Tuesday, March 30, 2010

சிறுகதை - பெண் ஒருத்தியின் கதை

2020 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

மஞ்சுளாவை பார்க்க கூகட்பள்ளியிலிருக்கும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். மஞ்சுளாவை பார்த்து ஆறு வருடத்திற்கு மேல் இருக்கும். மஞ்சுளாவை முதன் முதலில் பார்த்தது எரகடா சந்தையில்.....

2010 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

மியாபூர் பஸ் ஸ்டாண்டில் எரகடா சந்தை வழியாக செல்லும் பஸ்ஸிற்காக நானும், சீனிவாச ரெட்டி அண்ணனும் காத்திருந்தோம். அப்போது நான் ஹைய்தராபாத்திற்கு புதிது. பள்ளி, இண்டர் (தமிழ்நாட்டில் +1, +2 போல) யூஜி, பீஜி படித்தது எல்லாம் விஜயவாடா. ஹைய்தராபாத்திலுள்ள பார்மா கம்பெனியில் வேலை கிடைத்ததால் ஹைய்தராபாத் வந்தேன் இல்லையென்றால் விஜயவாடாவில் அப்பாவிற்கு உதவியாக அங்கேயே இருந்திருப்பேன். படித்தது M.SC chemistry. மாதச் சம்பளம் ஆயிரத்து ஜநூறு . அலுவலகமானது போலாரம்மில் இருந்தது. அலுவலகத்தின் அருகில் ரூம் எடுத்து தங்கியிருந்த ரெட்டியுடன் தங்கி இருந்தேன். ஊருக்கு புதிது என்பதால் ஊரை சுற்றிக்காட்ட ரெட்டி என்னை அழைத்துச் சென்ற முதல் இடம் எரகடா சந்தை.

எரகடாவில் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும். சந்தையில் கிடைக்காத பொருள்கள் என்று எதுவுமே கிடையாது. சட்டி பானைகள் விற்கும் பாத்திரக்காரன், செருப்பு சூ விற்பவன், ஜீன்ஸ்பேண்ட் டீ-சர்ட் ஜெர்கின் விற்பவன், ஆடு விற்பவன், கோழி விற்பவன், முயல் விற்பவன், லவ் போர்ட்ஸ் கிளி விற்பவன், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பவன் ரோட்டின் மேல் கடை போட்டிருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலே சந்தை ஆரம்பித்தாலும் மாலை நான்கு மணிக்கு மேல் தான் சந்தை கலை கட்டும். ஒவ்வொரு கடைக்கு முன்னும் குறைந்தது பத்து பேராவது நிற்பார்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் நூறு ரூபாய்க்கு மேல் வாங்காதே என்று ஒவ்வொரு கடையாக நின்று விலை விசாரித்த போது ரெட்டி என்னிடம் கூறினார். டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவில் குளிர் கடுமையாக இருக்குமென்று கம்பளி வாங்கிக் கொள்ள சொன்னார் ரெட்டி. ஜநூறு ரூபாய் சொன்ன கம்பளியை இருநூறு ரூபாய்க்கு பேரம் பேசி கம்பளியை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டியை காணவில்லை. அரைமணி நேர தேடலுக்கு பின் முயல் விற்பனின் கடைக்கு அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார் ரெட்டி. ஏன் என்னை தனியாக விட்டுவிட்டு வந்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு நீண்ட நாள்களுக்கு பின் பார்த்த தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டே நடந்ததால் என்னை மறந்து விட்டதாக கூறினார். குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த பெண் நல்ல கலராகயிருந்தாள். பாவாடை, சட்டை அணிந்திருந்தாள். சின்ன பெண்ணாகயிருந்தாள். அவளின் மார்பகங்கள் உடலுக்கு தகுந்தாற் போல் இல்லாமல் சற்று பெரிதாகயிருந்தது. ரெட்டி என்னை ரூமிற்கு போகச் சொல்லிவிட்டு அவள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துவிட்டு நாளை காலை ரூமிற்கு வருவதாக கூறி அந்த பெண்ணுடன் சென்றார். மேற்கே சூரியன் முழுவதுமாக மறைந்திருந்தது. சந்தையை இருள் கவ்வியிருந்தாலும் அந்த இருட்டிலும் வியாபாரிகள் டார்ச்-லைட் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

