்ள வரமாட்டேங்குதே"


"காமினி"


முழுஆடையிலும் காமினி அழகாக இருந்தாள். தலை முதல் பாதம் வரை ஒரு முறை காமினியை பார்த்தான்.


"JACயில் உன்னோட பங்கு என்ன?"


"கவிதை எழுதித்தருவது. பேச்சாளர்களுக்கு வசனம் எழுதிக்கொடுப்பது. கவிதையை விட வசனத்திற்கே அதிக பணம் தருகின்றனர்"


"வேற?"


"B.Ed முடிச்சி எட்டு தடவை DSC பரிட்சை எழுதியிருக்கேன். ஒவ்வொரு வருஷமும் ஒரே ஒரு மார்க்குல அரசாங்க வாத்தியார் வேலை கிடைக்காம போயிடுச்சி. நான் வேற OC பிரிவை சேர்ந்தவன். இந்த வருஷம் நிச்சயம் வேலை கிடைச்சிடும்"


"இந்த வருஷம் நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும். ஆந்திரமாநிலம் உடைஞ்சி தனி தெலுங்கானா உருவாகும். நமக்காக ஒரு விடியல் காத்துட்டிருக்கு"


"நீங்க என்ன செய்றீங்க?"


"நீ, நான் என்பது அர்த்தமற்ற சொல். JACயில் மறைமுகமாக வேலை செய்து வருகிறேன். அகிம்சை முறையில் ஒன்றை அடைய அதிக வருடங்கள் பிடிக்கும். 150 வருட அகிம்சை போராட்டம் போதும். என்ன கிடைத்தது? நம் தரப்பில் மடிந்த உயிர்கள் எத்தனை? இனியும் அகிம்சை வேண்டாம். வாலை எடு லட்சியத்தை அடை. நம் லட்சியத்தை அடைய குறுக்கே நிற்பவர்களின் தலையை வெட்டி தெலுங்கானா காளிக்கு உயிர்பலி கொடுப்போம். ஜெய் தெலுங்கானா! ஜெய் தெலுங்கானா!" என்று உரக்க கத்தினாள் காமினி.


இரவின் நிசப்தம் கலைந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சப்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தனர். சிவாவிற்கு காமினியை முதன்முதலில் பார்த்த போது உருவான காம இச்சை முற்றிலும் வடிந்திருந்தது. அவளை இப்போது பார்க்கும் போது சிவாவினுள் ஒருவித பயம் உருவாகியிருந்தது.


*****************


காமினி தொலைப்பேசியில் பேசுவதற்காக நம்பரை டையல் செய்து கொண்டிருந்தாள்.


"நீங்கள் டையல் செய்த எண்ணை தொடர்பு கொள்ள உங்களின் பிறப்பு எண் மற்றும் பெயரினை பதிவு செய்யவும்" என்று சொன்னது ஆட்டோமேட்டிக் வாய்ஸ்.


காமினி தன் பிறப்பு எண் மற்றும் பெயரினை பதிவு செய்த பின்பு


"உங்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்படும். இது அரசாங்க உத்தரவு. நீங்கள் தொடர்பு கொண்ட நபருடன் இப்போது பேசலாம்" என்று கூறி ஆட்டோமேட்டிக் வாய்ஸ் நின்றது.


மறுமனையில் "ஹலோ காமினி, எப்படி இருக்க?"


"நான் நல்லாயிருக்கேன். என்னோட அடுத்த கட்ட வேலை?"


"காந்தி மருத்துவமனை"


*****************


காந்தி மருத்துவமனையில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் சீனிவாசரெட்டி மருத்துவமனையின் வாசலை கடந்து உள்ளே செல்ல அவருடைய பாய்-ப்ரண்ட் பரந்தாமன் முதல்வரை பின் தொடர்ந்து சென்றார். எம்.பி சபிதாரெட்டி இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையினுள் முதல்வர் சென்றார்.


மற்றொரு அறையில் வயது முதிர்ந்த பெண்ணிற்கு இ.சி.ஜி எடுத்துக் கொண்டிருந்தார் டாக்டர். டாக்டர் தட்டையான கைபிடி கொண்ட மிஷினை அந்த பெண்ணின் வயிற்றில் வைத்து அழுத்தினார். இ.சி.ஜி திரையில் அந்த பெண்ணின் குடல் தெரிந்தது.


"டாக்டர், வயித்துல எதும் புண் இருக்குதான்னு பாருங்க. எது சாப்பிட்டாலும் வயித்துல நிக்கமாட்டேங்குது. வயித்தால போகுது"


"அதாம்மா பாத்துட்டு இருக்கேன். வெளிய போகும் போது வயிறு வலிக்குதா?"


"ஆமா டாக்டர்"


"எங்க வலிக்குது. மேல் வயிறா இல்ல கீழ் வயிறா"


டாக்டர் தட்டையான மிஷினை வயிற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் வைத்து அழுத்தி இ.சி.ஜி திரையினை பார்த்தார். முதல்வர் மருத்துவமனைக்கு வந்திருப்பதாக கூறி டாக்டரை அழைத்துச் சென்றாள் அறையினுள் நுழைந்த நர்ஸ்.


"அம்மா, ஒரு பத்து நிமிஷம். முதல்வர் வந்திருக்கிறார். பாத்துட்டு வந்திடுறேன்" என்று கூறி அறையை விட்டு வெளியே சென்றார் டாக்டர்.


டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கிவிட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


காமினி வெளியே குதித்த மறுநிமிடம் மருத்துவமனையில் வைத்திருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது.


*********************


வெடிவிபத்து நடந்த காந்தி மருத்துவமனையை சுற்றி நியூஸ் ரிப்போர்ட்டர்கள் சூழ்ந்திருந்தினர். அதிர்ஷ்ட வசமாக முதல்வர் சிறுகாயங்களுடன் தப்பித்துக்கொண்டார். விபத்தில் உயிரிழந்தோர்க்கு தலா 10 கோடி ரூபாய் பணமும், உடல் பாகங்கள் ஊனம் அடைந்தோர்க்கு 1கோடி ரூபாய் பணமும், சிறு காயங்கள் அடைந்தோர்க்கு 50 லட்சமும் முதல்வர் நிதியிலிருந்து வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. JAC அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருந்தது.


"ஹலோ காமினி, எப்படி இருக்க?"


"உங்களாள எப்படி இந்த நேரத்தில நலம் விசாரிக்க முடியுது. ஏதோ தவறுதல் நடந்திருக்கு. நான் சரியாதான் ப்ளான் செய்திருந்தேன்"


"நாம நம்ம வேலையை சரியா செய்திருக்கோம். அதனால தான் இந்த அளவாவது செய்ய முடிந்தது. ஆனா எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அது அடுத்தமுறை நடக்காம பார்த்துக்கோ"


"இது மாதிரியான தவறு நிச்சயம் அடுத்த முறை நடக்காது" காமினி சொன்னதும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.


*********************


இரவு ஒருவித மயக்கத்தில் இருந்தது. கட்டிலின் மேல் இரண்டு உடல்கள் புரண்டு கொண்டிருந்தன. உடலின் வெப்பம் கூடிக்கொண்டே சென்றது. புணர்ச்சி முடிந்து கட்டிலிலிருந்து எழுந்த முதல்வர் சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தார். மணி 4:30யென காட்டியது. முதல்வர் தன்னுடைய லேப்-டாப்பை ஆன் செய்தார். JAC அமைப்பினரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. எழுத்துப்பதிவு இல்லாமல் ஆடியோ ஃபைல் இணைக்கப்பட்டிருந்தது. அந்த ஆடியோ ஃபைலை மின்னஞ்சலிலிருந்து டெஸ்க்-டாப்பிற்கு காப்பி செய்து கொண்டு ப்ளே செய்தார்.


"ஜெய் தெலுங்கானா! ஜெய் தெலுங்கானா! வரும் நூற்றாண்டில் தெலுங்கானா நிச்சயம் மலரும். அதற்கான அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு தெரியாமலே நடந்துவருகிறது. இதுவரை எத்தனை உயிர்கள் மண்ணில் மடிந்திருக்கின்றன. அத்தனை உயிர்களின் ஒரே லட்சியம் தனி தெலுங்கானா. ஆந்திர மாநிலம் இரண்டாக உடைய வேண்டும். தெலுங்கானா தனி மாநிலமாகவும், ராயல் சீமா, ஆந்திரா இணைந்து வேறொரு மாநிலமாகவும் வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைவரின் தலைகளும் துண்டிக்கப்படும். மாநிலம் முழுவதும் இரத்த ஆறு ஓடும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையற்று மூடப்படும், மாநிலத்தில் சட்டம் சீர்குலையும், சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மாநிலம் சுடுகாடாக மாறும். இன்று அதாவது நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் AP Formation day விழா மேடைக்கு நீ செல்லக்கூடாது. மாநிலம் முழுவதும் இந்த நாள் கொண்டாடகூடாதென்று சொல்ல வேண்டும். இதையும் மீறி நீங்கள் விழா மேடைக்கு சென்றால் உங்களின் தலை தெலுங்கானா பூமாதேவிக்கு காணிக்கையாக அளிக்கப்படும். காந்திமருத்துவமனையில் நீங்கள் தப்பித்தது போல் இந்த முறை நிச்சயம் நடக்காது"


ஆடியோ ஃபைல் நிறைவு பெற்ற பிறகும் சீனிவாச ரெட்டிக்கு பயம் அடங்கவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது போல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சுவர் கடிகாரத்தை பார்த்தார்.


கட்டிலில் படுத்திருந்த பரந்தாமன் "சீனி வந்து படு. இன்னும் விடிய ரொம்ப நேரம் இருக்கு" என்றார். சுவர் கடிகாரத்தில் மணி 5:30 ஆகி இருந்தது.


**********************


நவம்பர் 1 AP Formation day தினத்தில் முதல்வர் சீனிவாச ரெட்டி ஆற்றும் உரையை பார்ப்பதற்காக சிவா, காமினி இருவரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சியானது எந்தவித தாமதமும் இன்றி சரியான நேரத்தில் தொடங்கப்பட்டது. முதல்வர் தொலைக்காட்சியில் தோன்றினார். முடிகள் முழுவதும் நரைத்திருந்தன, தெளிவான முகம், மீசை தாடி முற்றிலும் மழிக்கப்பட்டிருந்தது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். முதல்வரின் வயதை ஒப்பிடும் போது அவரின் பின்னால் அமர்ந்திருந்த பரந்தாமனின் வயது குறைவாகவே இருக்கும்.


"அனைவருக்கும் வணக்கம். இந்த இனியதோர் நாளில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். AP Formation day பற்றி அனைவரும் அறிந்ததே. ஆந்திரமாநிலத்தின் பிறந்த நாள். ஆந்திரா, ராயல் சீமா, தெலுங்கானா என நாம் வேறுபட்டிருந்தாலும் ஆந்திரமாநிலத்தில் நாம் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மற்றொருவருக்கு அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ. நம்முள் பிரிவு வேண்டாம். நம்முள் பிரிவினை உண்டு பண்ண சில தேச துரோகிகள் முயற்சிக்கின்றனர். அவர்களிடம் பேசவோ, பழகவோ வேண்டாம். அவர்கள் JAC அமைப்பினர் என்று தெரியவந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தவும். JAC அமைப்பினர் வரும் நூற்றாண்டு 3000ம் ஆண்டின் முதல் நாள் ஜனவரி ஒன்றாம் தேதி தெலுங்கானா மலரும் என்று கூறியுள்ளனர். ஏன் தனி தெலுங்கானா தேவை? இப்போது எல்லாமே தனிதனியாகத்தானே இருக்கிறது. தெலுங்கானா பள்ளிகளில், கல்லூரிகளில் மற்ற மாணவர்கள் சேர முடியாது, அரசாங்க வேலைகளில் அந்தந்த பகுதியினரே வேலை செய்கின்றனர். வேறு எதற்கு வேண்டும் தெலுங்கானா? தனி தெலுங்கானா அர்த்தமற்ற வேண்டுகோள். இன்று காலை எனக்கு JAC அமைப்பினரிடமிருந்து ஒரு மிரட்டல் வந்தது. அந்த ஆடியோ ஃபைலில் இருப்பது ஒரு பெண்ணின் குரல். அந்த பெண் பற்றிய தகவல் தருவோர்க்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். இதோ அந்த ஒலிநாடா. நீங்களும் அவள் குறலை கேளுங்கள்"


ஆடியோ ஃபைல் ப்ளே செய்யப்பட்டது. "............................................................."


காமினியின் குரலும் அந்த பெண்ணின் குரலும் ஒன்று போல் இருந்தது.


காமினி சிவாவின் அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற போது காமினியிடமிருந்த துப்பாக்கி தரையில் விழுந்தது. சிவா விரைவாய் சென்று துப்பாக்கியை எடுத்தான்.


"ஸாரி... எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


"சிவா உனக்கு பணம் தேவையா? இல்ல நான் தேவையா?"


சிவா துப்பாக்கியை கீழே போட்டான். காமினி தன் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினாள்.


**********************


' முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமற் போய் ஆறுமணி நேரம் ஆயிற்று. பேகம்பேட் ஏர்போர்டிலிருந்து காலை கிழம்பிய முதல்வர் பகல் பனிரெண்டு மணிக்கு நெல்லூரில் நடக்க இருந்த கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் முதல்வர் இன்னும் நெல்லூர் வந்து சேரவில்லை. இப்போது ஹெலிகாப்டர் எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. முதல்வர் என்ன ஆனார் என்பதும் பதிலில்லா கேள்வியாகவே உள்ளது. முதல்வரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது ' என்று பெண் செய்திவாசிப்பாளர் கூறினார்.


டிவியை சுவிட்ச்-ஆப் செய்ய சென்ற சிவாவின் முதுகில் அவன் பின்னால் நின்றிருந்த காமினி ஓங்கி அடித்ததும் சிவா மயக்கம் போட்டு கீழே விழுந்தான்.


*********************


"ஹலோ காமினி, எப்படி இருக்க?"


"அது இருக்கட்டும் ஸார். முதல்வர் இப்ப எப்படி இருக்கார்?"


"இதுவரைக்கும் ஒரு முழுமையான தகவல் கிடைக்கலை. முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பாகங்கள் தரையில் சிதறி கிடந்ததாக சொல்றாங்க"


"என்ன சொல்றீங்க?" என்று கண்கள் விறிய ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி.


"சரி, நான் கேட்ட ஆள் கொண்டு வந்தியா?"


"ஆமாம்" என்று சிவாவை காட்டினாள்.


"காமினி.... வெல்டன்.... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக்க கொன்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.


