Sunday, August 8, 2010

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)


ஹைய்தராபாத் ஃபிலிம் கிளப்பில் 'Mexican Film Festival' நடத்தப்பட்டது. ஜந்து தொகுப்புகள் கொண்டது. முதல் தொகுப்பாக மெக்சிகன் சூப்பர் ஹீரோ எல் சேன்டோ நடித்த ஜந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன்.


திரையிடப்பட்ட படங்கள் 1963 முதல் 1972 க்குள் வெளியானவை. எல் சேன்டோ மெக்சிகன் சினிமாவின் சூப்பர் ஹீரோ. சேன்டோ ஒரு மல்லியுத்த வீரன். அவனது முதன்மையான தொழில் மல்லியுத்தம் விளையாடுவது. இரவில் மல்லியுத்தம் விளையாடுவான் பகலில் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவுகிறான். சேன்டோ சூப்பர் ஹீரோ என்றாலும் மற்ற சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், பேட்மேன், சூப்பர்மேன் போன்றோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். இவர்கள் செய்யும் சாகசங்களான மணிக்கட்டிலிருந்து வலை வரவைப்பது, வவ்வால் போல் பறப்பது, ஆகாயத்தில் பறப்பது போன்ற எந்தவொரு அபார சக்தியும் இவனிடம் கிடையாது. சேன்டோ நல்லதேக பலமும் கூடுதலாக புத்தி கூர்மையும் கொண்டவன். சேன்டோவை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது அவன் முகத்தில் அணிந்திருக்கும் சில்வர் நிற கவசம்.

சேன்டோவின் அறிமுக காட்சியானது ஒவ்வொரு படத்திலும் மல்லியுத்த களத்திலிருந்து தொடங்குகிறது. சேன்டோ அரங்கினுள் நுழைந்தவுடன் பார்வையாளர்கள் உற்சாக குரலில் அவன் பெயர் சொல்லி வரவேற்கின்றனர். முதலில் அடி வாங்கினாலும் இறுதியில் சேன்டோவே ஜெயிக்கிறான். திரைப்படத்தில் காண்பிக்கும் மெக்சிகோ நகரிலுள்ள மல்லியுத்த களமானது நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் ரெஸ்லிங் மைதானம் போலவே உள்ளது. விளையாட்டின் விதிமுறை, முகத்தில் குத்துவிடுவது, மேலிருந்து வயிற்றின் மேல் விழுவது என எல்லாமே இப்போது பார்க்கும் மல்லியுத்தம் போலவே இருந்தது.

'Anonymous Death Threat' திரைப்படத்தில் சேன்டோ விளையாட்டு முடிந்து தன் அறையில் ஓய்வெடுக்கிறான். அப்போது அவனை தேடி ஒருவர் உதவி கேட்டு வருகிறார். தேடி வந்தவர் தன்னை கொலை செய்யப்போவதாக கடிதம் வந்ததாக சேன்டோவிடம் கூறுகிறார். தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று சேன்டோவிடம் கூறிவிட்டு செல்கிறார். தேடிவந்தவர் சில நாட்களில் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். அவரைப்போலவே நகரத்தில் இரண்டு பேர் கொலைமிரட்டல் கடிதத்தின் பின்னர் கொல்லப்படுகின்றனர். மொத்தம் மூன்று கொலைகள். கொலையில் பணமோ, நகையோ திருடு போகவில்லை. இன்ஸ்பெக்டர் ஒருவர் சேன்டோவுடன் சேர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார். மூன்று கொலைகளுக்கும உள்ள ஒரே ஒற்றுமை கொலைமிரட்டல் கடிதம்.

கதையின் நகர்வு, கொலையை பற்றி விவாதம் செய்வது சுஜாதா கதை சொல்லும் பாணியை ஒத்திருந்தது. சுஜாதாவின் கதாபாத்திரங்களான கணேஷ், வசந்த் போல இந்தப்படத்திலும் சேன்டோவிற்கு உதவியாக ஒரு ஆணும் பெண்ணும் உடனிருக்கின்றனர். மூவரும் கொலை பற்றி விவாதம் செய்கின்றனர். அதே நகரில் நான்காவதாக ஒருவருக்கு இதே போல் கொலை மிரட்டல் கடிதம் வருகிறது. கதை அதன் பின் விறுவிறுப்பாக செல்கிறது. கொலையை யார் செய்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

சேன்டோவை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். ஜேம்ஸ் பாண்ட் ஏற்று நடித்த உளவுத்துறை, போலீஸ் போன்ற பாத்திரங்களில் சேன்டோவும் நடித்திருக்கிறார். 'Santo Vs Blue Demon' என்ற மற்றொரு படத்தில் உலகை அழிக்க திட்டமிடும் விஞ்ஞானியின் திட்டத்தை முறியடிக்கிறான் சேன்டோ. இந்தப்படம் 1970ல் வெளியாகியுள்ளது. படத்தின் கதையானது மெக்சிகோ விஞ்ஞானி 1940ம் ஆண்டு ரஷ்யாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறான். பின்பு அவனிடமிருந்து ரஷ்யர்கள் நியூக்ளியர் பாம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு அவனை துரத்தி விடுகின்றனர். இதனால் கோபமடைந்த விஞ்ஞானி நியூக்ளியர் பாமை சந்திரன் கிரகத்திலிருந்து புவியில் வீசி உலகத்தையே அழிக்க திட்டமிடுகிறான். படத்தின் லாஜிக்கில் எந்தவொரு பிழையும் இல்லை. நூறு சதவீதம் நிகழக்கூடியதுதான். நாற்பது வருட இடைவேளைக்கு பின் பார்க்கப்படும், பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அதன் பிரமாண்டங்கள் இப்போது தெரியவில்லை.

