Tuesday, March 30, 2010

புத்தகப்பார்வை - கோவேறு கழுதைகள் - இமையம்

தீராநதியில் வெளியாகியிருந்த 'பயணம்' என்ற சிறுகதை மூலம் இமையத்தின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாயின. 'பயணம்' என்ற தலைப்புக்கேற்ப சிறுகதையும் வாழ்க்கைப் பயணம் போலவே இருக்கும். 'பயணம்' என்னை கவர்ந்த சிறுகதைகளில் ஒன்று. அதே இதழில் அவரின் பேட்டியும் வந்திருந்தது. பேட்டியில் அவர் எழுதியிருந்த நாவல், சிறுகதை தொகுப்புகளின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதனை குறித்து வைததுக்கொண்டு நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் அவரின் புத்தகங்களை வாங்கி வந்தேன்.


கோவேறு கழுதைகள் இமையத்தின் முதல் நாவல். 1994ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

நாவலானது ஆரோக்கியம், அவளின் கணவர் சவுரி, அவளின் பிள்ளைகள் மேரி. பீட்டர், ஜோசப், ஜோசப்பின் மனைவி சகாயம் எல்லோரும் மேல்நாரியப்பனூரிலுள்ள அந்தோனியார் கோவிலுக்கு செல்வதாக தொடங்குகிறது. பாதரிடம் தங்களின் குறைகளை கூறிச்சென்றாள் ஊருக்கு வந்து ஆரோக்கியத்தின் குடும்பத்திற்காக பஞ்சாயத்துக்காரர்களிடம் பேசி தினமும் கிடைக்கும் ராச்சோறு அதிகம் கிடைக்கும்படியும், முன்பு வழங்கி வந்த சலுகைகளை தொடர்ந்து வழங்கும் படியும் கூறுவார். அதுபோலவே அன்றும் பாதரிடம் தன் குறைகளையெல்லாம் கூறிவிட்டு செல்கிறாள் ஆரோக்கியம். பாதர் தன் சார்பாக ஊர் மக்களிடம் வந்து பேசுவார் என்ற நம்பிக்கையில்.


ஆரோக்கியம் வண்ணான் சமூகத்தை சேர்ந்தவள். இவர்களின் வாழ்க்கையானது வீடு வீடாக சென்று எடுத்துவரும் ஊர்சனங்களின் துணிகளை காலையில் தொரப்பட்டுக்கு எடுத்துச் சென்று துவைப்பது, இளவு விழுந்த வீட்டில் பாடை கட்டுவது முதல் சடலத்தை குழியில் புதைத்து மூடுவது, களம் தூற்றும் காலங்களில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீடாக சென்று களம் தூற்றுவது, பிரசவம் பார்ப்பது, மார்க்கட்டிப்போன பெண்களுக்கு மார்தட்டிவிட்டு பால்வர வைப்பது முதலான எல்லா காரியங்களுக்கும் ஆரோக்கியத்தின் குடும்பம் இருக்கும். இந்த காரியங்களுக்கு காசோ அல்லது தானியங்களையோ வாங்கிக் கொள்கின்றனர்.

ஆரோக்கியம் குடும்பத்தின் ஒரு நாளின் உணவானது முந்தைய இரவில் எடுத்துவரும் ராச்சோற்றினை நம்பியே இருக்கிறது. ராச்சோறு எடுத்துவர குழம்புக்கொரு குண்டானையும், சோற்றுக்கொரு குண்டானையும் எடுத்துச் செல்கின்றனர். ஜோசப் கூடயிருந்த காலத்தில் ஜோசப்பும் பீட்டரும் குண்டானகளை தூக்கிக் கொண்டு வீடுவீடாக சென்று "சாமியோவ் வண்ணாத்தி வந்திருக்கேன் ராச்சோறு வாங்க" என்று கத்துவார்கள். ஒவ்வொரு வீட்டில் கிடைக்கும் வரகு, சோளம், அரிசிப் சாப்பாட்டினை சோற்றுக் குண்டாவிலும், குழம்பினை வேற குண்டாவிலும் வாங்கிக் வருவார்கள். இரவில் மிஞ்சும் சோற்றில் நீர் ஊற்றி வைப்பாள் மேரி. மறுநாள் காலை தொரப்பாட்டுக்கு சென்றுவரும் சவுரி நீர் ஊற்றியிருந்த சோற்றுடன் மிளகாயை கடித்து தின்று பசியாறுவான்.