"நான் எந்த டைமண்டையும் கொண்டு வரல. இவன் ஒரு வேலையில்லா பட்டதாரி. JACயோட போராட்டத்துல கலந்துட்டு பல முறை போலீஸ் இவனை கைது செய்திருக்காங்க. இவனை இரண்டு தட்டு தட்டினா முதல்வர் எங்க இருக்காருக்கிற விஷயத்தை சொல்லலாம்"


"இல்ல காமினி. நீ தான் தப்பா புரிஞ்சிட்டிருக்க. இவர்தான் எங்க JAC அமைப்போட தலைவர் டைமண்ட் சிவா"


"என்ன சொல்றீங்க பரந்தாமன் ஸார்?"


"சின்ன பொண்ணு நீ. ரொம்ப கோபப்பட கூடாது. உனக்கு கொஞ்சம் தெளிவாகவே சொல்றேன். JAC அமைப்போட தலைவர் சிவா, அதன் செயலாளர் நான். எங்களுக்கு இந்த மாநிலம் வேண்டும். நாங்கள் இந்த மண்ணை ஆள வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். தனி தெலுங்கானா அமைவதற்கு சீனிவாசரெட்டி உயிருடன் இருந்தால் நடக்காது என்பது தெரிந்தது. முதல்வரை கொல்ல முதல்வரின் மறைமுக பாதுகாவலரான உன் உதவி எங்களுக்கு தேவைப்பட்டது. முதல்வரை கொலை செய்து அந்த பலியை உன் மீது போடுவது தான் எங்கள் நோக்கம். அதற்காக உன்னை தெலுங்கானாவிற்கு ஆதரவாக செயல்படுவது போல் உன்னை நடிக்கச்சொன்னேன். உன் குரலை பதிவு செய்தோம். காந்தி மருத்துவமனையில் கொல்ல திட்டமிட்டோம் உன் புத்திசாலி திறமையால் முதல்வர் பிழைத்துக் கொண்டார். அடுத்து உன் குரலில் ஆடியோ ஃபைல் ஒன்று அமைத்து முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தோம். இப்போது நீ மாநிலம் தேடும் ஒரு தீவிரவாதி" என்றார் பரந்தாமன்.


"எங்களின் அடுத்த கட்ட முயற்சியான பறக்கும் ஹெலிகாப்டரில் ராக்கெட் வீசி கொல்வது. அதுவும் இப்போது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இனி நாங்கள் இந்த தேசத்தை சுதந்திரமாக ஆளுவோம். எத்தனை உயிர்களை நாங்கள் கொன்றிருக்கிறோம். இஷான்ரெட்டியை நள்ளிரவில் ஓஸ்மானியா யுனிவர்சிட்டி லைப்ரரி முன்பு உயிரோடு தீயிட்டு கொன்றது, பலருக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை என்று நம்ப வைத்தது. இவற்றையெல்லாம் நாங்கள் எங்களுக்காக செய்யவில்லை. தெலுங்கானா பூமாதேவி மனித இரத்தம் வேண்டுமென்று கேட்கிறாள். உன்னையும் பூமாதேவிக்கே காணிக்கையாக கொடுக்கப்போகிறோம்." என்றான் சிவா.


காமினி சிரித்தாள்.


"சாகப்போவது நான் இல்லை. நீயும் உன் தெலுங்கானா கூட்டமும். உங்கள் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கவே நானும் முதல்வரும் போட்ட திட்டம் தான் இது" என்றாள் காமினி.


முதல்வர் இவர்கள் இருந்த அறையினுள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தார்.


போலீஸ் அவர்கள் இருவரின் அருகில் நெருங்குவதற்கு முன்பு பரந்தாமனும், சிவாவும் ஒருவர் மற்றவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டனர். பூமாதேவியின் இரத்த தாகம் இவர்கள் இருவரின் இரத்தம் குடித்ததும் அடங்கியது.


**********************


- 15/10/10

Sunday, August 8, 2010

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)


ஹைய்தராபாத் ஃபிலிம் கிளப்பில் 'Mexican Film Festival' நடத்தப்பட்டது. ஜந்து தொகுப்புகள் கொண்டது. முதல் தொகுப்பாக மெக்சிகன் சூப்பர் ஹீரோ எல் சேன்டோ நடித்த ஜந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன்.


திரையிடப்பட்ட படங்கள் 1963 முதல் 1972 க்குள் வெளியானவை. எல் சேன்டோ மெக்சிகன் சினிமாவின் சூப்பர் ஹீரோ. சேன்டோ ஒரு மல்லியுத்த வீரன். அவனது முதன்மையான தொழில் மல்லியுத்தம் விளையாடுவது. இரவில் மல்லியுத்தம் விளையாடுவான் பகலில் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவுகிறான். சேன்டோ சூப்பர் ஹீரோ என்றாலும் மற்ற சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், பேட்மேன், சூப்பர்மேன் போன்றோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். இவர்கள் செய்யும் சாகசங்களான மணிக்கட்டிலிருந்து வலை வரவைப்பது, வவ்வால் போல் பறப்பது, ஆகாயத்தில் பறப்பது போன்ற எந்தவொரு அபார சக்தியும் இவனிடம் கிடையாது. சேன்டோ நல்லதேக பலமும் கூடுதலாக புத்தி கூர்மையும் கொண்டவன். சேன்டோவை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது அவன் முகத்தில் அணிந்திருக்கும் சில்வர் நிற கவசம்.

சேன்டோவின் அறிமுக காட்சியானது ஒவ்வொரு படத்திலும் மல்லியுத்த களத்திலிருந்து தொடங்குகிறது. சேன்டோ அரங்கினுள் நுழைந்தவுடன் பார்வையாளர்கள் உற்சாக குரலில் அவன் பெயர் சொல்லி வரவேற்கின்றனர். முதலில் அடி வாங்கினாலும் இறுதியில் சேன்டோவே ஜெயிக்கிறான். திரைப்படத்தில் காண்பிக்கும் மெக்சிகோ நகரிலுள்ள மல்லியுத்த களமானது நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் ரெஸ்லிங் மைதானம் போலவே உள்ளது. விளையாட்டின் விதிமுறை, முகத்தில் குத்துவிடுவது, மேலிருந்து வயிற்றின் மேல் விழுவது என எல்லாமே இப்போது பார்க்கும் மல்லியுத்தம் போலவே இருந்தது.

'Anonymous Death Threat' திரைப்படத்தில் சேன்டோ விளையாட்டு முடிந்து தன் அறையில் ஓய்வெடுக்கிறான். அப்போது அவனை தேடி ஒருவர் உதவி கேட்டு வருகிறார். தேடி வந்தவர் தன்னை கொலை செய்யப்போவதாக கடிதம் வந்ததாக சேன்டோவிடம் கூறுகிறார். தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று சேன்டோவிடம் கூறிவிட்டு செல்கிறார். தேடிவந்தவர் சில நாட்களில் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். அவரைப்போலவே நகரத்தில் இரண்டு பேர் கொலைமிரட்டல் கடிதத்தின் பின்னர் கொல்லப்படுகின்றனர். மொத்தம் மூன்று கொலைகள். கொலையில் பணமோ, நகையோ திருடு போகவில்லை. இன்ஸ்பெக்டர் ஒருவர் சேன்டோவுடன் சேர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார். மூன்று கொலைகளுக்கும உள்ள ஒரே ஒற்றுமை கொலைமிரட்டல் கடிதம்.

கதையின் நகர்வு, கொலையை பற்றி விவாதம் செய்வது சுஜாதா கதை சொல்லும் பாணியை ஒத்திருந்தது. சுஜாதாவின் கதாபாத்திரங்களான கணேஷ், வசந்த் போல இந்தப்படத்திலும் சேன்டோவிற்கு உதவியாக ஒரு ஆணும் பெண்ணும் உடனிருக்கின்றனர். மூவரும் கொலை பற்றி விவாதம் செய்கின்றனர். அதே நகரில் நான்காவதாக ஒருவருக்கு இதே போல் கொலை மிரட்டல் கடிதம் வருகிறது. கதை அதன் பின் விறுவிறுப்பாக செல்கிறது. கொலையை யார் செய்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

சேன்டோவை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். ஜேம்ஸ் பாண்ட் ஏற்று நடித்த உளவுத்துறை, போலீஸ் போன்ற பாத்திரங்களில் சேன்டோவும் நடித்திருக்கிறார். 'Santo Vs Blue Demon' என்ற மற்றொரு படத்தில் உலகை அழிக்க திட்டமிடும் விஞ்ஞானியின் திட்டத்தை முறியடிக்கிறான் சேன்டோ. இந்தப்படம் 1970ல் வெளியாகியுள்ளது. படத்தின் கதையானது மெக்சிகோ விஞ்ஞானி 1940ம் ஆண்டு ரஷ்யாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறான். பின்பு அவனிடமிருந்து ரஷ்யர்கள் நியூக்ளியர் பாம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு அவனை துரத்தி விடுகின்றனர். இதனால் கோபமடைந்த விஞ்ஞானி நியூக்ளியர் பாமை சந்திரன் கிரகத்திலிருந்து புவியில் வீசி உலகத்தையே அழிக்க திட்டமிடுகிறான். படத்தின் லாஜிக்கில் எந்தவொரு பிழையும் இல்லை. நூறு சதவீதம் நிகழக்கூடியதுதான். நாற்பது வருட இடைவேளைக்கு பின் பார்க்கப்படும், பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அதன் பிரமாண்டங்கள் இப்போது தெரியவில்லை.

உலக சூப்பர் ஹீரோக்களின் படங்களை பார்ப்பவர்கள் மெக்சிகன் சூப்பர் ஹீரோவான எல் சேன்டோவின் படங்களையும் பாருங்கள்.

வல்லினம் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது

சங்கமம் - சிறுகதை


மழைகாலத்தில் ஒரு நாள் காலையில் சார்லஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியன் எழுந்து தன் வேலையை தொடங்காமல் கருப்பு கம்பளி போர்வையினுள் காலை எட்டு மணி ஆகியும் தூங்கிக்கொண்டிருந்தது. ரோட்டை ஒட்டிய டீக்கடையில் மாஸ்டர் பாலை ஆத்திக் கொண்டிருந்தார். பெஞ்சில் அமர்ந்திருந்த சிலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். சார்லஸ் நெற்றியில் வெள்ளை நிற பேண்டேஜ் கை விரல்களில் சிராய்ப்புடன் முகத்தில் ஒரு வித சோகத்துடன் டீக்கடையை ஒட்டிய பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.


சில மாதங்களுக்கு முன்பு, “டே வசந்த்! என்னடா மணி ஒன்பது ஆவுது இன்னும் கிழம்பாம ஆபீஸ்லயாடா இருக்க மடப்பயலே, மேனேஜருக்கு சோப்பு போட்டது போதும், கிழம்பி நேரா பிரபா ஒயின்ஸ் வந்திருடா” என்று செல்போனில் பேசினான் சார்லஸ். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “ஹலோ! மிஸ்டர் கொஞ்சம் நம்பர செக்பண்ணிட்டு டயல் பண்ணா நல்லாயிருக்கும்” என்றாள் அவள். சார்லஸ் “சாரி” என்றான். “ஓகே சார்லஸ் பரவாயில்லை” என்றாள் அவள். செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை ஆபீஸ் டூவீலர் பார்க்கிங்கில் சார்லஸ் “நேத்து ராங் நம்பர்ல பேசிய பெண்ணுக்கு என் பேரு எப்படி தெரியும்?” என்று வசந்தைப் பார்த்து கேட்டான். ”ஏங்கிட்ட கேட்கிற“, ”சார்லஸ் இதான் அந்த பெண் நம்பர் உனக்கு தெரியுதாம் பாரு“ என்று டயல்டு நம்பரிலிருந்த எண்ணை படித்துக் காட்டினான். வசந்த் ”இது நம்ம கம்பெனி சியூஜி நம்பர் மாதிரி இருக்கே“ என்று கூறிவிட்டு தன் மொபைல் போனில் அந்த நம்பரைத் தேடினான். வசந்த் ”லேகாவோட நம்பர் இது“ என்றான். லேகா யார்? அழகாக இருப்பாளா? திருமணமான பெண்ணா? என்று யோசித்த படி ஆபீஸினுள் நுழைந்தான் சார்லஸ்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமணையின் பிரசவ அறையில் மாலா கட்டிலில் படுத்திருந்தாள். மாலாவின் அம்மா ”பயமா இருக்கா சாவித்திரி பயப்படாதம்மா, மாரியம்மனை மனசுல நனைச்சுக்கோமா“ என்று கைகளை பற்றிக் கொண்டு மகளிடம் ஆறுதல் கூறினாள். அவளின் உடல் முழுவதும் வேர்த்திருந்தது அடிவயிற்றில் பலமாக வலி வந்து கத்த துவங்கினாள்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, இரவில் வேலையை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பினான் சிவா. அந்த அறையில் நான்கு கண்ணாடி சுவர்களும் ஸ்கிரினால் மறைக்கப் பட்டிருந்தன சோனி கலர் டீ.வி, இருவர் படுத்துக்கொள்ளும் அளவு படுக்கை அதன் மீது பழுப்பு நிற கம்பளி, ஆள் உயர கண்ணாடி, சின்ன சமையல் அறை, ஒரு டாய்லட், ஒரு பாத்ரூம் இருந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து வாய்ஸ் சேட்டிங்கில் சிவகாசியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு தொடர்பு கொண்டான் சிவா “அக்கா எப்படியிருக்க?” சிவாவின் அக்கா லதா “நான் நல்லாயிருக்கேன் சிவா” “மச்சான் எப்படியிருக்காரு, குட்டி என்ன செய்றான்”. குட்டி அசந்து தூங்கி கொண்டிருந்தான். லதா “ஒரு பொண்ணு போட்டோ அனுப்புறேன். பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லு,” “அக்கா மெயில்ல பொண்ணு போட்டோ அனுப்புறத இதோட விட்டிருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இந்தியா வந்திருவேன்”. “இதே தான் போன வருஷமும் சொன்ன எங்கவந்த.” “இதோட பத்து போட்டோ பார்த்தாச்சி, ஒன்னும் சரியில்லை”, “என்னடா பேச்சி இது, நீ ஏதும் அமெரிக்காவிலே பார்த்து வச்சிருக்கியா அப்பாவுக்கு செலவு வைக்காம, சரி கடைசியா இந்த பொண்ணு போட்டோவை பாரு, பிடிக்கலைன்னா நீ வந்த பிறகு வேற பார்ப்போம்” என்று மெயிலில் அட்டாச் செய்திருந்த போட்டோவை சிவாவுக்கு அனுப்பினாள் லதா.