உலக சூப்பர் ஹீரோக்களின் படங்களை பார்ப்பவர்கள் மெக்சிகன் சூப்பர் ஹீரோவான எல் சேன்டோவின் படங்களையும் பாருங்கள்.

வல்லினம் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது

சங்கமம் - சிறுகதை


மழைகாலத்தில் ஒரு நாள் காலையில் சார்லஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியன் எழுந்து தன் வேலையை தொடங்காமல் கருப்பு கம்பளி போர்வையினுள் காலை எட்டு மணி ஆகியும் தூங்கிக்கொண்டிருந்தது. ரோட்டை ஒட்டிய டீக்கடையில் மாஸ்டர் பாலை ஆத்திக் கொண்டிருந்தார். பெஞ்சில் அமர்ந்திருந்த சிலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். சார்லஸ் நெற்றியில் வெள்ளை நிற பேண்டேஜ் கை விரல்களில் சிராய்ப்புடன் முகத்தில் ஒரு வித சோகத்துடன் டீக்கடையை ஒட்டிய பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.


சில மாதங்களுக்கு முன்பு, “டே வசந்த்! என்னடா மணி ஒன்பது ஆவுது இன்னும் கிழம்பாம ஆபீஸ்லயாடா இருக்க மடப்பயலே, மேனேஜருக்கு சோப்பு போட்டது போதும், கிழம்பி நேரா பிரபா ஒயின்ஸ் வந்திருடா” என்று செல்போனில் பேசினான் சார்லஸ். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “ஹலோ! மிஸ்டர் கொஞ்சம் நம்பர செக்பண்ணிட்டு டயல் பண்ணா நல்லாயிருக்கும்” என்றாள் அவள். சார்லஸ் “சாரி” என்றான். “ஓகே சார்லஸ் பரவாயில்லை” என்றாள் அவள். செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை ஆபீஸ் டூவீலர் பார்க்கிங்கில் சார்லஸ் “நேத்து ராங் நம்பர்ல பேசிய பெண்ணுக்கு என் பேரு எப்படி தெரியும்?” என்று வசந்தைப் பார்த்து கேட்டான். ”ஏங்கிட்ட கேட்கிற“, ”சார்லஸ் இதான் அந்த பெண் நம்பர் உனக்கு தெரியுதாம் பாரு“ என்று டயல்டு நம்பரிலிருந்த எண்ணை படித்துக் காட்டினான். வசந்த் ”இது நம்ம கம்பெனி சியூஜி நம்பர் மாதிரி இருக்கே“ என்று கூறிவிட்டு தன் மொபைல் போனில் அந்த நம்பரைத் தேடினான். வசந்த் ”லேகாவோட நம்பர் இது“ என்றான். லேகா யார்? அழகாக இருப்பாளா? திருமணமான பெண்ணா? என்று யோசித்த படி ஆபீஸினுள் நுழைந்தான் சார்லஸ்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமணையின் பிரசவ அறையில் மாலா கட்டிலில் படுத்திருந்தாள். மாலாவின் அம்மா ”பயமா இருக்கா சாவித்திரி பயப்படாதம்மா, மாரியம்மனை மனசுல நனைச்சுக்கோமா“ என்று கைகளை பற்றிக் கொண்டு மகளிடம் ஆறுதல் கூறினாள். அவளின் உடல் முழுவதும் வேர்த்திருந்தது அடிவயிற்றில் பலமாக வலி வந்து கத்த துவங்கினாள்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, இரவில் வேலையை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பினான் சிவா. அந்த அறையில் நான்கு கண்ணாடி சுவர்களும் ஸ்கிரினால் மறைக்கப் பட்டிருந்தன சோனி கலர் டீ.வி, இருவர் படுத்துக்கொள்ளும் அளவு படுக்கை அதன் மீது பழுப்பு நிற கம்பளி, ஆள் உயர கண்ணாடி, சின்ன சமையல் அறை, ஒரு டாய்லட், ஒரு பாத்ரூம் இருந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து வாய்ஸ் சேட்டிங்கில் சிவகாசியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு தொடர்பு கொண்டான் சிவா “அக்கா எப்படியிருக்க?” சிவாவின் அக்கா லதா “நான் நல்லாயிருக்கேன் சிவா” “மச்சான் எப்படியிருக்காரு, குட்டி என்ன செய்றான்”. குட்டி அசந்து தூங்கி கொண்டிருந்தான். லதா “ஒரு பொண்ணு போட்டோ அனுப்புறேன். பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லு,” “அக்கா மெயில்ல பொண்ணு போட்டோ அனுப்புறத இதோட விட்டிருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இந்தியா வந்திருவேன்”. “இதே தான் போன வருஷமும் சொன்ன எங்கவந்த.” “இதோட பத்து போட்டோ பார்த்தாச்சி, ஒன்னும் சரியில்லை”, “என்னடா பேச்சி இது, நீ ஏதும் அமெரிக்காவிலே பார்த்து வச்சிருக்கியா அப்பாவுக்கு செலவு வைக்காம, சரி கடைசியா இந்த பொண்ணு போட்டோவை பாரு, பிடிக்கலைன்னா நீ வந்த பிறகு வேற பார்ப்போம்” என்று மெயிலில் அட்டாச் செய்திருந்த போட்டோவை சிவாவுக்கு அனுப்பினாள் லதா.

சிவாவிற்கு பெண்ணின் போட்டோவை பார்த்ததுமே பிடித்துப் போனது, பெண்ணின் பெயர் மாலா, மாலாவின் சொந்த ஊர் சிவகாசி. படிப்பு எம்.சி.ஏ கோல்டு மெடல், படித்து முடித்த அடுத்து நாளிலிருந்து மாலாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் மாலாவின் அப்பா. சிவாவின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்க மாலாவின் அப்பா சிவாவின் அப்பா கோகுலிடம் கேட்ட போது அவனுக்கு ஜாதகமெல்லாம் கிடையாது என்றார், எங்களுக்கு ஜோசியத்தின் மீதெல்லாம் நம்பிக்கையில்லை, வேண்டுமென்றால் அவன் பிறந்த தேதி, நேரம் சொல்கிறேன் என்றார். கோகுல் கொடுத்த தகவல்களை வைத்து மாலாவின் அப்பா கழுகுமலை ஜோசியரிடம் ஜாதக பொருத்தம் பார்த்து அவர் கொடுத்த நல்ல நாளில் சிவா மாலாவின் திருமணம் நடந்தது. மாலாவின் அப்பா வேலை மாற்றலாகி சென்னைக்கு குடியேறினார்.

சிவா: திருமணம் முடிந்த பின்பு மாலாவையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பினேன். திருமணம் முடிந்த பல நாட்கள் அவளுடன் உடலுறவிலே கழிந்தன. அவளைப்பற்றி அறிந்து கொள்ளவே எனக்கு பல மாதங்கள் ஆகின. அவள் அதிகம் பேச மாட்டாள், விரும்பியதை வாய்திறந்து கேட்க மாட்டாள். நாட்கள் நகர்ந்தன, திருமணமாகி இரண்டு வருஷம் முடிந்தும் குழந்தை இல்லையே என்று ஏங்கத்துவங்கினாள். குழந்தை வேண்டும் என்று ஆயிரம் சிறு பேப்பரில் எழுதி அதை சிவகாசியிலுள்ள மாரியம்மனுக்கு மாலையாக போடும்படி பேப்பர்களை அத்தைக்கு பார்சல் செய்தாள். சில தினங்கள் குளிக்காமலே படுக்கையிலே படுத்துக்கிடந்தாள். தூங்கும் போது தினமும் என்னிடம் குழந்தை எப்ப பிறக்கும் என்று மறக்காமல் கேட்பாள். “இன்னும் கொஞ்ச நாள்ல” என்று பதில் கூறுவேன். ஒரு நாள் இரவில் அழுது கொண்டிருந்தாள். “ஏன்?” என்று கேட்கும் பதில் கூறாது தொடர்ந்து அழுதாள். அவளாகவே சிறுது நேரம் கழித்து பேசினால் “அம்மா போன் பண்ணிருந்தா”. “என்ன விஷயமா.” “ஏன் பிரண்ட் உமாவுக்கு அடுத்த வாரம் வளைகாப்பாம்”. சிவா கோபமாக “இத சொல்லத்தான் போன் செய்தாங்களாக்கும்” என்ற கேட்டதும் மீண்டும் அழத்துவங்கிளாள். அத்தை வாரம் தவறாது மாலாவிற்காக சிவகாசியிலிருந்து இருக்கன்குடியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வந்தாள். வார விடுமுறையன்று, கட்டிலில் படுத்துக்கெண்டு மூன்று மாதங்களாக பார்க்காத வீட்டுச் செலவு கணக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு எப்போதும் வாங்கும் பொருட்களிலிருந்து போன மாதம் வாங்கிய பொருள்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருந்தது. என்னவென்று பார்க்கையில் சானிட்டரி நாப்கின் அந்த லிஸ்டில் இல்லை. “மாலா போன மாதம் நாப்கின் வாங்கலையே, என்ன பண்ணின” என்று கேட்டேன். யோசித்தால் சற்று நேரம் கழித்து “ஆமா போன மாசம் பீரியட்ஸ் வரல” என்றாள். செக்கப்செய்த பிறகு தெரிந்தது மாலா கர்ப்பமாக இருந்தாள்.

இரத்தம் கலந்த உடலுடன் மாலாவின் அடிவயிற்றிலிருந்து குழந்தை வெளித்தள்ளப்பட்டது.

