1
வேலை பார்க்கும் அலுவலகம்
திடுக்கென்று தூக்கத்திலிருந்து எழுந்த சுவீர் நடுகாலில் பிள்ளையார் படத்தின் மேல் எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் மஞ்சள் பல்பை பார்த்தான். சுவீரின் அப்பா, அம்மா நடுகாலிலும், அண்ணி உள் அறையிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். சுவீரின் அண்ணன் லேத் ஆப்ரேட்டராக மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடிகாரத்தில் மணியை பார்த்தான். மணி பத்தென காட்டியது. திரும்பவும் கட்டிலில் படுத்து தூங்க முயன்ற போதும் தூக்கம் வராமல் விழித்தே இருந்தான். தேநீர் பருகும் எண்ணம் வந்து வீட்டின் வாசலை கடந்து வெளியே சென்றவன் குளிர் தாங்க முடியாமல் வீட்டினுள் நுழைந்து ஜெர்கின் மாட்டிக்கொண்டு தேநீர்கடை நோக்கி சென்றான். ஹைய்தராபாத்தில் டிசம்பர் மாதத்தில் பனி கடுமையாக இருக்கும். சாலையின் ஒரு புறத்தில் ரோட்டில் கிடக்கும் காகித கழிவுகளை பொறுக்கி வந்து அதனை எரித்து வரும் வெப்பத்தில் கூட்டமாக குத்துக்காலிட்டு உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் ஆட்டோ டிரைவர்கள். தேநீர்கடையின் வாசலில் நின்று தேநீர் குடித்துக்கொண்டிருந்த சுவீர் தேநீர்கடையை அடுத்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும் கழுத்தில் மாலையும் இடுப்பில் கருப்பு வேஷ்டியும் நெற்றியில் நீட்டமாய் சந்தனம் அதன் மத்தியில் வட்டமாக குங்குமம் இட்டிருக்கும் ஜய்யப்ப சாமிகளை பார்த்தான். தேநீர் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தவன் தூங்கிப்போனான். கிழக்கில் சூரியன் உதயத்திற்கு தயாராகிக்கொன்டிருந்தது.
சுவீர் வேலை பார்க்கும் அலுவலகம் ஹைய்-டெக் சிட்டியிலுள்ள சைபர்-பேர்ல் வளாகத்தில் ப்ளாக் ஒன்று கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ளது. அலுவலக ரிசப்சனில் இரு நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் பூங்கொத்து மேஜை மீது இருக்கும். ரிசப்சனில் இருக்கும் ஜம்பது வயது நிரம்பிய செக்யூரிட்டி சுவீரை சார் என்று அழைப்பார். சுவீர் அவரிடம் சார் தேவையில்லை பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் என்று பல முறை சொல்லிய பிறகும் அவர் கேட்பதாகயில்லை. நுழைவாயிலை கடந்து வலது பக்கமான பாதையில் சென்றால் பாதையின் இடது பக்கமாக கேன்டின் வரும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் பாதையின் இருபுறத்திலும் ஜந்தடி உயர மரப்பலகையிலான கப்-போர்டு இருக்கும். கப்போர்டின் மேல் பிளாஸ்டிக் பூந்தொட்டி முழுவதும் மண் நிரப்பப்பட்டு பச்சையம் இல்லாமல் வளரும் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும். பாதை முடியும் இடத்தின் இடப்பக்கம் லேப் வரும். லேபினுள் நான்காவது வரிசையின் ஒரு கோடியில் சுவீர் வேலை பார்க்கும் இடம் உள்ளது. சுவீர் வேலை பார்க்கும் இடத்தில் நான்கு சால்டரிங் ஸ்டேஷன், லெட், பேஸ்ட், சால்டரிங் செய்யும் போது வெளிவரும் புகையை உள்ளிழுத்து வெளித்தள்ளும் புகைக்கூண்டு, வெள்ளை நிற பல்பு பொருத்தப்பட்ட வட்டவடிவ பூதக்கண்ணாடி, சிகப்பு மற்றும் கருப்பு நிற வண்ணங்களில் சுற்றி வைக்கப்பட்ட மல்டி ஸ்டேண்டு வயர் இருக்கும். சால்டரிங்அயனின் வெப்பத்தை உயர்த்தி நன்கு சூடான பின்பு அதனை லெட்டில் தொட்டால் புகைவரும் அத்துடன் லெட் சால்டரிங்அயனில் லேசாக ஒட்டிக்கொள்ளும். சால்டரிங்அயனில் ஒட்டிக்கொண்டிருக்கும் லெட்டால் PCB (Printed Circuit Boards) துளையினுள் சொருகியிருக்கும் ரெசிஸ்டரின் முனையை PCBல் இருக்கும் துளையுடன் சேர்த்து ஒட்ட வேண்டும். இது தான் சுவீரின் வேலை.