சிவாவிற்கு பெண்ணின் போட்டோவை பார்த்ததுமே பிடித்துப் போனது, பெண்ணின் பெயர் மாலா, மாலாவின் சொந்த ஊர் சிவகாசி. படிப்பு எம்.சி.ஏ கோல்டு மெடல், படித்து முடித்த அடுத்து நாளிலிருந்து மாலாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் மாலாவின் அப்பா. சிவாவின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்க மாலாவின் அப்பா சிவாவின் அப்பா கோகுலிடம் கேட்ட போது அவனுக்கு ஜாதகமெல்லாம் கிடையாது என்றார், எங்களுக்கு ஜோசியத்தின் மீதெல்லாம் நம்பிக்கையில்லை, வேண்டுமென்றால் அவன் பிறந்த தேதி, நேரம் சொல்கிறேன் என்றார். கோகுல் கொடுத்த தகவல்களை வைத்து மாலாவின் அப்பா கழுகுமலை ஜோசியரிடம் ஜாதக பொருத்தம் பார்த்து அவர் கொடுத்த நல்ல நாளில் சிவா மாலாவின் திருமணம் நடந்தது. மாலாவின் அப்பா வேலை மாற்றலாகி சென்னைக்கு குடியேறினார்.

சிவா: திருமணம் முடிந்த பின்பு மாலாவையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பினேன். திருமணம் முடிந்த பல நாட்கள் அவளுடன் உடலுறவிலே கழிந்தன. அவளைப்பற்றி அறிந்து கொள்ளவே எனக்கு பல மாதங்கள் ஆகின. அவள் அதிகம் பேச மாட்டாள், விரும்பியதை வாய்திறந்து கேட்க மாட்டாள். நாட்கள் நகர்ந்தன, திருமணமாகி இரண்டு வருஷம் முடிந்தும் குழந்தை இல்லையே என்று ஏங்கத்துவங்கினாள். குழந்தை வேண்டும் என்று ஆயிரம் சிறு பேப்பரில் எழுதி அதை சிவகாசியிலுள்ள மாரியம்மனுக்கு மாலையாக போடும்படி பேப்பர்களை அத்தைக்கு பார்சல் செய்தாள். சில தினங்கள் குளிக்காமலே படுக்கையிலே படுத்துக்கிடந்தாள். தூங்கும் போது தினமும் என்னிடம் குழந்தை எப்ப பிறக்கும் என்று மறக்காமல் கேட்பாள். “இன்னும் கொஞ்ச நாள்ல” என்று பதில் கூறுவேன். ஒரு நாள் இரவில் அழுது கொண்டிருந்தாள். “ஏன்?” என்று கேட்கும் பதில் கூறாது தொடர்ந்து அழுதாள். அவளாகவே சிறுது நேரம் கழித்து பேசினால் “அம்மா போன் பண்ணிருந்தா”. “என்ன விஷயமா.” “ஏன் பிரண்ட் உமாவுக்கு அடுத்த வாரம் வளைகாப்பாம்”. சிவா கோபமாக “இத சொல்லத்தான் போன் செய்தாங்களாக்கும்” என்ற கேட்டதும் மீண்டும் அழத்துவங்கிளாள். அத்தை வாரம் தவறாது மாலாவிற்காக சிவகாசியிலிருந்து இருக்கன்குடியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வந்தாள். வார விடுமுறையன்று, கட்டிலில் படுத்துக்கெண்டு மூன்று மாதங்களாக பார்க்காத வீட்டுச் செலவு கணக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு எப்போதும் வாங்கும் பொருட்களிலிருந்து போன மாதம் வாங்கிய பொருள்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருந்தது. என்னவென்று பார்க்கையில் சானிட்டரி நாப்கின் அந்த லிஸ்டில் இல்லை. “மாலா போன மாதம் நாப்கின் வாங்கலையே, என்ன பண்ணின” என்று கேட்டேன். யோசித்தால் சற்று நேரம் கழித்து “ஆமா போன மாசம் பீரியட்ஸ் வரல” என்றாள். செக்கப்செய்த பிறகு தெரிந்தது மாலா கர்ப்பமாக இருந்தாள்.

இரத்தம் கலந்த உடலுடன் மாலாவின் அடிவயிற்றிலிருந்து குழந்தை வெளித்தள்ளப்பட்டது.

சார்லஸ்: லேகாவை பற்றிய சிந்தனையிலே திறந்திருந்த என்டரன்ஸ் கதவில் ஸ்வைப் செய்யாமல் உள்ளே நுழைய முற்பட்ட போது செக்யூரிட்டி “ஸார், ப்ளீஸ் ஸ்வைப் உவர் கார்டு” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினான். பிறகு ஸ்வைப் செய்துவிட்டு உள்ளே சென்றேன். கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தேன். மணி பதினொன்று ஆனதும் டீ குடிக்க கேன்டீன் நோக்கி செல்லும் போது “சார்லஸ் சார்லஸ்” என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஒரு பெண் “ஹய் ஹவ் ஆர் யூ” என்று கேட்டு கைகளை முன்னே நீட்டி கையை பிடித்து குலுக்கினாள். “அய்ம் லேகா” என்றாள். முதன் முதலில் பார்ப்பதால் பிரமித்து விட்டேன் அவளை பார்த்தவுடன் என்ன அழகு அழகான வட்ட முகம், உடலுக்கேற்ற மார்பகங்கள், விரிந்த இடை, உடைகள் அவள் உடலை பிரதி எடுத்திருந்தன, காது கேட்காது கண்கள் மட்டும் தெரிவது போல் ஒரு மயக்க நிலையில் இருந்தேன். “ஹலோ ஹலோ” என்று அவள் பேசும் பேச்சு தொலைவிலிருந்து உப்பிடுவது போல் இருந்தது. அவள் மீண்டும் என் கைகளை தொட்டவுடன் சுய நினைவுக்கு திரும்பினேன். “ஈவினிங் கேன்டீனில் மீட் பண்ணுவோம்” என்றாள். சாவி கொடுத்த பொம்மை போல எனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன். கேன்டீனில் ஆரம்பித்த எங்கள் சந்திப்பு தினமும் இரவு இரண்டு மணி வரை பேசும் வரை வளர்ந்தது. வார விடுமுறை நாட்களில் சத்தியம் தியேட்டர், மாயாஜால், கோவலம் பீச் என்று சுற்றித்திரிந்தோம், கூட்டமில்லாத இடங்களுக்கு அதிகம் சென்றோம். காதலெனும் பேரலை இன்பமெனும் கடலுக்குள் எங்களை இழுத்துச் சென்றது. வரும் வார விடுமுறை அன்று ஹைதராபாத்திலுள்ள லகிரி ரிசார்ட் சென்று வார முடிவு செய்தோம். அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நான் வசந்திடம் நம்பும்படியான சின்ன பொய் செல்லிவிட்டு சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். கேள்வி கேட்க ஆள் இல்லாத ஹாஸ்டலில் அவள் தங்கி இருந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தாள். இருவரும் அன்று மாலை 4.45 மணிக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் ஹைதராபாத் எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டோம். அடுத்த நாள் காலை 6.00 மணிக்கு ஹைதரபாத் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். கோச்சிலிருந்து இறங்கியவுடன் வெந்நிற ஆடை அணிந்திருந்த ஆள் எங்களை லகிரி ரிச்சார்டுக்கு அழைத்துச்சென்றான். லகிரி ரிச்சார்ட் ரிசப்ஷனில் அமர்ந்து இருந்தோம், ரிஷப்னிஸ்ட் “உங்கள் பெயர் என்ன? உங்களுடன் வந்திருக்கும் பெண்ணின் பெயர் என்ன? உங்களுக்குள் என்ன உறவு? ” என்று அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தவறான பதில் கொடுத்துவிட்டு எங்களுக்குரிய அறைக்குச் சென்றோம். காலை 10.00 மணிக்கு அறையிலிருந்து வெளியேறி ஸ்விம்மிங்பூலுக்கு குளிக்கச் சென்றோம்.

ஸ்விம்மிங்பூல் அழகாக நீல நிறமாக இருந்தது. இருவரும் ஸ்விம்மிங் உடைக்கு மாறினோம். அவள் தனக்கு ஸ்விம்மிங் தெரியாது என்று கூறியதால் நான் அவளுக்கு ஸ்விம்மிங் கற்றுக்கொடுத்தேன். அவள் கரையை விட்டு அதிகம் உள்ளே செல்லாமல் குளித்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு கரையிலிருந்து மறு கரை வரை நீந்திச்சென்று வந்து அவளிடம் ஒரு முத்தம் வாங்கினேன். குளித்து முடித்த பின்பு நன்கு பசித்தது. வெயிட்டர் சூடாக இரண்டு பிளேட் சிக்கன் பிரியாணி ஸ்விம்மிங்பூல் ஓரம் இருந்த மர வீட்டிற்கு கொண்டுவந்தான். லேசாக மழை பெய்து குளிர்ந்த காற்றுடன் இருந்தது வெளி. முகத்தை துடைக்காத அவளின் கன்னத்தில் முத்து பதித்தது போல் நீர் துளிகள் இருந்தன. அவளிடம் “உனக்கு நாம் செய்வது தப்பாக தெரியவில்லையா?” என்று கேட்டேன். அவள் “இதிலென்ன தவறு, நாம் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே” என்றாள். வேறு எதுவும் கூறாது சிக்கனை மென்று தின்றாள். தூக்கம் வரவே இருவரும் அறைக்கு தூங்கச் சென்றோம். மாலை 4.00 மணியளவில் எழுந்து குளித்து சென்னையில் இருந்து வாங்கி வந்திருந்த புது துணிகளை உடுத்திக்கொண்டோம். வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டோம். பார்ப்பதற்கு திருமணத்தம்பதிகள் போல் இருந்தோம். இருவரும் ஒன்றாய் கண்ணாடி முன் நின்று திருமண புகைப்படம் எடுப்பது போல் சிரித்தோம். ரிஷப்சனில் போன் செய்து அருகிலுள்ள சர்ச்சுக்கு சென்று வர டாக்ஸி புக் செய்தேன். சர்ச் வாசலில் டாக்ஸி வந்து நின்றது. டாக்ஸி கதவை திறந்து வெளியே வந்தோம். கார்ப்பட் விரித்திருந்த நடை பாதையில் நடந்து சர்ச்சினுள் நுழைந்தோம். ஒரு பெண் குழந்தை என் கையையும், ஒரு ஆண் குழந்தை அவள் கையையும் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றது. சிறு புன்னனையுடன் நடந்தபடி சுற்றிலும் பார்த்தேன். மாமா, அத்தை, சித்தி, பெரியப்பா, மச்சான், அத்தை மகள் கிளாரா வந்திருந்தனர். வசந்த் அருகில் வந்து கைகளை குலுக்கியபடி வாழ்த்துக்கள் கூறினான். அப்பா, அம்மா தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பாதர் அருகில் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தோம். பின்பு எழுந்து இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். ஆபீஸ் நண்பர்கள் என்னைக் கட்டிக்கொண்டு வாழ்த்துக்கள் கூறினர். சர்ச் வாசலில் ரோஜா பூக்களினால் அழகு செய்யப்பட்ட டாக்ஸி நின்றிருந்தது. நாங்கள் சர்ச் படிகளிலிருந்து கீழே இறங்கும் போது பல வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. டாக்ஸியின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து வெளியே பார்க்கையில் யாரும் இல்லை. டாக்ஸிக்காரன் “போகலாமா சார்” என்று கோபமாக கேட்டான். அறையினுள் நுழைந்த உடன் கதவை தாழிட்ட அடுத்த நொடி இருவரும் கட்டிக்கொண்டோம். முத்தங்கள் கொடுத்துக் கொண்டோம். உடைகளை தாராளமாக அவிழ்த்துக்கொண்டு உடலுறவு கொண்டோம். அவளும் உடலை நன்கு வளைந்து கொடுத்தாள். ஆசை தீரும் வரை உடலுறவு கொண்டோம்.

குழந்தையை பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னையிலுள்ள மாமனார் வீட்டிற்கு வந்தான் சிவா. மாலா கட்டிலிலும் குழந்தை தொட்டிலிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். சிவா தொட்டில் அருகே சென்று குழந்தையை பார்த்தான் பெண் குழந்தை அழகாக இருந்தது. எத்தனை நாள் ஏக்கம், இன்று தணிந்தது போல் மனதில் ஓர் அமைதி, குழந்தையின் மேனியை சிவா தொட்டபோது அவனின் உடல் சிலிர்த்தது, கண்கள் கலங்கின.

மாலா: இரவில் குழந்தை கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. குழந்தையின் வலது புறம் நானும் இடது புறம் அவரும் படுத்து பேசிக்கொண்டிருந்தோம். நான் “குழந்தை அழகா இருக்குள்ள” “ஆமா, நமக்கு பிறந்த குழந்தையாச்சே”. சிவா “குழந்தையை அழைச்சிட்டு எப்ப அமெரிக்கா வர”. நான் “அமெரிக்கா வரல”. “ஏன்?” “குழந்தைக்கு ஏதாவது ஆச்சினா பார்க்க யார் இருக்கா அங்க”. “நீ சொல்றது சரிதான் ஆனா எனக்கு இன்னும் இரண்டு வருட கான்ட்ராக்ட் இருக்கே”. “நீங்க வேணா போங்க, நானும் குழந்தையும் இங்க தான் இருக்கப்போறோம்” என்று கூறியவுடன் அவர் என்னை கோபத்துடன் பார்ப்பதை கண்ணாடியில் பார்த்தேன். குழந்தைக்கு சுஜாதா என்று பெயர் வைத்தது கோகுல் மாமா தான். சுஜாதா யார் என்று கேட்டதற்கு மாமா சிறந்த எழுத்தாளர் என்றார். மாமா நிறைய புத்தகங்கள் படிப்பார். சிவா சிறு வயதாக இருக்கும் போது மாமாவிடம் கதை கேட்ட பின் தான் தூங்கச் சென்றதாக சிவா கூறி இருக்கிறார். சிவா இந்தியா வந்ததும் அப்பா எங்களுக்காக பார்த்திருந்த அடையாறு வீட்டில் நான், சிவா, சுஜாதா மூன்று பேரும் குடியேறினோம். அம்மா வாரம் இரு முறையும், அப்பா ஒரு முறையும் வந்து பார்த்து செல்வார்கள். அந்த வீட்டை சுற்றி அமைதியான சூழல் நிலவியது. குழந்தைக்கு தினமும் வேடிக்கை காட்டுவதற்காக மாலை நேரத்தில் அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச்செல்வேன். பூங்காவில் பெரியவர்கள் நடந்தபடியும் சிறுவர் சிறுமியர் ஊஞ்சலில் விளையாடிய படியும் இருப்பர். சிவா ஒரு நாள் லவ் பேர்ட்ஸ், புறா வாங்கிக்கொண்டு வந்தார். குழந்தைக்கு பறவையின் சத்தத்தை கேட்டு சில சமயம் சிரித்தது. சில சமயங்களில் பறவைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மாமி “இங்கே பறவைகள் வளர்க்ககூடாது” என்றாள். அதன் பிறகு நானே பறவைகளை வானில் பறக்கவிட்டேன். மாமா ஊரிலிருந்து வந்திருந்தார். மாமா குழந்தையை நன்கு கவனித்துக்கொண்டார். காலை வாக்கிங் சென்று வந்தவுடன் சுஜாதாவை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள டீ கடைக்கு சென்று வருவார்.

