Thursday, December 31, 2009

பேனா முனை - சிறுகதை

சிறுதூரலாய் பெய்து கொண்டிருக்கும் மழையில் குளிர்ந்த காற்றுடன் கூடிய இரயில் பயணம் மனதிற்கு இதமாகயிருந்தது. இரவு நேர உணவை முடித்துக்கொண்டோர் விளக்கை அணைக்கும் சப்தம் கேட்டது. எனக்கு மட்டும் தூக்கம் வராமல் விளக்கை அணைக்க மனமில்லாமல் இருந்தேன். தினமும் இரவில் டைரி எழுதுவது என் பழக்கம். அதே போல் இன்றும் டைரியின் பக்கங்களை புரட்டிய படி என்ன எழுதுவதென்று யோசித்தேன். சில நிமிட யோசனைக்கு பின் எங்களைப்பற்றி எழுத முடிவு செய்தேன். எங்களை என்றால் என்னையும் மணிமேகலையும் பற்றியது. சிக்னலை கடந்து செல்லும் இரயில் வண்டி ஓ வென்று ஓலமிட்டது. கண்ணாடி ஜன்னல் கம்பிகளில் தேங்கியிருந்த மழைத்துளிகள் வடிந்து மேலிருந்து கீழாக ஜன்னலில் மீது ஊர்ந்து கொண்டிருந்தன. பேனா முனையிலிருந்து கசிந்த நீலநிறமை என் விரல்களின் அசைவில் டைரியின் பக்கங்களில் எழுத்துருக்களை தோற்றுவித்தன.மணிமேகலையை முதன் முதலில் சென்னையிலிருந்து ஹைய்தராபாத் செல்லும் ஹைய்தராபாத் எக்ஸ்பிரஸ்ஸில் சந்தித்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே அமர்ந்திருந்தாள். தமிழ் வார இதழை படித்துக்கொண்டிருந்தவள் செல்போனில் அழைப்பு வர வார இதழை கீழே வைத்து செல்போனில் பேசத்துவங்கினாள். செல்போனில் பேசி முடித்தவள்.

"எங்க வேலை செய்றீங்க?" என்று கேட்டாள்.

"ஜி.ஈல் மெக்கானிகல் இஞ்ஜினேயரா வேலை செய்றேன். நீங்க?"

"ஆரக்கல்ல சாப்ட்வேர் டெஸ்டிங் இஞ்ஜினேயரா இருக்கேன். எங்க தங்கியிருக்கீங்க?"

"கொண்டாபூர், நீங்க?" என்று நானும் அவள் எங்கு தங்கியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அவளும் கூறினாள். தொடர்ந்து பேசினோம். அவளைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. கடப்பா பூர்வீகமென்றாலும் அம்மா மூலமாக தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொண்டதாக கூறினாள். அம்மாவின் அக்கா சென்னையிலிருப்பதாகவும் அவர்களை பார்க்க சென்னை வந்ததாகவும் கூறினாள். நேரம் தெரியாமல் சென்ற எங்களின் உரையாடல் இனிமையாகயிருந்தது.

"ரொம்ப பசிக்குது, சாப்பிடலாமா?"

"நீங்க சாப்பிடுங்க, அடுத்த ஸ்டேசன்ல டிபன் எதாவது கிடைச்சா சாப்பிடணும்"

"மணி இப்பவே ஒன்பது. அடுத்த ஸ்டேசன் பதினோரு மணிக்கு வரும். அங்கேயும் டிபன் கிடைக்காது. வாங்க என்னோட சாப்பாட சேர் பண்ணிக்கலாம். ரொம்ப காரம் இருக்காது" என்றவள் வீட்டில் அவளே சமைத்து எடுத்து வந்திருந்த வஞ்சிரம் மீன் குழம்பையும் இறால் வருவலையும் எனக்கு கொடுத்தாள். நன்றாக சமைத்திருந்தாள். அவள் சமையலை பற்றி பாராட்டிய போதும் பதிலேதும் கூறாமல் குனிந்த தலையுடன் புன்னகை புரிந்த படி சாப்பிட்டாள்.படுக்கையில் படுத்து நெடுநேரம் ஆன பின்பும் தூக்கம் வராமல் மணிமேகலையை பற்றியே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மணிமேகலை நல்ல தமிழ் பெயர். ஓவியம் வரைபவள், பூக்கள் வளர்ப்பவள், குழந்தைகளை கொண்டாடுபவள், ஆதரவற்றோர்க்கு உதவுபவள், ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதிலளிப்பவள், அழகானவள். நிச்சயம் இவளை திருமணம் செய்து கொள்பவன் கொடுத்து வைத்தவன்.நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது மணிமேகலை பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள்.

"நைட் நல்லா தூங்குனீங்களா? டீ சாப்பிடுறீங்களா?" என்று என்னிடம் கேட்டவள் தேநீர் விற்பவனை அழைத்தாள். நேற்று மாலை முதல் தடவை சந்தித்த ஒருவனிடம் ஒரு பெண் இவ்வளவு அன்பு காட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுள் வெகுநேரமாக அவளிடம் கேட்க எண்ணியிருந்த கேள்வியை கேட்டேன்.

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"இதோ டீ எடுத்துக்கோங்க" என்று தேநீர் விற்பவனிடமிருந்து தேநீரை வாங்கி தந்தாள். "கல்யாணம் ஆயிடுச்சி" என்றாள்.

"உங்க கணவர் எங்க இருக்கார்?"