சுவீர் அலுவலகத்தில் அதிகம் பயப்படுவது அவனின் மேனேஜரான டாங்கேவிற்கு. அவரின் பெயர் சுவிரின் வாயிலிருந்து சரியாக வராது. டாங்கே என்று சொல்வதற்கு பதிலாக டாங்கி என்று சொல்லியிருக்கிறான். டாங்கே நாற்பது வயது நிரம்பியவர். மறந்து போய் டை அடிக்காமல் வரும் நாட்களில் கொத்தாக தலைமுடிகள் வெள்ளை நிறத்திலும், மீசையில் சில முடிகளும் வெளியே வந்து கண்ணடிக்கும். ரொம்ப கண்டிப்பானவர் போல் வெளியே காட்டிக்கொள்வார். அவர் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள தெரியாததை தெரிந்த மாதிரி தெரிந்தவர்களிடம் கேள்விகளாக மாற்றி கேட்பார். கேள்விக்கான பதில் கிடைத்ததும் ஒப்பிக்க வேண்டிய இடத்தில் ஒப்பித்து நன்மதிப்பு பெற்றுக்கொள்வார். அவர் அதிகமாக உபயோகிக்கும் வாக்கியம் "மைண்ட் இட் வெரி வெல்". அவரிடம் எதாவது விசாரிக்கச் சென்றால் அவர் எதிரே உட்கார வைத்து பேசுவார். அவர் பேசி முடிந்ததும் எதிரே அமர்ந்திருப்பவரின் பதிலுக்காக காத்திருப்பது போல் எந்தவொரு அசையுமின்றி எதிர் அமர்ந்திருப்பவரின் கண்களையே வெகுநேரம் பார்ப்பார். அவரின் அந்தப்பார்வை எதிரே அமந்திருப்பவருக்கு குற்ற உணர்ச்சியை தோற்றுவிக்கும். அந்த கணம் ஏதோ தவறு செய்து விட்டு தண்டனை வாங்க காத்திருப்பது போலிருக்கும். அவரின் வெகுநேர பார்வைகளே சுவீரை பல முறை பயமுறுத்தியிருக்கிறது.
சுவீர் டாங்கேவிற்கு அடுத்தாக அலுவலகத்தில் பயப்படுவது கெமராஜ். கெமராஜ் ஒரு டெஸ்டிங் இன்ஜினேயர் சுருக்கமாக இரண்டு வார்த்தையில் அவரின் வேலையை சொல்ல வேண்டுமென்றால் குறை கண்டுபிடிப்பவர். டாங்கேயிடம் அதிகம் பேசுவது, வாதிடுவது கெமராஜ் மட்டும் தான். அதனால் டாங்கேயின் பல குணாதிசயங்கள் கெமராஜிடம் தெரிந்தது. அதில் ஒன்று டாங்கேயைப் போல் வெகுநேரம் நிலைக்குத்தியது போல் பார்க்கும் பார்வை.
சுவீரின் அலுவலகத்தில் பல அழகான் பெண்கள் இருந்தாலும் அவனுக்கு பிடித்தமான பெண் ரீமா. அவள் அணிந்து வரும் தொடையிலிருந்து கால் வரையிலான இறுக்கமான ஜீன்ஸ்பேண்டும் மார்பகங்களை வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும் டீ-சர்ட்டும் சுவீரை அதிகம் கவர்ந்திருந்தது. சுவீரை விட நான்கு வயதே குறைந்தவளானாலும் பார்ப்பதற்கு பதினெட்டு வயது பெண் போல இருப்பாள்.