லேகா: வர வர சார்லஸ் தொல்லை அதிகமாயிடுச்சி, எந்த நேரம் பார்த்தாலும் குறை சொல்கிறான். உடைகளை இறுக்கமாக அணியாதே, லிப்ஸ்டிக் ரொம்ப பிரைட்டா போடாதே. தலைமுடிகளை விரித்துப் போட்டபடி திரியாதே, ஆண்களிடம் அதிகம் பேசாதே என்று தினமொரு குறை கூறுகிறான். அவனிடம் மட்டும் குறையில்லையா என்ன தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறான். வாரம் மூன்று முறை தண்ணி பிடிக்கிறான், அவனிடம் நான் ஒரு நாளும் இதைப்பற்றி கேட்டதில்லை. அவன் மட்டும் ஏன் என்னை கேட்கவேண்டும். குழப்பத்திலிருந்த நான் ஆனந்த விகடனுக்கு என் நிலைமையை எழுதினேன். பெசலிஸ்டு பதில் அளித்திருந்தார்.

“அன்புள்ள லேகாவிற்கு,

திருமணம் ஆகும் முன்பே எல்லாம் முடிந்து போனது என்றால் வேற என்ன இருக்கு வாழ்க்கையில் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள். இனிமே முடிவு எடுக்கவேண்டியது நீங்கள் தான். ஒருவன் சரியில்லையென்று மற்றொருவனை தேடுகிறீர்களே, எல்லாம் முடிந்து போனவனின் வாழ்க்கையை ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்தீர்களா?”

சார்லஸ்: நண்பன் ஒருவன் மூலம் அவள் ஆனந்தவிகடனுக்கு எழுதியிருந்தது தெரியவந்தது. லேகாவிடம் சென்று ஏன் இப்படி எழுதியிருந்தாய் என்று கேட்கச் சென்றேன். பேச்சு எங்களையும் மீறி போனது. ஒரு கட்டத்தில் பளார் என்று கன்னத்தில் அடித்தேன். “போடா நீயெல்லாம் ஒரு ஆம்பளையா, உன்கூட படுத்ததுக்கு தெரு நாய் கூட படுத்திருக்கலாம்”. என்று கூறிவிட்டு அழுதபடி சென்றாள். அன்றிரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு லாரியில் மோதி பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.

சார்லஸ் சர்ச்சிற்கு செல்வதற்காக டீ கடையை ஒட்டிய பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அதே பஸ் நிறுத்தத்தில் கோகுல் தன் பேத்தியுடன் நின்றிருந்தார். பசு மாடு ஒன்று பஸ் நிறுத்தத்தை ஒட்டிய குப்பை தொட்டியிலிருந்த காய்கறி கழிவுகளைமேய்ந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தத்தில் பலத்த சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. உடல்கள் சிதறின. பல்வேறு சூழலில் வாழ்ந்த இவர்கள் இந்த வெடிவிபத்தினால் இவர்களின் மரணம் ஒன்றாய் சங்கமம் ஆகின.

மறுநாள் காலை பத்திரிக்கையில் வெடி விபத்தில் இறந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தன. சார்லஸ் வயது இருபத்திஎட்டு, சுஜாதா வயது ஜந்து, கோகுல் வயது அறுபத்தி ஐந்து, மேலும் ஒரு பசு மாடு. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

வல்லினம் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது

ஒரு சிறுகதை நாடகமாக அரங்கேறியது

கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் 'Theatre & Short Film Festival' நடைபெற்றது. தினமும் ஒரு நாடகம் அதன் பின்னர் மூன்று Short Films திரையிட்டனர். அரங்கேறிய நாடகங்களில் அதிகப்படியானவை சிறுகதையை அடிப்படையாக கொண்டவை.


Jhumpa Lahiri யின் சிறுகதையான 'A Temporary Matter' நாடகமாக அரங்கேறியது. இச்சிறுகதையானது 2000ம் ஆண்டில் Fiction பிரிவில் Pulitzer விருது பெற்றது. நாடகத்திற்கு ஒரு நாள் முன்பு சிறுகதையை Google Books ல் படித்திருந்தேன்.

நாடகத்தில் சிறுகதையின் உணர்வுகளை அழகாக காட்டியிருந்தனர். நாடகத்திற்கும் சிறுகதைக்கும் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நாடக குழுவினரின் பெயர் Expressions. இது இவர்களின் முதல் நாடக அரங்கேற்றம். Expressions குழுவினர் Microsoft நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். முதல் நாடகத்திலே சிறந்ததொரு சிறுகதையை தேர்ந்தெடுத்து அதனை நாடகமாக அரங்கேற்றிய Expressions குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

'A Temporary Matter' சிறுகதை அமெரிக்காவிலுள்ள போஸ்டன் மாகாணத்தில் வசித்து வரும் திருமணம் ஆகி மூன்று வருடங்களான இளம் கணவன் மனையின் கதை.

சுகுமார் - ஷோபா தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு தகவல் பலகையில் தொங்கும் செய்தியை படிக்கிறாள் ஷோபா. பனிக்காலத்தில் விழுந்த இடியில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை சரிசெய்ய தொடர்ந்து ஜந்து நாட்கள் இரவு எட்டு மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மின்சார இணைப்பு துண்டிக்கபடும் என்ற செய்தியை படிக்கிறாள்.

ஷோபா கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருக்கிறாள். வீட்டினுள் நுழைந்தவள் சோபாவில் சுகுமார் தூங்குவதை பார்க்கிறாள். செருப்பை உதைத்து கழட்டிவிட்டு கோட்டை கழட்டி சோபாவின் மீது வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் சுகுமாரை எழுப்புகிறாள். எழுந்தவனிடம் மின்சாரம் இன்று முதல் ஜந்து நாட்களுக்கு ஒரு மணி நேரம் தடை செய்யப்படும் விவரத்தை கூறுகிறாள். ஷோபா மாடிக்கு சென்று குளிக்கச் செல்கிறாள்.
சுகுமார் முப்பத்தைந்து வயதாகியும் படிப்பு முடியாமல் தொடர்ந்து படிக்கிறான். அவன் இலக்கியம் சம்பந்தமான பிரிவில் படிக்கிறான். ஷோபா வேலைக்கு செல்கிறாள். இருவருக்கும் பூர்வீகம் இந்தியா. அவர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவில் குடி பெயர்ந்து பல வருடங்களாகிறது. இருவருக்கும் மூன்று வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. ஆறுமாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தை இறந்து விடுகிறது. அதன் பின்பு இருவரிடையேயும் ஒரு வித மனகசப்பு கூடிவிடுகிறது. ஒருவர் மற்றொருவருடன் பேசுவதே அரிதாகிறது.

இரவு உணவை எட்டு மணிக்கு முடித்தாக வேண்டுமென்று ரேடியோவை ஆன் செய்து விட்டு சுகுமார் அவன் சமைத்த உணவுடன் சாப்பிட தயாராகிறான். குளித்து முடித்து வந்த ஷோபா தலையில் துண்டை முடிகளின் ஊடே சேர்த்து சுற்றிய படி சுகுமாருடன் சாப்பிட அமர்கிறாள். சரியாக எட்டு மணிக்கு ஒலித்துக்கொண்டிருந்த ரேடியோ நின்று போகிறது, மின் விளக்குகள் அணைந்து போகின்றன. சுகுமார் முன்பே எடுத்து வைத்திருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்கிறான். மீண்டும் அவர்களின் அறையினுள் மெழுகுவர்த்தி வெளிச்சம் ஒளியை கொண்டு வருகிறது. சுகுமார் ஒயின் புட்டியை திறந்து தனக்கும், ஷோபாவுக்கும் பீங்கான் கோப்பையில் ஊற்றுகிறான். சுகுமார் சமைத்திருந்த உணவு நன்றாக இருக்கிறதென்று சொல்கிறாள் ஷோபா. ஷோபா சுகுமாரை ஜோக், படித்ததில் ரசித்தது என்று ஏதாவது சொல்ல சொல்கிறாள் ஷோபா. சுகுமார் தனக்கு ஜோக் ஒன்று கூட தெரியாது என்கிறான். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளாத விசயங்களை, ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறாள் ஷோபா. ஷோபாவே முதல் ஆரம்பிக்கிறாள். திருமணத்திற்கு முன்பு சுகுமார் அவன் அறையில் இல்லாத போது ஷோபா அவனின் Address Book திறந்து படித்ததாக கூறுகிறாள். திருமணம் ஆன புதிதில் ஹோட்டல் வெட்டருக்கு டிப்ஸ் தர மறந்ததாகவும் அதற்காக மீண்டும் அடுத்த நாள் அந்த ஹோட்டல் மேனேஜரிடம் டிப்ஸ் தந்துவிட்டு வந்ததாக சொல்கிறான் சுகுமார். மெழுகுவர்த்தி அணையும் வரை இவ்வாறான சின்ன சின்ன ரகசியங்களை இருவரும் பேசிக்கொள்கின்றனர்.

சுகுமார் பிறந்ததிலிருந்து ஒரே ஒரு முறை தான் இந்தியா சென்றிருக்கிறான். அதுவும் அவன் குழந்தையாக இருந்த போது. முதன் முறை அவனை இந்தியாவிற்கு அழைத்து சென்ற போது தண்ணீர் ஒத்து கொள்ளாமல் பயங்கரமான வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி இருக்கிறான். அதன் பின்னர் அவனை அவன் பெற்றோர்கள் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவில்லை.

இரண்டாவது நாளும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வெளியில் கொஞ்சம் வெப்பமாக இருப்பதால் வீட்டு வாசலின் அருகில் அமர்ந்து பேச இருவரும் விரும்புகின்றனர். வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருவரும் அமர்ந்து பேசுகின்றனர். முதல் நாளை போல இரண்டாவது நாளும் விளையாடுகின்றனர். சுகுமார் தன்னுடைய ஒரு பரிட்சையில் தனக்கு முன் அமர்ந்திருப்பனின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறுகிறான். ஷோபாவும் ஒரு ரகசியத்தை சொல்கிறாள். சுகுமார் தன் கையிலிருந்த கிட்டாரை மீட்டுகிறான். அதன் இசை ஷோபாவிற்கு பிடித்திருக்கிறது. ஷோபா சுகுமாரின் அருகில் நெருக்கமாக அமர்ந்து அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு அவன் மீட்டும் கிட்டாரின் இசையை ரசிக்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் பேசி சிரிக்கின்றனர், அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கின்றனர். சுகுமாரின் பிறந்த நாள் அன்று ஷோபா அவள் அலுவலக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறாள். அந்த பிறந்த நாள் விழாவில் சுகுமாரின் கைகளை பற்றிக்கொண்டுதான் சுற்றி அலைந்திருக்கிறாள் ஷோபா.

மூன்றாவது நாளும் அவர்களின் விளையாட்டு தொடங்குகிறது. ஒரு மணி நேர இடைவேளைக்கு பின் திரும்ப மின்சாரம் வந்து மின்விளக்குகள் ஒளிர்கின்றன. ஷோபா ஸ்கின்-டைட் பேண்டும் நீல நிற டீ-சர்ட்டும் அணிந்து உற்சாகமாக நிற்கிறாள். சுகுமார் தூங்குவதற்கு எப்போதும் உபயோகிக்கும் போர்வையை தேடுகிறான். போர்வை சோபாவின் மீது இல்லை. அருகில் நின்று கொண்டிருந்த ஷோபா சுகுமாரின் போர்வை தன் படுக்கை அறையில் உள்ளதாக கூறுகிறாள். அவரவர் சாப்பாட்டை தனித்தனியே சமைத்துக் கொண்டும், முகம் பார்த்து பேசாமல் இருந்தாலும் காமம் அவர்கள் இருவரையும் இணைத்தே வைத்திருந்தது.
சுகுமாரின் அப்பா இறந்த பின் சுகுமாரின் அம்மா சில வாரங்கள் சுகுமார்-ஷோபாவுடன் தங்கியிருக்கிறாள். அந்த நாட்களில் சுகுமாரின் அம்மா அவன் அப்பாவிற்கு பிடித்த உணவை அவளே சமைத்தாள். பாவம் என்ன செய்ய அவள் சமைத்த உணவை அவளே தின்னமுடியாமல் போனது.
நான்காவது நாள் சரியாக எட்டு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அவர்களின் விளையாட்டு ஆரம்பமாகிறது. சுகுமார் எழுதி வெளிவந்த கவிதைகளில் எதுவும் தனக்கு பிடிக்கவில்லையென்று சொல்கிறாள் ஷோபா. சுகுமார் கோபமடைகிறான். மெழுகுவர்த்தி முழுவதுமாக கரையும் வரை இருவரும் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

ஷோபா தன்னை எப்படி பார்க்கிறாள் என்பதில் சுகுமாருக்கு சந்தேகம். முப்பத்தைந்து வயதாகியும் படிப்பது அவளுக்கு பிடிக்கிறதா? என்னை அவளுக்கு உண்மையிலே பிடிக்கிறதா? போன்ற சந்தேகங்கள் சுகுமாருக்கு எழுகின்றன. ஷோபா தன் சம்பள பணத்தின் ஒரு பகுதியை தனியாக வேறொரு பேங்கில் சேமித்து வருவது தெரிந்தும் சுகுமார் இது பற்றி அவளிடம் ஏன் ஏதற்கென்று கேட்டதில்லை.

மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறியிருந்த ஜந்து நாட்களில் ஒரு நாள் முன்னதாகவே மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்டு விடுகிறது. ஷோபா அன்றைய தினம் சற்று பதற்றத்துடன் இருக்கிறாள். சுகுமார் ஷோபாவின் மூலமாக மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்ட செய்தியை அறிகிறான். ஷோபா பதற்றத்துடன் தான் சில காலம் தனியாக இருக்க விரும்புவதாகவும், அதற்காக வேறொரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு பார்த்துவிட்டதாகவும், வீட்டிற்கு முன் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறாள். சுகுமார் ஷோபா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். தனக்கு இதில் உடன்பாடில்லை என்கிறான். ஷோபாவிடம் குழந்தை இறந்த சமயம் மருத்துவமனைக்கு வந்ததையும் அப்போது அவன் அடைந்த மனவேதனையும் கூறுகிறான். தனக்கும் அந்த குழந்தையின் இறப்பில் வேதனை இருந்ததாகவும் கூறுகிறான். விளக்கு அணைகிறது. இருவரும் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுகின்றனர்.