சில்லரைக்காக ரெட்டியின் சட்டைப்பைக்குள் கைகளை விட்டு துழாவிய போது உபயோகிக்காத ஆணுறை கைகளில் பிடிபட்டது.

அடுத்த வாரமும் நானும் ரெட்டியும் எரகடா சந்தைக்கு சென்றோம். எரகடா சந்தையில் கூட்டம் அதிகமாகயிருந்தது. வண்ண வண்ண நிறங்களிலான டீ-சர்ட் தொங்கவிடப்பட்டிருந்த கடையை கடந்து சென்றோம். தள்ளுவண்டியில் அவித்த கடலை விற்றுக் கொண்டிருந்தவனிடம் பொட்டலம் ஒன்று ஜந்து ரூபாய் வீதம் மூன்று பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். முந்தைய வாரம் பார்த்த பெண்ணும் எங்களுடன் இருந்தாள். பச்சைநிற சட்டையும், நீலநிற பாவடையும் அணிந்திருந்தாள். அவித்த கடலையை உடைத்து தின்றபடி மூன்று பேரும் எரகடா சந்தையில் சுற்றினோம். ரெட்டி அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவளின் பெயர் மஞ்சுளா. அருகிலிருந்த தேநீர் கடையில் தேநீர் பருகிக்கொண்டிருந்த போது ரெட்டிக்கு செல்போனில் அழைப்பு வந்து எங்கள் இருவரையும் தனித்து விட்டுவிட்டு செல்போனில் பேசுவதில் மும்முரமானார். தேநீரை சுவைத்து குடித்துக் கொண்டிருந்தவள் நான் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து என்னை பார்த்து சிரித்தாள். அவளின் சிரிப்பு அழகாகயிருந்தது. அவள் என் பெயரை கேட்டாள் நானும் கூறினேன். நானும் தொடர்ந்து அவளின் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என விசாரித்தேன். அவள் கூறியதை கேட்டு அவள் மேல் எனக்கு பரிதாபம் வந்தது. அவளின் சொந்த ஊர் மைசூர். அவளின் அப்பா பெரிய குடிகாரன் தினமும் குடித்துவிட்டு அவள் அம்மாவுடன் சண்டை போடுவான். ஒரு நாள் இரவில் சண்டை அதிகமாகவே அவளின் அப்பா அவள் அம்மாவின் தலையில் கல்லைப் போட்டு கொன்று சடலத்தை வீட்டின் பின்புறத்திலிருந்த தோட்டத்தில் புதைத்து விட்டான். இந்தக் கொலையை கண் முன்னே பார்த்த மஞ்சுளா, மஞ்சுளாவின் தங்கை மற்றும் இரண்டு தம்பிகளையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றான் மஞ்சுளாவின் அப்பா. மீண்டும் வீடு திரும்பிய மஞ்சுளாவின் அப்பா ஆண் ஒருவனுடன் வந்தான் . அந்த ஆணிடம் மஞ்சுளாவின் இளைய தம்பியை பத்தாயிரம் ரூபாய் பணத்திற்கு விற்றான். மற்ற மூவரையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற மஞ்சுளாவின் அப்பா வீடு திரும்புவதற்கு முன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்பு மூன்று பேரும் பூங்காவிலும், சாலையின் ஓரத்திலும், பேருந்து நிறுத்ததிலும் தங்கி வந்தனர். சாப்பாடு வாங்கி வருவதாக சென்ற மஞ்சுளாவின் தம்பி திருடியதற்காக போலிஸ்சிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது முயல் விற்பவனின் உதவியால் ஹைதராபாத் வந்ததாக கூறினாள். செல்போனில் பேசிவிட்டு திரும்பிய ரெட்டி மஞ்சுளாவுடன் அவளின் வீட்டிற்கு சென்றார். நான் விற்காமல் இருந்த பொருட்களை கூவிகூவி விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் கடை நோக்கி சென்றேன். ரெட்டி மஞ்சுளாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று சொன்னதும், மஞ்சுளா அவள் அப்பா பற்றி சொன்னதும் ஒத்துப்போகாதவையாக இருந்தன.

