Tuesday, November 1, 2011

தமிழச்சி - சிறுகதை - கிரகம்

தமிழச்சி

மைதிலி தாமதமாக வீட்டிற்கு வந்தாள். வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் அவளின் வருகைக்காக காத்திருந்தவர்கள் போல் இருந்தனர். ஹாலை கடந்து வீட்டின் உள் அறையினுள் சென்றாள்.

"பொண்ண ஒரு பத்து நிமிசத்தில ரெடி பண்ணி கூட்டியாந்திடுறேன்" என்று சபையில் அமர்ந்திருப்பவர்களிடம் கூறினால் மைதிலியின் அம்மா. அவர்கள் எதிரேயிருந்த டீப்பாயின் மேல் வாழைக்காய் பஜ்ஜி தின்ற பின் வெற்றாக இருந்த சில்வர் தட்டுகளையும் காப்பி குடித்த டம்பர்களையும் எடுத்துக் கொண்டு அடிக்களையினுள் சென்றாள் மைதிலியின் அம்மா.

கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த மைதிலி நெற்றியில் ஒட்டியிருந்த கருப்புநிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து கண்ணாடியின் முகத்தில் ஒட்டினாள். கையில் மாட்டியிருந்த சில்வர் வளையல், கடிகாரத்தை கழட்டி டேபிளின் மீது வைத்தாள். பயணக்களைப்பில் உடல் சோர்வாக இருந்ததால் கைகளை மேலே தூக்கி உடலை வளைத்தாள்.

"என்னடி, உடம்பை நெளிச்சிட்டு உட்காந்திருக்க?" என்று அதட்டல் குறளில் கேட்ட மைதிலிஅம்மாவின் முகம் கண்ணாடியில் தெரிவதை பார்த்தாள் மைதிலி.

"சீக்கிரம் ரெடி ஆகி ஹாலுககு வா"

"எதுக்கு?"

"பொண்ணு பார்க்க வந்திருக்காங்க"

"யாரை?"

"என்னை"

"இந்த வயசுல அப்பாவுக்கு துரோகம் செய்யாத" என்றாள் மைதிலி. தமிழில் பேசிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் ஹிந்தில் பேசத்தொடங்கினர்.

"மாப்பிள்ளை போட்டோவை கூட நீங்க எனக்கு காட்டலை. என்னால ஹாலுக்கு வர முடியாது"

"எங்களுக்கே பொண்ணு பார்க்க வர்ற விஷயம் காலையிலதான் தெரியும். போட்டோ கேட்டோம். நேரா வர்றோம் அப்புறம் போட்டோ எதுக்குன்னு சொன்னாங்க"

நெற்றியில் கைகளை வைத்துக்கொண்டு குனிந்து யோசித்தாள் மைதிலி. இதுவரை கேட்டுக் கொண்டிருந்த மைதிலிஅம்மாவின் கொலுசுசப்தம் இப்போது இல்லை. அறைக்கதவை தாழ்ப்பாழ் இட எழுந்து சென்றாள் மைதிலி.

