Thursday, December 31, 2009

பேனா முனை - சிறுகதை

சிறுதூரலாய் பெய்து கொண்டிருக்கும் மழையில் குளிர்ந்த காற்றுடன் கூடிய இரயில் பயணம் மனதிற்கு இதமாகயிருந்தது. இரவு நேர உணவை முடித்துக்கொண்டோர் விளக்கை அணைக்கும் சப்தம் கேட்டது. எனக்கு மட்டும் தூக்கம் வராமல் விளக்கை அணைக்க மனமில்லாமல் இருந்தேன். தினமும் இரவில் டைரி எழுதுவது என் பழக்கம். அதே போல் இன்றும் டைரியின் பக்கங்களை புரட்டிய படி என்ன எழுதுவதென்று யோசித்தேன். சில நிமிட யோசனைக்கு பின் எங்களைப்பற்றி எழுத முடிவு செய்தேன். எங்களை என்றால் என்னையும் மணிமேகலையும் பற்றியது. சிக்னலை கடந்து செல்லும் இரயில் வண்டி ஓ வென்று ஓலமிட்டது. கண்ணாடி ஜன்னல் கம்பிகளில் தேங்கியிருந்த மழைத்துளிகள் வடிந்து மேலிருந்து கீழாக ஜன்னலில் மீது ஊர்ந்து கொண்டிருந்தன. பேனா முனையிலிருந்து கசிந்த நீலநிறமை என் விரல்களின் அசைவில் டைரியின் பக்கங்களில் எழுத்துருக்களை தோற்றுவித்தன.மணிமேகலையை முதன் முதலில் சென்னையிலிருந்து ஹைய்தராபாத் செல்லும் ஹைய்தராபாத் எக்ஸ்பிரஸ்ஸில் சந்தித்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே அமர்ந்திருந்தாள். தமிழ் வார இதழை படித்துக்கொண்டிருந்தவள் செல்போனில் அழைப்பு வர வார இதழை கீழே வைத்து செல்போனில் பேசத்துவங்கினாள். செல்போனில் பேசி முடித்தவள்.

"எங்க வேலை செய்றீங்க?" என்று கேட்டாள்.

"ஜி.ஈல் மெக்கானிகல் இஞ்ஜினேயரா வேலை செய்றேன். நீங்க?"

"ஆரக்கல்ல சாப்ட்வேர் டெஸ்டிங் இஞ்ஜினேயரா இருக்கேன். எங்க தங்கியிருக்கீங்க?"

"கொண்டாபூர், நீங்க?" என்று நானும் அவள் எங்கு தங்கியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அவளும் கூறினாள். தொடர்ந்து பேசினோம். அவளைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. கடப்பா பூர்வீகமென்றாலும் அம்மா மூலமாக தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொண்டதாக கூறினாள். அம்மாவின் அக்கா சென்னையிலிருப்பதாகவும் அவர்களை பார்க்க சென்னை வந்ததாகவும் கூறினாள். நேரம் தெரியாமல் சென்ற எங்களின் உரையாடல் இனிமையாகயிருந்தது.

"ரொம்ப பசிக்குது, சாப்பிடலாமா?"

"நீங்க சாப்பிடுங்க, அடுத்த ஸ்டேசன்ல டிபன் எதாவது கிடைச்சா சாப்பிடணும்"

"மணி இப்பவே ஒன்பது. அடுத்த ஸ்டேசன் பதினோரு மணிக்கு வரும். அங்கேயும் டிபன் கிடைக்காது. வாங்க என்னோட சாப்பாட சேர் பண்ணிக்கலாம். ரொம்ப காரம் இருக்காது" என்றவள் வீட்டில் அவளே சமைத்து எடுத்து வந்திருந்த வஞ்சிரம் மீன் குழம்பையும் இறால் வருவலையும் எனக்கு கொடுத்தாள். நன்றாக சமைத்திருந்தாள். அவள் சமையலை பற்றி பாராட்டிய போதும் பதிலேதும் கூறாமல் குனிந்த தலையுடன் புன்னகை புரிந்த படி சாப்பிட்டாள்.படுக்கையில் படுத்து நெடுநேரம் ஆன பின்பும் தூக்கம் வராமல் மணிமேகலையை பற்றியே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மணிமேகலை நல்ல தமிழ் பெயர். ஓவியம் வரைபவள், பூக்கள் வளர்ப்பவள், குழந்தைகளை கொண்டாடுபவள், ஆதரவற்றோர்க்கு உதவுபவள், ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதிலளிப்பவள், அழகானவள். நிச்சயம் இவளை திருமணம் செய்து கொள்பவன் கொடுத்து வைத்தவன்.நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது மணிமேகலை பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள்.

"நைட் நல்லா தூங்குனீங்களா? டீ சாப்பிடுறீங்களா?" என்று என்னிடம் கேட்டவள் தேநீர் விற்பவனை அழைத்தாள். நேற்று மாலை முதல் தடவை சந்தித்த ஒருவனிடம் ஒரு பெண் இவ்வளவு அன்பு காட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுள் வெகுநேரமாக அவளிடம் கேட்க எண்ணியிருந்த கேள்வியை கேட்டேன்.

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"இதோ டீ எடுத்துக்கோங்க" என்று தேநீர் விற்பவனிடமிருந்து தேநீரை வாங்கி தந்தாள். "கல்யாணம் ஆயிடுச்சி" என்றாள்.

"உங்க கணவர் எங்க இருக்கார்?"

"கீழ, பூமிக்கடியில்" என்று சொன்னது அவள் கணவர் இப்போது இல்லை என்று தெரிந்தது. மெட்டியில்லாத அவள் கால் விரல்களையும், தாலியில்லாத கழுத்தையும் பார்த்து நான் கேட்ட கேள்வி ஏன் இப்படியொரு கஸ்டப்படுத்தும் கேள்வியை அவளிடம் கேட்டேனென்று என்னையே திட்டிக்கொண்டேன்.

"ஆபிஸ்க்கு போகும் போது சாலை விபத்தில இறந்திட்டார். அவர் சரியாத்தான் டூவீலர்ல போயிருக்கார் எதிரே வந்த லாரிக்காரன் அறிவு கெட்டதனமா அவர் மேல மோதிட்டான். ரொம்ப அன்பானவர். என்னை நல்லா பார்த்துட்டார். ஆக்சிடண்ட் ஆன பிறகு ஒரு வாரம் கோமாவில் இருந்தார். அந்த ஒரு வாரத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவருடன் வாழ்ந்த சந்தோசமான நினைவுகளை நினைத்து கொண்டிருந்தேன். அவர் உயிர் பிரிந்த அடுத்த நாள் என் வயிற்றிலிருந்த மூன்று மாத கருவும் கலைந்தது. அன்று முதல் நான் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கை தூள் தூளானது. கஸ்ட காலத்தில் ஒருவனுக்கு உதவாத கடவுள் என்ன கடவுள்" தொடர்ந்து பேச முடியாதவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணிரை கைகுட்டையால் துடைத்தாள்.