சார்லஸ்: லேகாவை பற்றிய சிந்தனையிலே திறந்திருந்த என்டரன்ஸ் கதவில் ஸ்வைப் செய்யாமல் உள்ளே நுழைய முற்பட்ட போது செக்யூரிட்டி “ஸார், ப்ளீஸ் ஸ்வைப் உவர் கார்டு” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினான். பிறகு ஸ்வைப் செய்துவிட்டு உள்ளே சென்றேன். கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தேன். மணி பதினொன்று ஆனதும் டீ குடிக்க கேன்டீன் நோக்கி செல்லும் போது “சார்லஸ் சார்லஸ்” என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஒரு பெண் “ஹய் ஹவ் ஆர் யூ” என்று கேட்டு கைகளை முன்னே நீட்டி கையை பிடித்து குலுக்கினாள். “அய்ம் லேகா” என்றாள். முதன் முதலில் பார்ப்பதால் பிரமித்து விட்டேன் அவளை பார்த்தவுடன் என்ன அழகு அழகான வட்ட முகம், உடலுக்கேற்ற மார்பகங்கள், விரிந்த இடை, உடைகள் அவள் உடலை பிரதி எடுத்திருந்தன, காது கேட்காது கண்கள் மட்டும் தெரிவது போல் ஒரு மயக்க நிலையில் இருந்தேன். “ஹலோ ஹலோ” என்று அவள் பேசும் பேச்சு தொலைவிலிருந்து உப்பிடுவது போல் இருந்தது. அவள் மீண்டும் என் கைகளை தொட்டவுடன் சுய நினைவுக்கு திரும்பினேன். “ஈவினிங் கேன்டீனில் மீட் பண்ணுவோம்” என்றாள். சாவி கொடுத்த பொம்மை போல எனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன். கேன்டீனில் ஆரம்பித்த எங்கள் சந்திப்பு தினமும் இரவு இரண்டு மணி வரை பேசும் வரை வளர்ந்தது. வார விடுமுறை நாட்களில் சத்தியம் தியேட்டர், மாயாஜால், கோவலம் பீச் என்று சுற்றித்திரிந்தோம், கூட்டமில்லாத இடங்களுக்கு அதிகம் சென்றோம். காதலெனும் பேரலை இன்பமெனும் கடலுக்குள் எங்களை இழுத்துச் சென்றது. வரும் வார விடுமுறை அன்று ஹைதராபாத்திலுள்ள லகிரி ரிசார்ட் சென்று வார முடிவு செய்தோம். அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நான் வசந்திடம் நம்பும்படியான சின்ன பொய் செல்லிவிட்டு சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். கேள்வி கேட்க ஆள் இல்லாத ஹாஸ்டலில் அவள் தங்கி இருந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தாள். இருவரும் அன்று மாலை 4.45 மணிக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் ஹைதராபாத் எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டோம். அடுத்த நாள் காலை 6.00 மணிக்கு ஹைதரபாத் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். கோச்சிலிருந்து இறங்கியவுடன் வெந்நிற ஆடை அணிந்திருந்த ஆள் எங்களை லகிரி ரிச்சார்டுக்கு அழைத்துச்சென்றான். லகிரி ரிச்சார்ட் ரிசப்ஷனில் அமர்ந்து இருந்தோம், ரிஷப்னிஸ்ட் “உங்கள் பெயர் என்ன? உங்களுடன் வந்திருக்கும் பெண்ணின் பெயர் என்ன? உங்களுக்குள் என்ன உறவு? ” என்று அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தவறான பதில் கொடுத்துவிட்டு எங்களுக்குரிய அறைக்குச் சென்றோம். காலை 10.00 மணிக்கு அறையிலிருந்து வெளியேறி ஸ்விம்மிங்பூலுக்கு குளிக்கச் சென்றோம்.