களம் தூற்றும் காலங்களில் ஊரே சுறுசுறுப்பாக இயங்குகிறது. சவுரி ஒரு வீட்டிலும், ஜோசப் ஒரு வீட்டிலும் களம் தூற்றச்செல்கின்றனர். ஜோசப் தூற்றுவது சரியில்லையென்று கூறி புகார் வந்ததால் ஆரோக்கியம் ஜோசப் தூற்றும் இடத்திற்கு அடிக்கடி சென்று பார்த்து வருவாள். களம் தூற்றும் காலங்களில் ஊரிலுள்ள ஒவ்வொருக்கும் வேலை இருந்தது. ஊரில் சோம்பேறியென்று யாரையுமே சொல்ல முடியாத அளவுக்கு எல்லோருக்குமே வேலையிருந்தது.களம் தூற்றுவதற்கு கூலியாக மூன்று படி தானியங்களை கூலியாக பெற்று வந்தனர். களம் தூற்றும் கூலியை மூன்று படியிலிருந்து இரண்டு படியாக குறைத்ததற்காக ஊர்காரர்களுடன் சண்டை பிடிக்கிறாள் ஆரோக்கியம். சவுரி எப்போதும் எதிர்த்து பேசுவது இல்லை. கொடுப்பதை வாங்கி கொள்வான். "சரிங்க சாமீயோவ்" என்பதே அவன் வாயிலிருந்து வரும் அதிகப்படியான வார்த்தை.

ஜோசப்பின் மனைவி சகாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சண்டை வருகிறது. சகாயம் ராச்சோறு எடுக்கவும். தொரப்பட்டுக்கு போகவும் மறுக்கிறாள். நாள் முழுக்க வீட்டிலேயே மேரியுடன் இருக்கிறாள். பீட்டர் தெருப்பசங்களுடன் விளையாடித் திரிகிறான். சின்ன சேலத்திலிருக்கும் அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிச் செல்லும் சகாயமும் ஜோசப்பும் அங்கேயே தங்கிவிடுகின்றனர். ஜோசப்பின் பிரிவை எண்ணி ஆரோக்கியம் மனம் வருந்துகிறாள். அழுகிறாள். மருமகளான சகாயத்தை திட்டித் தீர்க்கிறாள். இதனால் மேரி சில சமயங்கள் ராச்சோறு எடுக்க பீட்டருடன் செல்கிறாள்.

மேரியை துணியெடுக்க ஆரோக்கியம் எப்போதும் அனுப்புவதில்லை. ஆரோக்கியம் நோயுற்று மூன்று நாட்கள் படுத்த படுக்கையாகி விடுகிறாள். சின்னசேலம் சென்றிருந்த ஜோசப், சகாயம் பற்றி விசாரிக்க சவுரி சென்றிருந்தான். பீட்டர் ஊர்ப் பசங்களுடன் விளையாட சென்றுவிட்டதால் மேரியை துணியெடுக்க சொன்னாள் ஆரோக்கியம். ஒவ்வொரு வீடாக துணியெடுத்து கொண்டு சடையன் வீட்டிற்கு சென்ற போது சடையனால் மானபங்கம் படுத்தப்படுகிறாள். சடையனிடமிருந்து தப்பித்து வந்தவள் வீட்டிற்கு வந்து அழுகிறாள். ஆரோக்கியம் என்னவென்று கேட்டும் பதில் சொல்லாது கத்திகத்தி அழுகிறாள். மேரிக்கு ஏதோ நடக்கக்கூடாது நடந்துவிட்டதென்று உணர்கிறாள். மேரி தெருவில் போட்டு வந்த சலவைத்துணிகளை ஆரோக்கியம் தெருவில் சென்று பொருக்கி வருகிறாள். இந்த விஷயத்தை ஊர் சனங்களிடமிருந்தும் சவுரியிடமிருந்தும் மறைத்துவிடுகிறாள் ஆரோக்கியம்.