ரெட்டி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வந்திருந்த காலை அவர் சட்டை பையை துழாவிய போது உபயோகிக்காத ஆணுறை மீண்டும் கிட்டியது. ரெட்டி எதற்கு மஞ்சுளாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார் என்பதில் எனக்கு சந்தேகம் வந்தது.

சங்காரெட்டியிலுள்ள எங்கள் கம்பெனியின் கிளை அலுவலகத்திற்கு ரெட்டி மாற்றலாகிச் சென்றார். தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதில் மஞ்சுளாவை பார்க்க எரகடா சந்தைக்கு சென்றேன். மஞ்சுளா எப்போதும் அமர்ந்திருக்கும் முயல் விற்பனின் கடைக்கு அருகில் அமர்ந்திருந்தாள். முயல் வாங்க வந்தவன் போல் முயல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த மஞ்சுளா ரெட்டியை பற்றி விசாரித்தாள். என் தேவைகளை அறிந்தவள் போல் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

தெலுங்கானா பந்த் நடந்து கொண்டிருந்ததால் சாலையில் அரசுப் பேருந்துகள் அவ்வளவாக ஓடவில்லை. ஷேர் ஆட்டோ மட்டும் ஆட்களை ஏற்றி இறக்கிய வண்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகமாக குடித்திருந்ததால் நடப்பதற்கே கஷ்டமாக இருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றேன். மஞ்சுளாவின் வீடு பூட்டியிருப்பதை பார்த்து மஞ்சுளாவின் மேல் கோபம் வந்தது. செல்போனில் அவளை அழைத்து பேசினேன். வீடு மாற்றப்பட்டு கூகட்பள்ளியிலுள்ள அபார்ட்மெண்டில் வீடு எடுத்திருப்பதாக கூறினாள். வீடு மாறியதை ஏன் எனக்கு கூறவில்லையென்று அவளை திட்டி அவளின் கூகட்பள்ளி வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு அவளை பார்க்க சென்றேன். மறுநாள் காலை குளிக்கும் போது நகங்களுக்குள் இருந்த இரத்ததை பார்த்து பயத்து போனேன். ஒன்றிரண்டு விரல்களின் நகங்கள் அல்ல பத்து விரல்களின் நகங்களுக்குள்ளும் இரத்தகரை இருந்தது. பதறியடித்து மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றேன். கதவை திறந்தவள் நைட்டியில் இருந்தாள். என் நகங்களிலிருந்த இரத்தக்கரையை அவளிடம் காட்டினேன். அவள் பரவாயில்லை என்பது போல் தலையை ஆட்டினாள். அவளின் ஆடைகளை களைந்து உடலை பார்தேன். அவளின் உடலை என் நகங்கள் தின்றிருந்தன. நகக்கீறல் பட்டிருந்த வலது மார்பினை என் விரல்கள் தொட்டவுடன் அவளின் உடல் சிலிர்த்தது. நான் செய்த தவறை எண்ணி என்னையே நான் வெறுத்தேன்.