கூடு இணைய இதழில் வெளியாகியுள்ளது

Friday, July 2, 2010

சிறுகதை - அன்புள்ள அப்பா

 ஜீன் மாதம் 3வது ஞாயிறு உலகெங்கும் அப்பாக்கள் தினம் (Father's Day) கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் என் அப்பாவுடன் வாழ்ந்த கணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சாத்தூர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஊர். திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்பவர்கள் எங்கள் ஊரை கடந்தே செல்ல வேண்டும். எங்கள் ஊர் NH7ல் அமைந்துள்ளது. இரயில் பாதையும் எங்கள் ஊரில் உள்ளது. 1914 ல் அல்லது அதனை ஒட்டிய வருடங்களில் மகாத்மா காந்தி எங்கள் ஊரை கடந்து சென்ற போது எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் இறங்கியதாக இரயில் நிலையத்தின் வாசலிலுள்ள கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.


அப்பா சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் சேவுக்கடை வைத்திருந்தார். சாத்தூர் காரச்சேவிற்கு பெயர் போன ஊர். சென்னை, பம்பாய், டெல்லியென்று வெளியூர் செல்பவர்கள் நயஞ்சேவு, சீனி மிட்டாய், சக்கரைமிட்டாய், பக்கோடா தின்பண்டங்களை எங்கள் கடையில் வாங்கிச்செல்வார்கள். நயஞ்சேவு,சீனிமிட்டாய், சக்கரைமிட்டாயினை பனைஓலையினால் செய்த கொட்டானில் வைத்துக் கொடுப்பார் அப்பா. பனைஓலையினால் செய்யப்பட்ட கொட்டான் உள்ளிருக்கும் தின்பண்டங்களின் சுவையை அதிகப்படுத்துகிறது. அப்பா கல்லாவில் அமர்ந்திருப்பார். அப்பாவை தவிர மூன்று பேர் சரக்கு கட்டித்தர இருப்பார்கள். கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். கடையில் அதிகப்படியான நேரம் நின்றபடியே வேலை செய்வார் அப்பா.


கடையில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை வீட்டில் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டில் தயார் செய்வோம். அதனை பட்டறை என்று சொல்வோம். பட்டறையினுள் இரண்டு அடுப்பு, உயரமான புகைக்கூண்டு ஒன்று இரண்டு அடுப்புகளையும் இணைத்தபடி இருக்கும். சேவு, சீவல், அதிரசம் மாவு பிசைவதற்கென்று உயரமான திண்டு அமைக்கப்பட்டிருக்கும். உபயோகித்த எண்ணெய் ஊற்றி வைக்கப்பட்ட சட்டிகளும், சீனிப்பால் சட்டிகளும், கடலை எண்ணெய் டிங்களும், கடலைமாவு மூட்டைகளும், அரிசிமாவு மூட்டைகளும் ஓட்டு வீட்டினுள் இருக்கும். ஓட்டுவீட்டினுள் எண்ணெயும் அழுக்கும் ஒன்று சேர்ந்து கருப்பாக தரைமீது அப்பி இருக்கும். பட்டறையின் வெளியே வலதுபுறம் கிணறு, இடது புறம் அடுப்பில் எரிக்கப்படும் சில் மலை போல் கொட்டப்பட்டிருக்கும். எரிப்பதற்கு சில் அள்ளும்போது தேள் அப்பாவை இரண்டு மூன்று முறை கொட்டியிருக்கிறது.


அப்பா இசை பிரியர். புதிதாக வரும் படங்களின் ஆடியோ கேசட்டுகளை உடனே வாங்கிவிடுவார். அம்மாவிற்கு அப்பா கேசட் வாங்குவது பிடிக்காது. வீணாக காசை கரியாக்குவதாக சொல்வாள். அப்பா வாங்கிய கேசட்டுகள் மொத்தம் முண்ணூருக்கும் அதிகமாக இருக்கும். இன்னும் அந்த கேசட்டுகள் அட்டைப்பெட்டியினுள் பத்திரமாக இருக்கின்றன.


அப்பா வேலை ஆட்களை கடையில் வைத்துவிட்டு இரவு உணவிற்கு எட்டு மணிவாக்கில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அப்போது தூர்தஷனில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும். பொதுவாக இரவு உணவு பால்சோறாக இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு தூக்குசட்டியினுள் சேவு, சீவல், பக்கோடா என்று ஏதாவதொரு தின்பண்டம் எப்போதும் இருக்கும்.தூக்குசட்டியின் மூடியை தலைகீழாக தூக்குசட்டியின் மீது கவிழ்த்து வைத்து தூக்குசட்டி மூடி மீது சிலேபி, சீனிமிட்டாய், சக்கரைமிட்டாய் என்று ஏதாவதொரு இனிப்பு இருக்கும். அப்பா பால்சோற்றுடன் சிலேபியை வைத்து சாப்பிடுவார்.


ஜாக்கிசான், புரூஸ்லி நடித்த ஆங்கில சண்டைப் படங்கள் தேவி தியேட்டரில் எடுப்பார்கள். இரவு நேர உணவின் போது அப்பா எங்களை இரவு ஆட்ட சினிமாவிற்கு அழைத்து போவதற்கான விவரம் பற்றி கூறுவார். அம்மா ' காயத்ரி எதுக்கு? நீங்களும் அருணும் போயிட்டு வாங்க.' என்று சொல்வாள். காயத்திரியை அம்மா விட மறுத்தாலும் அடம்பிடித்து எங்களுடன் படத்திற்கு வந்துவிடுவாள். சைக்கிளின் முன்னால் காயத்ரியையும், பின்னால் என்னையும் அமர வைத்து படத்திற்கு அழைத்து செல்வார். அந்நேரத்தில் சாலையில் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டம் இருக்காது. முகத்தில் படும் காற்றில் லேசாக குளிர் இருக்கும். வேகமாய் மதுரை செல்லும் பாண்டியன் பேருந்துகள் எங்களின் சைக்கிளை கடக்கும் போது கேட்கும் 'சரட்' என்ற ஓசையுடன் கூடிய வேகமான காற்று என் உடலில் பட்டு கைகளிலுள்ள மயிர்களை விறைக்கச் செய்திருக்கின்றன. காயத்ரி சைக்கிளில் செல்லும் போதே தூங்கி விடுவாள். திரைப்பட இடைவேளையின் போது அவளை எழுப்பி முறுக்கு வாங்கி தருவார். தின்று விட்டு மீண்டும் தூங்கிப்போவாள். நானும் அப்பாவும் திரைப்படம் பார்போம். திரைப்படத்தில் வெகுநேர முத்தக்காட்சிகளோ, ஆடை அவிழ்க்கும் காட்சிகளோ வந்தால் என் தலையை பிடித்து கீழே குனிய வைப்பார்.


அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மாடியில் பழைய சாமாங்கள் போட்டு வைத்திருக்கும் அறையில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும் போது கையில் புத்தகம் ஒன்று கிட்டியது. அந்த புத்தகம் முழுவதும் படங்களாக இருந்தது. படங்களிலுள்ளவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தனர். அவர்கள் வெவ்வேறு கோணங்களில் புணர்ச்சியில் இருந்தனர். ஒரு ஆண்-இரு பெண், இரு பெண்-ஒரு ஆண், ஒரு பெண்-ஒரு ஆண், ஒரு பெண்-பல ஆண், என்ற விகிதத்தில் படங்களில் இருந்தனர். என் உடலில் புதியதோர் ரசனமாற்றம் நிகழ்வதை உணர்தேன். பயத்தில் வேர்வை கொட்டியது. கைலியில் புத்தகத்தை மறைத்து மாடியிலிருந்து எடுத்து வந்து பள்ளி எடுத்து செல்லும் பையில் வைத்துக்கொண்டேன். மறுநாள் வகுப்பறையின் கடைசி பெஞ்சில் அமர்ந்து பாடபுத்தகத்தினுள் வைத்திருந்த படங்கள் கொண்ட புத்தகத்தை திரும்ப திரும்ப புரட்டினேன். வீட்டில் ஒரு வாரமாக காயத்திரியுடன் சண்டை போடாதது அப்பாவிற்கு என் நடத்தையின் மீது சந்தேகம் வந்தது. 'டேய் என்னாச்சி? உடம்பு சரியில்லையா? வவுத்தால போகுதா? ஏன் ஒரு மாதிரி இருக்க?' என்று அப்பா என்னிடம் கேட்டார். நம்பும் படியான பொய் சொல்லிவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு ஏறினேன்.


நான் அம்மா போல் இருப்பதாகவும், காயத்ரி அப்பா போல் இருப்பதாகவும் அப்பா அடிக்கடி சொல்வார். எங்கள் வீட்டில் நான் செய்வது எல்லாமே என் மீது திணிக்கப்பட்டவை. நான் இன்ஜினேயரிங் படித்தது, படிப்பு முடிந்த பின்பும் கூடுதலாக இரண்டு வருடம் கல்லூரிக்கு சென்று அரியர்ஸ் எழுதியது. ஆனால் காயத்ரி அப்படி இல்லை. அவள் என்ன படிக்க வேண்டுமென்பதை அவளை தீர்மானித்தாள். அதுபோலவே B.PHARM படித்தாள். அவள் B.PHARM மூன்றாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது அவள் திருமணம் பற்றிய பேச்சு தொடங்கியது. அப்பாவிற்கு தன் தங்கை மகன் மாரிமுத்துவை காயத்ரிக்கு திருமணம் முடிக்க ஆசை. அதுபோலவே அப்பா இரவுநேர உணவின் போது அவர் விருப்பத்தை எங்களிடம் கூறினார். மறுநாள் காலை பட்டறையில் சரக்கு போடும் மாஸ்டர் வரவில்லையென்பதால் அப்பா கோபமாக அவரே பட்டறையில் வேலை பார்த்தார். காரச்சேவிற்காக மாவை பெரிய சட்டியில் கொட்டி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து கொண்டிருந்தார்.


'தேவடியா மவன், தண்ணிய போட்டு வீட்ல படுத்துக்கிடக்கான்.'


'இந்த மாஸ்டர் கூதியாங்கல நம்பி நம்ம வியாபாரம் செய்ய முடியாது.'


'மூணு மாசம் அட்வாண்ஸ் வாங்கியிருக்கான். இனி நம்ம தான் அவன் முன்ன போய் நிக்கணும்.' என்று மாஸ்டரை திட்டிக் கொண்டிருந்தார்.


காயத்ரி அப்போது அவர் அருகில் சென்று மவுனமாய் நின்றாள்.


'காயத்ரி என்ன?'


அவள் பதில் கூறாமல் மவுனமாய் நின்றாள்.


'உண்ணுமில்லேல்ல வீட்டுக்குள்ள போ, இங்க நின்னா மேல தண்ணி தெரிக்கும்' என்றார்.


'அப்பா, நான் காலேஜில ஒருத்தரை லவ் பண்றேன்.'


அப்பா மாவு பிசைவதை நிறுத்திவிட்டு அவள் சொல்வதை கேட்டார்.


'அந்த பையன் ரொம்ப நல்லவன். அவங்க அம்மா அப்பா கூட ரொம்ப நல்லவங்க. திருநெல்வேலி காரங்க. அவங்க அப்பா பேங்கல வேலை செய்றாங்க'


அப்பா ஓரே கேள்வி கேட்டார். 'என்ன சாதி?'


'நம்ம சாதியில்ல, ஆனா அவங்க நல்ல குடும்பம்'


'பெரிய பொண்ணு மாதிரி பேசக்கூடாது. காலேஜ் கடைசி வருஷம் நல்லபடியா படிச்சி முடி நம்ம மாரிமுத்துவை கட்டி வைக்கிறேன். '


'அந்த கோணவாயனையெல்லாம் கட்டிக்க முடியாது. நான் விரும்பின பையனைத்தான் கட்டிக்க போறேன்.'


கோபத்தில் அப்பா மாவு பிசைந்த கையால் காயத்ரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அறைந்ததில் கீழே விழுந்த காயத்ரி இரும்புச்சட்டையில் மோதி மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.


அதன்பின் அப்பாவும் காயத்ரியும் பேசிக் கொள்ளவில்லை. அவள் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். வார விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வருவாள். அவளின் காதல் விசயம் மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா என்று குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டது. காயத்ரி ஊருக்கு வரும் போதெல்லாம் ஏதாவதொரு பஞ்சாயத்து நடக்கும். அம்மா சாகப்போவதாக கூறி காயத்ரியை மிரட்டுவாள். காயத்ரி அதற்கெல்லாம் பயப்படாமல் 'நீ போகும்போது என்னையும் கூட்டிச்செல்' என்பாள். அதன்பின் இருவரும் சாவு பற்றிய பேச்சை சில வாரங்கள் பேசாமல் இருப்பார்கள். காயத்ரி ஞாயிற்றுக்கிழமையின் மாலைப்பொழுதில் இரயில்நிலையத்தின் அருகில் விற்கப்படும் சிக்கன் பக்கோடா விரும்பி சாப்பிடுவாள். இந்த சண்டையிலும் கூட அப்பா அவள் ஊரில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பக்கோடா வாங்கிவந்து தருவார். காயத்ரியை ஞாயிறுக்கிழமை இரவு காலேஜ்க்கு அனுப்பி வைக்க பஸ் ஸ்டாண்ட் வரை அப்பா செல்வார். ஆனால் இருவரும் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் நடப்பார்கள். காயத்ரி P.G முடித்த இரண்டு வருடம் கழித்து அவள் விரும்பிய பையனையே திருமணம் முடித்து வைத்தார் அப்பா.


இன்னும் அப்பாவை பற்றி பேச நிறைய விசயங்கள் உள்ளன. மீண்டும் அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருந்தால் அதிலும் இதே அப்பாவிற்கு மகனாக பிறக்க வேண்டும்.