ஸ்விம்மிங்பூல் அழகாக நீல நிறமாக இருந்தது. இருவரும் ஸ்விம்மிங் உடைக்கு மாறினோம். அவள் தனக்கு ஸ்விம்மிங் தெரியாது என்று கூறியதால் நான் அவளுக்கு ஸ்விம்மிங் கற்றுக்கொடுத்தேன். அவள் கரையை விட்டு அதிகம் உள்ளே செல்லாமல் குளித்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு கரையிலிருந்து மறு கரை வரை நீந்திச்சென்று வந்து அவளிடம் ஒரு முத்தம் வாங்கினேன். குளித்து முடித்த பின்பு நன்கு பசித்தது. வெயிட்டர் சூடாக இரண்டு பிளேட் சிக்கன் பிரியாணி ஸ்விம்மிங்பூல் ஓரம் இருந்த மர வீட்டிற்கு கொண்டுவந்தான். லேசாக மழை பெய்து குளிர்ந்த காற்றுடன் இருந்தது வெளி. முகத்தை துடைக்காத அவளின் கன்னத்தில் முத்து பதித்தது போல் நீர் துளிகள் இருந்தன. அவளிடம் “உனக்கு நாம் செய்வது தப்பாக தெரியவில்லையா?” என்று கேட்டேன். அவள் “இதிலென்ன தவறு, நாம் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே” என்றாள். வேறு எதுவும் கூறாது சிக்கனை மென்று தின்றாள். தூக்கம் வரவே இருவரும் அறைக்கு தூங்கச் சென்றோம். மாலை 4.00 மணியளவில் எழுந்து குளித்து சென்னையில் இருந்து வாங்கி வந்திருந்த புது துணிகளை உடுத்திக்கொண்டோம். வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டோம். பார்ப்பதற்கு திருமணத்தம்பதிகள் போல் இருந்தோம். இருவரும் ஒன்றாய் கண்ணாடி முன் நின்று திருமண புகைப்படம் எடுப்பது போல் சிரித்தோம். ரிஷப்சனில் போன் செய்து அருகிலுள்ள சர்ச்சுக்கு சென்று வர டாக்ஸி புக் செய்தேன். சர்ச் வாசலில் டாக்ஸி வந்து நின்றது. டாக்ஸி கதவை திறந்து வெளியே வந்தோம். கார்ப்பட் விரித்திருந்த நடை பாதையில் நடந்து சர்ச்சினுள் நுழைந்தோம். ஒரு பெண் குழந்தை என் கையையும், ஒரு ஆண் குழந்தை அவள் கையையும் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றது. சிறு புன்னனையுடன் நடந்தபடி சுற்றிலும் பார்த்தேன். மாமா, அத்தை, சித்தி, பெரியப்பா, மச்சான், அத்தை மகள் கிளாரா வந்திருந்தனர். வசந்த் அருகில் வந்து கைகளை குலுக்கியபடி வாழ்த்துக்கள் கூறினான். அப்பா, அம்மா தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பாதர் அருகில் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தோம். பின்பு எழுந்து இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். ஆபீஸ் நண்பர்கள் என்னைக் கட்டிக்கொண்டு வாழ்த்துக்கள் கூறினர். சர்ச் வாசலில் ரோஜா பூக்களினால் அழகு செய்யப்பட்ட டாக்ஸி நின்றிருந்தது. நாங்கள் சர்ச் படிகளிலிருந்து கீழே இறங்கும் போது பல வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. டாக்ஸியின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து வெளியே பார்க்கையில் யாரும் இல்லை. டாக்ஸிக்காரன் “போகலாமா சார்” என்று கோபமாக கேட்டான். அறையினுள் நுழைந்த உடன் கதவை தாழிட்ட அடுத்த நொடி இருவரும் கட்டிக்கொண்டோம். முத்தங்கள் கொடுத்துக் கொண்டோம். உடைகளை தாராளமாக அவிழ்த்துக்கொண்டு உடலுறவு கொண்டோம். அவளும் உடலை நன்கு வளைந்து கொடுத்தாள். ஆசை தீரும் வரை உடலுறவு கொண்டோம்.

குழந்தையை பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னையிலுள்ள மாமனார் வீட்டிற்கு வந்தான் சிவா. மாலா கட்டிலிலும் குழந்தை தொட்டிலிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். சிவா தொட்டில் அருகே சென்று குழந்தையை பார்த்தான் பெண் குழந்தை அழகாக இருந்தது. எத்தனை நாள் ஏக்கம், இன்று தணிந்தது போல் மனதில் ஓர் அமைதி, குழந்தையின் மேனியை சிவா தொட்டபோது அவனின் உடல் சிலிர்த்தது, கண்கள் கலங்கின.

மாலா: இரவில் குழந்தை கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. குழந்தையின் வலது புறம் நானும் இடது புறம் அவரும் படுத்து பேசிக்கொண்டிருந்தோம். நான் “குழந்தை அழகா இருக்குள்ள” “ஆமா, நமக்கு பிறந்த குழந்தையாச்சே”. சிவா “குழந்தையை அழைச்சிட்டு எப்ப அமெரிக்கா வர”. நான் “அமெரிக்கா வரல”. “ஏன்?” “குழந்தைக்கு ஏதாவது ஆச்சினா பார்க்க யார் இருக்கா அங்க”. “நீ சொல்றது சரிதான் ஆனா எனக்கு இன்னும் இரண்டு வருட கான்ட்ராக்ட் இருக்கே”. “நீங்க வேணா போங்க, நானும் குழந்தையும் இங்க தான் இருக்கப்போறோம்” என்று கூறியவுடன் அவர் என்னை கோபத்துடன் பார்ப்பதை கண்ணாடியில் பார்த்தேன். குழந்தைக்கு சுஜாதா என்று பெயர் வைத்தது கோகுல் மாமா தான். சுஜாதா யார் என்று கேட்டதற்கு மாமா சிறந்த எழுத்தாளர் என்றார். மாமா நிறைய புத்தகங்கள் படிப்பார். சிவா சிறு வயதாக இருக்கும் போது மாமாவிடம் கதை கேட்ட பின் தான் தூங்கச் சென்றதாக சிவா கூறி இருக்கிறார். சிவா இந்தியா வந்ததும் அப்பா எங்களுக்காக பார்த்திருந்த அடையாறு வீட்டில் நான், சிவா, சுஜாதா மூன்று பேரும் குடியேறினோம். அம்மா வாரம் இரு முறையும், அப்பா ஒரு முறையும் வந்து பார்த்து செல்வார்கள். அந்த வீட்டை சுற்றி அமைதியான சூழல் நிலவியது. குழந்தைக்கு தினமும் வேடிக்கை காட்டுவதற்காக மாலை நேரத்தில் அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச்செல்வேன். பூங்காவில் பெரியவர்கள் நடந்தபடியும் சிறுவர் சிறுமியர் ஊஞ்சலில் விளையாடிய படியும் இருப்பர். சிவா ஒரு நாள் லவ் பேர்ட்ஸ், புறா வாங்கிக்கொண்டு வந்தார். குழந்தைக்கு பறவையின் சத்தத்தை கேட்டு சில சமயம் சிரித்தது. சில சமயங்களில் பறவைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மாமி “இங்கே பறவைகள் வளர்க்ககூடாது” என்றாள். அதன் பிறகு நானே பறவைகளை வானில் பறக்கவிட்டேன். மாமா ஊரிலிருந்து வந்திருந்தார். மாமா குழந்தையை நன்கு கவனித்துக்கொண்டார். காலை வாக்கிங் சென்று வந்தவுடன் சுஜாதாவை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள டீ கடைக்கு சென்று வருவார்.

