Tuesday, November 1, 2011

அவள் - சிறுகதை - கிரகம்


அவள்                                     [கார்ப்ரேட் கதைகள்]நெடுஞ்சாலையை இருட்டு நன்கு கவ்வியிருந்தது. நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ஏழாவது மாடியில் ஹிப்ஹாப் இசை ஒலித்தது. ஜந்தாறு குண்டர்கள் ஏழாவது மாடியின் வாசலில் நின்று கொண்டு காதலர்களாய் வருபவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். குறைந்த வெளிச்சம், ஒவ்வொருவரின் கைகளிலும் மதுக்கிண்ணம், இசைக்கு தகுந்தாற்போல் பெண்கள் குதிக்கும் போது ஏறி இறங்கும் அவர்களின் மார்பகங்கள் என ஏழாவது மாடியே போதையில் இருந்தது. ரீமா மதுக்கோப்பையை கைகளில் ஏந்தியபடி மேடையில் ஆடினாள். ரீமாவின் ஆட்டத்தை மேடையின் கீழே அமர்ந்திருப்பவர்கள் ரசித்துப்பார்த்தனர். ரீமா சேத்தனை கை நீட்டி தன்னுடன் ஆட அழைத்தாள். சேத்தனும் உற்சாகமாக ரீமாவுடன் ஆட மேடை மீது ஏறினான்.அவள் இன்று எப்போதும் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே வந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை கூட வித்தியாசமானது. இதற்கு முன் அணிந்து வராதது. சேலை அணிந்திருந்தாள். ஆனால் அதிக கவர்ச்சியாக இருந்தது. கையில்லாத ஜன்னல் வைத்த ஜாக்கெட், இடுப்புதெரிய கட்டியிருந்த சேலை, உதட்டில் சிவப்பு நிற சாயம், இடைகள் அசைந்தாட கீல்ஸ் சப்தத்துடன் நடந்து வந்தவள் தன் இருக்கையில் அமர்ந்து கணிணியை ஆன் செய்தாள். வெளியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு இது போன்றதொரு மழை நாளில் இவ்வலுகத்தில் சேர்ந்தாள்.முதல்நாள் அலுவலகத்தில் சேர்ந்த அன்று பூங்கொத்துகளும், கலர் தாள்களில் சுற்றப்பட்ட சாக்லெட்டுகளும் அவளுக்கு அளிக்கப்பட்டன. அவள் அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்கள் வேலை தரப்படவில்லை. வேலை எதுவும் இல்லாமல் அலுவலகத்திற்கு சும்மாவே வந்து சென்றாள். அவளுக்கு அப்போது நண்பர்களும் கிடைக்கவில்லை. அவளுடன் பத்து பதினைந்து பெண்கள் வேலை செய்கின்றனர். அந்த பெண்கள் எல்லாம் திருமணம் ஆனவர்கள். அவர்கள் டிவி சீரியல் பற்றியும், மாமியார் கொடுமை பற்றியுமே அதிகம் பேசுவார்கள். ஒருமுறை டாய்லெட் சென்றிருக்கும் போது மறதியில் செல்போனை மறந்து வைத்துவிட்டாள். அருணா அதை பத்திரமாக எடுத்து அவளிடம் கொடுத்தாள். அருணா முதன் முதலாக அவளிடம் அந்நோன்யமாக பழகினாள்."உங்க பேர் என்ன?"       

"ரீமா சிங்"

"எந்த ஊர்"

"பஞ்சாப்"

"என்ன படிச்சிருக்கீங்க?"

"பி.எஸ்.சி எலக்ட்ரானிக்ஸ்"

"என்ன வேலை உங்களுக்கு?"

