Saturday, February 6, 2010

சிறுகதை - நூறாவது கவிதை

நிறம்: மாநிறம், உயரம்: ஐந்தடி ஆறு அங்குலம். முகமெங்கும் தாடி, தாடியின் பாதிமுடி கறுப்பாகவும், பாதிமுடி வெள்ளையாகவும் இருந்தது. நீ தான எங்கப்பாவை கொன்ன, உன்னை விடமாட்டேன் நிச்சயமாக நான் உன்னை கொல்வேன் தொடரும்...... ரத்தம் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது. வயிற்றில் குத்தப்பட்ட கத்தி எடுக்கப்படாமல் தரையில் கிடந்தான். கடல் அவனை உள்ளே இழுத்துக்கொண்டது. அவனது சுவடுகளை கூட விட்டுவைக்காமல் கடல்நீர் சுத்தமாக அழித்தது.60/51, மேற்கு சைதாப்பேட்டை வீடு ஆனந்தமாக இருந்தது. வீடெங்கும் எப்போதும் சிரிப்பொலிதான். மணி மிகுந்த சந்தோஷமாக இருந்தார். பல நாட்களுக்கு முன்பு கழுவி வைத்து உபயோகப்படுத்தாமல் இருந்த இங்க் பேனாவினுள் மையை ஊற்றினார். மை ஊற்றும்போது கட்டை விரலில்பட்ட ஊதா நிற மையை தலைமயிரில் தேய்த்தார். அவருடைய வெள்ளை முடியில் சில முடிகள் ஊதாநிறத்திற்கு மாறின. தூசி படிந்திருந்த ரூல்டு நோட்டை எடுத்தார். தூசியை துடைத்துக் கொண்டு தனது அறையை விட்டு வெளியேறி வீட்டின் நடுகாலுக்கு வந்தார். மருமகள் கமலா பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தாள். அவளைச்சுற்றி மணியின் மகள்கள் லதா, குமாரி, சிந்து மற்றும் மணியின் மனைவி ராசம்மா தரையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். மணி அவர்களை கடந்து சென்றபோது 'மாமா, எங்க போறீங்க?' என்றாள் கமலா. மணி 'பூங்கா வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்'. நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலா சில மாதங்களாகத்தான் சிரித்து பேசுகிறாள்.


மாலைநேரம் என்பதால் பூங்காவில் ஜனங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை தினம் என்பதால் பூங்காவில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பூங்காவிலிருந்த எல்லா சிமிண்ட் இருக்கைகளும் முழுமையாக பூர்த்தியாகியிருந்தன. மணி எதிர்பார்த்திருந்த சூழலில் பூங்கா இல்லை. பாதங்கள் பூங்காவை விட்டு வெளியேறி கலைஞர் வளைவிற்கு எதிரேயிருந்த சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றது. கோவளம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டார். ஜன்னலோர இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து கொண்டார். ரூல்டு நோட்டின் பக்கங்களை புரட்டுகிறார். காலம் மணியை இழுத்துச் செல்கிறது பின்னோக்கி அவருடைய குழந்தை பருவத்திற்கே.


மணி தன்னுடைய பத்துவயதில் வெங்கடேச நாயக்கரிடம் வேலைக்கு சேர்ந்தான். வெங்கடேச நாயக்கர் தனியார் பஸ் கம்பெனியின் முதலாளி. மணி வெங்கடேச நாயக்கரை முதலாளி என்றே அழைப்பான். டீ, காபி வாங்கித்தரும் எடுபுடி வேலையில் சேர்ந்த மணி கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை கற்றுக் கொண்டு பஸ் டிரைவராக உயர்ந்தான். ஒரு நாள் மணி ராசம்மாவை திருமணம் செய்து கொண்டான். ராசம்மா மணியின் கூடப்பிறந்த அக்கா மகள். சைதாப்பேட்டையிலுள்ள முருகன் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது. வெங்கடேச நாயக்கர் கல்யாணத்துக்கு வந்தவர்களில் அதிகமான மொய் பணம் எழுதியிருந்தார். எழுதிய தொகை நூறு ரூபாய். மணி முதலிரவு அறையில் விட்டத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தான். ராசம்மா ஆறு மாத காலமாக ஒரு வடநாட்டுக்காரனை காதலித்து வந்தாள். ராசம்மாவுக்கோ வட நாட்டுக்காரனின் பெயர்மட்டும் தெரியும். ஊர் என்ன? தொழில் என்ன? அப்பா யார்? அம்மா யார்? எதுவுமே தெரியாது. வடநாட்டுக்காரன் ராசம்மாளிடம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். ராசம்மாளின் அம்மா 'ஏண்டி முண்ட ஏதோ ஒரு நாய் கூப்பிட்டதுன்னு பின்னாடிப் போனியே அவன் யாருன்னு முழுசா தெரியுமாடீ?' என்று ராசம்மாளின் தலைமயிரை பிடித்து ஆட்டியபடி கேட்டாள். 'அந்த வடநாட்டு நாய்க்கு ஏற்கனவே ஆயிருக்காம் நாலு கல்யாணம், தெரியுமாடீ உனக்கு?' என்று கேட்டாள் ராசம்மாளின் அம்மா. ராசம்மா 'தெரியாது' என்றாள். 'என் தம்பி மட்டும் உன்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து கூட்டிட்டு வரலை. இப்ப நீ என் முன்ன நிக்கமாட்ட. ஒரு வருஷத்திலோ, இல்ல ஆறு மாசத்திலோ வயித்துல குழந்தையோட என் முன்னாடி வந்து நிப்ப'. ராசம்மாவின் அம்மா மணியின் காலில் விழுந்து தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு பிச்சை கேட்டாள். மணியும் செய்வதறியாது சரியென்று கூறினான்.