*****

மைதிலியின் அப்பா மிலிட்டரியிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். அவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. தன் இருபத்தி எட்டு வயதில் மிலிட்டரியில் சேர்ந்தார். முப்பதாவது வயதில் மைதிலியின் அம்மாவை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த மறுவருடம் மைதிலி பிறந்தாள். மைதிலி மூன்று மாதமாக இருக்கும் போது மைதிலி அம்மாவையும் அவளையும் கூட்டிக்கொண்டு அப்போது பணிபுரிந்த மகாராஷ்டிராவிற்கு ரயிலில் அழைத்துச் சென்றார். ரயில் நின்று கொண்டிருந்த போது மதியஉணவு வாங்கிவர சென்றார். அப்போது மைதிலியின்அம்மா உடல் அசதியில் படுத்திருந்தாள். மைதிலியை கையில் வைத்திருந்த பெண் ரயிலை விட்டு கீழே இறங்குவதை தூரத்திலிருந்து பார்த்தார் மைதிலியின் அப்பா. கையிலிருந்த உணவுப் பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு மைதிலியை கடத்த முயன்ற பெண்ணை துரத்திச் சென்று பிடித்தார். இந்த நிகழ்வை மைதிலி தன் நெருங்கிய நண்பர்களிடம் கூறியபின் "அப்பா ஏன் அந்தப் பொண்ண துரத்திப்போய் பிடிச்சாங்கன்னு தெரியுமா?" என்று கேள்வி கேட்பாள். சிறுது நேரம் கழித்து அவளே பதிலையும் சொல்லிவிடுவாள். "அப்ப என்னோட கழுத்தில நாலு பவுண் தங்கச்செயின் இருந்தது" அவள் பதிலை கூறி முடித்ததும் சீரியஸாக கதையை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மைதிலியின் அப்பாவிற்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை பணி இடமாற்றம் இருந்து கொண்டே இருக்கும். மைதிலிக்கு பணிரெண்டு வயது இருக்கும் போது பூனாவிற்கு மாற்றப்பட்டனர். கேந்திரா வித்யாலாவில் ஏழாம் வகுப்பு சேர்க்கப்பட்டாள். கேந்திரா வித்யாலாவில் மிலிட்டரியில் வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகள் அதிகம் பயின்றனர். எல்லா மாநிலத்தை சேர்ந்த பிள்ளைகளும் அவளுடன் பயின்றனர். அவர்கள் எல்லோரும் பொதுவான மொழி ஹிந்தி. அந்த மொழியிலே அனைவரும் பேசினர். வீட்டில் தமிழ் பேசுவதைவிட அதிகம் ஹிந்தியிலே பேசுவாள். ஹிந்தி அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட மொழியாகிப் போனது.

மைதிலி பள்ளிக்கு முட்டியை மறைக்கும்படி கருநீல ஸ்கர்ட்டும் வெள்ளைநிற சட்டையும் அணிந்து செல்வாள். பள்ளியில் பையன்களும் பெண்களும் கலந்தே அமர்ந்திருப்பார்கள். மைதிலி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவள் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாம் நடந்தவந்தவர்கள் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிப்புவிளக்கு பகுதிக்கு வருவதாக கூறினார்கள். சிவப்புவிளக்கு பகுதியிலிருக்கும் பெண்களுக்கு பாலியல்நோய், எய்ட்ஸ் இருப்பதால் ஆணுறை உபயோகிக்கும் படி கேட்டுக்கொண்டனர். அப்போது கூட்டத்திலிருந்து எழுந்த பதினோரம் வகுப்பு படிக்கும் பையன்.

"உதடும் உதடும் சேர்ந்தார் போல் முத்தமிட்டுக் கொண்டால் எய்ட்ஸ் பரவ வாய்ப்புள்ளதா?"

அப்போது மைதிலியும் அவள் தோழிகளும்

"அப்ப இந்த அண்ணன் நிச்சயம் சிகப்புவிளக்கு ஏரியாவுக்கு போயிருப்பாங்க" என்று கூறி மெதுவாக சிரித்துக் கொண்டனர்.

மைதிலி மார்டனாக ஆடைகள் உடுத்திக்கொள்வாள். மற்ற பெண்களை ஒப்பிடும்போது நல்ல உயரமாக, மாநிறமாக, ஒல்லியா இருப்பாள். இரவில் ஃப்ராக் அணிந்து தூங்குவாள். விருப்பப்பட்ட ஆடை அணிந்து மிலிட்டரி காலணியை சுற்றி வருவாள்.