-------------------------------------முற்றும்----------------------------------------------------------


கூடு இணைய இதழில் வெளியாகியுள்ளது

Thursday, July 1, 2010

திரைவிமர்சனம் : The Songs Of Sparrows

'The Songs Of Sparrows' என்ற ஈரானிய திரைப்படம் ஹைய்தராபாத் பிலிம் கிளப்பில் திரையிடப்பட்டது. திரைப்படமானது கிராமம் ஒன்றில் வசித்து வரும் கரீம் என்பவரின் குடும்பத்தின் கதை. கரீம் நெருப்புக்கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்கிறான். நெருப்புக்கோழிகள் தப்பித்துவிடாமல் இருக்கவும், நெருப்புக்கோழியின் முட்டையை சேகரித்து வேனில் ஏற்றி அனுப்புவதும் அவனது அன்றாட வேலையாக இருக்கிறது. கரீமுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள்.
கரீம் பையன் அவன் அக்காவின் செவிட்டு மிஷினை தவறுதலாக கிணற்றில் போட்டுவிடுகிறான். கரீமின் பையன் மற்றும் அவனது நண்பர்கள் கிணற்றினுள் இறங்கி தேடுகிறார்கள். கரீமும் இவர்களுடன் சேர்ந்து தேடுகிறான். கிணற்றில் ஆழம் குறைவாகவே இருக்கிறது. கிணற்றினுள் குப்பை, செருப்பு, பிஞ்சிப்போன ஷீ என்ற சாக்கடைக்கு ஈடாக கிடக்கிறது. கரீம் பையனின் நண்பர்கள் கிணறானது மீன் வளர்க்க நல்ல இடமென்று அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். மீன் அதிகம் வளர்த்து வியாபாரம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்கிறான் கரீம்பையனின் நண்பன் ஒருவன். இந்த அழுக்கான கிணற்றில் மீன்கள் வளர வாய்ப்பில்லை என்கிறான் கரீம். தேடிய செவிட்டு மிஷின் கிடைக்கவே எல்லோரும் வீட்டிற்கு திரும்புகின்றனர்.கிணற்றிலிருந்து எடுத்துவந்த செவிட்டுமிஷினை சுத்தம் செய்து தன் மகளிடம் கொடுக்கிறான் கரீம். 'நான் பேசுவது கேட்குதா சொல், லிப் ரீடிங் செய்யாதே'என்று தன் மகளிடம் சொல்கிறான். அவளும் சரி என்று தலையாட்டி எழுந்து செல்கிறாள். வீட்டு வாசல் சென்று நின்றவளை திரும்பி நிற்க சொல்கிறான். கரீம் அவளின் முதுகுப்பக்கம் பார்த்து அமர்ந்திருக்கிறான். கரீம் பக்கத்தில் அவன் பையன் அமைதியாக அமர்ந்திருக்கிறான். கரீம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் மெளமாக நிற்கிறாள். மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று உணர்ந்த கரீம் தன் மகனை பார்க்கிறார். அடிப்பதற்காக கரீம் எழுந்திரிக்க அவனின் மகன் பயந்து வீட்டின் வாசலை கடந்து தெருப்பக்கம் ஓடுகிறான்.அடுத்தமாதம் தன் மகளுக்கு பரிட்சை இருப்பதால் செவிட்டுமிஷினை சரி பார்த்து வர டாக்டரிடம் செல்கிறான். மிஷினிலுள்ள மைக்ரோ ப்ராஸசர் வேலை செய்யவில்லையென்றும் இனியும் இந்த மிஷினை உபயோகப்படுத்த முடியாதென்றும் டாக்டர் கூறுகிறார். புதிய செவிட்டு மிஷின் அதிகவிலையென்று டாக்டர் கூறியதால் அதற்கு பணத்தை புரட்ட வழி தேடிகிறான் கரீம்.நெருப்புக்கோழி பண்ணை முதலாளியிடம் புதிய செவிட்டு மிஷினுக்கான பனத்தை அட்வான்சாக வாங்க நினைக்கிறான் கரீம். பண்ணையில் வேலை செய்பவர்கள் நெருப்புக்கோழியின் தலையை கருப்புதுணியால் மறைத்து பின்பக்கமாக நடக்க வைத்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகின்றனர். பின்பு நெருப்புக்கோழியின் தலையிலுள்ள கருப்பு துணியை அவிழ்த்து விடுகின்றனர். அப்படி கருப்புதுணியை அவிழ்த்துவிடும் போது நெருப்புக்கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பித்து காட்டுப்பக்கமாக ஓடிவிடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் தப்பிச்சென்ற நெருப்புக்கோழியை பிடிக்கமுடியாமல் போகிறது.நெருப்புக்கோழி ஒன்றை தவறவிட்டதற்காக அவன் வேலை பறிபோகிறது. அவனை வேலைவிட்டு தூக்கிய அன்று அவனுக்குரிய சம்பளபணமும் கூடுதலாக ஒரு நெருப்புக்கோழி முட்டையும் கிடைக்கிறது. அன்றைய இரவு நெருப்புக்கோழியின் முட்டையால் செய்த ஆம்லெட்டை பகிர்ந்து பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு கொடுத்து வர சொல்கிறாள் கரீமின் மனைவி.செவிட்டுமிஷினை சரி செய்துவர நகரம் சென்ற கரீமுக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கிறது. வேலை ஸ்கூட்டரில் சவாரி எடுப்பது. ஸ்கூட்டரில் ஒருவரை ஒரு இடத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வேறோரு இடத்தில் இறக்கிவிட்டு அவர் தரும் தொகையை வாடகையாக பெற்றுக்கொள்வான். இதுவே அவனுக்கு நாளடைவில் தொழிலாக ஆகிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தும் தன் மகளின் செவிட்டு மிஷினுக்கான பணத்தை அவனால் சம்பாதிக்கமுடியவில்லை.கரீம் தன் தின ஸ்கூட்டர் சவாரியில் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறான். கேட்ட தொகைக்கு விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து சென்றவர், பணம் கொடுக்காமலே கொடுத்ததாக சொல்லி சண்டை செய்தவர், சட்டை கிழிந்து போன போது உபயோகித்த நல்ல சட்டையை கொடுத்து உதவி செய்தவர் என்று தினமும் ஒவ்வொரு விதமான மனிதர்களை சந்திக்கிறான். ஒரு முறை சிக்னனில் காத்திருந்த போது சாம்ராணி புகை போட்டு சிறுமி பணம் கேட்டு கொண்டிருந்தாள். கரீம் அவளுக்கு பணம் தர எண்ணி சட்டையில் பேண்டில் இருக்கும் பணத்தை பார்க்கிறான். சில்லரை இல்லாததால் ஒவ்வொரு காரின் கண்ணாடியை தட்டி சில்லரை கேட்கிறான். ஒரு கார்காரன் பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை தராமல் சென்று விடுகிறான். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கரீம் சிக்னல் சிகப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறிவிட சிறுமிக்கு பணம் எதுவும் போடாமல் சிக்னலை கடந்து சொல்கிறான்.நகரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் இடது புறத்தில் சிறுவர்கள் ரோஜாபூக்கள் கொத்துகொத்தாக விற்பதை பார்க்கிறான். ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து இடது பக்கமாக ரோஜாப்பூக்கள் விற்கும் கூட்டத்தை நோக்கி செல்கிறான். சிறுவர்கள் கூட்டம் கரீமை பார்த்து பயந்தோடுகின்றனர். அந்த சிறுவர்கள் கூட்டத்தில் கரீமிம் மூத்த மகளும், மகனும் இருக்கின்றனர். மீன் குஞ்சுகள் வாங்க பணமில்லாததால் அதற்கான பணம் சேகரிப்பதற்காகவே இதை செய்தாக கரீமிடம் கூறுகிறான் கரீமீன் பையன்.கரீம் கிணற்றுப்பக்கம் சென்று பார்க்கிறான். கிணறு சுத்தமாக இருக்கிறது. கிணற்றிலிருந்த குப்பைகள், மண் கழுவுகள் கிணற்றின் வெளியே கொட்டியிருப்பதை பார்க்கிறான். கிணற்று திண்டில் குருவி கூடு கெட்டியிருக்கிறது. கிணற்று மேல்வரை தண்ணீர் இருப்பதை பார்க்கிறான். தன் மகன் செய்யும் செயல்கள் யாவும் உபயோகமானவையே என்று எண்ணுகிறான் கரீம்.நகரத்திலுள்ள ஒரு கட்டிட கழிவிலிருந்து எடுத்துவந்திருந்த ஜன்னல், கதவு, ஹீட்டர் போன்றவற்றை வீட்டு வாசலின் முன் போட்டு வைத்திருக்கிறான் கரீம். குளிர்காலம் தொடங்கவிருப்பதால் வீட்டிற்கு தேவையான சாமான்களை அதிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் கால் உடைந்து விடைகிறது. இதனால் நகரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே ஓய்வு எடுக்கிறான். கரீமின் மனைவி தையல் வேலை செய்து பணம் புரட்டுகிறாள். கரீமின் பையன் பூந்தொட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து சென்று சம்பாதிக்கிறான். கரீம் பையனின் மனதில் மீன்கள் வளர்த்து பணம் சம்பாதிக்கும் ஆசை மட்டும் அழியாமல் இருக்கிறது. நகரத்திலிருந்து மீன்கள் வாங்கிவரும் போது மீன்கள் எடுத்துவந்த பிளாஸ்டிக் பீப்பாயின் துளை வழியே நீர் கசிந்து வெளியேறுகிறது. மீன்களை காப்பாற்ற பிளாஸ்டிக் பீப்பாவிலிருந்து மீன்களை மாற்றும்போது பீப்பாய் சரிந்து விழுந்து மீன்கள் தரையில் விழுந்து மடிகின்றன. ஒரே ஒரு மீனை மட்டும் காப்பாற்றி பிளாஸ்டிக்கவரில் எடுத்து வந்து மீன் வளர்க்க அமைத்திருந்த கிணற்றினுள் விடுகின்றனர். கரீமின் உடல் நன்கு தேறி வருகிறது. ஓடிப்போன நெருப்புக்கோழி மீண்டும் பண்ணை வந்த சேதி கேட்டு பண்ணைக்கு செல்கிறான். மாலைப்பொழுதின் மஞ்சள் வெளியில் நெருப்புக்கோழி ஒன்று ஆனந்த நடனம் ஆடுவதை பார்க்கிறான்.இத்திரைப்படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதையென்றாலும், அந்தக் குடும்பம் வாழும் கிராமம், கிராமத்திலுள்ள நெருப்புக்கோழி பண்ணை, பொட்டல்காடு, கிராமத்தின் மற்றொரு புறம் பச்சைபசேலென்று வயல்வெளிகள், கிணறு என்று வாழ்வியல் சார்ந்த திரைப்பட வரிசையின் பட்டியலிட்டால் இப்படம் நிச்சயம் சேரும். இப்படத்தில் ஹீரோவாக நடித்த 'Reza Naji'க்கு 'Asia Pacific Screen Awards 2008'ல் 'Best Performance by an actor' அவார்ட் கிடைத்துள்ளது.
 
வல்லினம் ஜீலை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது

Thursday, June 24, 2010

ஒரு சிறுகதை ஒரு நாவல்

சத்தியக்கட்டு


சத்தியக்கட்டு எழுத்தாளர் இமையத்தின் வீடியோ மாரியம்மன் சிறுகதை தொகுப்பிலுள்ள சிறுகதை. சிறுகதையானது 41 பக்கங்கள் கொண்டது. 41 பக்கங்களும் நேர்த்தியானவை. ஏதோ ஒரு தகவலை தருவதாகவே ஒவ்வொரு பக்கங்களும் இருக்கின்றன.வருடத்தின் ஒருநாள் பொன்னருவி கோவிலுக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். பொங்கல் வைக்கும் அன்று அந்த ஊரில் மழை பெய்வது வழக்கம். பொன்னருவி கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. பெண்கள் அனைவரும் பொங்கல் வைக்க தேவையான பொருட்களை சேகரித்த வண்ணம் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலிருக்கும் பெரியவர்களும் 'சீக்கிரம் பொங்கலை வச்சி முடிங்க, மழை வந்துட்டா பிறகு கஷ்டம்' என்று பொங்கல் வைக்கும் பெண்களிடம் கூறுகின்றனர். வேப்பமரம், அரச மரமென ஜம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் கோவிலை சுற்றி இருக்கின்றன. கோவிலின் பக்கத்தில் பொட்டைக்குளம் என்றொரு குளம் இருக்கிறது. பெண்கள் குளத்தில் குளித்து கோவிலை சுற்றி வருகின்றனர். பொன்னருவி கோவிலிலுள்ள பெண் தெய்வம் யார்? கோவிலை சுற்றி மரங்கள் அமைத்தது யார்? பொட்டைக் குளத்தின் கதை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தரும் விதமாக சிறுகதையானது விரிகிறது.நாகம்மாளும் அவள் கணவரும் சின்னச்சாமி படையாச்சியார் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். நாகம்மாளின் கணவர் இரவில் வயலை காவல் காக்க சென்றிருந்த போது திருடர்கள் வயலின் விளைச்சலை திருடிச்செல்ல முயல்கின்றனர். நாகம்மாளின் கணவர் திருடர்களை பார்த்து கூச்சலிடுகிறான். அவனை சப்தம் போடாமல் தடுக்க அவனை வரப்பில் வைத்து அமுக்குகின்றனர் திருடர்கள். மூக்கின் வழியே மண் சென்று செத்துவிடுகின்றான். அவன் இறந்த போது நாகம்மாளின் வயிற்றில் பொன்னருவி ஆறுமாத கருவாக இருக்கிறாள். பொன்னருவி சாப்பிட, தூங்குவதை தவிர மற்ற நேரங்களில் சின்னச்சாமி படையாச்சியின் வீட்டில் வேலை செய்கிறாள். சின்னசாமி படையாச்சியின் மகன் பொன்னருவின் வயிற்றில் குழந்தையை கொடுத்துவிடுகிறான். இந்த விஷயத்தை மறைக்க பொன்னருவியை வேற ஊருக்கு அழைத்து செல்கிறாள் நாகம்மாள். அது சரிபட்டு வராதென்று மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறாள். விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு தெரிந்துவிடுகிறது. பொன்னருவி கீழ்சாதி பெண் என்பதால் அவளுக்கும் மேல் சாதி சின்னச்சாமி படையாச்சி பையனுக்கும் திருமணம் எப்படி சாத்தியம் என்று ஊருக்காரர்களிடம் ஒரே பேச்சாக இருக்கிறது.பொன்னருவியின் விஷயம் அருகிலுள்ள ஊர்களுக்கும் தெரியவருகிறது. பொன்னருவி ஊரில் பலரின் தூக்கத்தை கெடுக்கிறாள். பொன்னருவிக்கும் சின்னச்சாமி படையாச்சி மகனுக்கும் திருமணம் முடித்து வேற ஊருக்கு அனுப்பி அங்கேயே வாழச்செய்ய ஊர் பெரியவர்கள் கூடி முடிவு செய்கின்றனர். வேற ஊருக்கு போவதாக கூறியிருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு பொன்னருவியின் உடல் பொட்டைக்குளத்தில் மிதப்பதாக தெரியவருகிறது. பொன்னருவி எப்படி இறந்தால் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.பொட்டைக்குளத்தில் அதன் பின்பு பல பேரின் உடல் மிதக்கிறது. மனிதர்களை தவிர தண்ணீர் குடிக்க சென்ற 3 மாடுகள் செத்துப்போகின்றன. இரவு நேரத்தில் குளத்தங்கரையில் பெண்ணின் அழுகுரல் கேட்பதாக ஊருக்குள் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிகவின் தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு வந்தவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியிலே இறந்துவிடுகிறான். கற்பமான பெண்களில் சிலருக்கு கரு கலைகிறது. பிள்ளை பெற்றவர்கள் சிலருக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது. ஊரில் நடக்கும் அபசகுணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பொன்னருவியின் சாவு காரணமென்று பஞ்சாயத்தில் பேசுகின்றனர். பஞ்சாயத்தில் பொன்னருவிக்கு வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவன் 'எப்படியோ பறச்சியை கடவுளாக்கிட்டீங்க' என்று கூறுகிறான். பொன்னருவி கடவுளாக உருமாறுகிறாள்.பொன்னருவி இறந்த பின்பு நாகம்மாள் பொட்டைக்குளத்தில் கிடையாக கிடக்கிறாள். பைத்தியம் பிடித்தவள் போல் அழைகிறாள். இருபது வருடமாக பொட்டைக்குளம், பொன்னருவி கோவில் என்று காலத்தை கழிக்கிறாள். பொன்னருவி கோவிலை சுற்றி மரங்கள் நட்டியவள் நாகம்மாள், மரங்களை பராமரித்தவள் நாகம்மாள். சிறுகதையானது மீண்டும் முதலில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது.பொங்கல் வைக்கும் ஒவ்வொருவரின் வாயிலிருந்தும் 'இன்று மழை வருமா?' என்று கேட்ட வண்ணம் இருக்கிறது. சிலர் பொன்னருவியை திட்டுகின்றனர், பொன்னருவி கடவுள் என்றும் கடவுள் நம்மை சோதிப்பதாகவும் கடவுளை திட்டியவர்களை சமாதானப்படுத்தினர். ஜோசியக்காரன் இன்று மழை வராது என்கிறான். சாமி வந்து ஆடிய பெண்ணிடம் 'இன்று மழை வருமா?' என்று கேட்டால் வாயில் பூட்டு போட்டது போல் மெளமாக இருக்கிறாள். பொங்கல் வைத்து முடித்தவர்கள் மழை வரவில்லை என்ற கவலையுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சிலர் மரத்தின் நிழலில் அமர்ந்து வானத்தை பார்த்த படி இருக்கின்றனர். சிறுகதையின் கடை வரியானது 'மேற்கே வானில் இருள் பரவ ஆரம்பித்திருந்தது' என்று முடிகிறது.