ராசம்மா வருடம் தோறும் தவறாது பிள்ளைஒன்றை பெற்றெடுத்தாள். முதலில் பிறந்தவள் சிந்து, இரண்டாவதாக குமாரி, மூன்றாவதாக லதா, கடைசியாக முத்து. மணி சம்பாதிக்கும் பணத்தில் முதல் செலவு சாராயம். சாராயத்திற்கு மிஞ்சிய பணம் ராசம்மாவின் கைக்கு போய்சேரும். முந்தய தின இரவில் நடந்த நிகழ்வுகளை பேப்பரில் எழுதி ராசம்மாவிடம் படிக்கக் கொடுத்தான் மணி. ராசம்மா வாசித்து பார்த்தாள் 'குடும்பம் ஒரு நாடக மேடை, நானோ நாயகன், நீயோ நாயகி, நம்பிள்ளைகளோ ரசிகர்கள், உன் திட்டுக்களோ பின்னனியிசை, பறக்கும் தட்டுகளோ போர்க்களம், உன் சிரிப்போ நகைச்சுவை' என்று ஒரு பக்கதாள் முழுவதும் எழுதியிருந்தது. 'மனசில கண்ணதாசனு நினைப்போ! முதல்ல உன் சம்பளத்தை என்கிட்ட முழுசா கொடு அப்புறமா கவிதை கழுதை எதவேணா எழுதிக்கோ' என்று முகத்தில் காரி துப்பாத குறையாக வைதாள் ராசம்மா.


மணிக்கு வாரத்தின் ஆறு நாட்கள் வேலை நாட்கள், வாரத்தின் ஏதாவது ஒரு நாள் விடுமுறை நாளாக இருக்கும். விடுமுறை நாளானது ஞாயிறு அல்லாத தினங்களில் அமைந்தால் மாலைநேரம் சைதாப்பேட்டை நூலகம் செல்வான். மணி நூலகத்தில் அதிகம் படிப்பது வார இதழ்களில் வரும் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் க்ரைம் கட்டுரைகள். கவிதைகளில் விரும்பிப்படித்தவை வைரமுத்துவின் கவிதைகள். ராசம்மா வயதுக்கு வந்த போது அவளுக்காக பட்டுபாவாடை, தாவணி வாங்கியிருந்தான். இது நாள் வரை ராசம்மாவிடம் கொடுக்கவில்லை, காட்டியதுமில்லை, பேசியதுமில்லை. இன்றும் அந்த பட்டு புடைவையும், தாவணியும் மணியின் டிரங்பெட்டியின் அடித்தளத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. கல்யாணத்திற்கு முன்பு மணி ராசம்மாவின் மீது ஒரு தலைக் காதல் கொண்டிருந்தான். மணி கவிதை எழுதுவதற்கு ராசம்மாவும் ஒரு விதத்தில் காரணம். அவன் எழுதும் கவிதைகளில் ராசம்மா கடுகளவேனும் இருப்பாள். இன்லாண்ட் லெட்டரில் கவிதைகள் எழுதி வார இதழ்களுக்கு அனுப்பி வைத்தான். சாராயத்துக்கு அடுத்தபடியாக மணியின் செலவுக் கணக்கில் இதுவும் சேர்ந்தது. எத்தனை கவிதைகள் அனுப்பியாகியது எதற்கும் பதில் கடிதம் வரவில்லை. மணி ஏன் என்று யோசித்து பார்த்ததில் தன் கவிதைகளுக்கு எங்கோ ஒரு இடத்தில் ஊனம் இருப்பதாக கருதினான். தொடர்ந்து மனம் தளறாது தன் வாசிப்பை இலக்கிய இதழ்களின் பக்கம் திசை திருப்பினான்.


