Tuesday, March 30, 2010

சிறுகதை - பெண் ஒருத்தியின் கதை

2020 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

மஞ்சுளாவை பார்க்க கூகட்பள்ளியிலிருக்கும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். மஞ்சுளாவை பார்த்து ஆறு வருடத்திற்கு மேல் இருக்கும். மஞ்சுளாவை முதன் முதலில் பார்த்தது எரகடா சந்தையில்.....

2010 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

மியாபூர் பஸ் ஸ்டாண்டில் எரகடா சந்தை வழியாக செல்லும் பஸ்ஸிற்காக நானும், சீனிவாச ரெட்டி அண்ணனும் காத்திருந்தோம். அப்போது நான் ஹைய்தராபாத்திற்கு புதிது. பள்ளி, இண்டர் (தமிழ்நாட்டில் +1, +2 போல) யூஜி, பீஜி படித்தது எல்லாம் விஜயவாடா. ஹைய்தராபாத்திலுள்ள பார்மா கம்பெனியில் வேலை கிடைத்ததால் ஹைய்தராபாத் வந்தேன் இல்லையென்றால் விஜயவாடாவில் அப்பாவிற்கு உதவியாக அங்கேயே இருந்திருப்பேன். படித்தது M.SC chemistry. மாதச் சம்பளம் ஆயிரத்து ஜநூறு . அலுவலகமானது போலாரம்மில் இருந்தது. அலுவலகத்தின் அருகில் ரூம் எடுத்து தங்கியிருந்த ரெட்டியுடன் தங்கி இருந்தேன். ஊருக்கு புதிது என்பதால் ஊரை சுற்றிக்காட்ட ரெட்டி என்னை அழைத்துச் சென்ற முதல் இடம் எரகடா சந்தை.

எரகடாவில் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும். சந்தையில் கிடைக்காத பொருள்கள் என்று எதுவுமே கிடையாது. சட்டி பானைகள் விற்கும் பாத்திரக்காரன், செருப்பு சூ விற்பவன், ஜீன்ஸ்பேண்ட் டீ-சர்ட் ஜெர்கின் விற்பவன், ஆடு விற்பவன், கோழி விற்பவன், முயல் விற்பவன், லவ் போர்ட்ஸ் கிளி விற்பவன், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பவன் ரோட்டின் மேல் கடை போட்டிருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலே சந்தை ஆரம்பித்தாலும் மாலை நான்கு மணிக்கு மேல் தான் சந்தை கலை கட்டும். ஒவ்வொரு கடைக்கு முன்னும் குறைந்தது பத்து பேராவது நிற்பார்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் நூறு ரூபாய்க்கு மேல் வாங்காதே என்று ஒவ்வொரு கடையாக நின்று விலை விசாரித்த போது ரெட்டி என்னிடம் கூறினார். டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவில் குளிர் கடுமையாக இருக்குமென்று கம்பளி வாங்கிக் கொள்ள சொன்னார் ரெட்டி. ஜநூறு ரூபாய் சொன்ன கம்பளியை இருநூறு ரூபாய்க்கு பேரம் பேசி கம்பளியை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டியை காணவில்லை. அரைமணி நேர தேடலுக்கு பின் முயல் விற்பனின் கடைக்கு அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார் ரெட்டி. ஏன் என்னை தனியாக விட்டுவிட்டு வந்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு நீண்ட நாள்களுக்கு பின் பார்த்த தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டே நடந்ததால் என்னை மறந்து விட்டதாக கூறினார். குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த பெண் நல்ல கலராகயிருந்தாள். பாவாடை, சட்டை அணிந்திருந்தாள். சின்ன பெண்ணாகயிருந்தாள். அவளின் மார்பகங்கள் உடலுக்கு தகுந்தாற் போல் இல்லாமல் சற்று பெரிதாகயிருந்தது. ரெட்டி என்னை ரூமிற்கு போகச் சொல்லிவிட்டு அவள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துவிட்டு நாளை காலை ரூமிற்கு வருவதாக கூறி அந்த பெண்ணுடன் சென்றார். மேற்கே சூரியன் முழுவதுமாக மறைந்திருந்தது. சந்தையை இருள் கவ்வியிருந்தாலும் அந்த இருட்டிலும் வியாபாரிகள் டார்ச்-லைட் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

சில்லரைக்காக ரெட்டியின் சட்டைப்பைக்குள் கைகளை விட்டு துழாவிய போது உபயோகிக்காத ஆணுறை கைகளில் பிடிபட்டது.

அடுத்த வாரமும் நானும் ரெட்டியும் எரகடா சந்தைக்கு சென்றோம். எரகடா சந்தையில் கூட்டம் அதிகமாகயிருந்தது. வண்ண வண்ண நிறங்களிலான டீ-சர்ட் தொங்கவிடப்பட்டிருந்த கடையை கடந்து சென்றோம். தள்ளுவண்டியில் அவித்த கடலை விற்றுக் கொண்டிருந்தவனிடம் பொட்டலம் ஒன்று ஜந்து ரூபாய் வீதம் மூன்று பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். முந்தைய வாரம் பார்த்த பெண்ணும் எங்களுடன் இருந்தாள். பச்சைநிற சட்டையும், நீலநிற பாவடையும் அணிந்திருந்தாள். அவித்த கடலையை உடைத்து தின்றபடி மூன்று பேரும் எரகடா சந்தையில் சுற்றினோம். ரெட்டி அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவளின் பெயர் மஞ்சுளா. அருகிலிருந்த தேநீர் கடையில் தேநீர் பருகிக்கொண்டிருந்த போது ரெட்டிக்கு செல்போனில் அழைப்பு வந்து எங்கள் இருவரையும் தனித்து விட்டுவிட்டு செல்போனில் பேசுவதில் மும்முரமானார். தேநீரை சுவைத்து குடித்துக் கொண்டிருந்தவள் நான் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து என்னை பார்த்து சிரித்தாள். அவளின் சிரிப்பு அழகாகயிருந்தது. அவள் என் பெயரை கேட்டாள் நானும் கூறினேன். நானும் தொடர்ந்து அவளின் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என விசாரித்தேன். அவள் கூறியதை கேட்டு அவள் மேல் எனக்கு பரிதாபம் வந்தது. அவளின் சொந்த ஊர் மைசூர். அவளின் அப்பா பெரிய குடிகாரன் தினமும் குடித்துவிட்டு அவள் அம்மாவுடன் சண்டை போடுவான். ஒரு நாள் இரவில் சண்டை அதிகமாகவே அவளின் அப்பா அவள் அம்மாவின் தலையில் கல்லைப் போட்டு கொன்று சடலத்தை வீட்டின் பின்புறத்திலிருந்த தோட்டத்தில் புதைத்து விட்டான். இந்தக் கொலையை கண் முன்னே பார்த்த மஞ்சுளா, மஞ்சுளாவின் தங்கை மற்றும் இரண்டு தம்பிகளையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றான் மஞ்சுளாவின் அப்பா. மீண்டும் வீடு திரும்பிய மஞ்சுளாவின் அப்பா ஆண் ஒருவனுடன் வந்தான் . அந்த ஆணிடம் மஞ்சுளாவின் இளைய தம்பியை பத்தாயிரம் ரூபாய் பணத்திற்கு விற்றான். மற்ற மூவரையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற மஞ்சுளாவின் அப்பா வீடு திரும்புவதற்கு முன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்பு மூன்று பேரும் பூங்காவிலும், சாலையின் ஓரத்திலும், பேருந்து நிறுத்ததிலும் தங்கி வந்தனர். சாப்பாடு வாங்கி வருவதாக சென்ற மஞ்சுளாவின் தம்பி திருடியதற்காக போலிஸ்சிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது முயல் விற்பவனின் உதவியால் ஹைதராபாத் வந்ததாக கூறினாள். செல்போனில் பேசிவிட்டு திரும்பிய ரெட்டி மஞ்சுளாவுடன் அவளின் வீட்டிற்கு சென்றார். நான் விற்காமல் இருந்த பொருட்களை கூவிகூவி விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் கடை நோக்கி சென்றேன். ரெட்டி மஞ்சுளாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று சொன்னதும், மஞ்சுளா அவள் அப்பா பற்றி சொன்னதும் ஒத்துப்போகாதவையாக இருந்தன.

ரெட்டி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வந்திருந்த காலை அவர் சட்டை பையை துழாவிய போது உபயோகிக்காத ஆணுறை மீண்டும் கிட்டியது. ரெட்டி எதற்கு மஞ்சுளாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார் என்பதில் எனக்கு சந்தேகம் வந்தது.

சங்காரெட்டியிலுள்ள எங்கள் கம்பெனியின் கிளை அலுவலகத்திற்கு ரெட்டி மாற்றலாகிச் சென்றார். தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதில் மஞ்சுளாவை பார்க்க எரகடா சந்தைக்கு சென்றேன். மஞ்சுளா எப்போதும் அமர்ந்திருக்கும் முயல் விற்பனின் கடைக்கு அருகில் அமர்ந்திருந்தாள். முயல் வாங்க வந்தவன் போல் முயல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த மஞ்சுளா ரெட்டியை பற்றி விசாரித்தாள். என் தேவைகளை அறிந்தவள் போல் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

தெலுங்கானா பந்த் நடந்து கொண்டிருந்ததால் சாலையில் அரசுப் பேருந்துகள் அவ்வளவாக ஓடவில்லை. ஷேர் ஆட்டோ மட்டும் ஆட்களை ஏற்றி இறக்கிய வண்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகமாக குடித்திருந்ததால் நடப்பதற்கே கஷ்டமாக இருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றேன். மஞ்சுளாவின் வீடு பூட்டியிருப்பதை பார்த்து மஞ்சுளாவின் மேல் கோபம் வந்தது. செல்போனில் அவளை அழைத்து பேசினேன். வீடு மாற்றப்பட்டு கூகட்பள்ளியிலுள்ள அபார்ட்மெண்டில் வீடு எடுத்திருப்பதாக கூறினாள். வீடு மாறியதை ஏன் எனக்கு கூறவில்லையென்று அவளை திட்டி அவளின் கூகட்பள்ளி வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு அவளை பார்க்க சென்றேன். மறுநாள் காலை குளிக்கும் போது நகங்களுக்குள் இருந்த இரத்ததை பார்த்து பயத்து போனேன். ஒன்றிரண்டு விரல்களின் நகங்கள் அல்ல பத்து விரல்களின் நகங்களுக்குள்ளும் இரத்தகரை இருந்தது. பதறியடித்து மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றேன். கதவை திறந்தவள் நைட்டியில் இருந்தாள். என் நகங்களிலிருந்த இரத்தக்கரையை அவளிடம் காட்டினேன். அவள் பரவாயில்லை என்பது போல் தலையை ஆட்டினாள். அவளின் ஆடைகளை களைந்து உடலை பார்தேன். அவளின் உடலை என் நகங்கள் தின்றிருந்தன. நகக்கீறல் பட்டிருந்த வலது மார்பினை என் விரல்கள் தொட்டவுடன் அவளின் உடல் சிலிர்த்தது. நான் செய்த தவறை எண்ணி என்னையே நான் வெறுத்தேன்.