2
கனவில் வருபவர்கள்
அன்று கெமராஜ் சுவீரை அதிகமாக அனத்தியிருந்தான். கெமராஜ் செய்திருந்த காரியங்கள் சுவீருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. சுவீர் கெமராஜை விரட்டுகிறான். சுவீரின் கையில் சால்டரிங்அயர் சூடாக இருக்கிறது. கெமராஜ் சுவீரிடமிருந்து தப்பித்து ரிசப்சனில் லிப்டிற்காக காத்திருக்கிறான். கெமராஜை பார்த்துவிட்ட சுவீர் அவன் அருகில் ஒடி வந்து தப்பிக்கவிடாமல் பிடித்து அவன் வாயில் சால்டரிங் அயனால் சூடு வைக்கிறான். சுவீர் கெமராஜின் வாயில் சூடு வைப்பதை தூரத்திலிருந்து டாங்கே பார்க்கிறார். இந்த கனவு வந்த அன்று சுவீர் சீக்கிரமே எழுந்து அலுவலகம் சென்று கெமராஜை தேடினான். கெமராஜ் கேன்டீனில் பர்க்கர் தின்று கொண்டிருந்தான். சுவீர் கெமராஜின் வாயை உற்று நோக்கினான். கெமராஜின் வாயில் சூடு போட்ட தடம் இல்லையென்று தெரிந்ததும் சுவீரின் மனம் நிதானமானது.
நுழைவாயிலில் இருந்து வலப்பக்கமாக செல்லும் பாதையில் நடந்து இடப்பக்கம் சென்றால் கழிப்பறை வரும். சுவீர் யூரினல் பேசனில் மூத்திரம் பெய்து கொண்டிருந்த போது நேற்றைய கனவில் வந்த ரீமாவின் உருவம் கண்முன் தோன்றியது. காமம் அவன் உடலை கவ்விக்கொண்டு பிறப்புறுப்பை விறைப்படைய செய்தது. மூத்திரம் பெய்து விட்டு சோப்பு நுரையால் கைகளை தேய்த்து கழுவிக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த கண்ணாடியில் அவளின் உருவம் மீண்டும் தோன்றியது. ரீமா ஆடைகள் இல்லாமல் தரையில் மண்டியிட்ட படி முலைகளை முன் தள்ளிக்கொண்டு மேலே பார்த்தபடி இரண்டு கைகளையும் கால்களின் பின்னால் ஊன்றியிருந்தாள். சுவீர் முலைகளின் காம்பை வருட எண்ணி உருவத்தின் மீது விரலை வைத்தான். கண்ணாடியிலிருந்த உருவம் மறைந்து முலைக்காம்புயிருந்த இடத்தில் சோப்பு நுரையிருந்தது.
சுவீர் தமிழ் மக்கள் வேலை செய்யும் இடத்தை கடந்து சொல்லும் போது அவர்கள் டெஸ்க்-டாப்பில் ஜஸ்வர்யாராயின் படம் இருந்தது. ஜஸ்வர்யாராயின் கண்களை உற்று கவனித்தவன் அவர்களிடம் "ஜஸ்வர்யாராய்க்கு பூனைக்கண்களா?" என்று கேட்டான். அவர்களில் ஒருவன் "என்ன சுவீர் ஜஸ்வர்யாவை கட்டிக்க ஆசையா? அபிஷேக் பச்சனை டைவர்ஸ் பண்ணிட்டு ஜஸ்வர்யா உங்களை கல்யாணம் செய்துக்க கூப்பிடும் போது நேராவே அவளோட கண்களை பார்த்திடலாம். இப்ப போய் வேலையை பாருங்க" என்று கேலி செய்தனர். சுவீர் இணையத்தில் ஜஸ்வர்யாவின் சில புகைப்படங்களை பார்த்த பின்பு ஜஸ்வர்யாராய்க்கு பூனைக்கண்கள் என்று முடிவு செய்தான். அன்றிறவு அவன் கனவில் ஜஸ்வர்யாராய் ஆடையில்லாத உருவத்தில் வருவாள் என்று நினைத்திருந்தான். ஏனோ அன்றைய இரவில் கனவுகளே இல்லாத நிம்மதியான தூக்கம் கிட்டியது.