நிலைகுத்தியபடி சன்னலின் வழி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நாளைக்கு என்னுடைய கணவருக்கு திதி. அவர் இறந்து ஜந்து வருடமாகுது. ஒவ்வொரு வருடம் திதிக்கு வரும் சொந்தக்காரங்க என்னை எத்தனை நாள் தனியாவே இருப்ப, நல்ல பையனா பார்த்து இன்னொரு கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றாங்களே தவிர அவங்க பசங்கள கட்டித்தர முன்வர மாட்டிக்காங்க. இந்த உலகத்தை பொருத்த வரை மத்தவங்களுக்கு உபதேசம் சொல்லவும் அனுதாபப்படவும் தான் தெரியும் முன்ன வந்து உதவி செய்ய எவனுக்கும் தைரியம் கிடையாது"

"உங்களுக்கு இன்னொரு கல்யாணத்துக்கு விருப்பமிருந்தால் இண்டர்நெட் வெட்டிங் போர்ட்டல்ல விளம்பரம் செய்ங்க. நல்ல வரன் கிடைக்க வாய்ப்பிருக்கு" என்றேன்.

"ரிஜிஸ்டர் செய்திருக்கேன். பார்ப்போம் எப்போ நல்ல வரன் கிடைக்குதுன்னு"

இரயில் செகந்திராபாத் ஸ்டேசனை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் அவள் மீது வைத்திருந்த அன்பை, காதலை நேரடியாக சொல்ல மனமில்லாமல் அவளின் இ-மெயில் ஜடியும் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டேன். என் மனமெங்கும் நிறைந்திருந்தால் மணிமேகலை.

டைரியை மூடிவிட்டு தூங்கினேன். முழித்துபார்க்கையில் இரயில் சென்னை சென்ட்ரல் வந்திருந்தது.இரயில் நிலையத்திற்கு வந்திருந்த அப்பா சோகமாக இருந்தார். "பொண்ணு வீட்ல போட்டோ பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க"

"பிடிச்சிருக்குன்னு சொன்னவங்களுக்கு இப்ப எதுக்கு பிடிக்கலையாம்"

"பொண்ணு உன் போட்டோவை சரியா பார்க்கலையாம்"

"அவளுக்கென்ன அபிசேக்பச்சன் மாதிரி மாப்பிளை வேணுமாமா. பிடிக்கலைன்னு முன்னாடியே சொல்லி தொலைஞ்சிருந்தா ஹைய்தராபாத்லே இருந்திருப்பேன். பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு இப்ப பாருங்க வீணா ஆயிரம் ரூபாய் டிரையின் செலவு"

"சரி, கோபப்படாத விட்டுத்தள்ளு இவா இல்லைன்னா என்ன வேறொரு நல்ல பொண்ணு கிடைக்கும்"

மூன்று தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதற்குள் எனக்கு முப்பத்திரெண்டு வயதானது. அதற்குள் தலைமுடி எல்லாம் உதிர்ந்து தலையில் வழுக்கை விழுந்தாயிற்று. சோடாபுட்டி கண்ணாடியும், தெத்துப்பல்லும், வயதான தோற்றத்துடன் இருக்கும் என்னை யார் திருமணம் செய்து கொள்ள முன் வருவார். இந்த பொண்ணும் என்னை தட்டி கழித்தது உலகத்தின் மீதான என் கோபம் இன்னும் அதிகமாகிறது. மணிமேகலை போன்ற என் பேனா முனை கற்பனை கதாபாத்திரங்களை தேடி என் சிவந்த கண்கள் இரயில் நிலையத்தை சுற்றி திரிகின்றன.

- முற்றும் -

- கிரகம்.

செம்மொழி பைந்தமிழ் மன்றம் வழங்கும் சிறுகதை பரிசுப்போட்டிக்காக எழுதிய கதை

http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Sunday, December 20, 2009

வல்லினம் இலக்கிய இதழில் 7 சிறுகதைகள்

வல்லினம் டிசம்பர் 2009 மாத இதழில் 7 சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

1. அவள் நான் அவர்கள்
- மா.சண்முக சிவா

மருத்துவமனைக்கு வந்திருக்கும் தமிழ் பேசும் பெண்ணை சேர்க்க மறுப்பதாக நர்ஸ் துர்க்காபாய் டாக்டர் சிவாவிடம் கூறுகிறாள். துர்க்காபாய் தமிழ் பேசும் சீனப்பெண். தமிழ் பேசும் நபர்களை பார்த்தால் நட்புடன் பழகுபவள். டாக்டர் சிவா துர்க்காபாய் சொன்னது யார் என்று பார்க்க செல்கிறார். டாக்டர் செரினா தன் வார்டில் எல்லாம் பூர்த்தியாகி விட்டதென்றும் வேண்டுமென்றால் இவளை உங்கள் வார்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள். டாக்டர் சிவா தினேஸ்வரி என்ற பனிரெண்டு வயது பெண்ணை தன்னுடைய வார்டில் சேர்த்துக்கொள்கிறார்.

ஸ்கேன் செய்து பார்த்த பின் தினேஸ்வரியின் வயிற்றில் 14 வார குழந்தை இருப்பது தெரிகிறது. டாக்டர் செரினா இந்த செய்தியை கேட்டு கொதிப்படைகிறாள். டாக்டர் சிவா தினேஸ்வரியிடம் இதைப்பற்றி விசாரிக்கிறார். தன் கற்பத்திற்கு யார் காரணமென்று சொல்ல மறுக்கிறாள் தினேஸ்வரி. தினேஸ்வரியை தேடிக்கொண்டு அவளின் அம்மா மருத்துவமனைக்கு வருகிறாள். குடும்ப சூழ்நிலையின் காரணமாகத்தான் தினேஸ்வரியை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பியதாக சொல்கிறாள். தினேஸ்வரியின் அப்பா ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருப்பதாகவும் பாதுகாப்பிற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கையில் வைத்திருக்கும் குழந்தை அவருக்கு பிறந்ததென்றும் சொல்கிறாள். இது பற்றிய விவரம் இரண்டாவது கணவருக்கு தெரிந்தால் தன்னையும் தினேஸ்வரியையும் கொன்றுவிடுவார் என்றும் அதனால் தினேஸ்வரியை ஆஸ்பத்திரியிலே வைத்து பார்த்துக்கொள்ள சொல்கிறாள். சென்றவள் மீண்டும் தினேஸ்வரியை பார்க்க வரவில்லை. தினேஸ்வரியும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தினேஸ்வரியை பற்றி விவரம் பத்திரிக்கைகளுக்கு தெரியவருகிறது. மந்திரிகள் வருகின்றனர். மகளிர் அணித்தலைவி வருகிறாள் புகைப்படக்காரர்களுடன் வந்து போட்டோ எடுத்துச் செல்கிறாள். ஏதோ ஒரு கூட்டம் வந்து தினேஸ்வரிக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்துப்பெயர் வைக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் டாக்டர் செரினா "இப்படியெல்லாம் செய்தால் அவளின் மனநிலை பாதிக்கப்பாடாதா?" என்று கவலையடைகிறாள்.