2012ம் ஆண்டு,

மஞ்சுளா பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்து வந்தாள். தன்னுடன் தங்கி படித்துக் கொண்டிருந்த தங்கையை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தாள். பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். அழகாக முடிகளை திருத்திக் கொண்டாள். நகவிரல்களை சீராக வெட்டி நகங்களுக்கு சிகப்பு வண்ணம் பூசிக் கொண்டாள். பாவாடை சட்டையிலிருந்து விலகி ஜீன்ஸ், டீ-சர்ட் என்று மாறினாள். கண்ணின் புருவங்களுக்கு கருப்பு மை தீட்டிக் கொண்டாள். கண் பட்டைகளில் வண்ண நிறங்கள் பூசிக்கொண்டாள். கஸ்டம்மர் கூப்பிடும் இடத்திற்கு இலகுவாய் சென்று வர ஹோண்டா ஆக்டிவா வாங்கிக் கொண்டாள்.

2014ம் ஆண்டு,

அலுவலக விசயமாக ஆறு மாத காலம் அமெரிக்காவில் இருந்து வந்தேன். ஹைய்தராபாத் வந்த பிறகு அமெரிக்காவில் மஞ்சுளாவிற்கு வாங்கிவந்திருந்த பொருட்களை அவளிடம் கொடுக்க அவள் வீட்டிற்கு சென்றேன். கதவை திறந்தவள் புன்னகையுடன் உள்ளே அழைத்தாள். வீட்டை முன்பு பார்த்ததற்க்கும் இப்போது பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருந்தது. CRT டி.வி இருந்த இடத்தில் LED டி.வி இருந்தது. அறை முழுவதும் குளிர்ச்சியூட்டியபடி ஏ.சி ஓடிக் கொண்டிருந்தது, நடுகாலில் டி.விக்கு பின்னாலிருந்த சுவர் முழுவதும் அழகான பெயிண்டிங்கள் மாட்டப்பட்டிருந்தன. வீட்டை சுற்றி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது ஆர்ட் கேலரி நடத்திவருபவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவரின் விருப்பம் போலவே அவரே வீட்டை மாளிகை போல் மாற்றிவிட்டதாகவும் கூறினாள். அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்திருந்த பொருட்களை பார்த்தவள் சந்தோஷத்தில் என்னை அணைத்து என் உதட்டில் முத்தமிட்டாள். கலவி முடிந்து வீடு திரும்புவதாக இருந்த என்னை தடுத்து இரவுவேளை உணவிற்கு ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு புதிதாக வாங்கியிருந்த காரில் அழைத்துச் சென்றாள். ஆர்டர் எடுத்துச் சென்ற வெயிட்டர் தட்டு முழுவதும் ஆயிட்டர் செய்ததை நிரப்பிக் கொண்டு வந்து எங்கள் மேஜையில் பரப்பினான். தங்கையை பற்றி விசாரித்தற்கு நன்கு படிப்பதாகவும், இந்த வருடம் கடைசி வருடமென்றும், கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்திருப்பதாகவும் கூறினாள். நான் பல வருடங்கள் கேட்க நினைத்த கேள்வியை அவளிடம் கேட்டேன். ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய்? என்று.

எப்போதும் உதட்டில் புன்னகையை உதிர்த்தபடி இருக்கும் அவளின் முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது. மெளனமாகயிருந்தவள் பேசத்துவங்கினாள். "இந்த உலகம் ஆண்களின் உலகம். ஆண்களை மீறி இந்த உலகத்தில் ஒரு பெண் எதுவும் செய்துவிட முடியாது. ஆண்கள் பெண்களின் சதையை தின்னும் வெறிநாய்கள்". ஏன் மஞ்சுளா ஆண்களின் மீது இவ்வளவு கோபம் கொள்கிறாள் என்று எனக்கு புரியவேயில்லை. அவளின் பேச்சை இடையூறு செய்யாமல் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். " என் தம்பியை போலீஸ் பிடிச்சிட்டு போன பிறகு சாப்பாடு தேடி நானும் என் தங்கையும் தெருவில் அழைந்தோம். எனக்கு அப்போது பனிரெண்டு வயது, என் தங்கைக்கு பத்து வயது. ஹோட்டல் ஒன்றில் எனக்கும் என் தங்கைக்கும் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. அதனால் சாப்பாடு பிரச்சனை தீர்ந்தது. ஹோட்டல் பக்கத்திலிருந்த சேரிக்குடியிருப்பில் குடிசை வீட்டில் தங்கினோம். அனாதைகள் என்று தெரிந்து கொண்ட ஏரியா ஆண்கள் அவ்வப்போது எங்களை சில்மிசம் செய்தனர். அவர்களின் இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஆண்கள் போல் உடை அணிந்து கொள்வோம். எங்க்ள் இருவரையும் வெகு நாட்களாக மோப்பம் பிடித்துவந்த ரிச்சாகாரர்கள் கூட்டம் இரவில் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எங்களை மறித்து ரிச்சாவின் பின்னால் தூக்கி சென்று மூன்று, நான்கு பேர் கற்பழித்தனர். என்னை விட என் தங்கையே அதிகம் உடல்பாதிப்பும் மனபாதிப்பும் அடைந்திருந்தாள். இனியும் இங்கேயிருந்தாள் உயிர் வாழ முடியாதென்று இரவில் இரயில் ஏறினோம். இரயிலில் முயல் விற்பவனிடம் மாட்டிக் கொண்டோம். முயல் விற்பவன் என்னை முழுமையாக இத்தொழிலில் ஈடுபடுத்தினான். அவனிடம் என் தங்கையை மட்டும் விட்டுவிடும் படி கேட்டுக் கொண்டதன் பேரில் அவளை விட்டு வைத்தான். கொலை குற்றமொன்றில் போலீஸ் அவனை கைது செய்த பின் நானும் என் தங்கையும் அந்த வீட்டை காலி செய்து கூகட்பள்ளி வந்து சேர்ந்தோம். இந்த உலகத்தில் என்னை போன்ற பல பெண்களின் வாழ்க்கை அவர்களின் கையில் இல்லை" என்று கூறி முடித்தவள் கண்ணாடி கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை மடக்கென்று குடித்து முடித்தாள்.

2020 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

அந்த நிகழ்விற்கு பிறகு மஞ்சுளாவை மீண்டும் சந்திக்கவேயில்லை. ஆறு வருட இடைவேளைக்கு பிறகு அவளை சந்திக்க கூகட்பள்ளியிலிருக்கும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். வீட்டின் கதவை சிறுமி ஒருத்தி திறந்துவிடுகிறாள். சோபாவில் அமர்ந்திருந்த மஞ்சுளா வாசலில் நான் நிற்பதை பார்த்து என்னை நோக்கி நடந்து வருகிறாள். என்னை பார்த்தவுடன் அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கண்ணீர் வடிந்துவிடுவது போலிருந்தது. உள்ளே அழைத்து சோபாவில் உட்கார வைத்து நான் வந்திருப்பதற்கான காரணத்தை கேட்கிறாள். எனக்கு கல்யாணம் நிச்சயாகி இருப்பதையும் அடுத்த மாதம் கல்யாணமென்று கூறி கொண்டு வந்திருந்த திருமண அழைப்பிதழை அவளுக்கு கொடுக்கிறேன். குழந்தை யார் என்று கேட்கிறேன். தங்கையின் குழந்தையென்று பதில் கூறுகிறாள். குழந்தை அழ்காகயிருந்தது. மஞ்சுளாவும் சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த போது "ஏன் ஆறு வருஷமா பார்க்க வரவில்லை" என்று கேட்கிறாள். வெறிநாயிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டதாக கூறுகிறேன். என் அருகில் வந்த மஞ்சுளா என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள். அப்போது அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் வடிகிறது.

- முற்றும் -

கிரகம்

உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

புத்தகப்பார்வை - கோவேறு கழுதைகள் - இமையம்

தீராநதியில் வெளியாகியிருந்த 'பயணம்' என்ற சிறுகதை மூலம் இமையத்தின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாயின. 'பயணம்' என்ற தலைப்புக்கேற்ப சிறுகதையும் வாழ்க்கைப் பயணம் போலவே இருக்கும். 'பயணம்' என்னை கவர்ந்த சிறுகதைகளில் ஒன்று. அதே இதழில் அவரின் பேட்டியும் வந்திருந்தது. பேட்டியில் அவர் எழுதியிருந்த நாவல், சிறுகதை தொகுப்புகளின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதனை குறித்து வைததுக்கொண்டு நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் அவரின் புத்தகங்களை வாங்கி வந்தேன்.


கோவேறு கழுதைகள் இமையத்தின் முதல் நாவல். 1994ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

நாவலானது ஆரோக்கியம், அவளின் கணவர் சவுரி, அவளின் பிள்ளைகள் மேரி. பீட்டர், ஜோசப், ஜோசப்பின் மனைவி சகாயம் எல்லோரும் மேல்நாரியப்பனூரிலுள்ள அந்தோனியார் கோவிலுக்கு செல்வதாக தொடங்குகிறது. பாதரிடம் தங்களின் குறைகளை கூறிச்சென்றாள் ஊருக்கு வந்து ஆரோக்கியத்தின் குடும்பத்திற்காக பஞ்சாயத்துக்காரர்களிடம் பேசி தினமும் கிடைக்கும் ராச்சோறு அதிகம் கிடைக்கும்படியும், முன்பு வழங்கி வந்த சலுகைகளை தொடர்ந்து வழங்கும் படியும் கூறுவார். அதுபோலவே அன்றும் பாதரிடம் தன் குறைகளையெல்லாம் கூறிவிட்டு செல்கிறாள் ஆரோக்கியம். பாதர் தன் சார்பாக ஊர் மக்களிடம் வந்து பேசுவார் என்ற நம்பிக்கையில்.