ஆசியாவில் மிகப்பெரிய மிலிட்டரி கன்டோன்மெண்ட் பஞ்சாப் பட்டிந்தாவில் உள்ளது. அங்கு மைதிலியின் அப்பாவிற்கு பணி இடமாற்றம் கிடைத்தது. அவர்கள் தங்கியிருந்த மிலிட்டரி காலணியில் மொத்தம் ஆறு காலணிகள் இருந்தது. காடாயிருந்த இடத்தை காலணிகளாக மாற்றியிருந்தனர். ஒரு காலணிக்கும் இன்னொரு காலணிக்கும் இடையே குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இடைவெளியாவது இருக்கும். பெண்கள் துணையில்லாமல் பகல்பொழுதில் கூட காட்டுபகுதியை கடந்து செல்ல அஞ்சுவார்கள். காலணியில் தங்கியிருக்கும் இளைஞர்கள் அந்தக்காட்டினுள் குடிசை அமைத்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பெண்பிள்ளைகளுடன் உடலுறவு கொள்வார்கள். இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த மிலிட்டரி ஆள் ஒருவன் காட்டுப்பகுதியை கண்காணித்து வருவான். மிலிட்டரி காலணியில் பல ஆண்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தனர். அவர்கள் வீட்டுப்பக்கம் கூட பெண்கள் நடந்து செல்ல பயப்படுவார்கள்.

மைதிலிக்கு மிலிட்டரி காலணிகள் பிடித்திருந்தது. மிலிட்டரி காலணிகளில் சாலைகள் அகலமாகவும், பெரிய தனித்தனி வீடுகளாகவும், எல்லா வீட்டின் முன்னும் கார்டன் அமைக்கப்பட்டிருக்கும், மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டு சுத்தமான காற்றுடன் அக்குடியிருப்பு அமைந்திருக்கும். மைதிலி இரவில் நடசத்திரங்களை பார்த்துக் கொண்டு மொட்ட மாடியில் தூங்க ஆசைப்படுவாள். ஆனால் மைதிலியின் அம்மா அதற்கு அனுமதிக்கமாட்டாள்.

பஞ்சாப்பிலும் கேந்திரா வித்யாலாவில் சேர்க்கப்பட்டாள். எட்டாம் வகுப்பை தாண்டிய மாணவ, மாணவியருக்கு பள்ளி லைப்ரரியில் அறிவியில் ஆராய்ச்சி சார்ந்த புத்தகங்கள், பாடப்புத்தகங்களே படிக்க வழங்கப்பட்டது. மைதிலி மற்ற பிள்ளைகளை காட்டிலும் சற்று வேகமாக வளர்ந்து வந்தாள். அதனாலே அவள் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஸ்கர்ட் சீக்கிரமே கட்டையாகி முட்டி தெரியும். வருடத்திற்கு இரண்டுமுறை அவளுக்கு புது ஸ்கர்ட் வாங்கிக் கொடுத்தாள் மைதிலிஅம்மா. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிலிருந்து கேந்திராவித்யாலா பள்ளிக்கு மாணவர்களின் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை கேட்டு வந்திருந்தனர். மைதிலி "என் பூனை" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கவிதை எழுதிக்கொடுத்தாள். அந்தக்கவிதை வெளியான பத்திரிக்கையை கையில் வைத்துக் கொண்டு காலணியிலிருந்த எல்லோரிடமும் காண்பித்து மிகவும் சந்தோஷமடைந்தாள்.

பஞ்சாப் மிலிட்டரி கன்டோன்மெண்டிலிருந்து பாகிஸ்தான் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கப்போவதா தகவல் பஞ்சாப் மிலிட்டரி கன்டோன்மெண்டிற்கு தெரிந்தது. இந்தத்தகவலை தொடர்ந்து பஞ்சாப் எல்லையில் மிலிட்டரி குவிக்கப்பட்டது. இருபது முதல் முப்பது வயது இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் எல்லைக்கு அனுப்பப்பட்டனர். இராணுவ வீரர்கள் எல்லையில் குழிகள் தோண்டி கன்னிவெடிகளை புதைத்தனர். எல்லையை தாண்டி தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து மிலிட்டரி காலணியில் தாக்குதல் நடத்தினால் காலணியில் இருப்பவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பயிற்சியின் போது காலணியிலிருக்கும் எல்லா மின்விளக்குகளும் அணைக்கப்படும். வீட்டிலோ, தெருவிலோ சிறு தீக்குச்சி கூட பொருத்தக்கூடாது. விளக்கு அணைக்கப்பட்ட பிறகு வீட்டை விட்டு வெளியேறி வீட்டின் முன் அமைக்கப்பட்டிருக்கும் பதுங்குகுழியினுள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். மீண்டும் விளக்கு வந்த பிறகே வீட்டினுள் செல்ல வேண்டும். ராணுவ தளத்தினுள் ராணுவ வீரர்களுக்கு செயல் இழந்த கன்னிவெடிகளை வைத்து கன்னிவெடிகளை செயலிழக்க வைக்கும் பயிற்சி நடத்தப்படும். அப்படி பயிற்சி நடந்தபோது கன்னிவெடி ஒன்று வெடித்தது. இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்களின் இரண்டு கைகள் சிதறின, ஒருவரின் உடல் முழுவதுமாக வெடித்துச்சிதறியது. இந்த நிகழ்வு நடந்த போது மைதிலி பள்ளியில் இருந்தாள். பள்ளியிலிருந்த அனைவருக்கும் வெடிச்சத்தம் நன்கு கேட்டது. அன்று மாலை இறந்து போன ராணுவ வீரரின் வீட்டு வாசலில் காலணியை சேர்ந்த எல்லோரும் கூடியிருந்தனர். ராணுவ வீரரின் மனைவி, அவளின் இரண்டு குழந்தைகள் சடலத்தின் முன் அமர்ந்திருந்தனர். ராணுவ வீரரின் மனைவி ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் கண்ணாடிபெட்டியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தீவிரவாதிகள் எல்லையை தாக்காமல் இந்திய பாராளுமன்றத்தை தாக்கினர்.

மைதிலியின்அப்பாவிற்கு பஞ்சாபிலிருந்து ஜம்முவிற்கு பணியிடமாற்றம் கிடைத்து. ஜம்முவில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் மனைவியையும் குழந்தைகளையும் திருநெல்வேலிக்கு அனுப்பிவிட்டு தனியாக ஜம்முவிற்கு சென்றார்.

*****

மைதிலி கல்லூரி படிப்பை திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்லூரியில் தொடர்ந்தாள். வகுப்பறையில் ஆண்கள், பெண்கள் தனித்தனி பிரிவுகளாக அமர்ந்திருந்தனர். அமரும் இருக்கையில் கூட ஆண்கள் பெண்களிடையே இவ்வளவு பெரிய இடைவெளி இருப்பது கண்டு மைதிலி ஆச்சர்யம் அடைந்தாள். முதல்நாள் வகுப்பில் ஒவ்வொருவரும் தன்னைப்பற்றிய சுய அறிமுகத்தை தமிழில் சொன்னார்கள். மைதிலி மட்டும் சுத்தமான ஆங்கிலத்தில் சொன்னாள். ஆசிரியருக்கு அவள் பேசும் ஆங்கிலம் முழுமையாக புரியவில்லை.

"நீ வடநாட்டு பொண்ணா?" என்று ஆசிரியர் மைதிலியிடம் கேட்டார்.

"இல்லை. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை"

"அப்ப நீ மத்தவங்க மாதிரி தமிழ்லயே பேசியிருக்கலாமே"

வகுப்பறையில் இருந்தவர்கள் சிரித்தனர். அந்த நக்கல் கலந்த சிரிப்புசப்தம் மைதிலி தமிழ்மொழி கற்க இருந்த ஆர்வத்தை முற்றிலுமாக துண்டித்தது.

மார்டன் உடையில் ஒருநாள் கல்லூரிக்கு வந்தாள். ஸ்கின்டைட் ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்திருந்தாள். அன்று கல்லூரி மாணவர்கள் அவளை வேற்று கிரகவாசி போல் பார்த்தனர். அவர்கள் சொல்லும் இரட்டை அர்த்த பேச்சைகூட கேட்டும் கேட்காததுபோல் கடந்து சென்றாள். மைதிலி தன் பனிரெண்டாம் வகுப்புவரை இது போன்ற ஆடைகளை தினமும் உடுத்துவாள். ஆண்கள் பார்ப்பார்கள் ஆனால் கொச்சையான வார்த்தைகளில் திட்டியதில்லை. தமிழ் கலாசாரம் பற்றி பல கேள்விகள் அவளினுள் எழுந்தன.

"தமிழ் கலாச்சாரம்னா என்ன?" என்று மைதிலி அவள் அம்மாவிடம் கேட்டாள்.

"பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா, அமைதியா, மரியாதையா மத்தவங்ககிட்ட நடந்துக்கணும்"

"அம்மா நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை. புரியும்படி சொல்லேன்"

"அதோ அந்த மகாலட்சுமி மாதிரி இருக்கணும்" என்று சுவரில் மாட்டியிருந்த கடவுளின் படத்தை காட்டினாள் மைதிலிஅம்மா.

மைதிலிக்கு கலாச்சாரம் பற்றி அவள் அம்மா கூறிய விளக்கத்திலிருந்து ஒன்று தெளிவாக புரிந்தது. சேலைகட்டி, பூ சூடி, நெற்றியில் திருநீருபட்டை அதனை அடுத்த வரிசையில் சிறிதாய் குங்குமம் இட்டு, வெட்கத்துடன் இருப்பவள் சுத்தமான தமிழ்பெண். இவற்றில் ஒன்று குறைந்தாலும் அப்பெண் வேற்று கிரகவாசி.

*****

திருநெல்வேலியில் வெயில்காலம் கடுமையாக இருக்கும். மைதிலிக்கு திருநெல்வேலி வெயில் பிடிக்கவில்லை. அந்தவெயில் அவள் தோளின் நிறத்தை கொஞ்சம் மாற்றியிருந்தது. வெயிலில் சிறுதுநேரம் நடந்தாலே உடல் முழுவதும் புழுங்கி அவள் ஆடைகள் ஈரமாகிவிடும். உடலில் பூசியிருந்த ஃப்ரெப்யூம், டியோடரண்ட் வாசனைகளை கூட வேர்வை உறிஞ்சிக்கொண்டு அவள் உடலிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கும்.

*****

கல்லூரி படிப்பு முடிந்த பின் திருவனந்தபுரத்திலுள்ள .டி கம்பெனியில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனாக வேலைக்கு சேர்ந்தாள். அவள் நலினமாக ஆங்கிலம் பேசுவதால் அந்த வேலை அவளுக்கு கிடைத்தது. திருவனந்தபுரம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளின் அழகு கொஞ்சம் கூடியது, சுத்தமான தண்ணீரில் தலைக்கு குளிப்பதால் தலைமுடி உதிர்வது குறைந்து போனது, விருப்பமான ஆடைகளை உடுத்திக்கொண்டு பணிக்கு செல்லமுடிந்தது.

மைதிலி கேன்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஆண் மைதிலியின் உடல்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். மைதிலிக்கு அந்த ஆண் ஏன் தன்னை அவ்வாறு பார்க்கிறான் என்று புரியவில்லை. சிறுது நேரம் கழித்து அந்த ஆணை திரும்பிப்பார்த்தாள் அப்போதும் அந்த ஆண் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஆணின் பார்வையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து சென்றாள்.

சிலநாட்கள் கழித்து அந்த ஆணின் பெயர் ரஞ்சித் என்பது தெரியவந்தது. ரஞ்சித் அவளை எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தான். பெரிய ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்தை அலுவலகமானது ஏற்பாடு செய்திருந்தது. அவரவர் தங்கள் விருப்பமான ஆடை அணிந்து விருந்திற்கு வந்திருந்தனர். மைதிலி கையில்லாத பிங்க்நிற கவுண் அணிந்திருந்தாள். ரஞ்சித் மது கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு மைதிலியின் அருகில் வந்தான்.

"மைதிலி நீ இந்த ஆடையில் ரொம்ப அழகா இருக்க"

"நன்றி. உன் தலையில் கொட்டியிருக்கும் மாட்டுச்சாணி நிற மை, புருவத்தில் மாட்டியிருக்கும் வளையம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை"

"இல்லை மைதிலி. உன் பார்வை தவறானது. என் வெள்ளைநிற தோலுக்கு இந்த வளையம் நன்றாக இருக்கிறதென்று என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பல பெண்கள் கூறியுள்ளனர். உனக்கும் பார்க்க பார்க்க பிடிக்கும்"

"நீ நினைப்பது போன்ற பெண் நானில்லை. என்னை விட்டுவிடு"

"மைதிலி நான் உன்னை விரும்புகிறேன். நான் வெள்ளைநிறம் நீ கருப்புநிறம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும்"

"சேர்ந்து வாழ்வது, இணைந்து வாழ்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. ரஞ்சித் என் பின்னே வராதே" என்று கூறிவிட்டு மைதிலி பெண்கள் பாத்ரூமினுள் சென்றாள். பதினைந்து நிமிடத்திற்கு பின் வெளியே வந்தவள் பாத்ரூம் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ரஞ்சித் அமர்ந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்.

******

மைதிலிஅப்பா மைதிலிக்கு மூன்று வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார். பெண்ணின் போட்டோவை பார்ப்பவர்கள்

"பொண்ணு ஏன் சேலை கட்டலை?"

"பொண்ணு நெத்தியில திருநீர், குங்குமம் எதுவுமில்லை பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?"

மைதிலியின்அப்பா பையன் வீட்டாரிடம் "பொண்ணு வடநாட்ல படிச்சவ, கொஞ்சம் மார்டன். கல்யாணத்துக்குள்ள எப்படியும் சேலைகட்ட கத்துக்குவா"

"அப்ப முதல்ல பொண்ணுக்கு சேலை கட்ட சொல்லிக் கொடுங்க. நல்லா சேலைகட்ட கத்துக்ககிட்ட பிறகு எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க"

மைதிலியின்அப்பா பையன் வீட்டார் தரும் தகவல்களை டைரியில் குறித்து வைத்துக்கொண்டு பெண்ணின் போட்டோவை தயார் செய்தார்.

பக்கத்துவீட்டு அக்கா, எதிர்வீட்டு பாட்டியின் மருமகள் எவரவர் சேலை நன்கு கட்டுவார்களோ அவர்களை வீட்டுக்கு அழைத்து மகளுக்கு நன்கு சேலை கட்டிவிட சொன்னார். கைகளுக்கு தங்கவளையல் மாட்டிவிட்டார், நெற்றியில் திருநீரு, குங்குமம் இட்டுக்கொள்ள மைதிலியை வற்புறுத்தினார். மைதிலியின் அம்மா "பொண்ணு இப்பதான் மகாலட்சுமி மாதிரி இருக்கா"

மைதிலியை அழைத்துக்கொண்டு போட்டோ ஷாப்புக்கு சென்றார். மைதிலியின்அப்பா போட்டோகாரனிடம் "இந்த போட்டோவை பொண்ணு பார்க்கிறவங்க கேட்டா கொடுக்கிறது. கொஞ்சம் நல்லா கலரா வர்ற மாதிரி எடுத்துக்கொடுங்க" போட்டோகாரன் பதிலேதும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டி மைதிலியை ஸ்டூடியோவினுள் அழைத்துச்சென்றான். மைதிலியின்அப்பா யோசனையில் இருந்தார். பெண்ணின் படம் சிறப்பாக வரவேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொண்டார்.

போட்டோவில் பெண் பார்த்து பிடித்துப்போய் மாப்பிள்ளை வீட்டின் பெரியவர்கள் மைதிலியை பார்க்க வந்திருந்தனர். மைதியிலியின்அப்பா வாழைக்காய் பஜ்ஜிக்கடை காரனுக்கு தரவேண்டிய ரூபாய் பற்றி மனதில் கணக்கு போட்டிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளைவீட்டார் பெண்ணை பற்றி விசாரித்தனர்.