சவுரியின் தங்கை மகன் திரவியராஜிக்கும் மேரிக்கும் திருமணம் முடிகிறது. திரவியராஜ் அம்மாவின் பெயர் தெரசா. திரவியராஜின் சிறுவயதிலேயே திரவியராஜின் அப்பா இறந்துவிடுகிறான். அதன் பின்பு தெரசா கணவனின் தம்பியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறாள். திரவியராஜ் ஆரோக்கியத்திடம் வளர்ந்து வருகிறான். தெரசாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே திரவியராஜ் தெரசாவிடம் செல்கிறான். தெரசா இறந்து பின்பு திரவியராஜிக்கும் மேரிக்கும் திருமணம் முடித்து வைக்கின்றனர். மேரியும் தன்னைவிட்டு சென்றுவிட்டதை எண்ணி ஆரோக்கியம் மிகவும் மனவருத்தமடைகிறாள். கண்ணீரிலே காலத்தை நகர்த்துகிறாள்.

நாவலானது ஆரோக்கியத்தின் மனவருத்ததை அதிகமாக சொல்கிறது. முன்பு கிடைத்தது போல் இல்லாமல் போன ராச்சோறு பற்றியும், களம் தூற்றும் சமையங்களில் வழங்கப்படும் தானியம் படி மூன்றிலிருந்து இரண்டாக குறைந்தது பற்றியும், கிளிந்த துணிகளை தைத்துக் கொடுத்ததையும் பாழாக்கிய மெஷின் தையல்காரனையும், ஊரில் கடைப்போட்டிருந்த வேற வண்ணானைப் பற்றியுமே இருந்தது.

பீட்டரை பாதர் அழைத்து வரச் சொன்னதாக கூறி பாதரின் சமையல்காரன் வருகிறான். சமையல்காரன் கேட்டதை நினைத்து ஆரோக்கியம் பயந்து போகிறாள். பீட்டரையும் அழைத்துச் சென்றுவிட்டால் அனாதை பிணமாக ஆகிவிடுவோமோ என்று நினைக்கிறாள். பீட்ட்ரை பாதரிடம் அனுப்ப சவுரி சம்மதம் தெரிவித்தாலும் ஆரோக்கியம் முடியாதென்று உறுதியாகயிருக்கிறாள். சில நாட்கள் கழித்து பீட்டர் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொன்டு ஆறுமுகத்துடன் சென்னைக்கு ஓடிப்போய்விடுகிறான். அதன்பின் ஆரோக்கியம் தனிமரம் ஆகிறாள். உடல் சோர்வடைகிறாள். சகாயத்திற்கு ஆண்பிள்ளையும், மேரிக்கு பெண்பிள்ளையும் பிறக்கிறது. குழந்தைகளுக்கு வெள்ளி அரைநாண் கொடி கூட வாங்கிக்கொடுக்க வழியில்லையென மனம் வருந்துகிறாள். முடிகள் நரைத்து முதுமையடைகிறாள். குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து திரவியராஜ் இறந்துவிடுகிறான். மேரியும் அவள் குழந்தையும் ஆரோக்கியத்திடம் வந்து சேர்கின்றன்ர். சவுரி கூன் விழுந்த முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்தபடி முன்னே செல்ல அவனை தொடர்ந்து ஆரோக்கியம் இடுப்பில் குழந்தையை வைத்து நடக்கிறாள் அவளை தொடர்ந்து மேரி தொரப்பாட்டுக்கு நடந்து செல்வதுபோல் நாவல் முடிகிறது.

- முற்றும் -

கிரகம்.
 
தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

3 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் நல்லதொரு பதிவு.

கிரகம் said...

உங்கள் கருத்துக்கு நன்றி செல்வராஜ்

Anonymous said...

that was a nice summary of the novel

பார்வைகள்