ஆரோக்கியம் வண்ணான் சமூகத்தை சேர்ந்தவள். இவர்களின் வாழ்க்கையானது வீடு வீடாக சென்று எடுத்துவரும் ஊர்சனங்களின் துணிகளை காலையில் தொரப்பட்டுக்கு எடுத்துச் சென்று துவைப்பது, இளவு விழுந்த வீட்டில் பாடை கட்டுவது முதல் சடலத்தை குழியில் புதைத்து மூடுவது, களம் தூற்றும் காலங்களில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீடாக சென்று களம் தூற்றுவது, பிரசவம் பார்ப்பது, மார்க்கட்டிப்போன பெண்களுக்கு மார்தட்டிவிட்டு பால்வர வைப்பது முதலான எல்லா காரியங்களுக்கும் ஆரோக்கியத்தின் குடும்பம் இருக்கும். இந்த காரியங்களுக்கு காசோ அல்லது தானியங்களையோ வாங்கிக் கொள்கின்றனர்.

ஆரோக்கியம் குடும்பத்தின் ஒரு நாளின் உணவானது முந்தைய இரவில் எடுத்துவரும் ராச்சோற்றினை நம்பியே இருக்கிறது. ராச்சோறு எடுத்துவர குழம்புக்கொரு குண்டானையும், சோற்றுக்கொரு குண்டானையும் எடுத்துச் செல்கின்றனர். ஜோசப் கூடயிருந்த காலத்தில் ஜோசப்பும் பீட்டரும் குண்டானகளை தூக்கிக் கொண்டு வீடுவீடாக சென்று "சாமியோவ் வண்ணாத்தி வந்திருக்கேன் ராச்சோறு வாங்க" என்று கத்துவார்கள். ஒவ்வொரு வீட்டில் கிடைக்கும் வரகு, சோளம், அரிசிப் சாப்பாட்டினை சோற்றுக் குண்டாவிலும், குழம்பினை வேற குண்டாவிலும் வாங்கிக் வருவார்கள். இரவில் மிஞ்சும் சோற்றில் நீர் ஊற்றி வைப்பாள் மேரி. மறுநாள் காலை தொரப்பாட்டுக்கு சென்றுவரும் சவுரி நீர் ஊற்றியிருந்த சோற்றுடன் மிளகாயை கடித்து தின்று பசியாறுவான்.

களம் தூற்றும் காலங்களில் ஊரே சுறுசுறுப்பாக இயங்குகிறது. சவுரி ஒரு வீட்டிலும், ஜோசப் ஒரு வீட்டிலும் களம் தூற்றச்செல்கின்றனர். ஜோசப் தூற்றுவது சரியில்லையென்று கூறி புகார் வந்ததால் ஆரோக்கியம் ஜோசப் தூற்றும் இடத்திற்கு அடிக்கடி சென்று பார்த்து வருவாள். களம் தூற்றும் காலங்களில் ஊரிலுள்ள ஒவ்வொருக்கும் வேலை இருந்தது. ஊரில் சோம்பேறியென்று யாரையுமே சொல்ல முடியாத அளவுக்கு எல்லோருக்குமே வேலையிருந்தது.களம் தூற்றுவதற்கு கூலியாக மூன்று படி தானியங்களை கூலியாக பெற்று வந்தனர். களம் தூற்றும் கூலியை மூன்று படியிலிருந்து இரண்டு படியாக குறைத்ததற்காக ஊர்காரர்களுடன் சண்டை பிடிக்கிறாள் ஆரோக்கியம். சவுரி எப்போதும் எதிர்த்து பேசுவது இல்லை. கொடுப்பதை வாங்கி கொள்வான். "சரிங்க சாமீயோவ்" என்பதே அவன் வாயிலிருந்து வரும் அதிகப்படியான வார்த்தை.

ஜோசப்பின் மனைவி சகாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சண்டை வருகிறது. சகாயம் ராச்சோறு எடுக்கவும். தொரப்பட்டுக்கு போகவும் மறுக்கிறாள். நாள் முழுக்க வீட்டிலேயே மேரியுடன் இருக்கிறாள். பீட்டர் தெருப்பசங்களுடன் விளையாடித் திரிகிறான். சின்ன சேலத்திலிருக்கும் அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிச் செல்லும் சகாயமும் ஜோசப்பும் அங்கேயே தங்கிவிடுகின்றனர். ஜோசப்பின் பிரிவை எண்ணி ஆரோக்கியம் மனம் வருந்துகிறாள். அழுகிறாள். மருமகளான சகாயத்தை திட்டித் தீர்க்கிறாள். இதனால் மேரி சில சமயங்கள் ராச்சோறு எடுக்க பீட்டருடன் செல்கிறாள்.

மேரியை துணியெடுக்க ஆரோக்கியம் எப்போதும் அனுப்புவதில்லை. ஆரோக்கியம் நோயுற்று மூன்று நாட்கள் படுத்த படுக்கையாகி விடுகிறாள். சின்னசேலம் சென்றிருந்த ஜோசப், சகாயம் பற்றி விசாரிக்க சவுரி சென்றிருந்தான். பீட்டர் ஊர்ப் பசங்களுடன் விளையாட சென்றுவிட்டதால் மேரியை துணியெடுக்க சொன்னாள் ஆரோக்கியம். ஒவ்வொரு வீடாக துணியெடுத்து கொண்டு சடையன் வீட்டிற்கு சென்ற போது சடையனால் மானபங்கம் படுத்தப்படுகிறாள். சடையனிடமிருந்து தப்பித்து வந்தவள் வீட்டிற்கு வந்து அழுகிறாள். ஆரோக்கியம் என்னவென்று கேட்டும் பதில் சொல்லாது கத்திகத்தி அழுகிறாள். மேரிக்கு ஏதோ நடக்கக்கூடாது நடந்துவிட்டதென்று உணர்கிறாள். மேரி தெருவில் போட்டு வந்த சலவைத்துணிகளை ஆரோக்கியம் தெருவில் சென்று பொருக்கி வருகிறாள். இந்த விஷயத்தை ஊர் சனங்களிடமிருந்தும் சவுரியிடமிருந்தும் மறைத்துவிடுகிறாள் ஆரோக்கியம்.

சவுரியின் தங்கை மகன் திரவியராஜிக்கும் மேரிக்கும் திருமணம் முடிகிறது. திரவியராஜ் அம்மாவின் பெயர் தெரசா. திரவியராஜின் சிறுவயதிலேயே திரவியராஜின் அப்பா இறந்துவிடுகிறான். அதன் பின்பு தெரசா கணவனின் தம்பியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறாள். திரவியராஜ் ஆரோக்கியத்திடம் வளர்ந்து வருகிறான். தெரசாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே திரவியராஜ் தெரசாவிடம் செல்கிறான். தெரசா இறந்து பின்பு திரவியராஜிக்கும் மேரிக்கும் திருமணம் முடித்து வைக்கின்றனர். மேரியும் தன்னைவிட்டு சென்றுவிட்டதை எண்ணி ஆரோக்கியம் மிகவும் மனவருத்தமடைகிறாள். கண்ணீரிலே காலத்தை நகர்த்துகிறாள்.

நாவலானது ஆரோக்கியத்தின் மனவருத்ததை அதிகமாக சொல்கிறது. முன்பு கிடைத்தது போல் இல்லாமல் போன ராச்சோறு பற்றியும், களம் தூற்றும் சமையங்களில் வழங்கப்படும் தானியம் படி மூன்றிலிருந்து இரண்டாக குறைந்தது பற்றியும், கிளிந்த துணிகளை தைத்துக் கொடுத்ததையும் பாழாக்கிய மெஷின் தையல்காரனையும், ஊரில் கடைப்போட்டிருந்த வேற வண்ணானைப் பற்றியுமே இருந்தது.

பீட்டரை பாதர் அழைத்து வரச் சொன்னதாக கூறி பாதரின் சமையல்காரன் வருகிறான். சமையல்காரன் கேட்டதை நினைத்து ஆரோக்கியம் பயந்து போகிறாள். பீட்டரையும் அழைத்துச் சென்றுவிட்டால் அனாதை பிணமாக ஆகிவிடுவோமோ என்று நினைக்கிறாள். பீட்ட்ரை பாதரிடம் அனுப்ப சவுரி சம்மதம் தெரிவித்தாலும் ஆரோக்கியம் முடியாதென்று உறுதியாகயிருக்கிறாள். சில நாட்கள் கழித்து பீட்டர் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொன்டு ஆறுமுகத்துடன் சென்னைக்கு ஓடிப்போய்விடுகிறான். அதன்பின் ஆரோக்கியம் தனிமரம் ஆகிறாள். உடல் சோர்வடைகிறாள். சகாயத்திற்கு ஆண்பிள்ளையும், மேரிக்கு பெண்பிள்ளையும் பிறக்கிறது. குழந்தைகளுக்கு வெள்ளி அரைநாண் கொடி கூட வாங்கிக்கொடுக்க வழியில்லையென மனம் வருந்துகிறாள். முடிகள் நரைத்து முதுமையடைகிறாள். குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து திரவியராஜ் இறந்துவிடுகிறான். மேரியும் அவள் குழந்தையும் ஆரோக்கியத்திடம் வந்து சேர்கின்றன்ர். சவுரி கூன் விழுந்த முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்தபடி முன்னே செல்ல அவனை தொடர்ந்து ஆரோக்கியம் இடுப்பில் குழந்தையை வைத்து நடக்கிறாள் அவளை தொடர்ந்து மேரி தொரப்பாட்டுக்கு நடந்து செல்வதுபோல் நாவல் முடிகிறது.

- முற்றும் -

கிரகம்.
 
தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

Tuesday, March 16, 2010

தவிக்கவிடப்பட்டவர்கள் (Dan Biletsky) - தமிழில் : கிரகம்

ரோமானியவை சேர்ந்தவர்கள் அதிகம்பேர் பொருளாதார தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மில்லியனாக இருக்கலாம். ஆனால் 12 வயது ஸ்டீபன் அவனின் தாய் இத்தாலியில் வேலைக்காரியாக வேலை செய்து வருவதை சாவதை விட மோசமான நிலையாக கருதினான். ஸ்டீபன் ஒரு நாள் குதிரை சாட்டையின் உதவியுடன் செர்ரி மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தான். இறப்பதற்கு முன்பு செல்போனில் அவனை போட்டோ எடுத்துக் கொண்டான். ஸ்டீபன் ஒரு அமைதியான பையன். அவன் நாணயங்கள் சேகரித்தல், உபயோகமற்ற உலோகங்களை கொண்டு பொம்மைகத்தி செய்வதில் கெட்டிக்காரன். இறக்கும் போது அவன் மார்புப் பகுதியில் துண்டுப் பிரசுரம் காணப்பட்டது. “நம் மனவருத்ததிற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்”. துண்டுப்பிரசுரம் அவனது வலிதரும் மரணமாவது அவன் தாய் வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதை தடுக்கும் என்று கூறுகிறது. அவன் தாய் ரோம் நகரில் வேலை பார்க்கிறாள். இந்த நகரத்தில் தான் மூன்றில் ஒரு பங்கு ரோமானியர்கள் வேலை பார்க்கின்றனர். “நீ என்னுடைய இறுதிச் சடங்கை நினைத்து கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் ஒரு ஆணிடம் விறகிற்கான பணம் இருக்கும். என்னுடைய தங்கையே நீ கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அம்மா நீ உன்னை நன்கு கவனித்துக் கொள் ஏனென்றால் இந்த உலகம் மோசமானது என்னுடைய குட்டி நாயை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள்”.

ALEXANDRINA CIUXEA 38 வயதுடைய பெண். மேற்கு நோக்கி வேலைக்காக சென்ற 3 மில்லியன் ரோமானியர்களில் இவரும் ஒருத்தி. இவள் தான் ஸ்டீபனின் தாய். அவள் கூறுகிறாள் “ஸ்டீபனின் இறப்பு என்னுடைய வயிற்றில் அல்சரை ஏற்படுத்தியது”. ஸ்டீபன் இறப்பிற்கு பிறகு ஒரு வருட காலம் தன் மற்ற இரு பிள்ளைகளுடன் தங்கிவிட்டு அதன் பிறகு மீண்டும் ரோமிற்கு வேலைக்கு சென்றதாக கூறுகிறாள். இறுதியில் மற்ற எல்லாவைகளையும் விட வருமானம் முக்கியமானது என்கிறாள். அவள் இத்தாலியில் வீட்டை சுத்தம் செய்து மாதம் 770 டாலர் சம்பாதித்தாள். இந்த சம்பளம் ரோமானியாவில் வேலை செய்து கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிகம். “ஸ்டீபன் இறப்பு என் வாழ்க்கையில் மிகுந்த வருத்தமளித்தது. ஆனால் நான் அவர்களை விட்டு வந்தேன் ஏனென்றால் நான் ஒரு ஏழை மேலும் என் பிள்ளைகளுக்கு உணவு வாங்கி தரமுடியாத நிலையில் இருந்ததாள்”, இவ்வாறு ALEXANDRINA தொலைபேசி நேர்காணலில் கூறியிருந்தாள்.

1989ல் கம்யூனிஸம் வீழ்ச்சிக்கு பின் ரோமனியாவில் ஏழைகளாக இருந்தவர்கள், கிராமப்புறங்களில் வசித்தவர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல துவங்கினர். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரோமனியா ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி மற்ற நாடுகளின் நெருக்கடியில்லாத IMMIGRATION முறையை அறிமுகம் செய்து கிழக்கிலிருந்து வந்த குறைந்த விலை வேலைக்காரர்களை கவர்ந்தனர்.

கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யும் ரோமானியர்கள் அவர்கள் விருப்பமான வேலையை எடுத்துச் செய்தனர். ரோமானிலிருந்து ஸ்ட்ராபெர்ரி பழம் பிடுங்கவும், கட்டுமான வேலைகள் செய்யவும், வீட்டை சுத்தம் செய்யவும் செல்பவர்கள் அருகிலுள்ள பணக்கார நாடுகளுக்கு நீண்ட காலம் தேவையில்லை. ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சென்ற வருடம் வெளிநாடுகளில் வசித்தவர்கள் 10.3 மில்லியன் டாலர் அவர்களது குடும்பத்திற்கு அனுப்பியிருக்கின்றனர்.

சொரஸ் பவுண்டேஷன் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் படி 170000 குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு தனிமையில் விடப்பட்ட குழந்தைகள் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவதும், சிகரெட் புகைப்பதும், போலீசில் தவறு செய்து மாட்டிக் கொள்வதும், பள்ளிக் கூடத்தில் நடத்தைகள் மோசமாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில குழந்தைகள் பாலியியல் தவறுகள் செய்வதற்கு காரணம் பெற்றோர் தங்களை விட்டுப்பிரிந்ததினால் தான் என்று பெற்றோர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

DENISA IONESCU, ஒரு மனநல மருத்துவர். குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளை பரிசோதனை செய்துள்ளார். அவர் இந்தக் குழந்தைகள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக தாயை பிரிந்து வாழும் குழந்தைகள் முழுவதுமாக தனிமையில் இருப்பதாக எண்ணுவதாகவும் கூறுகிறார். “தாய் தான் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஒரு தாய் தன் குழந்தையை பிரியும் போது, குழந்தையின் உலகத்தில் இருள் சூழ்கிறது”.

கடந்த 3 ஆண்டுகளில் தனிமையில் விடப்பட்ட 14 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக சொரஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறுகிறது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது தாத்தா, பாட்டியிடம் விட்டுச் செல்கின்றனர். சிலர் குழந்தைகளை பராமரிக்கவும் விரும்புவதில்லை. வெவ்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் கணவன் மனைவிகளிடையே விவாகரத்தும் அதிகரிக்கிறது. எதுவுமே முடியாத தருணத்தில் குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வதாக குழந்தைகளுக்கான வழக்கறிஞர் கூறுகிறார்.

நேஷனல் டெலிவிஷனில் எம்மி அவார்டு ஜெயித்த படமான ‘ANY IDEA WHAT YOUR KID IS DOING RIGHT NOW?’ ஒளிபரப்பானது. படத்தின் கதையானது, திருமணமான பெண் கண் தெரியாத கணவனையும் ஆறு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து ஜெர்மனியில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள். அவள் ஜெர்மனியில் வேறொருவனை சந்தித்து மணந்து கொள்கிறாள். பிறகு அவள் தன் குழந்தைகளையோ, கணவனையோ சந்திக்க வரவில்லை. விரைவிலே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பிறகு அந்தக் குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்பதால் கிடைக்கும் சலுகைகள் குறைந்த நாட்களே, பண வீழ்ச்சி காலங்களில் அவர்கள் திரும்பவும் சொந்த நாட்டிற்கு துரத்திவிடப்படுவதாகவும் வணிகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேலான ரோமானியர்கள் வேலையில்லாமல் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து கிளம்பி சொந்த நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். “சில காலங்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதால் கிடைக்கும் வணிகவியல் லாபம் நீண்ட கால பணதேவையை தீர்மானிக்க முடியாது”. என்று RADU SOUIANI என்ற வணிகவியல் வல்லுநர் கூறுகிறார். “இது ஒரு நாட்டின் துயரமான முடிவு”.

தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

Wednesday, March 3, 2010

மரணத்தில் ஒழுக்கத்திற்கான போராட்டம்

மரணத்தில் ஒழுக்கத்திற்கான போராட்டம்   - Sudha Umashankar

                                                                                                                தமிழில் - கிரகம்

இது தி ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

Euthanasia என்றால் என்ன? Euthanasia ஒரு கிரேக்க மொழி சொல். இதற்கு "நல்ல சாவு" அல்லது "கருணை கொலை" என்று பொருள். "Euthanasia என்பது நோயுற்ற ஒருவரை கொலை செய்தல். டாக்டரின் முன்னிலையில் இந்த கொலையானது நடைபெறுகிறது. இந்தக் கொலையின் மூலம் நோயாளியோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ ஒரு விதத்தில் நன்மை அடைகின்றனர்" என்று Euthanasia பற்றி Indian society of critical care medicine committe கூறுகிறது.

"Euthanasia சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட செயல்". Euthanasiaவை அதனை ஒத்த செயல்பாடுகளை கொண்ட 'Passive Euthanasia' வுடன் ஒப்பிட்டு பார்ப்போம். Passive Euthanasia என்பது தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளியை லைப்-சப்போர்ட் சிஸ்டமிலிருந்து நீக்கி விடுவது, உதாரணத்திற்கு சுவாசக்கருவிகளை நோயாளியிடமிருந்து நீக்கி விடுவது, நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இருப்பது, உணவு மற்றும் நீர் தராமல் இருப்பது, இதன் மூலம் நோயாளி சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ மரணம் அடைகிறான். "Euthanasia ஒரு முழுமையான கொலை புரியும் செயல். நோயாளிக்கு உணவு தராமல் இருப்பதாலும், தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இருப்பதாலும் நோயாளிக்கு ஏற்படும் மரணமும் Euthanasiaவும் ஒன்றாகாது" என்று டாக்டர் மிரினல் சிர்கர் கூறுகிறார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடமிருந்து லைப்-சப்போர்ட் சாதனங்களை நீக்கி வைப்பது தொடர்பாக நம் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. "மேற்கத்திய நாடுகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி மீண்டும் பிழைக்க வாய்ப்பில்லையென்று தெரிந்தால் லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நோயாளியை நீக்கிவிடுகின்றனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் இறப்பவர்கள் எண்பது முதல் தொண்ணூறு சதவிகிதம் பேர் லைப்-சப்போர்ட் சாதனங்களை நீக்கிய பிறகு தான். இதனை தெளிவான மருத்தவ பரிசோதனைக்கு பின்னரே செய்கின்றனர். மேலும் அவர்களின் சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான சட்டங்கள் இதுவரை கிடையாது" என்கிறார் டாக்டர் மிரினல் சிர்கர்.