லேகா: வர வர சார்லஸ் தொல்லை அதிகமாயிடுச்சி, எந்த நேரம் பார்த்தாலும் குறை சொல்கிறான். உடைகளை இறுக்கமாக அணியாதே, லிப்ஸ்டிக் ரொம்ப பிரைட்டா போடாதே. தலைமுடிகளை விரித்துப் போட்டபடி திரியாதே, ஆண்களிடம் அதிகம் பேசாதே என்று தினமொரு குறை கூறுகிறான். அவனிடம் மட்டும் குறையில்லையா என்ன தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறான். வாரம் மூன்று முறை தண்ணி பிடிக்கிறான், அவனிடம் நான் ஒரு நாளும் இதைப்பற்றி கேட்டதில்லை. அவன் மட்டும் ஏன் என்னை கேட்கவேண்டும். குழப்பத்திலிருந்த நான் ஆனந்த விகடனுக்கு என் நிலைமையை எழுதினேன். பெசலிஸ்டு பதில் அளித்திருந்தார்.

“அன்புள்ள லேகாவிற்கு,

திருமணம் ஆகும் முன்பே எல்லாம் முடிந்து போனது என்றால் வேற என்ன இருக்கு வாழ்க்கையில் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள். இனிமே முடிவு எடுக்கவேண்டியது நீங்கள் தான். ஒருவன் சரியில்லையென்று மற்றொருவனை தேடுகிறீர்களே, எல்லாம் முடிந்து போனவனின் வாழ்க்கையை ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்தீர்களா?”

சார்லஸ்: நண்பன் ஒருவன் மூலம் அவள் ஆனந்தவிகடனுக்கு எழுதியிருந்தது தெரியவந்தது. லேகாவிடம் சென்று ஏன் இப்படி எழுதியிருந்தாய் என்று கேட்கச் சென்றேன். பேச்சு எங்களையும் மீறி போனது. ஒரு கட்டத்தில் பளார் என்று கன்னத்தில் அடித்தேன். “போடா நீயெல்லாம் ஒரு ஆம்பளையா, உன்கூட படுத்ததுக்கு தெரு நாய் கூட படுத்திருக்கலாம்”. என்று கூறிவிட்டு அழுதபடி சென்றாள். அன்றிரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு லாரியில் மோதி பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.

சார்லஸ் சர்ச்சிற்கு செல்வதற்காக டீ கடையை ஒட்டிய பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அதே பஸ் நிறுத்தத்தில் கோகுல் தன் பேத்தியுடன் நின்றிருந்தார். பசு மாடு ஒன்று பஸ் நிறுத்தத்தை ஒட்டிய குப்பை தொட்டியிலிருந்த காய்கறி கழிவுகளைமேய்ந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தத்தில் பலத்த சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. உடல்கள் சிதறின. பல்வேறு சூழலில் வாழ்ந்த இவர்கள் இந்த வெடிவிபத்தினால் இவர்களின் மரணம் ஒன்றாய் சங்கமம் ஆகின.

மறுநாள் காலை பத்திரிக்கையில் வெடி விபத்தில் இறந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தன. சார்லஸ் வயது இருபத்திஎட்டு, சுஜாதா வயது ஜந்து, கோகுல் வயது அறுபத்தி ஐந்து, மேலும் ஒரு பசு மாடு. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

வல்லினம் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது

ஒரு சிறுகதை நாடகமாக அரங்கேறியது

கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் 'Theatre & Short Film Festival' நடைபெற்றது. தினமும் ஒரு நாடகம் அதன் பின்னர் மூன்று Short Films திரையிட்டனர். அரங்கேறிய நாடகங்களில் அதிகப்படியானவை சிறுகதையை அடிப்படையாக கொண்டவை.


Jhumpa Lahiri யின் சிறுகதையான 'A Temporary Matter' நாடகமாக அரங்கேறியது. இச்சிறுகதையானது 2000ம் ஆண்டில் Fiction பிரிவில் Pulitzer விருது பெற்றது. நாடகத்திற்கு ஒரு நாள் முன்பு சிறுகதையை Google Books ல் படித்திருந்தேன்.