2012ம் ஆண்டு,

மஞ்சுளா பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்து வந்தாள். தன்னுடன் தங்கி படித்துக் கொண்டிருந்த தங்கையை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தாள். பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். அழகாக முடிகளை திருத்திக் கொண்டாள். நகவிரல்களை சீராக வெட்டி நகங்களுக்கு சிகப்பு வண்ணம் பூசிக் கொண்டாள். பாவாடை சட்டையிலிருந்து விலகி ஜீன்ஸ், டீ-சர்ட் என்று மாறினாள். கண்ணின் புருவங்களுக்கு கருப்பு மை தீட்டிக் கொண்டாள். கண் பட்டைகளில் வண்ண நிறங்கள் பூசிக்கொண்டாள். கஸ்டம்மர் கூப்பிடும் இடத்திற்கு இலகுவாய் சென்று வர ஹோண்டா ஆக்டிவா வாங்கிக் கொண்டாள்.

2014ம் ஆண்டு,

அலுவலக விசயமாக ஆறு மாத காலம் அமெரிக்காவில் இருந்து வந்தேன். ஹைய்தராபாத் வந்த பிறகு அமெரிக்காவில் மஞ்சுளாவிற்கு வாங்கிவந்திருந்த பொருட்களை அவளிடம் கொடுக்க அவள் வீட்டிற்கு சென்றேன். கதவை திறந்தவள் புன்னகையுடன் உள்ளே அழைத்தாள். வீட்டை முன்பு பார்த்ததற்க்கும் இப்போது பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருந்தது. CRT டி.வி இருந்த இடத்தில் LED டி.வி இருந்தது. அறை முழுவதும் குளிர்ச்சியூட்டியபடி ஏ.சி ஓடிக் கொண்டிருந்தது, நடுகாலில் டி.விக்கு பின்னாலிருந்த சுவர் முழுவதும் அழகான பெயிண்டிங்கள் மாட்டப்பட்டிருந்தன. வீட்டை சுற்றி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது ஆர்ட் கேலரி நடத்திவருபவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவரின் விருப்பம் போலவே அவரே வீட்டை மாளிகை போல் மாற்றிவிட்டதாகவும் கூறினாள். அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்திருந்த பொருட்களை பார்த்தவள் சந்தோஷத்தில் என்னை அணைத்து என் உதட்டில் முத்தமிட்டாள். கலவி முடிந்து வீடு திரும்புவதாக இருந்த என்னை தடுத்து இரவுவேளை உணவிற்கு ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு புதிதாக வாங்கியிருந்த காரில் அழைத்துச் சென்றாள். ஆர்டர் எடுத்துச் சென்ற வெயிட்டர் தட்டு முழுவதும் ஆயிட்டர் செய்ததை நிரப்பிக் கொண்டு வந்து எங்கள் மேஜையில் பரப்பினான். தங்கையை பற்றி விசாரித்தற்கு நன்கு படிப்பதாகவும், இந்த வருடம் கடைசி வருடமென்றும், கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்திருப்பதாகவும் கூறினாள். நான் பல வருடங்கள் கேட்க நினைத்த கேள்வியை அவளிடம் கேட்டேன். ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய்? என்று.