"சோர்சிங். ரெசிஸ்டர், டிரான்சிஸ்டர், கெபாசிட்டர் போன்ற எலக்ட்ரானிக் பார்ட்ஸ் யாரிடம் விலை கம்மியா கிடைக்குதோ அவங்ககிட்டயிருந்து வாங்குறது என்னோட வேலை"

"எனக்கு எலக்ட்ரானிக்ஸ்னாலே அலர்ஜி"

"எனக்கு எலக்ட்ரானிக்ஸ் விருப்பமான பாடம்"

"உன்னோட டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு"

"தேங்க்ஸ்"சேத்தன் அவள் டீமில் ஒருவன். அவன் மேனேஜரிடம் திட்டு வாங்காத நாட்களே கிடையாது. எதற்கெடுத்தாலும் திட்டு. திட்டு வாங்கும் போதெல்லாம் கைகட்டி நிற்பான். சில சமயம் தலையை குனிந்து கொள்வான். அவனுக்கு அவமானமாக இருக்கும். திட்டும் சப்தம் கேட்டு தூரத்தில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று பார்த்துவிட்டு அமர்ந்து கொள்வார்கள். திட்டும் போது அவமானம் தாங்காமல் பயம் அதிகரித்து அவன் சொட்ட மண்டையெல்லாம் வேர்த்துவிடும். ரீமாவும் சேத்தன் திட்டு வாங்குவதை பலமுறை பார்த்திருக்கிறாள்.அலுவலக ஆண்டுவிழாவை முன்னிட்டு பாட்டுபோட்டி, நடனப்போட்டி, நாடகம் போன்ற போட்டிகள் நடத்தவிருப்பதாக அனைவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சேத்தன் அல்லது ரீமாவை தொடர்பு கொள்ளவும் என்று மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. கலாச்சார தினம் என்ற நாள் அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் கலாச்சார உடையில் வரும் ஆண்கள் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேத்தனும், ரீமாவும் இருவர் நடனப்போட்டியில் பங்கு பெறுவது உறுதியானது. இருவரும் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.அருணா திருமணத்திற்காக வேலையை விட்டு நிற்கப்போவதாக ரீமாவிடம் கூறியினாள்.ரீமா "கல்யாணம் பண்ணிட்டு வேலை செய்யலாமே?"

"எனக்கு வேலை பார்க்கிறது இஷ்டம். ஆனாள் அவருக்கு இஷ்டமில்லை. வீட்ல குழந்தை குட்டி பிறந்திடுச்சின்னா எப்படி சமாளிப்பதுன்னு கேள்வி கேட்கிறார்"

"நீ என்ன கல்யாணம் ஆன அடுத்த நாளேவா குழந்தை பெத்துக்க போற?. எனக்கு இந்த மாதிரியான உடன்பாட்டில் சுத்தமா விருப்பம் இல்லை"

"இன்னும் இந்த சொஸைட்டில ஆண்களின் அதிகாரம் மறைமுகமா அதிகமா இருக்கு. படிச்ச பொண்ணு வேணும் ஆனா வேலை செய்ய கூடாது. நாற்பது லட்சம் வரதட்சனை கொடுத்துதான் என் கல்யாணம் நடக்கப்போகுது"ரீமா அருணாவிடம் மேற்கொண்டு விவாதம் செய்யவில்லை. இரண்டு மாதத்தில் அருணா வேலையை விட்டு நின்று கொண்டாள்.வாரவிடுமுறை நாளான சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு மாதாபூர் அருகேயுள்ள பொட்டல் நிலத்தில் அலுவகத்திலுள்ள ஆண்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். அதிகமானோர் தொப்பை வைத்த ஆண்களே. அவர்கள் விளையாடுவதை விட அலுவலக கதைகளை பேசுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர்."தல, உங்க ஆள் ரீமாவை சேத்தன் எப்படியோ கரெட் பண்ணிட்டான்"

"அது சின்ன பொண்ணுங்க, அதை போய் அப்படி பேசுறீங்க"

"அது சின்ன பொண்ணா. அதுக்கு இருபத்தி ஆறு வயசு"

"நம்மாள் வேலை செய்றத தவிர மத்த எல்லா வேலையையும் சரியா செய்றார்"

"ஆமா நிஜமாகவே கேட்கிறேன். ரீமாவுக்கும் சேத்தனுக்கும் இடையில ஏதும் மேட்டர் ஓடுதா?"ரீமாவுக்கும் சேத்தனுக்கும் இடையே உள்ள உறவை புரிந்த கொள்ள அவர்கள் பற்றிய பேச்சு முதன்முதலாக கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.அலுவலகம் கூட ஒரு வகையில் வீடு. இவர்கள் ஒவ்வொருவரும் கணிணி முன் அமர்ந்து வேலை செய்தாலும் சிந்தனையெல்லாம் மற்றவர்களை பற்றியதாகவே உள்ளது.அலுவலக ஆண்டுவிழாவானது மழைக்காலத்தின் ஓர் அழகான மாலைப் பொழுதில் நடைபெற்றது. அவள் வேலை பார்க்கும் அலுவலகம் பன்னாட்டு நிறுவனம். இந்த விழாவிற்காக அலுவலக இயக்குனர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும். தலையில் ஒரு முடி கிடையாது சுத்த வழுக்கை, புருவத்தில் கூட முடிகள் இல்லை, ஆள் மட்டும் வெள்ளைவெளேர் என இருந்தார். அழகாக சேலை உடுத்திய பெண் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவரை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் மேடையின் முதல் வரிசையில் உட்கார வைத்தாள். மேடையிலிருந்த ஸ்பீக்கரில் ஹிந்தி பாடல் ஒலித்தது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். நிகழ்ச்சி பாட்டு கச்சேரியிலிருந்து ஆரம்பமானது. சேத்தனும் ரீமாவும் நிகழ்ச்சி அமைப்பாளர் என்பதால் அவர்களின் தலை மேடையில் அதிகம் தென்பட்டது.இருவர் நடனப்போட்டியில் அடுத்தது சேத்தனும், ரீமாவும் ஆடவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரீமாவை இப்போது பார்ப்பவர்களுக்கு அதிகம் ஆச்சர்யம் அளித்தது. இந்தப் பெண்ணுக்குள் இவ்வளவு அழகா என்று புகழ்பாட தொடங்கினர். இடுப்பில் சேலையை மடித்து டோத்தி போல் கட்டியிருந்தாள், மார்பகத்தின் பிளவு தெரியும் படி ஜாக்கெட் அணிந்திருந்தாள். சேத்தன் சட்டையில்லாமல் டோத்தி மட்டும் கட்டியிருந்தான். உயிரே படத்திலிருந்து "நெஞ்சினிலே நெஞ்சினிலே" ஹிந்தி பாடல் ஒலித்தது. அரங்கம் முழுவதும் ஒரே ஆரவாரம். பாடல் முடிந்த பின்பும் பார்வையாளர்களின் கண்களில் ரீமா ஆடிக் கொண்டிருப்பது போல் பிரம்மை நீடித்தது. இருவர் நடனப்போட்டியில் சேத்தனும், ரீமாவும் வெற்றி பெற்றனர்.சேத்தனின் பூர்விகம் பாகிஸ்தான். சேத்தனின் தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். அப்படி குடிபெயர்ந்தவர்களில் சேத்தனின் குடும்பமும் ஒன்று.மழை சிறு தூரலாய் பெய்து கொண்டிருந்தது. சாலையில் செல்பவர்கள் கைகளில் குடை இருந்தது. தள்ளுவண்டியில் மக்காச்சோளத்தை தீயில் சுட்டு விற்பவனிடம் இளம் தம்பதியினர் சுட்ட மக்காச்சோளத்தின் மீது உப்பு மிளகாய் பொடியை எலுமிச்சைபழத்தின் தோளால் தொட்டு நன்கு தேய்த்து தரச் சொல்லி கேட்டனர். மழைக்கு காரமும் சூடான மக்காச்சோளம் நாவிற்கு சுவையாக இருந்தது. இந்த ஊர் மக்கள் மழைக்காலத்திற்கு நன்கு பழக்கப்பட்டிருந்தனர். மழைக்காலத்தை ரசிக்கின்றனர். மழையை விரும்புகின்றனர்.ரீமா ஹைய்தராபாத் சென்ட்ரல் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். ரீமா இன்றும் அழகாகவே இருந்தாள். நீலநிற ஜீன்ஸ் பேண்டும், சிகப்பு நிற டீ-சர்ட்டும் உடுத்தியிருந்தாள். கண் புருவத்திற்கு கருப்புமை தீட்டியிருந்தாள், உதடுகளுக்கு லேசாக சாயம் பூசியிருந்தாள். ஹைய்தராபாத் சென்ட்ரல் வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். பஸ் மைத்ரிவனம் சிக்னலில் பச்சைநிற விளக்கிற்காக காத்திருந்தது.அந்தபெண் அந்த ஆணை இறுக்கமாக கட்டியிருந்தாள். பெண்ணின் சிகப்பு நிற அண்டர்வேர் அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலிருந்து விலகி தெரிந்தது. பொது இடம் என்று பார்க்காமல் அந்த பெண் அந்த ஆணின் கழுத்துப்பகுதியில் முத்தமிட்டாள், காதை கடித்தாள். பஸ்ஸில் ரீமாவின் அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அந்தப் பெண்ணின் செயலை பார்த்து சிரித்தான். ரீமாவும் அதை பார்த்து சிரித்தாள். சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாறியதும் அந்த ஆணின் டூ-வீலர் சீறிக் கொண்டு முன்னே சென்றது. கல்லூரி மாணவியர் சிலர் சிக்னலை அடுத்த பஸ்நிறுத்தத்தில் இறங்கினர்.ரீமா வாரவிடுமுறை நாட்களை சேத்தனுடன் செலவழித்தாள். ரீமாவும் சேத்தனும் சிந்தி மொழியில் பேசிக் கொண்டனர். இந்த மொழி கூட இவர்கள் இருவரையும் மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தியிருக்கலாம்.மதிய உணவு சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகும். கேண்டீன் அறையினுள் ஜந்து கண்ணாடி மேஜைகள் இருக்கும். ஒவ்வொரு கண்ணாடி மேஜையை சுற்றி மரத்தினால் செய்யப்பட்ட ஜந்து சேர்கள் போடப்பட்டிருக்கும். மஞ்சள், சிவப்பு நிறக்குடுவையினுள் குண்டு பல்புகள் அந்தரங்கத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். சுவரில் பெயர் சொல்லி விளக்கமுடியாத பெயிண்டிங்கள் வரையப்பட்டிருக்கும். கூட்டம் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களின் மதிய உணவில் நிச்சயம் ஊறுகாய் இருக்கும். ஊறுகாயானது காரம், உப்பு, எண்ணெய் அதிகமாக இருக்கும். ஏதாவது காய்கறியை பொறியல் செய்து எடுத்து வந்திருப்பார்கள். முதலில் சோற்றில் ஊறுகாயை போட்டு பிசைந்து தின்பார்கள். பிறகு பொறியலுடன் சாதத்தை பிசைந்து தின்பார்கள், பொறியலிலும் காரம் அதிகமாக இருக்கும். இறுதியாக சோற்றுடன் தயிர் சேர்த்து தின்பார்கள்.ஆண்டுவிழாவிற்கு பின்னர் சேத்தனும், ரீமாவும் அலுவலகத்தில் பிரபலமானார்கள். இப்போதெல்லாம் மதிய உணவு வேளையில் அவர்களை பற்றியே அனைவரும் பேசினர்.கல்யாணம் ஆன பெண்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தனர்."ஏன் சேத்தன் அவள் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்?"

"அந்த அவள் யாரு?"

"அதாண்டி பஞ்சாப்காரி ரீமா"

"அப்படியா நீ அவளை அவனோட எங்க பார்த்த?"

"என் புருஷனோட ஹைய்தராபாத் சென்ட்ரலுக்கு ஷொப்பிங போயிருந்தேன். அங்க அவளோட வந்திருந்தான்"

"அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை இருக்கே"

"கல்யாணம் ஆனா என்னடி. லைப்-பாட்னர் ஒருத்தி. பிஸ்னஸ்-பாட்னர் ஒருத்தி" என்று சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.இரவு முழுவதும் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளங்கள் அமைத்திருந்தது. தார் சாலைகள் பழுதடைந்து பெரிய பள்ளங்கள் சாலையின் மத்தியில் உருவாகியிருந்தது. இந்த மழைக்கு பிறகும் காலைவேளையில் வானம் கருத்தே இருந்தது.ஹை-டெக் சிட்டியிலிருந்து மாதாப்பூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல்பங்கின் வலதுபுறம் உள்ள தெருவின் இறுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. சாய்பாபா கோவிலின் இடதுபுறம் உள்ள குறுகிய சந்தின் இறுதியில் ரீமா தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் உள்ளது. அபார்ட்மெண்டின் எதிர்புறத்தில் எருமை பண்ணை உள்ளது. எருமை சானியின் நெடி அபார்ட்மெண்டை சுற்றி எப்போதும் இருக்கும். ரீமா முதல் மாடியில் தங்கி இருக்கிறாள். வாசற்கதவை திறந்து வெளியே வந்து நின்றாள். விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியன் வானில் தெரியாமல் வானம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதை பார்த்தாள். மூச்சை ஒருமுறை நன்றாக உள்ளிழுத்தாள். எருமை சானியின் நெடி காற்றில் கலந்திருப்பதை உணர்ந்தாள். உள்ளிழுந்த மூச்சை மெதுவாக வெளியிட்டாள். ரீமாவின் வீட்டு வாசலை கடந்து சென்றவர் ரீமாவை பார்த்தார். கையில்லாத பனியனிலிருந்து பிரா விலகி இருந்தது, பனியன் இறக்கமாக இருந்ததால் மார்பகங்கள் தாராளமாய் வெளியே தெரிந்தது, அரைக்கால் டிரவுசரின் கொக்கிகள் சரியாக மாட்டாமல் டிரவுசர் ஒருபுறம் இறங்கியிருந்தது. கால்மயிர்கள் வலிக்கப்பட்டு இருந்தன."'குட் மார்னிங் ரீமா"

"குட் மார்னிங்" 

"மணி எட்டு ஆகுது. ஆபிஸ்க்கு கிளம்பளயா?"

"இன்னைக்கு என்னோட பிறந்த நாள். நேத்து ராத்திரி பார்ட்டிக்கு போயிட்டு வர லேட் ஆயிடுச்சி"

"நேத்து ராத்திரி உன்னை சேத்தன் தூக்கிட்டு வந்ததை பார்தேன்"

அசட்டுத்தனமாய் சிரித்துக் கொண்டு தலையை குனிந்தாள்.

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரீமா"

"நன்றி" கூறிவிட்டு வாசற்கதவை சாத்தினாள்.சேத்தனின் டூ-விலர் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்தது.சூரியன் மாலைநேரம் மேற்கே சாயும் போது தேநீர் நேரமும் ஆரம்பமாகும். தேநீர் தரும் புத்துணர்வைவிட மாலை நேரம் சூரியனை பார்ப்பதையும், மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது எறும்பு போல் செல்லும் வாகனங்கள், குளிர்ச்சியான காற்றும், அரட்டையுமே அதிக புத்துணர்வை அளித்தது.கேரம்-போர்ட் ஆடிக்கொண்டிருந்த ஆண்கள் கூட்டம்,"ரீமாவை சேத்தன் கையாள தூக்கிட்டு வந்தாங்க?"

"ஏன் கையாள தூக்கிட்டுவந்தான்?"

"அவள் என்னோட அப்பார்ட்மெண்டில முதல் மாடியில இருக்கா. பிறந்தநாளுக்கு முந்தன நாள் ராத்திரி ரீமா சரியான தண்ணி அடிச்சி நடக்க முடியாம சேத்தன் அவளை தூக்கிட்டு அபார்ட்மெண்ட்டுக்கு வந்தான்"

"அந்த பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி இருக்கு. இவர் சும்மா ரீல்விடுகிறார்"

"நீங்க வேணா கூட வாங்க சேத்தன் கிட்ட போய் கேட்கலாம். ரீமா தண்ணி அடிப்பாளான்னு"

"நானும் சில சமயம் பார்த்திருக்கிறேன். அந்த பொண்ணு தம் அடிக்கிறத"

"அன்னைக்கு ராத்திரி முழுவதும் சேத்தன் அவள் வீட்ல இருந்திருக்கான். அவன் இருந்ததுக்கு சாட்சி அடுத்த நாள் காலையில சேத்தன் டூ-வீலர் எங்க அபார்ட்மெண்ட்ல நின்னது"

"இது அவன் பொண்டாட்டிக்கு தெரியுமா?"

"இது என்ன நேத்து இன்னைக்கா நடக்குது. ஆறுமாதமா சேத்தன் அவள் வீட்லதான தங்கியிருக்கான்"அலுவலகத்தில் அவர்கள் என்பதே ரீமா, சேத்தன் என்றாகி போனது. இவர்கள் இருவர் பற்றிய சிந்தனையிலே பலருக்கு இரவில் தூக்கம் இல்லாமல் போனது.ரீமா இந்த ஒரு வாரகாலம் பதற்றமாகவே இருக்கிறாள். அலுவலகத்திற்கு காலை பதினோரு மணிக்கு மேல் வருகிறாள். சாயந்திரம் ஜந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுகிறாள். இந்த ஒரு வாரகாலம் அவள் உடுத்தும் உடைகளிலும் கவனம் செலுத்துவதில்லை.காலையில் தொடங்கிய மழை இன்னும் நின்றபாடில்லை. ஹபிஸ்பெட் பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சாலையில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஹபிஸ்பெட் பாலத்தின் இறக்கத்தில் சேத்தனின் அபார்ட்மெண்ட் உள்ளது. தெருவில் நாய்கள் ஊலையிடும் சப்தம் கேட்டது. சேத்தன் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தாள் ரீமா. சேத்தன் வீட்டிலிருந்து வெளியே வராமல் வீட்டினுள்ளே இருந்து கொண்டான். ரீமா நாளை பார்க்க வருவதாக சேத்தனிடம் கூறினாள். துப்பட்டாவால் தலையை மறைத்துக் கொண்டு முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் சகஊழியர் எதிரே வரும் ரீமாவை பார்த்து சிரித்தார். ரீமா துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டு வேகமாக அவரை கடந்து சென்றாள்."ரீமா தினமும் ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே கிழம்பி நேரா சேத்தன் வீட்டுக்கு போறா. ராத்திரி பதினோரு மணி வரைக்கும் அங்கதான் தங்கியிருக்கா"

"நார்த்தில கலாச்சாரமே அப்படித்தான். நம்ம ஊர் மாதிரியெல்லாம் கிடையாது"

"இதெல்லாம் வீட்ல வச்சாயா செய்றது. ஹோட்டல், ரிசார்ட், பார்க்கின்னு எவ்வளவு இடம் இருக்கு"

"அவன் பொண்டாட்டி அவனுக்கு ஒழுங்கா சோறு போட்டிருந்தா இந்த நாய் எதுக்கு ஊர் மேய போகுது. அவன் பொண்டாட்டி சரியில்லை. எல்லாம் அதுதான் காரணம்"சேத்தன் ரீமாவை பற்றி தினம் ஒரு கதை அலுவகத்தில் உலாவிக் கொண்டிருந்தது. அதில் எது உண்மை எது பொய் என்று எவராலும் சரியாக சொல்ல முடியவில்லை. ரீமா தினமும் அணிந்து வரும் ஆடை, போட்டுவரும் சூ, உதட்டு சாயத்தின் நிறம் என்று அவளின் ஒவ்வொரு மாற்றத்திற்கும் சேத்தனை காரணமாக வைத்து பேசினர்.ராகவ்ரெட்டி கைராசியான டாக்டர். பிரசவத்திற்கு பெயர் போனவர். மியாபூர் ஆல்வின் காலணியில் உள்ளார். எப்போதும் அவர் கிளினிகில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்று கூட்டம் அதிகமாக இல்லை. டாக்டரை பார்க்க சேத்தனும் ரீமாவும் வந்திருந்தனர்."வாந்தி வருதா?"  

"இல்ல டாக்டர்"

"நல்லா சாப்பிடுங்க"

"சரி டாக்டர்"

"எத்தனை நாளைக்கு ஒரு முறை புருஷனோட சேர்றீங்க?"

"வாரத்துக்கு ஒரு முறை"

"ஆணுறை உபயோகிக்க சொல்லுங்க. வயித்துல இருக்கிற குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராம பார்த்துக்கோங்க"அந்தப்பெண் சென்ற பிறகு ரீமா உள்ளே சென்றாள்."எதுவுமே சாப்பிட முடியலை. சாப்பிடதெல்லாம் வாந்தியா வருது"

"எத்தனை நாளா இருக்கு"

"இரண்டு நாளா"

"இந்த மாசம் பீரியட்ஸ் வந்துடுச்சா?"

"இன்னும் வரலை டாக்டர்"

"........

"நேத்து சேத்தன் ரீமாவை பிரசவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தான்"

"எதிர்பார்த்தது தான் நடந்திருக்கு. எத்தனை மாசமா?"

"அது தெரியலை"

"நான் கூட கவனிச்சேன். அவள் வயிறு கொஞ்சம் வெளிய தள்ளிட்டு தெரிஞ்சது"சேத்தன்  சில மாதங்களில் பஞ்சாபில் வேலை கிடைத்து குடும்பத்துடன் பஞ்சாப் சென்று குடியேறினான்.-------------எனக்கு சேத்தன் நன்கு பழக்கமானது அலுவலக ஆண்டுவிழாவிற்கு பிறகு. அவனை நல்ல நண்பன் என்றே சொல்ல வேண்டும். என் அண்ணன் உயிரோடு இருந்திருந்தால் அவனுக்கும் சேத்தன் வயது இருக்கும். சிறுவயதில் கிணற்றில் குளிக்கும் போது நீர் பாம்பு கடித்து இறந்து போனான்.சேத்தனின் மனைவி கூட சேத்தனை போல் நன்கு பழகக்கூடியவள். அவள் எனக்கு சிந்தி தெரியும் என்பதால் சிந்தியில் பேசச்சொல்லி வற்புறுத்துவாள். சிந்தியில் கவிதைகள் எழுதுவாள். சில கவிதைகள் போட்டியில் பரிசும் பெற்றுள்ளன. இந்த செருப்பு கூட ஹைய்தராபாத் சென்ட்ரல் சென்றிருந்த போது சேத்தனின் மனைவி வாங்கிக்கொடுத்தது.எந்தவொரு பொருளாதார நிர்பந்தத்தாலும் நான் இங்கு வேலை பார்க்க வரவில்லை. ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் வேலை செய்து வருகிறேன். ஹைய்தராபாத் வந்த சில மாதங்கள் எனக்கு நண்பர்களே கிடைக்கவில்லை. ஆணும் பெண்ணும் சந்தித்து பேசினாலே ஏற இறங்க பார்க்கிறார்கள். அருணாதான் முதன் முதலில் நட்புடன் பழகினாள். அவளும் சில மாதங்களில் பிரிந்து சென்றாள். அதன் பின் சேத்தனின் நட்பு கிடைத்தது.சேத்தனும் அவன் மனைவியும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்றில் மோதி பலத்த காயம் அடைந்தனர். சேத்தனுக்கு கை முறிவு ஏற்பட்டது. சேத்தனின் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஒன்றிரண்டு தினங்கள் அலுவலகத்திற்கு சீக்கிரமே கிளம்பி அவர்களை பார்த்துவிட்டு வீடு வந்து சேர இரவு பனிரெண்டு மணி ஆகிவிடும். எங்களுடன் பணிபுரியம் ஒருவர் அதே அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிலிருந்து வெளி வரும் போது அவர் முன் வருவார். அவரின் பார்வையே ஏதோ தவறு செய்தவரை பார்ப்பது போலவே இருக்கும். இவர்களெல்லாம் ஜந்துக்கள் என்று அப்போது முடிவு செய்தேன்.