நாடகத்தில் சிறுகதையின் உணர்வுகளை அழகாக காட்டியிருந்தனர். நாடகத்திற்கும் சிறுகதைக்கும் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நாடக குழுவினரின் பெயர் Expressions. இது இவர்களின் முதல் நாடக அரங்கேற்றம். Expressions குழுவினர் Microsoft நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். முதல் நாடகத்திலே சிறந்ததொரு சிறுகதையை தேர்ந்தெடுத்து அதனை நாடகமாக அரங்கேற்றிய Expressions குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

'A Temporary Matter' சிறுகதை அமெரிக்காவிலுள்ள போஸ்டன் மாகாணத்தில் வசித்து வரும் திருமணம் ஆகி மூன்று வருடங்களான இளம் கணவன் மனையின் கதை.

சுகுமார் - ஷோபா தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு தகவல் பலகையில் தொங்கும் செய்தியை படிக்கிறாள் ஷோபா. பனிக்காலத்தில் விழுந்த இடியில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை சரிசெய்ய தொடர்ந்து ஜந்து நாட்கள் இரவு எட்டு மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மின்சார இணைப்பு துண்டிக்கபடும் என்ற செய்தியை படிக்கிறாள்.

ஷோபா கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருக்கிறாள். வீட்டினுள் நுழைந்தவள் சோபாவில் சுகுமார் தூங்குவதை பார்க்கிறாள். செருப்பை உதைத்து கழட்டிவிட்டு கோட்டை கழட்டி சோபாவின் மீது வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் சுகுமாரை எழுப்புகிறாள். எழுந்தவனிடம் மின்சாரம் இன்று முதல் ஜந்து நாட்களுக்கு ஒரு மணி நேரம் தடை செய்யப்படும் விவரத்தை கூறுகிறாள். ஷோபா மாடிக்கு சென்று குளிக்கச் செல்கிறாள்.
சுகுமார் முப்பத்தைந்து வயதாகியும் படிப்பு முடியாமல் தொடர்ந்து படிக்கிறான். அவன் இலக்கியம் சம்பந்தமான பிரிவில் படிக்கிறான். ஷோபா வேலைக்கு செல்கிறாள். இருவருக்கும் பூர்வீகம் இந்தியா. அவர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவில் குடி பெயர்ந்து பல வருடங்களாகிறது. இருவருக்கும் மூன்று வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. ஆறுமாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தை இறந்து விடுகிறது. அதன் பின்பு இருவரிடையேயும் ஒரு வித மனகசப்பு கூடிவிடுகிறது. ஒருவர் மற்றொருவருடன் பேசுவதே அரிதாகிறது.

இரவு உணவை எட்டு மணிக்கு முடித்தாக வேண்டுமென்று ரேடியோவை ஆன் செய்து விட்டு சுகுமார் அவன் சமைத்த உணவுடன் சாப்பிட தயாராகிறான். குளித்து முடித்து வந்த ஷோபா தலையில் துண்டை முடிகளின் ஊடே சேர்த்து சுற்றிய படி சுகுமாருடன் சாப்பிட அமர்கிறாள். சரியாக எட்டு மணிக்கு ஒலித்துக்கொண்டிருந்த ரேடியோ நின்று போகிறது, மின் விளக்குகள் அணைந்து போகின்றன. சுகுமார் முன்பே எடுத்து வைத்திருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்கிறான். மீண்டும் அவர்களின் அறையினுள் மெழுகுவர்த்தி வெளிச்சம் ஒளியை கொண்டு வருகிறது. சுகுமார் ஒயின் புட்டியை திறந்து தனக்கும், ஷோபாவுக்கும் பீங்கான் கோப்பையில் ஊற்றுகிறான். சுகுமார் சமைத்திருந்த உணவு நன்றாக இருக்கிறதென்று சொல்கிறாள் ஷோபா. ஷோபா சுகுமாரை ஜோக், படித்ததில் ரசித்தது என்று ஏதாவது சொல்ல சொல்கிறாள் ஷோபா. சுகுமார் தனக்கு ஜோக் ஒன்று கூட தெரியாது என்கிறான். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளாத விசயங்களை, ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறாள் ஷோபா. ஷோபாவே முதல் ஆரம்பிக்கிறாள். திருமணத்திற்கு முன்பு சுகுமார் அவன் அறையில் இல்லாத போது ஷோபா அவனின் Address Book திறந்து படித்ததாக கூறுகிறாள். திருமணம் ஆன புதிதில் ஹோட்டல் வெட்டருக்கு டிப்ஸ் தர மறந்ததாகவும் அதற்காக மீண்டும் அடுத்த நாள் அந்த ஹோட்டல் மேனேஜரிடம் டிப்ஸ் தந்துவிட்டு வந்ததாக சொல்கிறான் சுகுமார். மெழுகுவர்த்தி அணையும் வரை இவ்வாறான சின்ன சின்ன ரகசியங்களை இருவரும் பேசிக்கொள்கின்றனர்.

சுகுமார் பிறந்ததிலிருந்து ஒரே ஒரு முறை தான் இந்தியா சென்றிருக்கிறான். அதுவும் அவன் குழந்தையாக இருந்த போது. முதன் முறை அவனை இந்தியாவிற்கு அழைத்து சென்ற போது தண்ணீர் ஒத்து கொள்ளாமல் பயங்கரமான வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி இருக்கிறான். அதன் பின்னர் அவனை அவன் பெற்றோர்கள் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவில்லை.