எப்போதும் உதட்டில் புன்னகையை உதிர்த்தபடி இருக்கும் அவளின் முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது. மெளனமாகயிருந்தவள் பேசத்துவங்கினாள். "இந்த உலகம் ஆண்களின் உலகம். ஆண்களை மீறி இந்த உலகத்தில் ஒரு பெண் எதுவும் செய்துவிட முடியாது. ஆண்கள் பெண்களின் சதையை தின்னும் வெறிநாய்கள்". ஏன் மஞ்சுளா ஆண்களின் மீது இவ்வளவு கோபம் கொள்கிறாள் என்று எனக்கு புரியவேயில்லை. அவளின் பேச்சை இடையூறு செய்யாமல் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். " என் தம்பியை போலீஸ் பிடிச்சிட்டு போன பிறகு சாப்பாடு தேடி நானும் என் தங்கையும் தெருவில் அழைந்தோம். எனக்கு அப்போது பனிரெண்டு வயது, என் தங்கைக்கு பத்து வயது. ஹோட்டல் ஒன்றில் எனக்கும் என் தங்கைக்கும் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. அதனால் சாப்பாடு பிரச்சனை தீர்ந்தது. ஹோட்டல் பக்கத்திலிருந்த சேரிக்குடியிருப்பில் குடிசை வீட்டில் தங்கினோம். அனாதைகள் என்று தெரிந்து கொண்ட ஏரியா ஆண்கள் அவ்வப்போது எங்களை சில்மிசம் செய்தனர். அவர்களின் இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஆண்கள் போல் உடை அணிந்து கொள்வோம். எங்க்ள் இருவரையும் வெகு நாட்களாக மோப்பம் பிடித்துவந்த ரிச்சாகாரர்கள் கூட்டம் இரவில் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எங்களை மறித்து ரிச்சாவின் பின்னால் தூக்கி சென்று மூன்று, நான்கு பேர் கற்பழித்தனர். என்னை விட என் தங்கையே அதிகம் உடல்பாதிப்பும் மனபாதிப்பும் அடைந்திருந்தாள். இனியும் இங்கேயிருந்தாள் உயிர் வாழ முடியாதென்று இரவில் இரயில் ஏறினோம். இரயிலில் முயல் விற்பவனிடம் மாட்டிக் கொண்டோம். முயல் விற்பவன் என்னை முழுமையாக இத்தொழிலில் ஈடுபடுத்தினான். அவனிடம் என் தங்கையை மட்டும் விட்டுவிடும் படி கேட்டுக் கொண்டதன் பேரில் அவளை விட்டு வைத்தான். கொலை குற்றமொன்றில் போலீஸ் அவனை கைது செய்த பின் நானும் என் தங்கையும் அந்த வீட்டை காலி செய்து கூகட்பள்ளி வந்து சேர்ந்தோம். இந்த உலகத்தில் என்னை போன்ற பல பெண்களின் வாழ்க்கை அவர்களின் கையில் இல்லை" என்று கூறி முடித்தவள் கண்ணாடி கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை மடக்கென்று குடித்து முடித்தாள்.

2020 டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில்,

அந்த நிகழ்விற்கு பிறகு மஞ்சுளாவை மீண்டும் சந்திக்கவேயில்லை. ஆறு வருட இடைவேளைக்கு பிறகு அவளை சந்திக்க கூகட்பள்ளியிலிருக்கும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். வீட்டின் கதவை சிறுமி ஒருத்தி திறந்துவிடுகிறாள். சோபாவில் அமர்ந்திருந்த மஞ்சுளா வாசலில் நான் நிற்பதை பார்த்து என்னை நோக்கி நடந்து வருகிறாள். என்னை பார்த்தவுடன் அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கண்ணீர் வடிந்துவிடுவது போலிருந்தது. உள்ளே அழைத்து சோபாவில் உட்கார வைத்து நான் வந்திருப்பதற்கான காரணத்தை கேட்கிறாள். எனக்கு கல்யாணம் நிச்சயாகி இருப்பதையும் அடுத்த மாதம் கல்யாணமென்று கூறி கொண்டு வந்திருந்த திருமண அழைப்பிதழை அவளுக்கு கொடுக்கிறேன். குழந்தை யார் என்று கேட்கிறேன். தங்கையின் குழந்தையென்று பதில் கூறுகிறாள். குழந்தை அழ்காகயிருந்தது. மஞ்சுளாவும் சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த போது "ஏன் ஆறு வருஷமா பார்க்க வரவில்லை" என்று கேட்கிறாள். வெறிநாயிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டதாக கூறுகிறேன். என் அருகில் வந்த மஞ்சுளா என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள். அப்போது அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் வடிகிறது.

- முற்றும் -

கிரகம்

உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

No comments:

பார்வைகள்