"கீழ, பூமிக்கடியில்" என்று சொன்னது அவள் கணவர் இப்போது இல்லை என்று தெரிந்தது. மெட்டியில்லாத அவள் கால் விரல்களையும், தாலியில்லாத கழுத்தையும் பார்த்து நான் கேட்ட கேள்வி ஏன் இப்படியொரு கஸ்டப்படுத்தும் கேள்வியை அவளிடம் கேட்டேனென்று என்னையே திட்டிக்கொண்டேன்.

"ஆபிஸ்க்கு போகும் போது சாலை விபத்தில இறந்திட்டார். அவர் சரியாத்தான் டூவீலர்ல போயிருக்கார் எதிரே வந்த லாரிக்காரன் அறிவு கெட்டதனமா அவர் மேல மோதிட்டான். ரொம்ப அன்பானவர். என்னை நல்லா பார்த்துட்டார். ஆக்சிடண்ட் ஆன பிறகு ஒரு வாரம் கோமாவில் இருந்தார். அந்த ஒரு வாரத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவருடன் வாழ்ந்த சந்தோசமான நினைவுகளை நினைத்து கொண்டிருந்தேன். அவர் உயிர் பிரிந்த அடுத்த நாள் என் வயிற்றிலிருந்த மூன்று மாத கருவும் கலைந்தது. அன்று முதல் நான் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கை தூள் தூளானது. கஸ்ட காலத்தில் ஒருவனுக்கு உதவாத கடவுள் என்ன கடவுள்" தொடர்ந்து பேச முடியாதவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணிரை கைகுட்டையால் துடைத்தாள்.

நிலைகுத்தியபடி சன்னலின் வழி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நாளைக்கு என்னுடைய கணவருக்கு திதி. அவர் இறந்து ஜந்து வருடமாகுது. ஒவ்வொரு வருடம் திதிக்கு வரும் சொந்தக்காரங்க என்னை எத்தனை நாள் தனியாவே இருப்ப, நல்ல பையனா பார்த்து இன்னொரு கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றாங்களே தவிர அவங்க பசங்கள கட்டித்தர முன்வர மாட்டிக்காங்க. இந்த உலகத்தை பொருத்த வரை மத்தவங்களுக்கு உபதேசம் சொல்லவும் அனுதாபப்படவும் தான் தெரியும் முன்ன வந்து உதவி செய்ய எவனுக்கும் தைரியம் கிடையாது"

"உங்களுக்கு இன்னொரு கல்யாணத்துக்கு விருப்பமிருந்தால் இண்டர்நெட் வெட்டிங் போர்ட்டல்ல விளம்பரம் செய்ங்க. நல்ல வரன் கிடைக்க வாய்ப்பிருக்கு" என்றேன்.

"ரிஜிஸ்டர் செய்திருக்கேன். பார்ப்போம் எப்போ நல்ல வரன் கிடைக்குதுன்னு"

இரயில் செகந்திராபாத் ஸ்டேசனை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் அவள் மீது வைத்திருந்த அன்பை, காதலை நேரடியாக சொல்ல மனமில்லாமல் அவளின் இ-மெயில் ஜடியும் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டேன். என் மனமெங்கும் நிறைந்திருந்தால் மணிமேகலை.

டைரியை மூடிவிட்டு தூங்கினேன். முழித்துபார்க்கையில் இரயில் சென்னை சென்ட்ரல் வந்திருந்தது.இரயில் நிலையத்திற்கு வந்திருந்த அப்பா சோகமாக இருந்தார். "பொண்ணு வீட்ல போட்டோ பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க"

"பிடிச்சிருக்குன்னு சொன்னவங்களுக்கு இப்ப எதுக்கு பிடிக்கலையாம்"

"பொண்ணு உன் போட்டோவை சரியா பார்க்கலையாம்"

"அவளுக்கென்ன அபிசேக்பச்சன் மாதிரி மாப்பிளை வேணுமாமா. பிடிக்கலைன்னு முன்னாடியே சொல்லி தொலைஞ்சிருந்தா ஹைய்தராபாத்லே இருந்திருப்பேன். பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு இப்ப பாருங்க வீணா ஆயிரம் ரூபாய் டிரையின் செலவு"

"சரி, கோபப்படாத விட்டுத்தள்ளு இவா இல்லைன்னா என்ன வேறொரு நல்ல பொண்ணு கிடைக்கும்"

மூன்று தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதற்குள் எனக்கு முப்பத்திரெண்டு வயதானது. அதற்குள் தலைமுடி எல்லாம் உதிர்ந்து தலையில் வழுக்கை விழுந்தாயிற்று. சோடாபுட்டி கண்ணாடியும், தெத்துப்பல்லும், வயதான தோற்றத்துடன் இருக்கும் என்னை யார் திருமணம் செய்து கொள்ள முன் வருவார். இந்த பொண்ணும் என்னை தட்டி கழித்தது உலகத்தின் மீதான என் கோபம் இன்னும் அதிகமாகிறது. மணிமேகலை போன்ற என் பேனா முனை கற்பனை கதாபாத்திரங்களை தேடி என் சிவந்த கண்கள் இரயில் நிலையத்தை சுற்றி திரிகின்றன.

- முற்றும் -

- கிரகம்.

செம்மொழி பைந்தமிழ் மன்றம் வழங்கும் சிறுகதை பரிசுப்போட்டிக்காக எழுதிய கதை

http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

2 comments:

Vijayaraj said...

Nalla Irukku da Vicky....Keep rocking da

கிரகம் said...

விஜயராஜ்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

பார்வைகள்