சில நாள்களில் தினேஸ்வரிக்கு ஆஸ்பத்திரி நன்கு பழக்கப்பட்ட இடமாகிறது. ஆஸ்பத்திரியின் எல்லா வேலைகளையும் செய்கிறாள். வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அவளைப் பாக்கும் ஒவ்வொருவரும் ஒருவிதமாக பார்க்கின்றனர். டாக்டர் சிவா வேலைக்காரணமாக வெளியூர் செல்வதால் துர்க்காபாயிடம் கொஞ்சம் பணம் கொடுத்து தினேஸ்வரியை பார்த்துக்கொள்ள சொல்கிறார். குழந்தை பிறந்த பிறகு தினேஸ்வரியை ஆஸ்பத்தியிலிருந்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். துர்க்காபாய் டாக்டர் சிவாவிற்கு போன் செய்து தினேஸ்வரியும் குழந்தையும் காணாமற்போன செய்தியை சொல்கிறாள். பதறிப்போன டாக்டர் சிவா ஆதரவற்றோர் இல்லத்திற்கு இதை பற்றி விசாரிக்க துர்க்காபாயுடன் செல்கிறார். டாக்டர் சிவா தனக்கு தெரிந்த போலீசார் மேலதிகாரிகளை கொண்டு தினேஸ்வரியை தேடிக்கண்டுபிடிக்க போவதாக ஆதரவற்றோர் இல்லத்தின் மேலதிகாரியிடம் கூறுகிறார். தினேஸ்வரியை விசாரித்துவிட்டு திரும்பும் போது துர்க்காபாய் தினேஸ்வரியை தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் போலீசிற்கு போக வேண்டாமென்றும் டாக்டர் சிவாவிடம் கேட்டுக்கொள்கிறாள். தன்மீது சந்தேகம் வராமலிருக்கத்தான் டாக்டரை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச்சொன்றதாகவும் கூறுகிறாள். ஒண்டிக்கட்டையான தனக்கு தினேஸ்வரி இனி பிள்ளையென்று கூறுகிறாள். கதை முடிகிறது.

கதையின் நடை இயல்பாக அமைந்திருப்பது கதையின் சிறப்பு. மிதமான வேகத்தில் செல்லும் கதையின் முடிவில் சின்னதொரு திரும்பம்.

இதைத்தவிர,

2. கருப்பண்ணன் - சு.யுவராஜன்

3. ராதா, எண்7, இருபத்தி நான்காவது மாடி - முனீஸ்வரன்

4. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன்

5. கார்ட்டூன் வரைபனின் கதை - ம.நவீன்

6. நீலக்கடல் மீது பாவும் நீல கண்டப்பறவைகள் - கோ.முனியாண்டி

7. சிகப்பு விளக்கு - என்னுடைய சிறுகதையும் வெளியாகியுள்ளது.

வல்லினம் மாத இணைய இதழில் கவிதைகள், கட்டுரைகள், புத்தக பகிர்வு, நூல் வெளியீடு என்று எல்லா தளங்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளது. வலைப்பதிவர்கள், வாசகர்கள் உங்களின் கருத்துகளையும் படைப்புகளையும் வல்லினம் இதழுக்கு அளியுங்கள்.

வல்லினம் இதழ் பற்றி முழுவிவரம் அறிய இந்த லிங்கிற்க்கு சொல்லுங்கள். http://www.vallinam.com.my/

Monday, November 9, 2009

காமம் வழிந்தோடும் உடல்

*
சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் கதாநாயகியான சாவித்ரி.

ஆந்திரமாநிலம், கர்னூல் ரயில் நிலையம்.

இரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை. இரண்டு, மூன்று பேர் சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். டீ விற்பவன் நடைமேடையில் "சாயா, சாயா" என்று கூவிக்கொண்டிருந்தான். ஹைதராபாத்திலிருந்து சென்னை எக்மோர் செல்லும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் நடைமேடை ஐந்திற்கு வந்தது. சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள், நடைமேடையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் காச்சிகுடா எக்ஸ்பிரஸ்ஸில் எறிக்கொண்டனர்.நடைமேடை ஐந்தில் எங்கள் இருவரை தவிர வேறுயாருமில்லை.

"என்ன முடிவு செஞ்சிருக்க?" என்று கேட்டான் வசந்த்.

"இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள். எப்படியும் அப்பாவிடமிருந்து சம்மதம் வாங்கிடுவேன்" என்றேன்.

"எனக்கு நம்பிக்கையில்லை. இந்த டிசம்பர் வந்தால் மூன்று வருடம் முடிந்துவிடும் உன் அப்பாவின் சம்மதத்திற்கு நாம் காத்திருப்பது. ஒன்றை இலக்காமல் ஒன்றை பெறமுடியாது. எழுத்தாளர் சுஜாதா அவருடைய பல நாவல்களில் இதை கூறியுள்ளார். வீட்டில் சொல்லாமல் நாளை இதே நேரம் இங்கேவா ஹைய்தராபாத் செல்வோம். கைநிறைய சம்பாதிக்கிறேன் உன்னை மகாராணி போல் வைத்துக்கொள்வேன்" என்றான்.

என் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழுந்தது.

"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பதிலேதும் கூறாமல் தலையை இடது வலது புறமாக ஆட்டினேன்.

**
சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் கதாநாயகன் வசந்த்.

கண் விழித்துப்பார்த்தேன். சாவித்ரி போர்வைக்குள் தூங்கிக்கொண்டிருந்தாள். போர்வையை மெதுவாய் விலக்கினேன். அவள் நிர்வாணமாக கிடந்தாள். ஜன்னல் கம்பியின் நிழல்கள் அவள் உடல் மீது கறுப்பு கோடுகள் இட்டிருந்தன, என் விரல் அவளின் நெற்றியிலிருந்து தொடங்கியது ஒரு நேர்கோட்டினை, புருவம், பிளவுட்டிருந்த உதடுகள், மார்புக்குழி, தொப்புள் இறுதியாக பிறப்புறுப்பில் முடிந்தது நான் வரைந்த நேர்கோடு. ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவள் கண்முழித்தாள் நேர்கோடு முடியும் தருணத்தில்.

சாவித்ரி இப்போது சந்தோஸமாக இருக்கிறாள். இங்கு வந்த பின் சாவித்ரி ஒரு நாளும் அழுததில்லை.

நான் அலுவலகம் சென்ற பின் என் லைப்ரரிக்கு சென்று புத்தகம் படிக்கிறாள். ஆங்கில நாளிதழ் படித்து நாட்டு நடப்பு பற்றி என்னுடன் விவாதிக்கிறாள். சாவித்ரிக்காக இத்தனை வருடம் காத்திருந்தது வீணாய் போன நேரங்கள் அல்ல என்று உணர்கிறேன்.

ஹைய்தராபாத் பிலிம் கிளப்பில் திரையிட்டிருந்த "தி ரீடர்" திரைப்படம் பார்க்க அழைத்துச்சென்றேன், திரைப்படமானது 35 வயதான பெண்ணிக்கும் 17 வயதான இளைங்கனுக்குமான உறவை பற்றிய படம்.

"சாவித்ரி, படம் பிடிச்சிருக்கா?"

"இன்றிறவு படத்தின் சில காட்சிகளை நாம் செய்து பார்க்க போகிறோம்" என்றாள்.

படுக்கை அறை, படிக்கும் அளவு வெளிச்சம், என் மடியில் சாவித்ரி படுத்திருக்கிறாள். நான் அழகான காதல் கதையை படிக்கிறேன். காதில் கேட்ட காமம் சொட்டும் வரிகளால் காமம் வழிந்தோடியது அவள் உடலில்.

உடலுறவிலிருந்த போது அவள் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழுந்தது.

""ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

பதிலேதும் கூறாமல் தலையை இடது வலது புறமாக ஆட்டினாள். தூக்கம் வருவது போலிருந்தது. சிறிது நேரத்தில் கண்மூடி தூங்கினேன்.

***

சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் ஆசிரியர்.

ஆந்திரமாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய வீடு.

காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டு கதவை திறந்தால் சாவித்ரி.

"சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் சாவித்ரி.

பதில் கூறாது படுக்கையறை சென்று உடைமாற்றிக்கொண்டு டிவியின் முன் அமர்ந்தான்.

"ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டாள் சாவித்ரி.

டிவியை பார்த்துக்கொண்டிருந்தவனிடமிருந்து பதில் ஏதுமில்லை.

டிவியை பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து படுக்கச்சென்றான்.

நடுராத்திரி, திறந்த ஜன்னல் வழியே பார்த்தால் நிலவின் முழுமுகம் தெரியும்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சாவித்ரியை எழுப்பி அவளின் விருப்பமில்லாமலே உடலுறவு கொண்டான். உடலுறவுக்கு பின் அவளின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழிந்தது.

பாம்பே நோக்கி சாவித்ரி பேருந்து பயணத்திலிருந்தாள். ஆங்கில நாளிதழின் பக்கங்களை திருப்பிக்கொண்டிருந்தாள். அவளை பற்றிய கட்டுரை நாளிதழில் வந்திருந்தது. அவளுக்கு நேற்றைய இரவைப்பற்றிய நினைவு வந்தது.

"ஏன் அழுகிறாய்" என்று கேட்டான் அரவிந்த்.

சாவித்ரி சற்று நேரம் மெளனமாகயிருந்தாள்.

"நான் ஒருவரை விட்டு பிரிந்து செல்லும் போது அவர்களை கொன்று விடுவது வழக்கம். நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள் மரணத்திற்கு முன்பே மரணத்தின் கண்ணீரை பார்க்க கொடுத்து வைத்தவர்கள். இதுவும் கொலைபுரிதலின் புதிய முயற்சி" என்றாள்.

அரவிந்த் "ஆ" என்று அலறினான். அவனின் மூச்சு மெல்ல மெல்ல உடலை விட்டு பிரிந்து கொண்டிருந்தது.

-முற்றும்-

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Tuesday, October 27, 2009

சைதாப்பேட்டையிலிருந்து நீலாங்கரை வரை

“அக்கா, ஆபீஸ்; போயிட்டு வர்றேன்” என்று அக்கா மாலாவிடம் கூறினான் சுப்ரமணியம். “கோயிலுக்கு போயிட்டு ஆபீஸ்க்கு போடா” என்றாள் மாலா. சுப்ரமணியம் சென்னைக்கு புதுசு அவனது சொந்த ஊர் வு.கல்லுப்பட்டி, மதுரைக்கு அருகில் உள்ளது. படித்தது தியாகராஜா பொறியியல் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு முடியும் முன்னரே கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. இன்று தான் அவன் அலுவலகம் செல்லும் முதல் நாள். “மச்சான்கிட்ட சொல்லிடு” என்று அக்கா மாலாவிடம் கூறிவிட்டு காரணீஸ்வரர் கோவிலை நோக்கி நடந்தான். சென்னைக்கு புதியவன் என்பதால் கண்ணில் பார்க்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மனதில் அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தான்.

பெண் ஒருத்தி அவள் வீட்டு வாசலின் முன்னே ஊசிப்போன சாம்பாரை கொட்டினாள். சாம்பார் கொட்டிய வேகத்தில் அங்கு சேர்த்து வைத்திருந்த குப்பைகள் கலையத்துவங்கின. அதை குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவன் பார்த்துவிட “ஏம்மா, இப்படி செய்ற, பெருக்கிவச்ச குப்பையெல்லாம் பறக்குதல்ல” என்றான் தொடர்ந்து பேசத்துவங்கினான். “ஏம்மா இது உன் வூடுதான, நீயே அசிங்கம் பண்ற” என்று கூறினான். அவள் “போப்பா நீ பெரிசா பேச வந்துட்ட, இது ஒண்ணும் என் வூடு இல்ல, நாங்க வாடகைக்குதான் இருக்கோம்”. குப்பைக்காரன் ஏதும் பேசாமல் சாம்பார் கொட்டிய குப்பைகளை அள்ளி வண்டியில் போட்டுக் கொண்டான்.

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகளை கும்பிட்டு உள்ளே சென்றான். மணி, சாமியை தரிசித்த பின் கோவிலைவிட்டு வெளியே வந்தான் மணி. பிச்சைக்காரர்கள் அனைவரும் கையில் திருவோடுடன் கோவிலின் வெளியே அமர்ந்திருந்தனர். அவனுக்கு ஒரு பிச்சைக்காரனை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. கைகள் இரண்டு, கண்கள், காது நன்றாகத்தானே இருக்கிறது. இவன் ஏன் பிச்சை எடுக்கிறான்? கையை மணி முன் நீட்டியபடி வாயிலிருந்து வழியும் வெற்றிலைபாக்கு எச்சியை குப்பியில் துப்பினான் அந்த பிச்சைக்காரன்.

வழியில் சிலர் புகைபிடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் பூட்டிய கடையின் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் கழுத்தில் டேக் அணிந்திருந்தனர் அவர்கள் ஜாடையில் வட இந்திய பெண்கள் போல் இருந்தார்கள். மணி அவர்களை பார்த்ததும் அவனுக்குள் உற்சாகம் உண்டானது. பின்னாலிருந்து பார்த்த அவனுக்கு அவர்கள் முகங்களை பார்க்க வேண்டும்போல் இருந்தது. அந்த பெண்கள் மூக்கில் துப்பட்டாவை வைத்து மூடிக் கொண்டு முகமூடி கொள்ளையர்கள் போல் இருந்தனர். மணி அந்த துப்பட்டா முகங்களை பார்த்த படியே முன்னேறிச் சென்றான். பாலத்தின் படிகளில ஏறும்போது ஒருவித கெட்டவாடை காற்றில் கலந்திருப்பதை உணர்ந்தான். அவனும் கைகுட்டையால் மூக்கை பொத்திக் கொண்டு படிகளின் மீது ஏறினான். காய்கறி மார்க்கெட்டின் குப்பைத் தொட்டியில் அதன் கொள்ளவைவிட மூன்று மடங்கு குப்பை கொட்டப்பட்டிருந்தது. பசுமாடு அந்த குப்பையில் மேய்ந்து கொண்டிருந்தது. ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அந்த குப்பைத் தொட்டியில் மூச்சாபோனான். குப்பைத் தொட்டி மார்க்கெட்டின் நுழைவாயிலில் இருந்தது. வாடையையும் பொருட்படுத்தாது நுழைவாயிலில் கடைபோட்டு சிலர் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டே மணி சற்றுதூரம் நடந்தான். அந்த பெண்களின் முகத்தில் சற்று நேரத்திற்கு பிறகு முகமூடியில்லை. அந்த பெண்களின் முகத்தை பார்த்து மணி நிச்சயம் அசந்து போயிருப்பான். ஒவ்வொரு முகமும் அழகாக இருந்தது. ஒருத்தி நெற்றியிலும் பொட்டு இல்லை. திருநீரு இல்லை. தலையில் பூ இல்லை ஆனாலும் அந்த பெண்கள் அழகாகத்தான் இருந்தார்கள். சற்று தூரத்துக்கு பின் அவர்கள் வேறொரு பாதையில் பிரிந்து சென்றார்கள்.

பனகல் மாளிகையை ஓட்டிய பெடஸ்டிரியன் பாத்வேயில் நின்று கொண்டிருந்தான் மணி. சிக்னல் இல்லாததால் போலீஸ் ஒருவர் நின்றிருந்தார். போலீஸ் கைகளை உயர்த்தி வாகனங்களை நிறுத்தினார். மணி சைதாப்பேட்டை பஸ்டாண்டை வந்தடைந்தான். அவன் மச்சான் கூறியது நினைவுக்கு வந்தது. “19பு, PP49 பஸ் அடிக்கடி கிடையாது, துரூ பஸ்க்கு வெய்ட் பண்ணாம அடையார் டிப்போ இல்ல திருவான்மியூர் போயிடு அங்கியிருந்து நீலாங்கரைக்கு ஷேர் ஆட்டோ நிறையா இருக்கு”. அய்யோ! அடையார் டிப்போ இல்ல திருவான்மியூர் போற பஸ் நம்பர்கேட்க மறந்துட்டேனே! யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் நடந்து கொண்டிருந்தான். காக்கி சட்டை காக்கி பேண்டிலிருந்து ஊழியர் ஒருவரிடம் சென்று கேட்டான். அவர் “தோ இங்கதாம்ப்பா வரும்”. “என்ன நம்பர்? ” “19பு, PP49 பஸ் எல்லாம் போகும்” என்றான். அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் அந்த ஊழியர் அந்த இடத்தில் இல்லை. மீண்டும் தயக்கத்துடன் நின்றிருந்தான்.
ஐந்து பேர் பயணிகள் நிற்குமிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். மேலும் மூன்று பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அந்த மூவரும் இப்போது தான் அந்த இடத்திலிருந்து தூங்கி எழுந்தவர்கள் போல் இருந்தனர். அவர்கள் தலையில் மற்றும் சீலையில் படிந்திருந்த அழுக்கு தூரத்திலிருந்த மணிக்கே தெரிந்தது. நாய் ஒன்றும் இந்த கூட்டத்தில் அடங்கும்.

யாரோ கத்துவது போல் சத்தம் கேட்டது. அந்த சத்தம் மனிதர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டிருந்தது. சத்தம் வந்த இடத்தில் பயணிகள் கூட்டம் கூடியிருந்தது. பெரியவர் தலை கூட்டத்தின் நடுவில் இருப்பது அவனுக்கு தென்பட்டது. என்னவென்று பார்க்க கூட்டத்தை நோக்கி நடந்தான் மணி. சுகப்பிரசவம் என்று கூட்டத்தை பார்த்துக் கூறினார் பெரியவர். அவரது கைகளை பார்த்த போது ஆட்டுக்குட்டி ஒன்றை வைத்திருந்தார். ஆட்டுக்குட்டியை தாய் ஆடுவின் முகத்தின் முன் நீட்டினார் பெரியவர். தாய் ஆடு ஆட்டுக்குட்டியை நக்கத் துவங்கியது. கூட்டத்திலிருந்து கரவொளி கேட்டது. பிரசவ இடத்தை சுற்றி மேலும் பயணிகள் கூட்டம் கூடியது. மாட்டு ஆஸ்பத்திரியைத்தான் பஸ் ஸ்டாண்டாக மாற்றிவிட்டார்கள் என்று எண்ணினான்.

42யு ஐ.சி.எப் லிருந்து திருவான்மியூர் வரை என்று போர்டு போட்ட பஸ்ஸில் ஏறினான் மணி. சொகுசுப்பேருந்து என்பதால் இருக்கைகள் மற்ற பஸ்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. ஒரே ஒரு இருக்கை மட்டும் காலியாகியிருந்தது. அதன் பக்கத்து இருக்கையில் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். காலியான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் மணி. அந்தப் பெண் காதில் வாக்மேன் மாட்டிக் கொண்டு ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இரு காதிலும் இரண்டு சென்டிமீட்டர் தூரத்தில் பிரவுன் கலர் வளையம் தொங்கியது. மூக்கில் வட்ட வடிவ மூக்குத்தி குத்தியிருந்தாள். மணி ஏழு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டான்.