பஞ்சாபில் இருக்கும் போது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பப்பிற்கு செல்வேன். நன்றாக குடிப்பேன். விடிய விடிய ஆட்டம் போடுவேன். ஒரு நாள் அலுவலகத்தில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த போது அலுவலக நண்பர் ஒருவர் அருகில் வந்து ஒரு மணி நேரம் பாடம் எடுத்தார். அதுவும் அவர் குறிப்பாக பெண்கள் குடும்ப விளக்குகள் இவ்வாறு செய்வது தவறு என்றார். அன்றிலிருந்து அலுவலகத்தில் சிகரெட் புகைப்பதை நிறுத்திக் கொண்டேன். பிறந்த நாள் விருந்துக்கு சேத்தனையும் அவன் மனைவியையும் அழைத்திருந்தேன். போதை தலைக்கேரி ஆடிய ஆட்டத்தில் அரங்கத்திலே வாந்தி எடுத்தேன். சேத்தனும் அவன் மனைவியும் பத்திரமாக அழைத்து வீடு வந்து சேர்த்தனர். என்னை குளிப்பாட்டி ஆடை மாற்றி விட்டாள் சேத்தனின் மனைவி. சேத்தனின் வண்டி வரும் வழியில் பஞ்சர் ஆகிப்போனதால் வண்டியை என் வீட்டில் நிறுத்திவிட்டு இருவரும் நள்ளிரவு ஆட்டோ ஏறி அவர்கள் வீடு சென்றனர்.அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது இரவு நேரமாகிப்போனதால் ரோட்டு கடையில் விற்ற மசாலா தோசை வாங்கி சாப்பிட்டேன். அடுத்த நாள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மாத்திரை வாங்கிச் சாப்பிட்டும் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. சேத்தன் மனைவியிடம் போன் செய்து சொன்னவுடன் சேத்தனை அனுப்பி வைத்தாள். தெலுங்கானா பந்த் காரணமாக மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. தேடித்தேடி கடைசியில் பிரசவம் பார்க்கும் மருத்துவமனையில் சென்று வைத்தியம் பார்த்தேன். அன்றும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவன் தன் கற்பமான மனைவியுடன் வந்திருந்தான். அவனும் அப்படியே ஏதோ குற்றம் செய்தவர்களை பார்ப்பது போல் பார்த்தான்.---------ரீமா மெயில் எழுதிக் கொண்டிருந்தாள். மெயிலின் தலைப்பு "இன்று எனது கடைசி நாள்" 'இன்று இந்த அலுவலகத்தில் எனது கடைசி வேலை நாள். எனக்கு இந்த அலுவலகம் நிறைய கற்று தந்துள்ளது. நான் இந்த அலுவலகத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன்.இந்த நகரை மிகவும் நேசிக்கின்றவள். வாரவிடுமுறை நாட்களை அதிகம் கழித்த ஹைதராபாத் சென்ட்ரல், கோல்கொண்டா கோட்டை, சில்பராமம் இடங்கள் என்றும் என் நினைவில் இருக்கும். இந்த நகரில் மழைக்காலம் நான் விரும்பி ரசித்தது. சேத்தனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பமானதும் இந்த மழைக்காலத்தில்.பிரிவு என்பது முடிவு இல்லை, பிரிவு நம்மிடையே அன்பை, நட்பை அதிகப்படுத்தும் என்று நம்புகிறேன். என் வாழ்வில் புதிய அத்தியாயம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம். அந்த அத்தியாத்தில் ஒரு ஆணுடன் பயணிக்க போகிறேன். பத்திரிக்கை அனுப்புகிறேன் புதிய அத்தியாயத்தின் முதல் நாளில் உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.அன்புடன்,

ரீமா சிங்.(பின்குறிப்பு: தற்போது சேத்தன் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் பணிபுரிய போகிறேன்)'ரீமா மழையில் நனைந்த படியே அலுவலகத்தை விட்டு வெளியே சென்றாள். அவளை பின் தொடர்ந்து வந்தவர்கள் அடுத்த சேத்தன்-ரீமா யார் என்று அலுவலக வாசலில் நின்று எதிர்நோக்கி காத்திருந்தனர்.-----------------------------------------------------------------------------------------------------------------முற்றும்--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கிரகம்.

08/01/11ஹைய்தராபாத்,

+91 9000546422.

பார்வைகள்