------------------------------------------------------------------------------------------------------------

ஆறுமுகம்ஆறுமுகம் எழுத்தாளர் இமையத்தின் இரண்டாவது நாவல். இந்நாவலில் அவர் எடுத்திருக்கும் கதைக்களம் முதல் நாவலான கோவேறு கழுதைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நாவலானது பாண்டிச்சேரியில் செக்குமேடு என்ற இடத்தில் பாலியல் தொழிலாளிகளுடன் வசிக்கும் ஆறுமுகம் என்பனின் கதை.தனபாக்கியம் ஆறுமுகத்தை அழைத்துக்கொண்டு பூத்தூர் கிராமத்திற்கு செல்கிறாள். ஆறுமுகம் அப்போது சிறுவனாக இருக்கிறான். தனபாக்கியம் ஆறுமுகத்தின் அம்மா. தனபாக்கியத்தின் கணவன் ராமன் பாண்டிச்சேரி ஆரோவில்லில் கட்டட வேலையின் போது கீழே விழுந்து இறந்துவிடுகிறான். கணவன் இறந்த பின் கிருஷ்ணபுரத்திலிருந்து கிழம்பி அப்பாவுடன் சென்று வாழ நினைத்து பூத்தூர் கிராமத்திற்கு செல்கிறாள் தனபாக்கியம்.தனபாக்கியத்தின் அப்பா கூடை பின்னும் தொழில் செய்கிறார். அவருக்கு கூடை பின்னுவதை தவிர வேற தொழில் தெரியாது. தனபாக்கியத்தின் அப்பாவை ராமன் முதலில் பார்த்தது கூடை வாங்க சந்தைக்கு போயிருந்த போது. ராமனை பார்த்த உடனே தனபாக்கியத்தின் அப்பாவிற்கு ராமனை பிடித்து விடுகிறது. ராமனுக்கும் தனபாக்கியத்தை பார்த்ததும் பிடித்துப்போகிறது. திருமணம் முடிந்த சில நாட்கள் ராமனுடன் முரண்டு பிடிக்கிறாள் தனபாக்கியம். அவன் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து பக்கத்து வீடு எதிர்த்த வீடென்று எங்காவது சென்று விட்டு அவன் வெளியே சென்ற பின்பு வீடு திரும்புகிறாள். ராமன் எப்போதும் வீட்டிற்கு போவதை விட அன்று சற்று முன்னாதகவே வீட்டிற்கு செல்கிறான். ராமன் தன்னை பார்த்து ஒட முயற்சிக்கும் தனபாக்கியத்தை தடுத்து கலவி புரிகிறான். ஊரிலே திமிர் பிடித்த பெண்ணாக தனபாக்கியம் இருந்தாலும் ராமனிடம் அவளின் திமிர் செல்லுபடியாகவில்லை. ஆறுமுகம் தனபாக்கியத்தின் காதை கடிக்கும் போதெல்லாம் அவளுக்கு ராமனின் நினைவுவருகிறது. முழுமையாக காலி செய்யாத கிருஷ்ணபுரத்து வீட்டை காலி செய்து வர எண்ணி ஒரு நாள் பகல் பொழுதில் கிருஷ்ணபுரத்துக்கு செல்கிறாள் தனபாக்கியம்.ஏனோ மீண்டும் பூத்தூர் திரும்பாமல் கிருஷ்ணபுரத்திலே தங்கிவிடுகிறாள். தனபாக்கியத்தின் அப்பா வாரத்தின் இரண்டு நாள்கள் தனபாக்கியத்துடன் தங்கிவிட்டு திங்கள்கிழமை பூத்தூர் சென்று தன் அன்றாட வேலையை செய்கிறார். பக்கத்துவீட்டு கிழவியின் பேச்சை கேட்டு ஆரோவில்லில் வேலைக்கு செங்கிறாள். அவளின் ஓரே லட்சியம் ஆறுமுகத்தை நன்றாக படிக்க வைக்க வேண்டும். தன்னைப்போல் அவன் தினக்கூலி செய்து கஷ்டப்படக்கூடாதென்று கருதியே ஆரோவில் செல்கிறாள். கிருஷ்ணபுரத்திலிருந்த வீட்டை விற்ற பணத்தில் பாண்டிச்சேரியில் வீடு எடுத்து தன்மகனுடன் தங்குகிறாள். ஆறுமுகத்தை நல்லதொரு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். பள்ளியிலிருந்து சீக்கிரமே திரும்பிய ஆறுமுகம் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறான். எப்போதும் பள்ளி முடிந்து ஆறுமுகம் வீட்டிற்கு வந்த வெகுநேரம் கழித்து வீட்டிற்க்கு வருவாள் தனபாக்கியம். வீட்டின் கதவை தள்ளி உள்ளே சென்ற ஆறுமுகம் தனபாக்கியம் ஆரோவில்லில் வேலை பார்க்கும் வெள்ளைக்காரன் ஒருவனுடன் கலவியில் இருப்பதை பார்க்கிறான். அதிர்ச்சியிலிருந்து வீட்டை விட்டு வெளியே வந்த ஆறூமுகம் கால் நடந்த பாதையில் செல்கிறான்.ஆரோவில் பற்றி இந்நாவலில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. ஆரோவில்லை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரோவில்லை சுற்றியிருக்கும் கிராமங்களின் நிலங்களை பறிமுதல் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராமன் ஆரோவில் தியான மண்டபம் கட்டட வேலையின் போது இறந்தது, தனபாக்கியம் ஆரோவில்லில் வேலை செய்பவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வதென அடுத்தடுத்த நேரடியான குற்றங்கள் ஆரோவில்லின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.வீட்டை விட்டு வெளியேறிய ஆறுமுகம் பாண்டிச்சேரியின் ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறான். கடைசியாக தர்மமூர்த்தியிடம் வந்து சேர்கிறான். தர்மமூர்த்தி ரிச்சா இழுப்பவன். பகல் முழுவதும் ரிச்சா இழுப்பான். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் சாராயக்கடைக்கு சென்றுவிடுவான். பாக்கியத்தின் கடையில் தோசையும், கரியும் வாங்கிக்கொண்டு செக்குமேட்டிற்கு சின்னப்பொண்ணு குடிசைக்கு தூங்கச்செல்வான். ஆறுமுகம் தர்மமூர்த்தியுடன் சேர்ந்து ரிச்சா இழுக்கிறான். தூங்குவதற்கு சின்னப்பொண்ணு வீட்டிற்கு செல்கிறான்.சின்னப்பொண்ணு ஒரு பாலியல் தொழிலாளி. செக்குமேடு பாலியல் தொழிலுக்கு பெயர் போன இடம். இரவு நேரமாகநேரமாக செக்குமேட்டில் ஆண்களின் கூட்டம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு குடிசையினுள்ளும் வெளிச்சம் குறைவான காடாவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. செக்குமேடு சுகாதாரமற்ற இடம், குடிசையை சுற்றி சாக்கடை நிறைந்திருக்கும், மூத்திரவாடை அடிக்கும், இரவானால் சிறுபிள்ளைகள் பார்ட்டியை பிடித்துவந்து குடிசைக்குள் விட்டுச்செல்லும், பேசிய தொகைக்கு குறைவாக தரும் ஆண்களை திட்டிய படி குடிசையின் வெளியே வந்து கூச்சலிடும் பெண்கள், தன்னை இளமையாக காட்டிக்கொள்ள முகத்தில் அளவிற்கு அதிகமாக பவுடர் அப்பிக்கொண்டு நிற்கும் பெண்களின் முகத்தில் டார்ச் லைட் அடித்து அதனை கண்டுபிடிக்கும் ஆண்கள் என பலதரப்பட்டோர் செக்குமேடை சுற்றி திரிகின்றனர்.ஆறுமுகம் ரிச்சா வேலையிலிருந்து விலகி அட்டை கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். ஆறுமுகத்தை வசந்தா வேலைக்கு சேர்த்து விடுகிறாள். அங்கேயும் சில மாதங்களே வேலை செய்கிறான். அட்டை கம்பெனியிலிருந்து வெளியேறி குருமூர்த்தி என்ற சமையல்காரனிடம் வேலைக்கு செல்கிறான். எங்கு வேலை பார்த்தாலும் தூங்குவதற்கு செக்குமேட்டிற்கு சென்று விடுவான். திருமண மண்டபத்தில் குருமூர்த்தி ஆறுமுகத்தை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கிறான். அதனை மறுத்த ஆறுமுகம் மண்டபத்தை விட்டு வெளியேறி செக்குமேட்டிற்கு வருகிறான். செக்குமேடை சுற்றி ஜனக்கூட்டம் அலைமோதுகிறது. போலீசும் செக்குமேடை சுற்றி அதிகம் தெரிகின்றனர். ஏதோ நடக்கக்கூடாதது நடந்ததென நினைத்த ஆறுமுகம் செக்குமேட்டினுள் செல்லும்போது வசந்தா சின்னப்பொண்ணுவின் உடல் செக்குமேட்டின் சாக்கடையில் கிடப்பதாக ஆறுமுகத்திடம் சொல்கிறாள்.நாவல் முழுவதும் செக்குமேடு, முத்தமிழ் நகரில் வாழ்வர்களின் வாழ்க்கையை தெளிவாக கூறுகிறது. ஆறுமுகம் செக்குமேட்டிற்கு சென்றிருந்த போது பெண் ஒருத்தி அவனை இழுத்து குடிசையினுள் தள்ளிவிடுகிறாள். குடிசையினுள் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை பார்க்கிறான். அந்த பெண் ஆறுமுகத்தின் அருகில் வந்தவுடன் அவள் முகம் தெளிவாக தெரிகிறது. அவள் ஆறுமுகத்தின் அம்மா தனபாக்கியம். ஆறுமுகம் தனபாக்கியத்தை பார்த்தவுடன் அழுகிறான். மீண்டும் தன் மகனை பார்க்க மாட்டோமா என்று நினைத்த தனபாக்கியம் ஆறுமுகத்தை பார்த்தவுடன் அவளும் அழுகிறாள். இருவரும் வழியில் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளாமல் நடக்கின்றனர். ஆறுமுகம் தனபாக்கியத்தை வசந்தாவின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அவனும் அன்றைய இரவு அங்கேயே தங்கி விடுகிறான். ஆறுமுகம் மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது தனபாக்கியம் ஃபேனில் தூக்குமாட்டி தொங்குகிறாள்.

Published in Vallinam Magazine June 2010

Thursday, April 1, 2010

சிறுகதை - சுவீர்

1
வேலை பார்க்கும் அலுவலகம்

திடுக்கென்று தூக்கத்திலிருந்து எழுந்த சுவீர் நடுகாலில் பிள்ளையார் படத்தின் மேல் எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் மஞ்சள் பல்பை பார்த்தான். சுவீரின் அப்பா, அம்மா நடுகாலிலும், அண்ணி உள் அறையிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். சுவீரின் அண்ணன் லேத் ஆப்ரேட்டராக மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடிகாரத்தில் மணியை பார்த்தான். மணி பத்தென காட்டியது. திரும்பவும் கட்டிலில் படுத்து தூங்க முயன்ற போதும் தூக்கம் வராமல் விழித்தே இருந்தான். தேநீர் பருகும் எண்ணம் வந்து வீட்டின் வாசலை கடந்து வெளியே சென்றவன் குளிர் தாங்க முடியாமல் வீட்டினுள் நுழைந்து ஜெர்கின் மாட்டிக்கொண்டு தேநீர்கடை நோக்கி சென்றான். ஹைய்தராபாத்தில் டிசம்பர் மாதத்தில் பனி கடுமையாக இருக்கும். சாலையின் ஒரு புறத்தில் ரோட்டில் கிடக்கும் காகித கழிவுகளை பொறுக்கி வந்து அதனை எரித்து வரும் வெப்பத்தில் கூட்டமாக குத்துக்காலிட்டு உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் ஆட்டோ டிரைவர்கள். தேநீர்கடையின் வாசலில் நின்று தேநீர் குடித்துக்கொண்டிருந்த சுவீர் தேநீர்கடையை அடுத்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும் கழுத்தில் மாலையும் இடுப்பில் கருப்பு வேஷ்டியும் நெற்றியில் நீட்டமாய் சந்தனம் அதன் மத்தியில் வட்டமாக குங்குமம் இட்டிருக்கும் ஜய்யப்ப சாமிகளை பார்த்தான். தேநீர் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தவன் தூங்கிப்போனான். கிழக்கில் சூரியன் உதயத்திற்கு தயாராகிக்கொன்டிருந்தது.

சுவீர் வேலை பார்க்கும் அலுவலகம் ஹைய்-டெக் சிட்டியிலுள்ள சைபர்-பேர்ல் வளாகத்தில் ப்ளாக் ஒன்று கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ளது. அலுவலக ரிசப்சனில் இரு நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் பூங்கொத்து மேஜை மீது இருக்கும். ரிசப்சனில் இருக்கும் ஜம்பது வயது நிரம்பிய செக்யூரிட்டி சுவீரை சார் என்று அழைப்பார். சுவீர் அவரிடம் சார் தேவையில்லை பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் என்று பல முறை சொல்லிய பிறகும் அவர் கேட்பதாகயில்லை. நுழைவாயிலை கடந்து வலது பக்கமான பாதையில் சென்றால் பாதையின் இடது பக்கமாக கேன்டின் வரும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் பாதையின் இருபுறத்திலும் ஜந்தடி உயர மரப்பலகையிலான கப்-போர்டு இருக்கும். கப்போர்டின் மேல் பிளாஸ்டிக் பூந்தொட்டி முழுவதும் மண் நிரப்பப்பட்டு பச்சையம் இல்லாமல் வளரும் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும். பாதை முடியும் இடத்தின் இடப்பக்கம் லேப் வரும். லேபினுள் நான்காவது வரிசையின் ஒரு கோடியில் சுவீர் வேலை பார்க்கும் இடம் உள்ளது. சுவீர் வேலை பார்க்கும் இடத்தில் நான்கு சால்டரிங் ஸ்டேஷன், லெட், பேஸ்ட், சால்டரிங் செய்யும் போது வெளிவரும் புகையை உள்ளிழுத்து வெளித்தள்ளும் புகைக்கூண்டு, வெள்ளை நிற பல்பு பொருத்தப்பட்ட வட்டவடிவ பூதக்கண்ணாடி, சிகப்பு மற்றும் கருப்பு நிற வண்ணங்களில் சுற்றி வைக்கப்பட்ட மல்டி ஸ்டேண்டு வயர் இருக்கும். சால்டரிங்அயனின் வெப்பத்தை உயர்த்தி நன்கு சூடான பின்பு அதனை லெட்டில் தொட்டால் புகைவரும் அத்துடன் லெட் சால்டரிங்அயனில் லேசாக ஒட்டிக்கொள்ளும். சால்டரிங்அயனில் ஒட்டிக்கொண்டிருக்கும் லெட்டால் PCB (Printed Circuit Boards) துளையினுள் சொருகியிருக்கும் ரெசிஸ்டரின் முனையை PCBல் இருக்கும் துளையுடன் சேர்த்து ஒட்ட வேண்டும். இது தான் சுவீரின் வேலை.

சுவீர் அலுவலகத்தில் அதிகம் பயப்படுவது அவனின் மேனேஜரான டாங்கேவிற்கு. அவரின் பெயர் சுவிரின் வாயிலிருந்து சரியாக வராது. டாங்கே என்று சொல்வதற்கு பதிலாக டாங்கி என்று சொல்லியிருக்கிறான். டாங்கே நாற்பது வயது நிரம்பியவர். மறந்து போய் டை அடிக்காமல் வரும் நாட்களில் கொத்தாக தலைமுடிகள் வெள்ளை நிறத்திலும், மீசையில் சில முடிகளும் வெளியே வந்து கண்ணடிக்கும். ரொம்ப கண்டிப்பானவர் போல் வெளியே காட்டிக்கொள்வார். அவர் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள தெரியாததை தெரிந்த மாதிரி தெரிந்தவர்களிடம் கேள்விகளாக மாற்றி கேட்பார். கேள்விக்கான பதில் கிடைத்ததும் ஒப்பிக்க வேண்டிய இடத்தில் ஒப்பித்து நன்மதிப்பு பெற்றுக்கொள்வார். அவர் அதிகமாக உபயோகிக்கும் வாக்கியம் "மைண்ட் இட் வெரி வெல்". அவரிடம் எதாவது விசாரிக்கச் சென்றால் அவர் எதிரே உட்கார வைத்து பேசுவார். அவர் பேசி முடிந்ததும் எதிரே அமர்ந்திருப்பவரின் பதிலுக்காக காத்திருப்பது போல் எந்தவொரு அசையுமின்றி எதிர் அமர்ந்திருப்பவரின் கண்களையே வெகுநேரம் பார்ப்பார். அவரின் அந்தப்பார்வை எதிரே அமந்திருப்பவருக்கு குற்ற உணர்ச்சியை தோற்றுவிக்கும். அந்த கணம் ஏதோ தவறு செய்து விட்டு தண்டனை வாங்க காத்திருப்பது போலிருக்கும். அவரின் வெகுநேர பார்வைகளே சுவீரை பல முறை பயமுறுத்தியிருக்கிறது.

சுவீர் டாங்கேவிற்கு அடுத்தாக அலுவலகத்தில் பயப்படுவது கெமராஜ். கெமராஜ் ஒரு டெஸ்டிங் இன்ஜினேயர் சுருக்கமாக இரண்டு வார்த்தையில் அவரின் வேலையை சொல்ல வேண்டுமென்றால் குறை கண்டுபிடிப்பவர். டாங்கேயிடம் அதிகம் பேசுவது, வாதிடுவது கெமராஜ் மட்டும் தான். அதனால் டாங்கேயின் பல குணாதிசயங்கள் கெமராஜிடம் தெரிந்தது. அதில் ஒன்று டாங்கேயைப் போல் வெகுநேரம் நிலைக்குத்தியது போல் பார்க்கும் பார்வை.

சுவீரின் அலுவலகத்தில் பல அழகான் பெண்கள் இருந்தாலும் அவனுக்கு பிடித்தமான பெண் ரீமா. அவள் அணிந்து வரும் தொடையிலிருந்து கால் வரையிலான இறுக்கமான ஜீன்ஸ்பேண்டும் மார்பகங்களை வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும் டீ-சர்ட்டும் சுவீரை அதிகம் கவர்ந்திருந்தது. சுவீரை விட நான்கு வயதே குறைந்தவளானாலும் பார்ப்பதற்கு பதினெட்டு வயது பெண் போல இருப்பாள்.

2
கனவில் வருபவர்கள்

அன்று கெமராஜ் சுவீரை அதிகமாக அனத்தியிருந்தான். கெமராஜ் செய்திருந்த காரியங்கள் சுவீருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. சுவீர் கெமராஜை விரட்டுகிறான். சுவீரின் கையில் சால்டரிங்அயர் சூடாக இருக்கிறது. கெமராஜ் சுவீரிடமிருந்து தப்பித்து ரிசப்சனில் லிப்டிற்காக காத்திருக்கிறான். கெமராஜை பார்த்துவிட்ட சுவீர் அவன் அருகில் ஒடி வந்து தப்பிக்கவிடாமல் பிடித்து அவன் வாயில் சால்டரிங் அயனால் சூடு வைக்கிறான். சுவீர் கெமராஜின் வாயில் சூடு வைப்பதை தூரத்திலிருந்து டாங்கே பார்க்கிறார். இந்த கனவு வந்த அன்று சுவீர் சீக்கிரமே எழுந்து அலுவலகம் சென்று கெமராஜை தேடினான். கெமராஜ் கேன்டீனில் பர்க்கர் தின்று கொண்டிருந்தான். சுவீர் கெமராஜின் வாயை உற்று நோக்கினான். கெமராஜின் வாயில் சூடு போட்ட தடம் இல்லையென்று தெரிந்ததும் சுவீரின் மனம் நிதானமானது.

நுழைவாயிலில் இருந்து வலப்பக்கமாக செல்லும் பாதையில் நடந்து இடப்பக்கம் சென்றால் கழிப்பறை வரும். சுவீர் யூரினல் பேசனில் மூத்திரம் பெய்து கொண்டிருந்த போது நேற்றைய கனவில் வந்த ரீமாவின் உருவம் கண்முன் தோன்றியது. காமம் அவன் உடலை கவ்விக்கொண்டு பிறப்புறுப்பை விறைப்படைய செய்தது. மூத்திரம் பெய்து விட்டு சோப்பு நுரையால் கைகளை தேய்த்து கழுவிக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த கண்ணாடியில் அவளின் உருவம் மீண்டும் தோன்றியது. ரீமா ஆடைகள் இல்லாமல் தரையில் மண்டியிட்ட படி முலைகளை முன் தள்ளிக்கொண்டு மேலே பார்த்தபடி இரண்டு கைகளையும் கால்களின் பின்னால் ஊன்றியிருந்தாள். சுவீர் முலைகளின் காம்பை வருட எண்ணி உருவத்தின் மீது விரலை வைத்தான். கண்ணாடியிலிருந்த உருவம் மறைந்து முலைக்காம்புயிருந்த இடத்தில் சோப்பு நுரையிருந்தது.

சுவீர் தமிழ் மக்கள் வேலை செய்யும் இடத்தை கடந்து சொல்லும் போது அவர்கள் டெஸ்க்-டாப்பில் ஜஸ்வர்யாராயின் படம் இருந்தது. ஜஸ்வர்யாராயின் கண்களை உற்று கவனித்தவன் அவர்களிடம் "ஜஸ்வர்யாராய்க்கு பூனைக்கண்களா?" என்று கேட்டான். அவர்களில் ஒருவன் "என்ன சுவீர் ஜஸ்வர்யாவை கட்டிக்க ஆசையா? அபிஷேக் பச்சனை டைவர்ஸ் பண்ணிட்டு ஜஸ்வர்யா உங்களை கல்யாணம் செய்துக்க கூப்பிடும் போது நேராவே அவளோட கண்களை பார்த்திடலாம். இப்ப போய் வேலையை பாருங்க" என்று கேலி செய்தனர். சுவீர் இணையத்தில் ஜஸ்வர்யாவின் சில புகைப்படங்களை பார்த்த பின்பு ஜஸ்வர்யாராய்க்கு பூனைக்கண்கள் என்று முடிவு செய்தான். அன்றிறவு அவன் கனவில் ஜஸ்வர்யாராய் ஆடையில்லாத உருவத்தில் வருவாள் என்று நினைத்திருந்தான். ஏனோ அன்றைய இரவில் கனவுகளே இல்லாத நிம்மதியான தூக்கம் கிட்டியது.

3
திருமணம் என்றொரு பரிட்சை

சுவீர் திருமணத்திற்காக ஆறு பெண்களின் போட்டோக்களை பார்த்ததில் இரண்டு பெண்கள் அவனுக்கு பிடித்திருந்தது. முதல் பெண் நல்ல அழகானவள். பி.எஸ்.சி படித்திருக்கிறாள். போட்டோவிலிருப்பதை விட நேரில் பார்ப்பதற்கு கூடுதலாகவே அழகாகயிருந்தாள். சுவீர் அவளிடம் தனக்கு பிடித்திருக்கிறது என்று நேரடியாக கூறினான். அவளோ தலையை கீழே குனிந்தபடி பிடித்திருக்கிறது என்பதை தலையசைத்து சபையோரிடம் கூறினாள். திருமணப் பரிட்சையில் தேர்வாகிவிட்டதாக எண்ணியிருந்த ஒரு வாரத்தில் பெண் வீட்டாரிடமிருந்து அவனுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்ற தகவல் வந்தது. நிராகரிப்பின் வலியை முதன் முதலில் உணர்ந்தான். தன்னிடமிருக்கும் குறைகளை தோண்டி எடுக்க ஆரம்பித்தான். ஜ.டி.ஜ மட்டும் படித்திருக்கும் கல்வித்தகுதி அவளுக்கு பிடிக்காமல் போயிருக்குமோ? வேலைக்கு சேர்ந்த புதிதில் கூர்ந்து கவனித்து வேலை செய்ததால் கண் குறைபாடு ஏற்பட்டு நிரந்தரமாக ஆகிவிட்ட மூக்கின் மீது அமர்ந்திருக்கும் மூக்குக் கண்ணாடி பிடிக்காமல் போயிருக்குமோ? தோண்டத் தோண்ட அவன் நினைத்த குறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

இது நடந்த ஒரு மாதம் கழித்து இரண்டாவது பெண்ணை நேரில் சென்று பார்த்து வந்தான். பெண்ணின் ஊர் சிலுக்கூரிலிருந்து ஜந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இரண்டாவது பெண் முதல் பெண்ணின் அளவு அலகில்லையென்றாலும் நல்ல முகலட்சணமாக இருந்தாள். பி.எட் படித்திருக்கிறாள். பெண் பார்க்க சென்றிருந்த போது சுவீர் அவளின் விருப்பத்தை முதலில் கேட்டான் அதன் பின்பு அவனின் விருப்பத்தை கூறினான். சுவீர் வேலையில் மூழ்கியிருந்த போது மாலைப்பொழுதில் அவளிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அவளின் அழைப்பை ஏற்று சைபர்-டவரின் எதிரேயிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவளுக்காக காத்திருந்தான். அப்போது ரீமாவின் ஆடையில்லாத உருவம் அவன் கண் முன் தோன்றி மறைந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கியவள் சுவீரை நோக்கி நடந்து வந்தாள். துப்பட்டாயில்லாத சுடிதாரில் வந்திருந்தாள். காற்றில் பறந்த டாப்ஸை கைகளால் மறைக்க முயன்ற போது அவள் அணிந்திருந்த பேண்ட் அவளின் தொடைகளை இறுக்கமாக பற்றியிருப்பது தெரிந்தது. அருகில் வந்தவள். "ஏன் போன்ல பேசும் போது அவ்வளவு மெதுவா பேசுனீங்க?" என்று கேட்டாள். "மேனேஜர் பக்கத்தில் இருந்தார் அதான் மெதுவா பேசினேன்" என்றான். "சரி வாங்க டீ சாப்பிட்டுட்டே பேசலாம்" என்றழைத்தாள். சுவீர் அவளிடம் "நிஜமாகவே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று கேட்டான். சிறு புன்னகையை உதட்டில் உதிர்த்த படி விழித்திரையை மெதுவாக மூடித்திறந்து அவளுக்கு பிடித்திருக்கிறது என்றாள். சுவீர் அவள் கண்களையே பார்த்தான். அந்த ஜோடிக் கண்களில் கனிவிருந்தது, பரிவிருந்தது, பாசமிருந்தது. உனக்கு நான் எனக்கு நீ என்பதை அவள் கண்களின் பார்வையில் உணர்ந்தான். அவளின் கைகளின் விரல்களுக்குள் சுவீர் தன் விரல்களை உள் செலுத்தி இறுக்கமாக பற்றிக் கொண்டு தேநீர் கடை நோக்கி நடந்தான். மேற்கே சூரியன் பாதி இளஞ்சிவப்பு நிறத்திலும் பாதி ஆரஞ்சு நிறத்திலும் ஒளிக்கதிர்களை சிதறடித்த வண்ணம் மறைந்து கொண்டிருந்தது.

வல்லினம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

பார்வைகள்