மணியின் மூன்று மகள்களும் சமைந்தார்கள். ஒவ்வொரு வருட இடைவெளியில் ஒவ்வொரு மகள்களின் திருமணம் முடிந்தது. ஒரு வருடத்தில் மூன்று பெண்களும் மாசமாகி குழந்தை பெற்றெடுக்க ராசம்மாவின் வீட்டிற்கு வந்தனர். ஒரு வருடத்தில் ஒரு பெண்ணின் பிரசவ காலங்களை நல்ல படியாக கவனித்துக் கொள்ளவே கஷ்டப்படுவாள் ஒரு தாய். இங்கோ மூன்றுபேர். திண்டாடிப்போனால் ராசம்மா. இதுபோல் நெருக்கடியான காலங்களிலும், பிரச்சனைகளிலும் இன்பமான வலியை உணர்ந்தாள் ராசம்மா. பேருந்து கோவளத்தை வந்தடைந்தது. பேருந்திலிருந்து இறங்கிய மணி தர்கா வாசலை கடந்து கடற்கரை நோக்கி நடந்தார்.


முத்துவுக்கும் கமலாவுக்கும் திருமணம் முடிந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று வருடங்கள் கடந்தன. கமலாவிற்கு மாதவிலக்கு நிற்கவில்லை. தினப்பொழுதின் பகலை கடப்பது கமலாவிற்கு நீந்த தெரியாத ஒருவன் நடுக்கடலில் விடப்பட்டது போல் இருந்தது. ராசம்மாவின் ஒவ்வொரு வார்தைகளும் கமலாவின் இதயத்தை குத்தி கிழித்தன. அவளுக்கென்று துணையாக நினைத்தது இரவில் தனிமையும், முத்துவையும். வருடமும் நகர்ந்தது. ஐந்து வருடங்களாகியும் குழந்தை பெற்றெடுக்கவில்லை கமலா.


மணியின் கவிதைகள் யாவும் அவனது சூழலை பின்னியேயிருந்தது. அவனுடைய ஒரு கவிதைகள் கூட அவன் வீட்டு படிக்கட்டை தாண்டியதில்லை. மணியின் கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதைகள். மரபுக்கவிதைகள் எழுதுமளவிற்கு அவன் படித்ததில்லை. ஒரு கவிஞன் எப்போது சாகிறான் என்றால் அவனது கவிதைகள் வாசிக்கப்படாத போது மணியும் ஒரு விதத்தில் செத்தவன்தான்.


வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நீ தான எங்கப்பாவை கொன்ன உன்னை விடமாட்டேன் நிச்சயமா நான் உன்னை கொல்வேன்' என்று கத்தி கூறுகிறான் முப்பது வயது ஆண். தொடரும்.... என்று அந்த வாரத்திற்கான எப்பிஸோடு முடிந்தது.


கமலாவிற்கு வாந்திவந்தது. அடுத்த பத்தாவது நாளில் ஊர்ஜிதமானது. கமலா மாசமாக இருப்பது. கமலாவிற்கு அப்பா, அம்மா கிடையாது. அவள் ஒரு அனாதை. அவள் படித்தது, வளர்ந்தது எல்லாம் அனாதை ஆசிரமத்தில். மணியின் கடைசி மகளான லதாவும், கமலாவும் பள்ளி தோழிகள். வாரவிடுமுறை நாட்களில் கமலா மணியின் வீட்டிற்கு வருவாள். கல்லூரிக்கு சென்ற பிறகும் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தனர். முத்து கமலாவை காதலித்தான். முத்து மணியிடம் கமலாவை மணந்து கொள்ள சம்மதம் கேட்டான். மணியும் ராசம்மாவும் கலக்கமின்றி சரியென்று கூறினர்.


கமலா பிளாஸ்டிக் சேரிலும், சிந்து, குமாரி, லதா மற்றும் ராசம்மா தரையில் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். கமலா பட்டுச்சேலை உடுத்திருந்தாள். கைகள் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். கன்னங்களில் சந்தனம் பூசப்பட்டிருந்தது. நெற்றியெங்கும் பூசப்பட்டிருந்த திருநீறு, சந்தனம், குங்குமம் சரிவர இல்லாமல் கோணலாகயிருந்தது. 'ரத்தம்! ஊடல் முழுவதும் ரத்த வெள்ளமாகயிருந்தது. வயிற்றில் குத்தப்பட்ட கத்தி எடுக்கப்படாமல் தரையில் கிடந்தான்' தொடரும்........ என்று முடிந்தது அந்த வார எப்பிஸோடு, மணி பத்தென காட்டியது கடிகாரம்.