இது போன்ற சட்ட திட்டங்கள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் மரணத்தின் வாசலில் விழுந்துவிட்டவர்களையும் நம் டாக்டர்கள் பிழைக்க வைக்க முயற்சிப்பதும் இறுதியில் டாக்டர் தோற்று மரணம் ஜெயித்து விடுகிறது. இவ்வாறு டாக்டர்கள் பிழைக்க வைக்க முயற்சி செய்யவில்லையென்றால் டாக்டர்கள் மீது சட்டங்கள் பாய வாய்ப்புள்ளது. இதனாலே பிழைக்க வாய்ப்பில்லையென்று தெரிந்த பின்பும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

Euthanasiaவை எப்போது பயன்படுத்தலாம்?

"Euthanasiaவை கீழ்க்காணும் இரண்டு தருணங்களில் பயன்படுத்தலாம்.

ஒன்று: தாங்கமுடியாத வலியில் அவஸ்தைப்படும் கேன்சர் நோயாளிக்கு அளிக்கலாம்.தற்போது இருக்கும் மருத்துவ சூழலில் தொண்ணூறு சதவீத வலியை போக்க மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த வசதி கொண்ட மருத்துவமனைகளோ மிகவும் குறைவு. சில சமயங்களில் Euthanasiaவை நோயாளியோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ நோயாளிக்கு தரச்சொல்லி கேட்கின்றனர். அவ்வாறான சமயங்களில் டாக்டர் நோயாளிக்கு எப்போதும் தரும் வலி நிவாரண மருந்தின் டோசேஜை அதிகப்படுத்தி தருகின்றனர். இவ்வாறு டோசேஜை அதிகப்படுத்தி தருவதன் மூலம் நோயாளி மரணம் அடைகிறான். இவ்வாறு டோசேஜை அதிகப்படுத்தி தருவதை இந்திய சட்டம் அனுமதிக்காது.

இரண்டு: நீண்டநாள் கோமாவிலிருந்து மீள முடியாத நோயாளியை வாழ்நாள் முழுக்க தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலையில் இல்லாத, நோயாளியை தினம்தினம் கவனிக்க இயலாத உறவினர்களின் வேண்டுகோளால் லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நோயாளியை நீக்கி நோயாளியை மரணம் அடையச் செய்கின்றனர்" என்கிறார் டாக்டர் சுனில் சாரூப்.

"நாம் எப்படி ஒருவரை கொலை செய்ய முடியும்? மற்றவரின் வாழ்க்கையையோ அல்லது என் வாழ்க்கையோ தீர்மானிப்பதில் எனக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த பரிசு. நோயுற்றவர்களின் கடைசிமூச்சு இம்மண்ணில் இருக்கும் வரை அவர்களை மனஅமைதியுடன் இருக்க நாம் உதவ வேண்டும். இந்த உலகத்திற்கு வந்த ஒருவன் நிச்சயம் ஒரு நாள் இறப்பான். ஆனால் அந்த ஒருவன் கொலைபுரிதல் மூலம் மரணம் அடையக்கூடாது. மனித மனோதத்துவத்தின் படி தாங்கமுடியாத வலியினால் அல்லது மன அழுத்தத்தால் அவன் இன்று மரணத்தை விரும்பலாம். ஆனால் மறுநாள் அவன் மனதினை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. நோயாளியின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. மேலும் சாவதற்கு யாரும் விருப்பம் கொள்வதுமில்லை" என்கிறார் உடல்நிலை சரியில்லாதோர் காப்பகம் நடத்தி வரும் சிஸ்டர் லலிதா தெரசா.

"மரணத்தின் வாசலுக்கு நோயாளி சென்றுவிட்டான் என்று தெரியவந்தால் இனிமேல் என்ன முயற்சி செய்தாலும் நோயாளி பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் நாங்கள் வெளிப்படையாக நோயாளியின் குடும்பத்தினரிடம் நோயாளிக்கு என்ன விருப்பமோ அதனை செய்து கொடுங்கள் என்று கூறி விடுகிறோம். நாங்களும் நோயாளி சாதாரணமாக இருக்கவும் வலியில்லாமல் இருக்கவும் தேவையானவற்றை செய்து தருகிறோம்" என்கிறார் டாக்டர் அகர்வால்.

"இந்தியாவில் Euthanasia அல்லது கருணை கொலை சட்ட விரோதமான செயல். கருணை கொலை புரிய உதவி செய்யும் நபரோ அல்லது கொலை செய்யும் நபரோ கீழ்க்கண்ட சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள்.

1. IPC section 306 அல்லது

2. Section 304ன் கீழ் கொலைபுரிதல்

இதனால்தான் அருணா ஷேன்பாக் வழக்கில் பத்திரிக்கையாளர் ஒருவர் அருணாவிற்கு உணவு தராமலிருக்க அனுமதி கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு சமர்ப்பித்திருந்தாள். கோர்ட்டின் அனுமதி பெறாமல் அருணாவிற்கு உணவு தராமல் இருந்திருந்தால் பத்திரிக்கையாளர் எதாவது கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பாள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி இருக்கும் நோயாளியை லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நீக்கி வைக்க சட்டம் உள்ளது. இதற்கு டாக்டரோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ குற்றம் சாட்டப்பட மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது போன்றதொரு சட்டத்தை கொண்டு வருவது கடினம். மேலும் நம் செயல்கள் அனைத்தும் ஒழுக்கத்தை முன்னிறுத்தியே அமைகின்றன" என்கிறார் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் அட்வகேட்டிற்கான பிராக்டிஸ் செய்துவரும் ஜெய்னா கோதாரி.

"Euthanasiaவிற்கு சாதகமாக சட்டங்கள் அமைவது என்னைப்பொருத்த வரையில் நம் சமூகத்தில் பயங்கரமான சூழலை ஏற்படுத்தும். இது போன்றதொரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு நாம் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். Euthanasiaவை அனுமதிக்கும் வழிகளை நன்கு வரையறை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு Transplantation of human organ actல் உள்ள Brain dead certification போல Euthanasiaவையும் முழுமையாக வரையறை செய்யப்பட வேண்டும்" என் கிறார் டாக்டர் சுனில் சாரூப்.

இந்தியாவில் Euthanasia சம்பந்தமான முக்கிய வழக்குகள்

1. முன்னால் நேஷனல் செஸ் சேம்பியன் k.வெங்கடேஷ் தன் இருபத்தி ஜந்தாவது வயதில் Duchenne's Muscular Dystrophy நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். k.வெங்கடேஷ் தன் உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பி தனக்கு Euthanasia அளிக்க கூறினான். அப்படியில்லையென்றால் உடலுறுப்பின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து இறுதியில் செயலிழந்த உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்று அறிந்திருந்தான். அதனால் அவளின் தாய் ஹைய்தராபாத்திலுள்ள மோகன் பவுண்டேஷனை அணுகினாள். Brain Dead ஆகாத நோயாளிகளிடமிருந்து உறுப்புகளை எடுக்க முடியாது என்று சொல்லி k.வெங்கடேஷ் தாயின் வேண்டுகோளை மோகன் பவுண்டேஷன் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து k.வெங்கடேஷின் தாய் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் உறுப்பு தானம் செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தாள். நீதிமன்றமானது Transplantation of Human Act 1995ன் படி Brain Dead ஆகாத நோயாளியிடமிருந்து உடலுறுப்புகளை எடுக்க முடியாதென்று கூறி மனுவை நிராகரித்துவிட்டது. இறுதியாக k.வெங்கடேஷ் இறந்த பிறகு அவன் கண்கள் மட்டும் தானம் செய்யப்பட்டன. இதே போல் Alzheimers நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து தோல், இருதய வால்வுகள், எலும்புகள் போன்ற உறுப்புகளை மட்டுமே தானமாக வழங்க முடியுமே தவிர முழு உறுப்புகளான இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி போன்றவற்றை எடுக்க முடியாது. Brain Dead ஆன நோயாளியிடமிருந்து மட்டுமே இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி போன்ற உறுப்புகளை எடுக்க முடியும்.

2. 1973 ம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பையில் நர்ஸ்ஸாக வேலை பார்த்து வந்த இளம்பெண் ஷேன்பாக்கை மருத்தவமனையில் வைத்து அடித்து, நாய் சங்கலியால் தாக்கி கற்பழித்தான் மருத்துவமனையில் வேலை செய்து வந்த குப்பை கூட்டுபவன். இந்த நிகழ்வுக்கு பின் அருணா கண்கள் தெரியாமல், காதுகள் கேட்காமல், பக்கவாதத்திற்கு உள்ளானாள். அதன் பின் அவள் உடலில் எந்தவொரு அசைவுமேயில்லாமல் ஜடம் போல் இருந்தாள். மீண்டும் பழைய நிலையை அடைய முடியாத நோயாளியை கருணை கொலை செய்யலாமா? இது தொடர்பாக அருணாவின் தோழியும், பத்திரிக்கையாளருமான பிங்கி விர்ராணி உச்ச நீதி மன்றத்தில் அருணாவிற்கு மரணத்தை கொடுக்க அனுமதி கேட்டு மனு தொடர்ந்திருந்தாள்.

பிங்கி விர்ராணி அருணாவை பற்றி "அவளால் பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ முடியாது. அவள் ஒரு ஜடம் போல வாழ்ந்து வருகிறாள். நன்கு நசுக்கிய கஞ்சி போன்ற உணவையே அருணாவிற்கு உணவாக அளிக்கிறோம். இதைவிட மோசமானது 36 வருடங்களாக அருணாவை பற்றி விசாரிக்கவோ, பார்க்கவோ, சேவை செய்யவோ அவளின் அண்ணன், தங்கைகளோ, உறவினர்களோ வருவதுமில்லை"

- முற்றும் -

கிரகம்

19/02/10 - நன்றி தி ஹிந்து நாளிதழ்
 
உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

சிறுகதை - சந்திரன் வருவான்

சந்திரன் வருவான்

குழந்தை பசிக்கு அழும் சத்தம் கேட்டது. நந்தா கட்டை விரலால் அதன் வாயில் ஒரு முறை அமுக்கியவுடன் அழுகை நின்றது. “ஹலோ, யார் பேசறது?” மறுமுனையில் “நான் கிரண் பேசுகிறேன்” என்று பெண்ணின் குரல் கேட்டது. கிரண் தொடர்ந்து பேசத்தொடங்கினாள். “நந்தா நான் மாசமாகயிருக்கேன்”. “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு ஒரு முறை யோசித்தான். “என்ன சொன்ன மாசமாயிருக்கியா, உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே, அப்புறம் எப்படி?” “ஆமாம், எனக்கு இன்னும் கல்யாணமாகலை, ஆனாலும் மாசமாயிருக்கிருக்கேன்”. “யார் அந்த நயவஞ்சகன், அவன் பெயர் என்ன? அவன் ஊர் என்ன? அவன் யாராகயிருந்தாலும் அவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், யார் அவன்?” “அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். நூறு சதவீதம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்”. நந்தாவிற்கு தூக்கிவாரிப் பேட்டது. “என்னது, நானா!, இதுவரை நான் உன் கைவிரலைக்கூட தொட்டிராத போது நீ எப்படி நானாவும் இருக்கலாம் என்கிறாய்?” “நீங்களும், நானும் சந்திரனூர் சென்றது நினைவிருக்கிறதா?” “ஆமாம் நினைவுள்ளது”. “அங்கு கூட நீயும் நானும் தனி அறையில் தானே தங்கியிருந்தோம். எனக்கு ஏதோ உனக்கு நிச்சயமான பையன் தான் இதற்கு காரணமாக இருப்பானென்று நினைக்கிறேன்.” “இல்லை, அவன் நிச்சயமாக இருக்க முடியாது. ஏனென்றால் நிச்சயதார்த்தமே நடக்கவில்லை.” “நீ ஏதோ விளையாடுகிறாய் என்று நினைக்கிறேன்.” “நான் ஒன்றும் விளையாடவில்லை. உங்கள் மனைவி பார்க்கும் டாக்டர் தான் கூறினார் மாசமாகயிருப்பதை”, “என் மனைவிக்கும் இந்த விசயம் தெரிந்துவிட்டதா?” “இல்லை, தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நான் எனக்கென்று சொல்லாமல் வேறொருத்திக்கு என்று சொல்லியிருக்கிறேன். இதன் பிறகு டாக்டரிடம் உங்கள் மனைவி பேசினாள, நிச்சயம் தெரிந்துவிடும்.” “கிரண், நான் சொல்லும்படி செய்வாயா?” “சொல்லுங்கள், செய்கிறேன்.” “கடந்த காலத்தை மனதில் அசை போட்டுப்பார். நாம் சந்திரனூர் செல்ல ஆரம்பத்திலிருந்து, ரயிலில் சந்திரனூர் சென்றது, சந்திரனூர் மலைக்கோயிலுக்கு சென்றது. நூரி கிழவியுடன் பேசியது. மீண்டும் செகந்திராபாத் ஸ்டே~ன் வந்து சேர்ந்தது. ஓவ்வொரு நிகழ்வுகளையும் சரியாக யோசித்துப்பார். எதையும் ஸ்கிப் செய்யாமல். எனக்கு இப்போதும் நம்பிக்கையுள்ளது. நான் இந்த தவறை செய்திருக்கமாட்டேன் உனக்காக மனதை அசை போட்டுப்பார்.” “சரி, நந்தா செய்கிறேன்.” கிரண் மனதை அசை போடத் துவங்கினாள்.

அன்று ஒரு நாள்,
நந்தாவும், கிரணும் ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள். நந்தா கிரணின் மேனேஜர். கிரண் “சந்திரன் வருவான்” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஆர்ட்டிகளை இணையத்தில் படித்துக்கொண்டிருந்தாள். “இந்த ஊரில் உள்ள அனைவரும் வெள்ளை வெளேர் என்று இருக்கின்றனர். இந்த ஊரில் வசிக்கும் அனைவரும் வெள்ளைக்காரன் நிறத்தில் இருக்கின்றனர். இந்த ஊரை ஒட்டியுள்ள ஊரில் வசிப்பவர்கள் சாம்பல் நிறத்திலும், கறுப்பு நிறத்திலும் இருக்கின்றனர். ஏன்? இதற்கு என்ன காரணம்? ஏன்ற கேள்வியை நூரி என்ற வயதான கிழவியிடம் கேட்டாள். என்னோட தலைமுறையில் இருந்தவங்க கலர் சாம்பல் நிறம் தான். வெள்ளை கலர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் அவங்க சந்திரனோடு இரவுல பேசுவாங்களாம். ஒரு நாள் சந்திரனோடு ஒரு பெண் உடலுறவு வச்சிட்டுதாகவும் அவளுக்கு பிறந்த குழந்தை தான் முதல் வெள்ளை நிற ஆண் குழந்தையென்றும் அவனுக்கு பின்னால் வந்த சந்ததியில் பிறந்தவர்கள் தான் இந்த ஊரில் உள்ள மக்கள். அந்த கிழவியிடம் ஒரு கேள்வி கேட்டோம். இந்த ஊரிலுள்ள அனைவருமே ஒருவர் மற்றொருவருக்கு சொந்தமா? அந்தக்கிழவி ஆமாம் இதிலென்ன சந்தேகம் என்று கூறினாள். மேலும் அந்தக்கிழவி இதற்கான ஆதாரங்கள் சந்திரனூர் மலைகுகையில் எழுதியிருப்பதாகவும் கூறுகிறாள்”. கிரண் படித்து முடித்ததும் “வாவ், வாட்ட இண்டரஸ்டிங் ஸ்டோரி” என்று வாய்விட்டு கூறினாள். நந்தா “ஒரு வாரம் வேலையில்லாம வீட்ல இருக்கிறது. உனக்கு இண்டரஸ்டிங்கா?” கிரண் “நான் சந்திரனூர் பத்தி வந்த ஆர்ட்டிகளை சொன்னேன்;. நீங்க எதை சொல்றீங்க?” “உன்னோட அவுட்-லுக்ல கம்பெனி சிஇஒவிடமிருந்து மெயில் வந்திருக்கும் படிச்சிபார்.” “ஒரு வாரம் சம்பளமில்லாம லீவு தர்றாங்களாம். முன்னாடியே எதிர்பார்த்ததுதான் . ஆறு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்காவில இருக்கிற எம்பிளாக்கு லீவு கொடுத்தாங்க. இப்ப நமக்கு கொடுத்திருக்காங்க. இன்னும் எத்தனை மாசத்துக்கு” கிரண்.

சந்திரனூர் பற்றி வெளி வந்த தகவலை நந்தாவிடம் கூறினாள். நந்தாவும் அந்த செய்தியை கேட்டு ஆச்சரியமடைந்தான்.

செகந்திராபாத் ஸ்டேஷனில் கிரணும், நந்தாவும் நின்றிருந்தனர். சந்திரனூர் செல்லும் வண்டி வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ரயில் வண்டி அதிகமான டெசிபெல்களில் ஒலியை எழுப்பிய பின்பு இடத்தை விட்டு நகர்ந்தது. இரவு தொடங்கும் நேரமானது கிரண் “என்ன நந்தா உங்க மனைவி என்ன சொன்னாங்க?” நந்தா “அவாகிட்ட ஆபிஸ் விஷயமா போகிறதா சொல்லிவச்சிருக்கேன்”.“ஏன் பொய் சொன்னீங்க?” “நீ ரொம்ப அழகான பெண். நீ உன் உடையில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், கம்பெனி ஆனுவல்டேயில் நீ அணிந்திருந்த சேலை நன்றாக இருந்ததென்றும் சொல்லியிருந்தேன்.” “அப்ப நீங்க என்னை விரும்புறீங்களா?” “எனக்கு கல்யாணமாகி ஐந்து வயதில் பையன் இருக்கும் போது நான் எப்படி உன்னை விரும்பமுடியும். நான் அழகை ரசிக்க கூடியவன். ஓரு பூவின் அழகை ரசிப்பவன். காலை பொழுதில் கூவும் குயிலின் சத்தம் மனதிற்கு ஒரு உற்சாகத்தை தரும். அது போலத்தான் நீயும். உன்னை பார்த்தாலும் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும்” நந்தா பேசிய வசனங்கள் கேட்டு சந்தோசத்தில் ஊமையானாள் கிரண். நந்தா விஸ்கியை ஒரு லிட்டர் கலர் பாட்டிலில் கலக்கி கொண்டு வந்திருந்தான். ஒவ்வொரு சிப்பாக திறந்து மூடி திறந்து மூடி குடித்தான். கிரண் கழிவறை செல்வதற்காக இடத்தை விட்டு எமுந்து சென்றாள். இந்த கோச்சில் இவள் ஓருத்தி தான் பெண் என்றும் அனைவரும் ஆண்கள் என்றும் பார்த்து தெரிந்து கொண்டாள்.

சந்திரனூர் ஸ்டேஷன் வந்தது. நந்தா ஓரு லிட்டர் கலர் பாட்டிலில் கலந்திருந்த விஸ்கியை குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். கிரண் நந்தாவை தட்டி எழுப்பி பிளாட்பாராத்தில் போட்டிருந்த மரப்பலகையில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் ரயில் வண்டியினுள் ஏறி சாமான்களை இறக்கி வைத்துவிட்டு மனோஜ்காக காத்திருந்தாள்.

மனோஜ் வந்தான். மனோஜ்ம், கிரணும் அறிமுகம் செய்து கொண்டனர் கிரண் “உங்களுடைய சந்திரன் வருவான் ஆர்டிக்கல் என்னை ரொம்ப இம்பிரஸ் பண்ணிடிச்சி, நேர்ல பார்க்கணும் ஆசை, அதான் நேரா கிளம்பி வந்துட்டேன். இவர் என்னுடைய மேனேஜர் நந்தா” என்று நந்தாவை காட்டி கூறினாள். நந்தா போதையில் உண்டான தூக்கத்தில் இருந்தான். நந்தா ஒருவழியாக மனோஜின் கையை பற்றி குலுக்கி அசடுவழிய சிரித்தான். கிரணும், மனோஜிம் சாமான்களை தூக்கி கொண்டு முன்னே செல்ல நந்தா தல்லாடியபடி அவர்களை பின் தொடர்ந்தான்.