இரண்டாவது நாளும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வெளியில் கொஞ்சம் வெப்பமாக இருப்பதால் வீட்டு வாசலின் அருகில் அமர்ந்து பேச இருவரும் விரும்புகின்றனர். வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருவரும் அமர்ந்து பேசுகின்றனர். முதல் நாளை போல இரண்டாவது நாளும் விளையாடுகின்றனர். சுகுமார் தன்னுடைய ஒரு பரிட்சையில் தனக்கு முன் அமர்ந்திருப்பனின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறுகிறான். ஷோபாவும் ஒரு ரகசியத்தை சொல்கிறாள். சுகுமார் தன் கையிலிருந்த கிட்டாரை மீட்டுகிறான். அதன் இசை ஷோபாவிற்கு பிடித்திருக்கிறது. ஷோபா சுகுமாரின் அருகில் நெருக்கமாக அமர்ந்து அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு அவன் மீட்டும் கிட்டாரின் இசையை ரசிக்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் பேசி சிரிக்கின்றனர், அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கின்றனர். சுகுமாரின் பிறந்த நாள் அன்று ஷோபா அவள் அலுவலக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறாள். அந்த பிறந்த நாள் விழாவில் சுகுமாரின் கைகளை பற்றிக்கொண்டுதான் சுற்றி அலைந்திருக்கிறாள் ஷோபா.

மூன்றாவது நாளும் அவர்களின் விளையாட்டு தொடங்குகிறது. ஒரு மணி நேர இடைவேளைக்கு பின் திரும்ப மின்சாரம் வந்து மின்விளக்குகள் ஒளிர்கின்றன. ஷோபா ஸ்கின்-டைட் பேண்டும் நீல நிற டீ-சர்ட்டும் அணிந்து உற்சாகமாக நிற்கிறாள். சுகுமார் தூங்குவதற்கு எப்போதும் உபயோகிக்கும் போர்வையை தேடுகிறான். போர்வை சோபாவின் மீது இல்லை. அருகில் நின்று கொண்டிருந்த ஷோபா சுகுமாரின் போர்வை தன் படுக்கை அறையில் உள்ளதாக கூறுகிறாள். அவரவர் சாப்பாட்டை தனித்தனியே சமைத்துக் கொண்டும், முகம் பார்த்து பேசாமல் இருந்தாலும் காமம் அவர்கள் இருவரையும் இணைத்தே வைத்திருந்தது.
சுகுமாரின் அப்பா இறந்த பின் சுகுமாரின் அம்மா சில வாரங்கள் சுகுமார்-ஷோபாவுடன் தங்கியிருக்கிறாள். அந்த நாட்களில் சுகுமாரின் அம்மா அவன் அப்பாவிற்கு பிடித்த உணவை அவளே சமைத்தாள். பாவம் என்ன செய்ய அவள் சமைத்த உணவை அவளே தின்னமுடியாமல் போனது.
நான்காவது நாள் சரியாக எட்டு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அவர்களின் விளையாட்டு ஆரம்பமாகிறது. சுகுமார் எழுதி வெளிவந்த கவிதைகளில் எதுவும் தனக்கு பிடிக்கவில்லையென்று சொல்கிறாள் ஷோபா. சுகுமார் கோபமடைகிறான். மெழுகுவர்த்தி முழுவதுமாக கரையும் வரை இருவரும் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

ஷோபா தன்னை எப்படி பார்க்கிறாள் என்பதில் சுகுமாருக்கு சந்தேகம். முப்பத்தைந்து வயதாகியும் படிப்பது அவளுக்கு பிடிக்கிறதா? என்னை அவளுக்கு உண்மையிலே பிடிக்கிறதா? போன்ற சந்தேகங்கள் சுகுமாருக்கு எழுகின்றன. ஷோபா தன் சம்பள பணத்தின் ஒரு பகுதியை தனியாக வேறொரு பேங்கில் சேமித்து வருவது தெரிந்தும் சுகுமார் இது பற்றி அவளிடம் ஏன் ஏதற்கென்று கேட்டதில்லை.

மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறியிருந்த ஜந்து நாட்களில் ஒரு நாள் முன்னதாகவே மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்டு விடுகிறது. ஷோபா அன்றைய தினம் சற்று பதற்றத்துடன் இருக்கிறாள். சுகுமார் ஷோபாவின் மூலமாக மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்ட செய்தியை அறிகிறான். ஷோபா பதற்றத்துடன் தான் சில காலம் தனியாக இருக்க விரும்புவதாகவும், அதற்காக வேறொரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு பார்த்துவிட்டதாகவும், வீட்டிற்கு முன் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறாள். சுகுமார் ஷோபா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். தனக்கு இதில் உடன்பாடில்லை என்கிறான். ஷோபாவிடம் குழந்தை இறந்த சமயம் மருத்துவமனைக்கு வந்ததையும் அப்போது அவன் அடைந்த மனவேதனையும் கூறுகிறான். தனக்கும் அந்த குழந்தையின் இறப்பில் வேதனை இருந்ததாகவும் கூறுகிறான். விளக்கு அணைகிறது. இருவரும் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுகின்றனர்.


கூடு இணைய இதழில் வெளியாகியுள்ளது

பார்வைகள்