பத்து மணியாகியும் வீடு திரும்பாமல் இருந்த மணியை தேடி சென்றான் முத்து. முதலில் பூங்காவில் சென்று பார்த்தான் பூங்கா பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. எங்கு சென்றிருப்பார் என்ற யோசனையில் பூங்காவின் வாசலில் நின்றிருந்தான் முத்து.


மணி கோவளத்தின் கடற்கரையோர மணல் மீது அமர்ந்திருந்தார். பௌர்ணமி வெளிச்சத்தில் ரூல்டு நோட்டின் பக்கங்களை திருப்பினார். பக்கத்திற்கொரு கவிதைகள் எழுதியிருந்தார். பக்கங்களுக்கு எண்கள் இட்டார் ஒன்று, இரண்டு என்று ஏறுவரிசையில் ஊதா நிற மைபேனாவால் பக்கங்களை திருப்பினார் காற்றும் அவருடன் சேர்ந்து படித்தது ஒவ்வொரு பக்கங்களாக. திருப்பப்பட்ட பக்கங்கள் மொத்தம் 99. நூறாவது பக்கம் எழுதப்படாமலிருந்தது. எழுதத்தொடங்கினார்.


மலடல்ல
என் மருமகள்
பூக்கள் பூக்கும்
நந்தவனமவள்


நிலவுபோல்
பிள்ளை பெறப்போகிறாள்
இன்னும் மூன்று மாதங்களில்


நட்சத்திரங்களே
தொட்டில் கட்டுங்கள்
வானவில்லால் வானத்தில்
என்பேரனை
தாலாட்ட


செத்துப்போன
இந்த கவிஞனின் சிந்தனைகளை
என் பேரனுக்கு கற்றுக் கொடுங்கள்
அவனாவது
இந்நாடு போற்றும்
கவிஞனாக வாழட்டும்
செய்வீர்களா சொல்லுங்கள்?

இருதயத்தில் வலித்தது. முகத்தில் வேர்வை முத்துக்கள் போட்டன. எழுந்திறிக்க முடியவில்லை. நாக்குவரண்டது. கத்துவதற்கு திராணி இல்லை. நோட்டு ஒருபுறம், பேனா ஒருபுறம் கிடந்தது. திருட்டுத்தனமாக அவனது கவிதைகளை கடல் காற்று படித்தது. கடல் லாவகமாக மணியை உள்ளே இழுத்தது. மணி எதுவும் பேசவில்லை. கடல்நீர் மணியின் கவிதைகளை விரும்பிபடித்தன. படிக்க படிக்க எழுத்துருக்கள் அழிந்துவந்தன. கடல் அவனை உள்ளே முழுவதுமாக உள்ளே இழுத்துக் கொண்டது. அவனது சுவடுகளை கூட விட்டு வைக்காமல் கடல் நீர் சுத்தமாக அழித்தது. அவனது மைபேனாவை மட்டும் உள்ளே இழுத்துச் செல்லாமல் கரையிலே விட்டுச்சென்றது கடல். இரத்த ருசி பார்த்த காட்டேரி போல் கத்தியது கடல்.


சைதாப்பேட்டை இரயில் நிலையத்தின் டிக்கெட் வாங்கும் வரிசையில் நிற்கிறாள் கமலா. அவளது கையில் அவள் மகன.; சுவரொட்டியை பார்க்கிறான் அந்த சிறுவன். காணவில்லை உயரம் ஐந்தடி ஆறு அங்குலம். படத்தில் இருப்பவரின் முகத்தில் முகமெங்கும் தாடி, தாடியின் பாதிமுடி கறுப்பாகவும், பாதிமுடி வெள்ளையாகவும் இருந்தது. காணாமல் போன போது கறுப்பு நிற பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு எழுதியிருந்தது. சிறுவன் கமலாவிடம் இவர் யாரென்று கேட்டான். 'இவர்தான் உன் தாத்தா மணி' என்று கூறிவிட்டு இரயிலை பிடிக்க ஒட்டமிட்டாள் கமலா.


---- முற்றும் -----

தடாகம் இணைய இதழில் வெளியானது

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்குதுங்க....

கிரகம் said...

நன்றி சங்கவி.

- கிரகம்

பார்வைகள்