மின் கம்பத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் நிற குண்டு பல்பின் வெளிச்சம் கம்பத்தின் பாதி உயரத்திற்கு மட்டுமே இருந்தது. மின் கம்பத்தின் அருகில் நின்று கொண்டிருந்த மனோஜ் “கிரண் இந்த நேரத்திற்கு சூரியனூர்க்கு பஸ் எதுவும் கிடையாது. நீங்களும் நந்தாவும் இந்த மண்டபத்தில் தங்கிகோங்க. எந்த பயமும் கிடையாது.” கிரண் “சந்திரனூர்ல ஏதும் ரூம் கிடைக்கலையா?”. “சந்திரனூர்க்கு உள்ள வேற ஊரு பொண்ணுங்களை தங்க அனுமதிக்க மாட்டாங்க. அதோ அங்க குத்துக்கல் தெரியுதுல்ல அதை தாண்டி மட்டும் உள்ளே போயிடாதீங்க”. கிரண் எங்கே நிற்கிறாள் என்று தெரியாதபோதும் அவன் பேசுவதை வைத்து ஒரளவுக்கு அவன் இருக்கும் திசையை கணித்துக் கொண்டாள். மனோஜிடம் கிரண் “நீங்க எங்க தூங்குவீங்க?” மனோஜ் “சந்திரனூரிலுள்ள நண்பன் வீட்டில்” என்று கூறிவிட்டு இருட்டில் நடந்து சென்றான். கிரணும் நந்தாவும் கல் மண்டபத்திற்கு சென்று படுத்துக் கொண்டனர்.

எங்கு பார்த்தாலும் கறுப்பு நிறமாக இருந்தது. சிறு பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. கிரணுக்கு அடிவயிற்றில் வலி எடுத்து கழிப்பறை செல்ல வேண்டும் போல் எண்ணம் உண்டானது. கல்மண்டபத்தை விட்டு வெளியேறி சுற்றிலும் பார்த்தாள் எங்கும் கறுப்பு நிறமாகியிருந்தது. தூரத்தில் ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் நிற குண்டு பல்பை பார்த்து அந்த வீட்டை நோக்கி சென்றாள் கிரண்.

அந்த ஓட்டு வீட்டின் வாசலில் நடுத்தர வயது பெண் அமர்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். கிரண் “இந்த வீட்டில் கக்கூஸ் இருக்கா?” நடுத்தர வயது பெண் “நீ யாரு எங்கயிருந்து வார?” “அம்மா என்னோட பெயர் கிரண். எனக்கு வெளியூர். சந்திரனூர்ல இருக்கிற நண்பரை பார்க்க வந்தேன். சந்திரனூர்க்கு உள்ள வெளியூர் பெண்களை இரவு தங்கி அனுமதிக்க மாட்டாங்கண்ணு என்னை கல் மண்டபத்தில் தங்கச் சொன்னார்”. “கல் மண்டபத்தில் தனியாவா தங்கியிருக்க?” “இல்ல துணைக்கு என் நண்பர் இருக்கார்.” “கல்யாணமாயிடுச்சா?” “இன்னும் இல்ல.” “கல் மண்டபத்தில் தனியா படுத்திருக்கிற பெண்களை சந்திரன் உடலுறவு வச்சிக்குவானே. நீ வேணா கக்கூஸ் போயிட்டு இங்கேயே படுத்துக்கோ”. கிரண் எதுவும் பேசாமல் ஓட்டு வீட்டினுள் படுத்துக் கொண்டாள்.

கிரணும் நந்தாவும் சந்திரனூர் வந்து இரண்டு நாட்கள் முடிந்திருந்தன. காலை முழுவதும் சந்திரனூர் சென்று சுற்றி பார்ப்பதும் இரவு தொடங்கியதும் சூரியனூர் வந்து தங்கி கொள்வதாகவும் இரண்டு நாள்கள் சென்றன. மூன்றாம் நாள் காலை கிரண் தங்கியிருக்கும் அறை கதவு திறந்திருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தாள். தினமும் அவள் படுக்கும் முன்பு அறை கதவை சாத்திவிட்டு தான் படுக்கிறாள். இருந்தும் காலை எழுந்து பார்த்தாள் கதவு திறந்ததிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. நந்தாவின் அறைக்கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்க அவன் அறையின் பக்கம் சென்று கதவை தள்ளி பார்த்தாள். கதவு நன்றாக பூட்டியிருந்தது. கிரண் எவ்வாறு தன் அறைக்கதவு திறந்தது என்று அறிய முடியாமல் குழப்பத்திலே இருந்தாள்;.

கிரண், நந்தா, மனோஐ; மூவரும் சந்திரனூரில் நடக்கயிருக்கும் கல்யாணத்தை பார்க்க சென்று கொண்டிருந்தனர். கிரண் “நந்தா, நேற்று இரவு என் அறைக்குள் வந்தீங்களா?” “இல்லையே, என்னாச்சி?” என்று கேட்டான் நந்தா. “காலையில் எழுந்து பார்த்தா அறைக்கதவு திறந்திருந்தது. எப்படி இரவு பூட்டிவிட்டு படுத்த அறைக்கதவு காலையில் திறக்குதுன்னு தெரியல” “சரியா பூட்டாம படுத்திருப்ப வேற எதுவும் இருக்காது.” நந்தா பேசிய வார்தைகள் கிரணை சமாதானப்படுத்தவில்லை மீண்டும் மீண்டும் அதையே யோசனை செய்தபடி இருந்தாள்;.

வெளியூர்காரர்கள் யாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தால் அவர்களுக்கு மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம, திருநிர் பூசி வரவேற்பது சந்திரனூர்காரர்களின் முறை. பெண்வீட்டாரின் வீடு தான் கல்யாண மண்டமாக தற்காலிகமாக மாறியிருந்தது. கல்யாண பெண்ணின் வயது இருபது என்றும் அவளுக்கு திருமணமாகும் தருணம் வந்து விட்டதென்றும் மனோஐ கூறினான். கிரண் “அதெப்படி தெரியும்?” மனோஜ் மணப்பெண்னை நோக்கி கைநீட்டி அவளின் முதுகுபக்கம் சரியாக தொப்புளுக்கு பின்புறம் பார்க்க சொன்னான்;. வட்ட வடிவு முழு பௌர்ணமி போல் கறுப்பு வண்ணத்தில் இரண்டு சென்டி மிட்டர் ஆரத்தில் மச்சம் இருந்தது. கிரண் “எவ்வளவு பெரிய மச்சம்! இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” மனோஐ; “இந்த மச்சம் இவங்களுக்கு கல்யாண வயசு வரும் போது தெரியும். பிறகு கொஞ்ச நாள் கழிச்சி இந்த மச்சம் மறைஞ்சுடும்” கிரண் “என்ன விசித்திரம்! இருபதாம் நூற்றாண்டுலயும் இதை நம்புறாங்களா?” மனோஐ “இதையே பார்த்து பிரமிச்சிட்டா எப்படி, நாலைக்கு பார்க்க போற நூரி கிழவி பேசுற பேச்ச கேட்டா நீங்க நம்ப மாட்டீங்க போல”

நூரி கிழவி வேப்ப மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாhள். கிரண், மனோஜ், நந்தா மூவரும் நூரி கிழவியை நோக்கி அமர்ந்து கொண்டனர். மனோஜ் “பாட்டி இவங்க செகந்திராபாத்திலிருந்து வந்திருக்காங்க, உங்களை பார்க்கணும்னு சொன்னங்க கூட்டி வந்துட்டேன்.” நூரி “செகந்திராபாத்தில தான சார்மினார் இருக்கு?” கிரண் “ஆமா பாட்டி” நூரி “கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பய ஒரு பொண்ணை சார்மினாரிலிருந்து தான கீழ தள்ளிவிட்டு கொன்னான்?” ஆமாம் என்றாள் கிரண். மனோஜ் “இந்த ஊர்ல எப்படி எல்லாரும் வெள்ளையா இருக்காங்க? அதுக்கு என்ன காரணம் பாட்டி?” “தம்பி உனக்கு ஏற்கனவே அந்தக் கதையை சொல்லியிருக்கேனே. திரும்பவும் ஏன் கேட்கிற?” “நான் சொன்னா இவங்க நம்பமாட்டிக்காங்க, நான் வேற இந்த ஊர் இல்லையா, நீங்க சொன்னா நம்புவாங்கன்னு தான் உங்களை சொல்ல சொல்றேன்.” “அதுவா சங்கதி, அப்ப நானே சொல்றேன்” என்று நூரி கிழவி கதையை சொல்ல தயாரானாள். கிரணும், நந்தாவும் கன்னத்தில் கைவைத்து கொண்டு கதையை கேட்க தயாராகினர். “இந்த ஊர் எங்க உலகம். இங்க இல்லாதது எதுவுமேயில்லை. சரி நேரா கதைக்கு வாறேன். ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆணும் பெண்ணும் ராத்திரி வேலையில ஆத்தாங்கரை பக்கத்திலிருந்த மண் திண்டுல ஒக்காந்து பேசுறது வழக்கம். ரொம்ப நேரம் பேசுவாங்களாம், அவங்க பேசுறதையெல்லாம் வானத்திலிருந்த சந்திரன் ஒட்டு கேட்குமாம். ஒரு நாள் அந்த பெண் தனியா மண் திண்டுல உட்காந்திருந்ததாம். அப்ப வானத்திலிருந்த சந்திரன் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துச்சாம். சந்திரன் ‘என்ன உன்னோட காதலன் இன்னும் வரலையா?’ அந்தப்பெண் ‘ஆமாம் நேத்து அவனோட சண்டை போட்டேன் அதான் இன்னும் வரலைன்னு நினைக்கேன்’. சந்திரன் ‘எதுக்கு அவனோட சண்டை போட்ட?’ அந்தப்பெண் ‘அவரோட வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்திட்டாங்களாம். அவரும் அதை கேட்டுகிட்டு வந்துட்டு என்னை மறந்திடுன்னு சொல்றாரு’ என்று சொல்லிட்டு அழுதாள். சந்திரன் அதற்கு ஒரு தீர்வு சொன்னது. ‘நீ என்னோட உடலுறவு வச்சிகிட்டா அவனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும்’. அந்த பெண் பதில் சொல்லாமல் எழுந்து போயிட்டாள். தினமும் இதே போல் அவள் வருவதும் அவள் காதலன் வராமல் போவதும் சந்திரன் அவாகிட்ட தன்னோட விருப்பத்தை சொல்லுவதுமா கொஞ்ச நாள் போச்சி. ஒரு நாள் அந்தப் பெண்ணும் சரியென்று சந்திரன் சொன்னபடி அத்தாங்கரை மணல் திட்டுல சந்திரனோட உடலுறவு வெச்சிக்கிட்டா. அப்ப சந்திரன் அவ காதில ‘உனக்கு பிறக்கும் முதல் குழந்தை என்னைப் போல வெள்ளையா பிறக்கும்’. சந்திரன் சொன்னபடியே அந்த பெண்ணுக்கு அவள் காதலனோட கல்யாணமானது. அவங்களுக்கு பிறந்த குழந்தையும் சந்திரன் போல் வெள்ளை வெளேர்னு இருந்தது.” என்று நூரி கிழவி கூறிவிட்டு கிரணையும் நந்தாவையும் பார்த்தாள். கிரண் எதுவும் போசாமல் நூரி கிழவியின் கண்களை பார்த்தபடியிருந்தாள்.