பேருந்தில் பிட்நோட்டீஸ் ஒட்டியிருந்தது அவன் கண்களில் பட்டது. அதை வாசித்து பார்த்தான் உழைப்பு, உயர்வு என்று ஆரம்பத்தில் எழுதியிருந்தது. அதனை அடுத்து ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிப்போர்க்கு ஓர் அரியவாய்ப்பு. படிப்பு தேவையில்லை, நேர்மை தான் முக்கியம் என்று எழுதியிருந்தது. மணி கணக்கு போட்டு பார்க்கையில் அவன் சம்பளத்தை விட இதில் கிடைக்கும் மாத வருமானம் அதிகம் போல் தெரிந்தது.

டிரைவர் விண்டோ மிரரை பார்த்துவிட்டு “ஏய் மேல ஏறு டோரை சாத்தப்போறேன்”. சிலர் அவர் பேச்சை கண்டு கொள்ளாமல் டோர் கம்பிகளை பிடித்து தொங்கிக்கொண்டே இருந்தனர். அவர் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே வந்தார். டிரைவர் டோரை லாக் செய்தார். ஒருவன் மட்டும் பஸ்ஸின் வெளியே தள்ளப்பட்டு. டோர் கம்பிகளை பிடித்து தொத்திக் கொண்டு கத்தினான். “யோவ்! யோவ்! நிறுத்துயா” என்று கத்தினான். டிரைவர் பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தி டோரை திறந்தார். சற்று நேரம் டோரில் தொங்கிய கூட்டத்தினருக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றுப் பெறாமலே டிரைவர் பஸ்ஸை ஆன் செய்தார்.

சின்னமலையில் சிலர் ஏறினர். ஒருவன் மணி முன்னே வந்து கையை நீட்டினான். டீக்கெட் செக்கர் என்று நினைத்துக் கொண்டு பாக்கெட்டிலிருந்து டிக்கெட்டை எடுத்து நீட்டினான். பதிலுக்கு அவன் சிரித்தபடியே “நான் செக்கர் இல்ல” “வேற என்ன வேணும்”? “உங்க இடம்…. இவங்க என் தோழி கொஞ்சம் பேசணும்” மணி எழுந்து நின்றான். அந்தப் பெண் புதிதாய் அருகில் அமர்ந்தவனை பார்த்து முறைத்தாள். “சாரிமா, நேத்து சாயங்காலம் படத்துக்கு வரமுடியாம போச்சு” என்றான். அவள் ஏதும் பேசாமல் ரோட்டை வேடிக்கை பாhத்துக் கொண்டிருந்தாள். “சாரி, சாரி” என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு கூறினான். அவள் கைகளை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். அவன் விடாது அவள் தொடைகளை தடவியவாறு “சாரி, சாரி” என்று கூறிக் கொண்டேயிருந்தான். எதிர்பாராத போது “பளார்” என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். பஸ்ஸில் ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. அடிவாங்கியவன் கன்னத்தை தடவிக் கொண்டே சற்றும் முற்றும் பார்க்கையில் எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். “அப்புறம் ஏண்டா போன் பண்ணல, இரண்டு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருந்தேன். என்ன வேற வெலோடவாவது சுத்திக்கிட்டிருந்தியா” என்று கேட்டாள் அவள், “இல்லடா, நேத்துபாத்து மேனேஜர் பயலீவு தரமாட்டேனுட்டான். போன் பண்ணி உனக்கு சொல்லலாம்னு பார்த்தா பேட்டரி டவுண். இத புரிஞ்சிக்காம அடிச்சிட்டியே லதா”. “உன் பேச்ச நம்பலாமா”. “லதா நீ வேணா எங்க மேனேஜருக்கு போன் செய்து கேட்டுக்கோயேன்”.

பஸ் ஊடுசுஐ சிக்னலில் நின்று கொண்டிருந்தது. கேன்சர் இன்ஸ்டியூட் வாசலில் பெண் ஒருத்தி லெமன் சாதம், புளியோதரை விற்றுக் கொண்டிருந்தாள். ஊடுசுஐ சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தது. பஸ் சீராக அதன் வேகத்தை அதிகப்படுத்தி சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் இப்போது அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். பஸ் அடையார் டிப்போவை அடைந்தவுடன் டோரில் தொங்கிய கூட்டம் கீழே இறங்கியது. டோரில் தொங்கியவன் பெரிய கருங்கல்லை எடுத்து டிரைவர் சீட் கண்ணாடி வழியே உள்ளே எறிந்தான். டிரைவர் அதிர்ஷடவசமாக தலையை கீழே குனிந்து கொள்ள, டிரைவரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த லதாவின் நேத்தியில வந்து விழுந்தது கல். ஒரு சிலர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி எறிந்தவனை துரத்தியது. நெத்தியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. துப்பட்டாவால் லதாவின் நெத்தியில் கட்டு கட்டி அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான அருகில் அமர்ந்திருந்தவன். சற்று நேர பரபரப்புக்கு பின் பஸ் அடையார் டிப்போவிலிருந்து புறப்பட்டது.

பஸ் திருவான்மியூர் டிப்போவை அடைந்தவுடன், சேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான் மணி. ஆட்டோ டிரைவர் வாயில் ஜர்தா போட்டுக் கொண்டு மென்று கொண்டிருந்தான். ஜர்தா எச்சியை ரோட்டில் துப்பினான். ஆட்டோ மருந்தீஸ்வரர் கோவிலை தாண்டி சென்று கொண்டிருந்தது. ஒரே நாளில் பகல் பொழுதில் நடந்த இத்தனை நிகழ்வுகள் அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நடந்த நிகழ்வுகளில் தனக்கு ஒன்றும் ஆகவில்லை அது வரையில் சந்தோஷம்தான். ஆட்டோகாரன் வழி நெடுக எச்சை துப்பிக் கொண்டே வண்டி ஓட்டினான். மணி கடிகாரத்தை பார்த்தான் பத்து முப்பது என்று காட்டியது. “அய்யோ நேரமாயிடுச்சே கொஞ்சம் சீக்கிரம் போங்க” என்றான் மணி. ஆட்டோகாரன் சரியாக காதில்விழாமல் “என்ன சார்”? என்று திரும்பி கேட்கையில் வாயிலிருந்த எச்சின் ஒரு பகுதி மணி சட்டையில் விழுந்தது. “சாரி, சாரி……. தண்ணி தாரேன் துடைச்சிக்கோங்க”. “வேணாம்பா முன்னாடி பார்த்து வண்டிய ஒட்டு” என்று கூறிவிட்டு கைகுட்டையால் அந்த இடத்தை துடைத்ததும் வட்டமாக அந்த கறை பரவியது. நீலாங்கரை நிறுத்தத்தில் இறங்கி சில்லரை கொடுக்கும்போது ஆட்டோக்காரனை முறைத்துக் கொண்டே நின்றான் மணி.

Monday, October 19, 2009

கிணற்றில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்

காத்திருந்தேன்
தீபாவளியை எதிர்பார்த்து
காத்திருந்தேன்
ஒரு மாதத்திற்கு முன்பே புக் செய்த
இரயில் வண்டி டிக்கெட்டை பார்க்கும் போது

விநாயகர் சதுர்த்தி வந்தது
விஜயதசமி வந்தது
தீபாவளி எப்போது வரும்?

நாள்களோ அலட்சியமாய் நகர்ந்தன
என் தவிப்பு புரியாமல்
நாள்பொழுது கொஞ்சம் சீக்கிரம் நகர்ந்தால் என்னவாம்

அந்த நாள் வந்தது

வண்டி எண் 2604ல் ஹைய்தராபாத்திலிருந்து கிளம்பினேன்
அடுத்த நாள் அதிகாலை சென்னை சென்ரல் வந்தடைந்தேன்

ஹிந்து, ஆனந்த விகடன் வாங்கிக்கொண்டு
சொந்த மண்ணை நோக்கி
குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் பயணித்தேன்
பொழுதுசாயும் முன்பே வந்து சேர்ந்தேன் சாத்தூர்
தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு

முதல் நாள்
சிவகாசி சென்று ஐய்யாமை, அத்தை, சித்தியை பார்த்தேன்
ஊர்திரும்பும் போது பட்டாசு கொடுத்தனிப்பினர்

அடுத்த நான்குநாள்கள்
இலக்கிய இதழ் படித்தும்
இணைத்தில் ராமகிருஸ்சணன் வலைப்பக்கங்களுக்கு சென்றும்
நாள்களை கழித்தேன்

தீபாவளி அன்று

தேள், நுரையீரலில் புண் படம் போட்ட
சிகரெட், செய்யது பீடி, பான்பாரக் விற்றேன்
வண்ணவண்ண நிறங்களில் கூல்டிரிங்க்ஸ் விற்றேன்
அப்பாவுக்கு உதவியாக கடையில்

மாலை உதயமானது
வானத்தில் யாரோ கருப்புவண்ணம் பூசியிருந்தனர்

புஸ்வானம் சிரித்தது
லெட்சுமி வெடிகள் கத்தியது
சங்கு சக்கரம் தலைகிறுகிறுக்க சுற்றியது
சிறுபிள்ளைகள், அழகான கன்னிகள், பக்கத்து வீட்டு அக்கா,
எதிர்வீட்டு தாத்தா, பூவிற்கும் அக்கா
அவரவர் வீட்டுவாசலில் தீபாவளியை கொண்டாடினர்

நண்பர்களை சந்தித்தேன்
சாத்தூர் மெயின் ரோட்டில்
சிவகாசியில் வேலை செய்யும்
பிரிண்டிங்க்டெக்னாலஜி இஞ்ஜினேயர் பாலா
ATM mechine செய்துதரும் நிருவனத்தில்
மெக்கானிக்கல் இஞ்ஜினேயராக வேலை செய்யும் ரமேஸ்
மஸ்கட்டிலிருந்து ஒட்டகப்பால் கொண்டு
கொண்டுவருவதாக சொன்ன நண்டு
உள்ளூரில் பேன்சிஸ்டோர், மொபைல் ரீசார்ச் கடை
வைத்திருக்கும் மாரியப்பன்
இதைத்தவிர கருவேப்பிலை, ராஜபாண்டி, ராஜா, ராஜாஜி

புதிதாக மொபைல் நண்பர் மாற்றியிருந்தவன்
என் நண்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தான்
நானும் பல நண்பர்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தேன்

உள்ளூரில்
தற்கொலை செய்துகொண்ட ஸ்கூல் சீனீயரின் கதை
ரோட்டில் பேசிக்கொண்டிருந்தவர்களை போலிஸ் கூட்டிச்சென்று விசாரித்த
கதைகளை பேசினோம் அரைமணி நேரம்

அருகிலுள்ள தேனீர்கடையை நோக்கி நடந்தோம்

வானெங்கும் வண்ணமயம்

தீபாவளிக்கு மறுநாள்

ஆறுபேர்
ஒரு TVS 50, ஒரு splender, ஒரு bajaj chetek க்கில்
குளிக்கச்சென்றோம் கிணற்றுக்கு
எனக்கு முதல்தடவை

வழியில்
பள்ளி நண்பன் ஒருவனைப்பற்றி
‘என்ன மாப்பிள்ளை!
அவனுக்கு கல்யாணமாகி ஒரு வருசம் இருக்குமா?’
வேறொருவன்
‘இல்லை மாப்பிள்ளை
11 மாசம்’
‘தலைதீபாவளியை குழந்தையோட கொண்டாடுகிறான் ,
ஆனாலும் ரொம்ப அவசரப்படுராங்கடா பசங்க’
‘அவன் கல்யாணத்திற்கு முன்னாடியே முடிச்சிட்டான் மாப்பிள்ளை’
ஆச்சர்யமாக இருந்தது எனக்கு
அவனைப்பற்றிய பேச்சு முடிவதற்குள்
கிணற்றடி வந்தது

கருவேலி காட்டிற்கு நடுவே கிணறு
கிணற்றடிக்கு அருகே
வீச்சம் எடுக்கும் கதவில்லாத கருங்கல் அறை
கிணற்றுக்குள்
கறுப்புநிற தண்ணீர், சுவரெங்கும் பாசம்
கிணற்றில் மிதக்கும் பிளாஸ்டிக்பாட்டில்
வேறேதுவும் தென்படவில்லை கண்களுக்கு
சுருக்கமாக சாத்தூர் நகராட்சி தண்ணீர் போலிருந்தது

சற்றுநேரம் கழித்து
கிணற்று தண்ணீரில்
அவனின் முகம்
தெளிவாக தெரிந்தது

Thursday, October 15, 2009

என்னுடைய விருப்பம் என்ன?

மூன்றுவயதில்

இழுத்துச்செல்லப்பட்டேன் பள்ளிக்கு

என் உலகம் சுருங்கிப்போனது

நான்கு சுவர்களுக்குள்


பதின்மூன்று வயதில்

பூப்படைந்தேன் உடல்ரீதியாக

நிலம் பார்த்து நடக்கச்சொன்னால்

அம்மா


கல்லூரிபருவம் முடிவதற்குள்

முடிந்தது கல்யாணம் அவசர அவசரமாக

எங்கள் கடமை முடிந்ததென்றனர்

பெற்றோர்


படித்து முடிப்பதற்குள்

பகல் பக்கத்தை திருப்பிக்கொண்டு இரவுப்பக்கத்தை

காட்டியது ஒரு நாள்


இப்படியே பலபக்கங்கள்

திருப்பிக்கொண்டன

குழந்தையும் கணவனையும் சேவிப்பதில்


படித்தேன்

செய்தித்தாளில் ஓர் செய்தி

“சாதனைக்கு எதுவும் தடையில்லை: கிளிஸ்டர்”

கிராண்ட்ஸ்லாம் போட்டியில்

வென்ற கோப்பையுடன் புகைப்படம்

கிளிஸ்டர் கையில் குழந்தை அருகில் கணவர்


நானும் யோசிக்க தொடங்கினேன்

என்னுடைய விருப்பம் என்ன?