"பொண்ணு என்ன படிச்சிருக்கு"

"பொண்ணு பி.எஸ்.சி விலங்கியல் படிச்சிருக்கா. இப்ப திருவனந்தபுரத்தில ஒரு .டி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்கா. மாசம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குறா"

"பொண்ணுங்க வேலை பார்த்து என்ன செய்ய போறாங்க. கல்யாணம் ஆகியிட்டா புருஷன், குழந்தைகளை பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கும்"

"பையன் என்ன படிச்சிருக்கார்?"

"படிச்சி என்ன பண்ணிட்டாங்க. காமராசர் என்ன படிச்சிருக்கார்? பையன் என்னோட உரம் வியாபாரம் செய்றான். தூத்துக்குடியில் மெயினான ஏரியால மூணு உரக்கடை இருக்கு. சொந்தமா பங்களாவீடு, ஒரு அபார்ட்மெண்ட்..."

"அப்ப பெரிய இடந்தான்னு சொல்லுங்க"

"பொண்ண கூப்பிடுங்க"

மைதிலி பெரியவர்களுக்கு வணக்கம் செய்துவிட்டு ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டார் மைதிலியை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். அவர்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மைதிலியின் அம்மா மைதிலியை ஒழுங்காக அமரச்சொன்னாள். அவளின் சைகைளை மைதிலி தவிர்த்தாள்.

"பேர் என்னம்மா?" என்று பையன்வீட்டார் மைதிலியிடம் கேட்டனர்.

"மைதிலி"

"சேலை கட்டத்தெரியுமா?"

"நீங்க வர்றது பொண்ணுக்கு தெரியாது. சட்டைய திருவனந்தபுரத்தி வச்சிட்டு வந்துட்டா" என்றாள் மைதிலியின்அம்மா.

"பொண்ணு சர்ச்க்கு போவாளோ? தலையில பூ, நெத்தியில குங்குமம் இல்லையே அதான் கேட்குறோம்"

"சர்ச்க்கு போகமாட்டா. பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனா பூ, குங்குமம் வைக்க விருப்பப்பட மாட்டா" என்றார் மைதிலியின்அப்பா.

மாப்பிள்ளை வீட்டார் எழுந்தனர்.

"பொண்ணு எங்களுக்கு பிடிச்சிருக்கு. மேற்கொண்டு ஆகிற வேலையை நம்ம உடனே ஆரம்பிச்சிடலாம்"

"ஆண்டி, நான் பையன் போட்டோவை இன்னும் பார்க்கலை" என்றாள் மைதிலி.

"பையன் உன்னைவிட லட்சணமா, அழகா இருப்பான்"

"ஆண்டி, பையன் என்ன படிச்சிருங்காங்க?"

"சபையில வைச்சி சின்ன பொண்ணு பெரியவங்களை கேள்வி கேட்க கூடாது. இது அநாகரீகம்?"

"ஆண்டி. எது அநாகரீகம்? பையனை பத்தி விசாரிப்பது தப்பா? நான் உங்க பையனோட வாழப் போறவா, உங்க பையனை பத்தின முழுவிவரம் எனக்கு தெரியணும்" என்று சுத்தமான ஆங்கிலத்தில் பேசினாள்.

"பொண்ணுக்கு தமிழ் சரியா வராதா?"

"ஆண்டி, நான் ரொம்ப மார்டன். எனக்கு சேலை கட்ட தெரியாது. சமைக்க தெரியாது. தலைக்கு பூ வைக்க மாட்டேன். நெத்தியில பொட்டு வைச்சிக்க மாட்டேன். நீங்க மகாலட்சுமி மாதிரி பொண்ண எதிர்பார்த்து வந்திருந்தா அது நிச்சயம் நான் கிடையாது "

பையன்வீட்டார் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினர். மைதிலி அதே இடத்தில் வெகுநேரம் நின்று வாசலை பார்த்துக்கொண்டிருந்தாள். மைதிலியின்அப்பா பஜ்ஜிக்கான ரூபாயை தருவதற்கு பஜ்ஜிகடை நோக்கி நடந்தார்.

****************** முற்றும் *****************

கிரகம்.

19/06/2011

No comments:

பார்வைகள்