நூரி கிழவி கூறியது போல் சந்திரன் வருவான் மலைக்குகைக்கு மூவரும் சென்றனர். மலைக்குகையின் வாசலில் முனிவர்கள் கூட்டம் படுத்து தூங்கிகொண்டிருந்தனர். அவர்களை கடந்து குகையினுள் சென்றனர். இருள் அப்பியிருந்தது. கிரண் “என்ன மனோஜ் இவ்வளவு இருட்டா இருக்கு. இதுல எங்க போய் விவரத்தை தேடுறது.” மனோஜ் “நானும் இந்த குகைக்கு இப்ப தான் வர்றேன். வாங்க அங்க இருக்கிற சாமியார் கிட்ட கேட்போம்.” சாமியார்கள் அவர்கள் தங்களை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். ஒரே ஒரு சாமியார் மட்டும் நகராமல் அங்கேயேயிருந்தார். மனோஜ் “ஏன் அவங்க எங்களை பார்த்ததும் பயந்து ஓடுறாங்க?” “பயந்தாங்கோளி பயக, நீங்க சொல்லுங்க என்ன வேணும்?” “இந்த குகைக்கு யாருமே வரமாட்டாங்களா? “வருவாங்க தம்பி முழு பௌர்ணமி நாள்ல சந்திரன் ஒளியில் இந்த குகையே பிரகாசமா இருக்கும். மித்த நாள் யாரும் வரமாட்டாங்க. நாங்க மட்டும் தான் இருப்போம். காசுயிருந்தா கொடுத்துட்டு போங்க.” என்றார் முனிவர். மனோஜ் பத்து ரூபாய் தர்மம் செய்தான். இனியும் இந்த இடத்திலிருந்து தேவையற்றதென அவர்கள் இடத்தை விட்டு நகர்ந்தனர். கிரண் “நூரி கிழவி கொடுத்திருந்த முதல் பேட்டியிலும் சரி நேற்று கொடுத்த பேட்டியிலும் சரி சந்திரன் பெண்களோடு உடலுறவு கொண்டது முன்பு தான் இப்போது இல்லை என்கிறாரே. இது பற்றி உன்னோட கருத்து என்ன?” என்று மனோஜிடம் கோட்டாள். மனோஜ் “என்னோட கருத்துனு இது வரைக்கும் இல்லை. ஏனென்றால் இந்த ஊரை பத்தி நான் இன்னும் தெளிவா தெரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த ஊர் மக்களை பொறுத்த வரையில் சிலர் சந்திரன் உடலுறவு கொள்வதால் வட்ட வடிவ கறுப்பு மச்சம் வருவதென்றும், சிலர் கடவுள் தான் இதை செய்வதென்றும் சொல்றாங்க. இதில் நூரி சொன்னது இரண்டாவது வகை.” மூவரும் பேசிக்கொண்டே சந்திரனூர் எல்லையை தாண்டியிருந்தனர். கிரண் “இங்க ஒரு ஓட்டு வீடு இருந்ததே, இப்ப எங்க அது?” மனோஜ் “இல்லீங்க, இந்த ஊர் எல்லையை தாண்டி வீடு எதுவும் இருந்ததில்லை. இந்த கல் மண்டபம் தவிர”. நந்தாவும், மனோஜ்ம் இல்லாத ஒன்றை இருந்ததாக கூறியதாக கிரணை கேலி செய்து சிரித்தனர்.

நந்தாவும், கிரணும் செகந்திராபாத் செல்வதற்காக சந்திரனூர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். கிரண் மனோஜிடம் “உங்களோட வேலையையும் ஒத்திவச்சிட்டு எங்களோட சேர்ந்து ஊரை சுத்தி காட்டினதுக்கு நன்றி.” என்றாள் மனோஜ் “நன்றியெல்லாம் தேவையில்லை முடிந்தால் இதுவரையில் நீங்க இரண்டு பேரும் இந்த ஊரை பத்தி தெரிந்து கொண்டதை இ-மெயில் எழுதி அனுப்புங்க. என்னோட ப்ராஜக்ட்ல உங்களோட இ-மெயிலை ரெபரண்ஸா எடுத்துக்குவேன்.” என்று கூறிவிட்டு இ-மெயில் போன் நம்பரை கிரணிடம் கொடுத்தான். கிரண் “நிச்சயமாக அனுப்புகிறேன். எனக்கு அடுத்த வாரம் கல்யாண நிச்சயதார்த்தம். இரண்டு மாதம் கழித்து கல்யாணம். கல்யாண பத்திரிக்கை அனுப்புவேன். கட்டாயம் வரணும்.” மனோஜ் “கண்டிப்பாக வருவேன்”. இரயில் செகந்திராபாத் நோக்கி நகரத்துவங்கியது.

கிரண் நந்தாவிற்கு போன் செய்தாள். கிரண் “நந்தா எல்லாவற்றையும் தெளிவாக யோசித்துவிட்டேன். ஒரே ஒரு கோள்வி மட்டும் என்னிடம் உள்ளது.” நந்தா “என்ன கேள்வி?” “என் அறைக்கதவு எப்படி தானாக திறந்து கொண்டது?” “அதற்கான விடையைத்தான் நாம் இருவரும் அன்று பார்த்தோமே. மறந்துவிட்டாயா நீ? சரி திரும்பவும் சொல்றேன். கதவிலிருந்த கொண்டி தளர்வாகயிருந்ததால் அதாவே மாட்டிய சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலையான கதவு திறந்த நிலையை அடைந்ததை தான் நாம் இருவரும் பார்த்தோமே. பிறகு நீ என்னுடைய அறையிலும்.” “இப்போது நியாபகம் வருகிறது” என்று கூறிவிட்டு மீண்டும் யோசனையில் மூழ்கினாள் கிரண். நந்தா “உன் தொப்புளுக்கு நேராக பின்புறத்தில் பௌர்ணமி நிலவு போல கறுப்பு நிற மச்சம் இருக்கிறதா?” கிரண் “என்ன நந்தா நீங்களும் கேலி செய்றீங்க? நீங்களும் அதை நம்புறீங்களா?” நந்தா “சிவியரா ஒரு இஸ்சு வந்திருச்சின்னா நாம எப்படி டெஸ்ட் பண்ணுவோம். அந்த இஸ்சு வருவதற்கான எல்லா காரணங்களையும் நாம யோசித்து பார்ப்பதில்லை. முதலில் மச்சம் இருக்கான்னு பார். அப்புறம் மனோஜ்க்கு போன் பண்ணி சந்திரனூர் மலைக்கோயிலில் எதும் தகவல் கிடைச்சுதான்னு கேள்”. கிரண் மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என்று சொல்லி செல்போன் இணைப்பை துண்டித்தாள்.

கிரண் கண்ணாடி பிரோவின் முன் நின்று உடைகளை அவிழ்த்தாள். நூற்றி எம்பது டிகிரி சுற்றி நின்று கொண்டு கழுத்தை திருப்பி கண்ணாடியை பார்த்தாள். ஆள் உயர கண்ணாடியில் அவளின் முதுகுப் புறத்தின் பிரதி தெரிந்தது. கறுப்பு நிற இரண்டு சென்டிமீட்டர் பௌர்ணமி நிலவு போன்ற மச்சம் தொப்புல் இருக்கும் இடத்தில் நேர் பின்புறத்தில் இருந்தது.

கிரண் மனோஜ்க்கு போன் செய்து மலைக்குகைக்கு சொன்றன என்று விசாரித்தாள். மனோஜ் “ஆமாம், சென்றிருந்தேன். கல்வெட்டில் ஒரு கவிதை எழுதியிருந்தது.” மனோஜ் அந்தக் கவிதையை சொல்ல கிரண் எழுதிக் கொண்டாள்.

பொழுது சாய்ந்ததும்
உலா வருவான் வானத்தில்
ராட்சஸ ஒற்றை கண்களோடு

காமம் கொண்டவன்
மூர்க்கமானவன்

விட்டுவைப்பதில்லை
எந்த கன்னிகளையும்
ஒரு முறை தான் சுவைப்பான்
ஒருத்தியை
வந்ததும் தெரியாது
சென்றதும் தெரியாது
ஆனாலும்
அவன் விந்து சென்றிடுமே
அவள் கருமுட்டையினுள்
வந்து சென்ற தடமோ விட்டுச்செல்வான்
அவளின் புட்டங்கள்
சந்திக்கும் இடத்தின் மேலே
கறுப்பு நிற பெளர்ணமியாய்

மந்திரக்காரி
ஓட்டு வீட்டுக்காரி
அவன் கை கூலி
காமக்கொடுரன்
சந்திரன்.

டாக்டர் சொல்லியிருந்த தேதியில் கிரணுக்கு வயிற்று வலி வந்தது. கதவை திறந்து கொண்டு டாக்டர் ஜெயராணி வெளியே வந்தார் புன்னகையுடன். “ஆணா? பெண்ணா?” என்று நந்தா, நந்தாவின் மனைவி, மனோஜ் டாக்டரிடம் கேட்டனர். “எதிர்பார்த்ததுதான்” என்று கூறிவிட்டு அவர்களை கடந்து சென்றார் டாக்டர். கிரண் மயக்கத்தில் இருந்தாள். கிரண் கட்டிலின் பக்கத்திலிருந்த தொட்டிலை ஒட்டி மூன்று பேரும் ஆளுக்கு ஒரு புறம் நின்று தொட்டிலினுள் பார்த்தனர். மூன்று பேரும் முகத்தை தூக்கி சிரித்தபடி ஒருவர் மற்றவரை பார்த்துக்கொண்டனர். “சந்திரன் வந்துவிட்டான்” என்று கூறிவிட்டு மூன்று பேரும் தொட்டினுள் தொடுவதற்காக விரல்களை தூக்கிச்சென்றனர்.

--- முற்றும் ---

தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

பார்வைகள்