கடவுளை பார்க்கச் சென்றோம்


முழுமையாக 24மணி நேரம்
முடிந்திருந்தது கடவுளை பார்த்து

இன்னும் ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டாள் அம்மா

24மணி நேரத்திற்குள் 15முறை
கடவுளின் நினைவு வந்ததென்றாள் அம்மா

பார்த்தவுடன் பாசம் கொள்ள வைக்கும்
பெண்கடவுள் அவள்

துன்பம் மறந்து புன்னகை புரிய வைக்கும்
பெண்கடவுள் அவள்

விளையாட்டிலே இரவு பகலை கடக்கும்
பெண்கடவுள் அவள்

சைகையால் மொழிபேசும்
பெண்கடவுள் அவள்

அண்ணியின் அம்மா அண்ணிக்கு அம்மை வந்துள்ளதாக
அம்மாவிடம் தொலைபேசியில் கூறினாள்

அண்ணியின் வீடு
அடுத்த தெருவில் உள்ளது

மாலை முடிந்து இரவு உதயமாகும் பொழுதில்
நானும் அம்மாவும் அண்ணியை பார்க்க சென்றோம்

பெண்கடவுளை பார்த்த சந்தோசத்தில்
அம்மாவின் முகம் மலர்ந்தது
அண்ணியின் அம்மாவிடமிருந்து பெண்கடவுளை வாங்கிய அம்மா
‘கன்னுக்குட்டி டாடா போகலாமா…’
என்றாள் அண்ணனின் மகளிடம்

Wednesday, July 22, 2009

புதிய அத்தியாயம்


அவளோ
சேலை அணிந்திருப்பாள்
நாணத்துடன் அமர்ந்திருப்பாள்

நீயோ
அசடு வழிந்து அமர்ந்திருப்பாய்

உன்னை பார்த்து சிரிப்போருக்கு
பதிலுக்கு நீயும் சிரிப்பாய்
என்ன அர்த்தமென்று தெரியாமலே

ஜிலேபி, சாக்லேட், பழங்களுக்கு கூட
கேட்டிருக்கும் நீ அமெரிக்கா போயிருந்த விசயம்
அந்தளவு உன் உறவினர்களின் பிரச்சாரம்

நிலவு உதயமாகும் திசையறியாது வானம்

அவளோ
சூரியன் போல்
தலை நிமிரும் ஒவ்வொரு முறையும்
உன்னை பார்பாள்

சபையில்
உனக்கு அவள் மட்டும் தெரியும்
அவளுக்கு உன்னை மட்டும் தெரியும்
மற்றவர்கள் மறைந்து போவார்கள்

அவளின் தலையில் பூ
சூட்டுவாய் நீ
இனி
உனக்கு உடையவள்
அவள்

சாக்லேட் ஊட்ட சொல்வார்கள்
உன்னை
நீயோ
யாசகம் கேட்பாய் அவளிடம்
ஊட்டுவதற்கு
பின்னாலே இழுத்துச்சொல்வார்கள்
அவளை அவளது தோழிகள்

இது தான்
உங்கள் விளையாட்டின் ஆரம்பம்

இரவுப்பொழுது நொடிகளாகும்
பகல் பொழுது முடிவிலியாகும்

ப்ளீஸ்
இனிமேலாவது
செல்போனை
ரீ-சார்ஜ் செய்யவும்

உன் பெயர் சொல்லியாவது
செல்போன் நிறுவனங்கள்
வாழட்டும்

வாழ்கையின் புதிய
அத்தியாயத்தை எழுதப்போகும்
உனக்கு
என்
மனமார்ந்த நல்வாழ்த்துகள்

நேற்று பேருந்தில்.....

பேருந்தினுள்

பூக்கள்
நாற்பது சதவீததிற்கும்
சற்று அதிகமாக
ஒன்பது இருக்கையில்

தேனீக்கள்
அறுபது சதவீததிற்கும்
சற்று குறைவாக
பதினோறு இருக்கையில்

இரவு பெய்த மழையினால்
குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது

சில பூக்கள்
புன்னகை உதிர்த்தபடி
கைபேசியில் பேச்சு

சில பூக்கள்
ரோட்டை வேடிக்கை பார்த்தபடி
கன்னத்தில் கைவைத்து

ஒட்டுனரின்
தலைக்கு மேல்
காளி ஒற்றை காலை தொங்க போட்ட படி
சிங்கத்தின் மேல் அமர்ந்தது போல்
ஒரு படம் தொங்கியது

காளி தலைமுடியை
உலர்த்திக்கொண்டிருந்தாள்

காளிக்கு இன்று காலை
சைவ சாப்பாடு
வெண்பொங்கலும்
உளுந்தவடையும்
நன்றாக சாப்பிட்டிருந்தாள்

குளிர்ந்த காற்று
குலுக்கலுடன் பேருந்து பயணம்
காளிக்கு இதமாகயிருந்தது

கண்களை திறந்துமூடி
திறந்துமூடி தூங்கினாள்

சிங்கம்
பூக்களை வேடிக்கை பார்த்தது

அதில்
ஒரு பூ

வெடித்த பருத்தியை
கறுத்த மேகத்தில்
தேய்த்தது போன்ற வண்ணத்தில்
ஆடை

பசும்பாலில்
சிறிதளவு சந்தனம்
சேர்த்து கிடைக்கும் வண்ணத்தில்
பூவின் நிறம்

"டிக்கெட் வாங்காதவன் வாங்கிக்கோ,
நீ வாங்கிட்டியா?" பெண் நடத்துனர்
படியில் நிற்கும் ஒருவனை கேட்கிறாள்

சிங்கம் கர்ஜித்தது
யோசனை தடைபட்டதால்

காளி சிங்கத்தின்
பிடரி மயிரை பிடித்து
தடவி விடுகிறாள்

சிங்கம் சிரித்தபடி
மீண்டும் வேடிக்கை பார்க்கிறது

ஒட்டுனர்
தலையை தூக்கி
காளி படத்தை பார்க்கிறார்
எப்போதும் பார்க்கும்
காளி, சிங்கத்தின் முகம்
தெரிகிறது
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்.

பார்வைகள்