3
திருமணம் என்றொரு பரிட்சை
சுவீர் திருமணத்திற்காக ஆறு பெண்களின் போட்டோக்களை பார்த்ததில் இரண்டு பெண்கள் அவனுக்கு பிடித்திருந்தது. முதல் பெண் நல்ல அழகானவள். பி.எஸ்.சி படித்திருக்கிறாள். போட்டோவிலிருப்பதை விட நேரில் பார்ப்பதற்கு கூடுதலாகவே அழகாகயிருந்தாள். சுவீர் அவளிடம் தனக்கு பிடித்திருக்கிறது என்று நேரடியாக கூறினான். அவளோ தலையை கீழே குனிந்தபடி பிடித்திருக்கிறது என்பதை தலையசைத்து சபையோரிடம் கூறினாள். திருமணப் பரிட்சையில் தேர்வாகிவிட்டதாக எண்ணியிருந்த ஒரு வாரத்தில் பெண் வீட்டாரிடமிருந்து அவனுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்ற தகவல் வந்தது. நிராகரிப்பின் வலியை முதன் முதலில் உணர்ந்தான். தன்னிடமிருக்கும் குறைகளை தோண்டி எடுக்க ஆரம்பித்தான். ஜ.டி.ஜ மட்டும் படித்திருக்கும் கல்வித்தகுதி அவளுக்கு பிடிக்காமல் போயிருக்குமோ? வேலைக்கு சேர்ந்த புதிதில் கூர்ந்து கவனித்து வேலை செய்ததால் கண் குறைபாடு ஏற்பட்டு நிரந்தரமாக ஆகிவிட்ட மூக்கின் மீது அமர்ந்திருக்கும் மூக்குக் கண்ணாடி பிடிக்காமல் போயிருக்குமோ? தோண்டத் தோண்ட அவன் நினைத்த குறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
இது நடந்த ஒரு மாதம் கழித்து இரண்டாவது பெண்ணை நேரில் சென்று பார்த்து வந்தான். பெண்ணின் ஊர் சிலுக்கூரிலிருந்து ஜந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இரண்டாவது பெண் முதல் பெண்ணின் அளவு அலகில்லையென்றாலும் நல்ல முகலட்சணமாக இருந்தாள். பி.எட் படித்திருக்கிறாள். பெண் பார்க்க சென்றிருந்த போது சுவீர் அவளின் விருப்பத்தை முதலில் கேட்டான் அதன் பின்பு அவனின் விருப்பத்தை கூறினான். சுவீர் வேலையில் மூழ்கியிருந்த போது மாலைப்பொழுதில் அவளிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அவளின் அழைப்பை ஏற்று சைபர்-டவரின் எதிரேயிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவளுக்காக காத்திருந்தான். அப்போது ரீமாவின் ஆடையில்லாத உருவம் அவன் கண் முன் தோன்றி மறைந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கியவள் சுவீரை நோக்கி நடந்து வந்தாள். துப்பட்டாயில்லாத சுடிதாரில் வந்திருந்தாள். காற்றில் பறந்த டாப்ஸை கைகளால் மறைக்க முயன்ற போது அவள் அணிந்திருந்த பேண்ட் அவளின் தொடைகளை இறுக்கமாக பற்றியிருப்பது தெரிந்தது. அருகில் வந்தவள். "ஏன் போன்ல பேசும் போது அவ்வளவு மெதுவா பேசுனீங்க?" என்று கேட்டாள். "மேனேஜர் பக்கத்தில் இருந்தார் அதான் மெதுவா பேசினேன்" என்றான். "சரி வாங்க டீ சாப்பிட்டுட்டே பேசலாம்" என்றழைத்தாள். சுவீர் அவளிடம் "நிஜமாகவே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று கேட்டான். சிறு புன்னகையை உதட்டில் உதிர்த்த படி விழித்திரையை மெதுவாக மூடித்திறந்து அவளுக்கு பிடித்திருக்கிறது என்றாள். சுவீர் அவள் கண்களையே பார்த்தான். அந்த ஜோடிக் கண்களில் கனிவிருந்தது, பரிவிருந்தது, பாசமிருந்தது. உனக்கு நான் எனக்கு நீ என்பதை அவள் கண்களின் பார்வையில் உணர்ந்தான். அவளின் கைகளின் விரல்களுக்குள் சுவீர் தன் விரல்களை உள் செலுத்தி இறுக்கமாக பற்றிக் கொண்டு தேநீர் கடை நோக்கி நடந்தான். மேற்கே சூரியன் பாதி இளஞ்சிவப்பு நிறத்திலும் பாதி ஆரஞ்சு நிறத்திலும் ஒளிக்கதிர்களை சிதறடித்த வண்ணம் மறைந்து கொண்டிருந்தது.
வல்லினம் இணைய இதழில் வெளியாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment