Wednesday, March 3, 2010

சிறுகதை - சந்திரன் வருவான்

சந்திரன் வருவான்

குழந்தை பசிக்கு அழும் சத்தம் கேட்டது. நந்தா கட்டை விரலால் அதன் வாயில் ஒரு முறை அமுக்கியவுடன் அழுகை நின்றது. “ஹலோ, யார் பேசறது?” மறுமுனையில் “நான் கிரண் பேசுகிறேன்” என்று பெண்ணின் குரல் கேட்டது. கிரண் தொடர்ந்து பேசத்தொடங்கினாள். “நந்தா நான் மாசமாகயிருக்கேன்”. “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு ஒரு முறை யோசித்தான். “என்ன சொன்ன மாசமாயிருக்கியா, உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே, அப்புறம் எப்படி?” “ஆமாம், எனக்கு இன்னும் கல்யாணமாகலை, ஆனாலும் மாசமாயிருக்கிருக்கேன்”. “யார் அந்த நயவஞ்சகன், அவன் பெயர் என்ன? அவன் ஊர் என்ன? அவன் யாராகயிருந்தாலும் அவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், யார் அவன்?” “அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். நூறு சதவீதம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்”. நந்தாவிற்கு தூக்கிவாரிப் பேட்டது. “என்னது, நானா!, இதுவரை நான் உன் கைவிரலைக்கூட தொட்டிராத போது நீ எப்படி நானாவும் இருக்கலாம் என்கிறாய்?” “நீங்களும், நானும் சந்திரனூர் சென்றது நினைவிருக்கிறதா?” “ஆமாம் நினைவுள்ளது”. “அங்கு கூட நீயும் நானும் தனி அறையில் தானே தங்கியிருந்தோம். எனக்கு ஏதோ உனக்கு நிச்சயமான பையன் தான் இதற்கு காரணமாக இருப்பானென்று நினைக்கிறேன்.” “இல்லை, அவன் நிச்சயமாக இருக்க முடியாது. ஏனென்றால் நிச்சயதார்த்தமே நடக்கவில்லை.” “நீ ஏதோ விளையாடுகிறாய் என்று நினைக்கிறேன்.” “நான் ஒன்றும் விளையாடவில்லை. உங்கள் மனைவி பார்க்கும் டாக்டர் தான் கூறினார் மாசமாகயிருப்பதை”, “என் மனைவிக்கும் இந்த விசயம் தெரிந்துவிட்டதா?” “இல்லை, தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நான் எனக்கென்று சொல்லாமல் வேறொருத்திக்கு என்று சொல்லியிருக்கிறேன். இதன் பிறகு டாக்டரிடம் உங்கள் மனைவி பேசினாள, நிச்சயம் தெரிந்துவிடும்.” “கிரண், நான் சொல்லும்படி செய்வாயா?” “சொல்லுங்கள், செய்கிறேன்.” “கடந்த காலத்தை மனதில் அசை போட்டுப்பார். நாம் சந்திரனூர் செல்ல ஆரம்பத்திலிருந்து, ரயிலில் சந்திரனூர் சென்றது, சந்திரனூர் மலைக்கோயிலுக்கு சென்றது. நூரி கிழவியுடன் பேசியது. மீண்டும் செகந்திராபாத் ஸ்டே~ன் வந்து சேர்ந்தது. ஓவ்வொரு நிகழ்வுகளையும் சரியாக யோசித்துப்பார். எதையும் ஸ்கிப் செய்யாமல். எனக்கு இப்போதும் நம்பிக்கையுள்ளது. நான் இந்த தவறை செய்திருக்கமாட்டேன் உனக்காக மனதை அசை போட்டுப்பார்.” “சரி, நந்தா செய்கிறேன்.” கிரண் மனதை அசை போடத் துவங்கினாள்.

அன்று ஒரு நாள்,
நந்தாவும், கிரணும் ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள். நந்தா கிரணின் மேனேஜர். கிரண் “சந்திரன் வருவான்” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஆர்ட்டிகளை இணையத்தில் படித்துக்கொண்டிருந்தாள். “இந்த ஊரில் உள்ள அனைவரும் வெள்ளை வெளேர் என்று இருக்கின்றனர். இந்த ஊரில் வசிக்கும் அனைவரும் வெள்ளைக்காரன் நிறத்தில் இருக்கின்றனர். இந்த ஊரை ஒட்டியுள்ள ஊரில் வசிப்பவர்கள் சாம்பல் நிறத்திலும், கறுப்பு நிறத்திலும் இருக்கின்றனர். ஏன்? இதற்கு என்ன காரணம்? ஏன்ற கேள்வியை நூரி என்ற வயதான கிழவியிடம் கேட்டாள். என்னோட தலைமுறையில் இருந்தவங்க கலர் சாம்பல் நிறம் தான். வெள்ளை கலர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் அவங்க சந்திரனோடு இரவுல பேசுவாங்களாம். ஒரு நாள் சந்திரனோடு ஒரு பெண் உடலுறவு வச்சிட்டுதாகவும் அவளுக்கு பிறந்த குழந்தை தான் முதல் வெள்ளை நிற ஆண் குழந்தையென்றும் அவனுக்கு பின்னால் வந்த சந்ததியில் பிறந்தவர்கள் தான் இந்த ஊரில் உள்ள மக்கள். அந்த கிழவியிடம் ஒரு கேள்வி கேட்டோம். இந்த ஊரிலுள்ள அனைவருமே ஒருவர் மற்றொருவருக்கு சொந்தமா? அந்தக்கிழவி ஆமாம் இதிலென்ன சந்தேகம் என்று கூறினாள். மேலும் அந்தக்கிழவி இதற்கான ஆதாரங்கள் சந்திரனூர் மலைகுகையில் எழுதியிருப்பதாகவும் கூறுகிறாள்”. கிரண் படித்து முடித்ததும் “வாவ், வாட்ட இண்டரஸ்டிங் ஸ்டோரி” என்று வாய்விட்டு கூறினாள். நந்தா “ஒரு வாரம் வேலையில்லாம வீட்ல இருக்கிறது. உனக்கு இண்டரஸ்டிங்கா?” கிரண் “நான் சந்திரனூர் பத்தி வந்த ஆர்ட்டிகளை சொன்னேன்;. நீங்க எதை சொல்றீங்க?” “உன்னோட அவுட்-லுக்ல கம்பெனி சிஇஒவிடமிருந்து மெயில் வந்திருக்கும் படிச்சிபார்.” “ஒரு வாரம் சம்பளமில்லாம லீவு தர்றாங்களாம். முன்னாடியே எதிர்பார்த்ததுதான் . ஆறு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்காவில இருக்கிற எம்பிளாக்கு லீவு கொடுத்தாங்க. இப்ப நமக்கு கொடுத்திருக்காங்க. இன்னும் எத்தனை மாசத்துக்கு” கிரண்.

சந்திரனூர் பற்றி வெளி வந்த தகவலை நந்தாவிடம் கூறினாள். நந்தாவும் அந்த செய்தியை கேட்டு ஆச்சரியமடைந்தான்.

செகந்திராபாத் ஸ்டேஷனில் கிரணும், நந்தாவும் நின்றிருந்தனர். சந்திரனூர் செல்லும் வண்டி வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ரயில் வண்டி அதிகமான டெசிபெல்களில் ஒலியை எழுப்பிய பின்பு இடத்தை விட்டு நகர்ந்தது. இரவு தொடங்கும் நேரமானது கிரண் “என்ன நந்தா உங்க மனைவி என்ன சொன்னாங்க?” நந்தா “அவாகிட்ட ஆபிஸ் விஷயமா போகிறதா சொல்லிவச்சிருக்கேன்”.“ஏன் பொய் சொன்னீங்க?” “நீ ரொம்ப அழகான பெண். நீ உன் உடையில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், கம்பெனி ஆனுவல்டேயில் நீ அணிந்திருந்த சேலை நன்றாக இருந்ததென்றும் சொல்லியிருந்தேன்.” “அப்ப நீங்க என்னை விரும்புறீங்களா?” “எனக்கு கல்யாணமாகி ஐந்து வயதில் பையன் இருக்கும் போது நான் எப்படி உன்னை விரும்பமுடியும். நான் அழகை ரசிக்க கூடியவன். ஓரு பூவின் அழகை ரசிப்பவன். காலை பொழுதில் கூவும் குயிலின் சத்தம் மனதிற்கு ஒரு உற்சாகத்தை தரும். அது போலத்தான் நீயும். உன்னை பார்த்தாலும் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும்” நந்தா பேசிய வசனங்கள் கேட்டு சந்தோசத்தில் ஊமையானாள் கிரண். நந்தா விஸ்கியை ஒரு லிட்டர் கலர் பாட்டிலில் கலக்கி கொண்டு வந்திருந்தான். ஒவ்வொரு சிப்பாக திறந்து மூடி திறந்து மூடி குடித்தான். கிரண் கழிவறை செல்வதற்காக இடத்தை விட்டு எமுந்து சென்றாள். இந்த கோச்சில் இவள் ஓருத்தி தான் பெண் என்றும் அனைவரும் ஆண்கள் என்றும் பார்த்து தெரிந்து கொண்டாள்.

சந்திரனூர் ஸ்டேஷன் வந்தது. நந்தா ஓரு லிட்டர் கலர் பாட்டிலில் கலந்திருந்த விஸ்கியை குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். கிரண் நந்தாவை தட்டி எழுப்பி பிளாட்பாராத்தில் போட்டிருந்த மரப்பலகையில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் ரயில் வண்டியினுள் ஏறி சாமான்களை இறக்கி வைத்துவிட்டு மனோஜ்காக காத்திருந்தாள்.

மனோஜ் வந்தான். மனோஜ்ம், கிரணும் அறிமுகம் செய்து கொண்டனர் கிரண் “உங்களுடைய சந்திரன் வருவான் ஆர்டிக்கல் என்னை ரொம்ப இம்பிரஸ் பண்ணிடிச்சி, நேர்ல பார்க்கணும் ஆசை, அதான் நேரா கிளம்பி வந்துட்டேன். இவர் என்னுடைய மேனேஜர் நந்தா” என்று நந்தாவை காட்டி கூறினாள். நந்தா போதையில் உண்டான தூக்கத்தில் இருந்தான். நந்தா ஒருவழியாக மனோஜின் கையை பற்றி குலுக்கி அசடுவழிய சிரித்தான். கிரணும், மனோஜிம் சாமான்களை தூக்கி கொண்டு முன்னே செல்ல நந்தா தல்லாடியபடி அவர்களை பின் தொடர்ந்தான்.

மின் கம்பத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் நிற குண்டு பல்பின் வெளிச்சம் கம்பத்தின் பாதி உயரத்திற்கு மட்டுமே இருந்தது. மின் கம்பத்தின் அருகில் நின்று கொண்டிருந்த மனோஜ் “கிரண் இந்த நேரத்திற்கு சூரியனூர்க்கு பஸ் எதுவும் கிடையாது. நீங்களும் நந்தாவும் இந்த மண்டபத்தில் தங்கிகோங்க. எந்த பயமும் கிடையாது.” கிரண் “சந்திரனூர்ல ஏதும் ரூம் கிடைக்கலையா?”. “சந்திரனூர்க்கு உள்ள வேற ஊரு பொண்ணுங்களை தங்க அனுமதிக்க மாட்டாங்க. அதோ அங்க குத்துக்கல் தெரியுதுல்ல அதை தாண்டி மட்டும் உள்ளே போயிடாதீங்க”. கிரண் எங்கே நிற்கிறாள் என்று தெரியாதபோதும் அவன் பேசுவதை வைத்து ஒரளவுக்கு அவன் இருக்கும் திசையை கணித்துக் கொண்டாள். மனோஜிடம் கிரண் “நீங்க எங்க தூங்குவீங்க?” மனோஜ் “சந்திரனூரிலுள்ள நண்பன் வீட்டில்” என்று கூறிவிட்டு இருட்டில் நடந்து சென்றான். கிரணும் நந்தாவும் கல் மண்டபத்திற்கு சென்று படுத்துக் கொண்டனர்.

எங்கு பார்த்தாலும் கறுப்பு நிறமாக இருந்தது. சிறு பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. கிரணுக்கு அடிவயிற்றில் வலி எடுத்து கழிப்பறை செல்ல வேண்டும் போல் எண்ணம் உண்டானது. கல்மண்டபத்தை விட்டு வெளியேறி சுற்றிலும் பார்த்தாள் எங்கும் கறுப்பு நிறமாகியிருந்தது. தூரத்தில் ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் நிற குண்டு பல்பை பார்த்து அந்த வீட்டை நோக்கி சென்றாள் கிரண்.

அந்த ஓட்டு வீட்டின் வாசலில் நடுத்தர வயது பெண் அமர்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். கிரண் “இந்த வீட்டில் கக்கூஸ் இருக்கா?” நடுத்தர வயது பெண் “நீ யாரு எங்கயிருந்து வார?” “அம்மா என்னோட பெயர் கிரண். எனக்கு வெளியூர். சந்திரனூர்ல இருக்கிற நண்பரை பார்க்க வந்தேன். சந்திரனூர்க்கு உள்ள வெளியூர் பெண்களை இரவு தங்கி அனுமதிக்க மாட்டாங்கண்ணு என்னை கல் மண்டபத்தில் தங்கச் சொன்னார்”. “கல் மண்டபத்தில் தனியாவா தங்கியிருக்க?” “இல்ல துணைக்கு என் நண்பர் இருக்கார்.” “கல்யாணமாயிடுச்சா?” “இன்னும் இல்ல.” “கல் மண்டபத்தில் தனியா படுத்திருக்கிற பெண்களை சந்திரன் உடலுறவு வச்சிக்குவானே. நீ வேணா கக்கூஸ் போயிட்டு இங்கேயே படுத்துக்கோ”. கிரண் எதுவும் பேசாமல் ஓட்டு வீட்டினுள் படுத்துக் கொண்டாள்.

கிரணும் நந்தாவும் சந்திரனூர் வந்து இரண்டு நாட்கள் முடிந்திருந்தன. காலை முழுவதும் சந்திரனூர் சென்று சுற்றி பார்ப்பதும் இரவு தொடங்கியதும் சூரியனூர் வந்து தங்கி கொள்வதாகவும் இரண்டு நாள்கள் சென்றன. மூன்றாம் நாள் காலை கிரண் தங்கியிருக்கும் அறை கதவு திறந்திருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தாள். தினமும் அவள் படுக்கும் முன்பு அறை கதவை சாத்திவிட்டு தான் படுக்கிறாள். இருந்தும் காலை எழுந்து பார்த்தாள் கதவு திறந்ததிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. நந்தாவின் அறைக்கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்க அவன் அறையின் பக்கம் சென்று கதவை தள்ளி பார்த்தாள். கதவு நன்றாக பூட்டியிருந்தது. கிரண் எவ்வாறு தன் அறைக்கதவு திறந்தது என்று அறிய முடியாமல் குழப்பத்திலே இருந்தாள்;.

கிரண், நந்தா, மனோஐ; மூவரும் சந்திரனூரில் நடக்கயிருக்கும் கல்யாணத்தை பார்க்க சென்று கொண்டிருந்தனர். கிரண் “நந்தா, நேற்று இரவு என் அறைக்குள் வந்தீங்களா?” “இல்லையே, என்னாச்சி?” என்று கேட்டான் நந்தா. “காலையில் எழுந்து பார்த்தா அறைக்கதவு திறந்திருந்தது. எப்படி இரவு பூட்டிவிட்டு படுத்த அறைக்கதவு காலையில் திறக்குதுன்னு தெரியல” “சரியா பூட்டாம படுத்திருப்ப வேற எதுவும் இருக்காது.” நந்தா பேசிய வார்தைகள் கிரணை சமாதானப்படுத்தவில்லை மீண்டும் மீண்டும் அதையே யோசனை செய்தபடி இருந்தாள்;.

வெளியூர்காரர்கள் யாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தால் அவர்களுக்கு மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம, திருநிர் பூசி வரவேற்பது சந்திரனூர்காரர்களின் முறை. பெண்வீட்டாரின் வீடு தான் கல்யாண மண்டமாக தற்காலிகமாக மாறியிருந்தது. கல்யாண பெண்ணின் வயது இருபது என்றும் அவளுக்கு திருமணமாகும் தருணம் வந்து விட்டதென்றும் மனோஐ கூறினான். கிரண் “அதெப்படி தெரியும்?” மனோஜ் மணப்பெண்னை நோக்கி கைநீட்டி அவளின் முதுகுபக்கம் சரியாக தொப்புளுக்கு பின்புறம் பார்க்க சொன்னான்;. வட்ட வடிவு முழு பௌர்ணமி போல் கறுப்பு வண்ணத்தில் இரண்டு சென்டி மிட்டர் ஆரத்தில் மச்சம் இருந்தது. கிரண் “எவ்வளவு பெரிய மச்சம்! இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” மனோஐ; “இந்த மச்சம் இவங்களுக்கு கல்யாண வயசு வரும் போது தெரியும். பிறகு கொஞ்ச நாள் கழிச்சி இந்த மச்சம் மறைஞ்சுடும்” கிரண் “என்ன விசித்திரம்! இருபதாம் நூற்றாண்டுலயும் இதை நம்புறாங்களா?” மனோஐ “இதையே பார்த்து பிரமிச்சிட்டா எப்படி, நாலைக்கு பார்க்க போற நூரி கிழவி பேசுற பேச்ச கேட்டா நீங்க நம்ப மாட்டீங்க போல”

நூரி கிழவி வேப்ப மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாhள். கிரண், மனோஜ், நந்தா மூவரும் நூரி கிழவியை நோக்கி அமர்ந்து கொண்டனர். மனோஜ் “பாட்டி இவங்க செகந்திராபாத்திலிருந்து வந்திருக்காங்க, உங்களை பார்க்கணும்னு சொன்னங்க கூட்டி வந்துட்டேன்.” நூரி “செகந்திராபாத்தில தான சார்மினார் இருக்கு?” கிரண் “ஆமா பாட்டி” நூரி “கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பய ஒரு பொண்ணை சார்மினாரிலிருந்து தான கீழ தள்ளிவிட்டு கொன்னான்?” ஆமாம் என்றாள் கிரண். மனோஜ் “இந்த ஊர்ல எப்படி எல்லாரும் வெள்ளையா இருக்காங்க? அதுக்கு என்ன காரணம் பாட்டி?” “தம்பி உனக்கு ஏற்கனவே அந்தக் கதையை சொல்லியிருக்கேனே. திரும்பவும் ஏன் கேட்கிற?” “நான் சொன்னா இவங்க நம்பமாட்டிக்காங்க, நான் வேற இந்த ஊர் இல்லையா, நீங்க சொன்னா நம்புவாங்கன்னு தான் உங்களை சொல்ல சொல்றேன்.” “அதுவா சங்கதி, அப்ப நானே சொல்றேன்” என்று நூரி கிழவி கதையை சொல்ல தயாரானாள். கிரணும், நந்தாவும் கன்னத்தில் கைவைத்து கொண்டு கதையை கேட்க தயாராகினர். “இந்த ஊர் எங்க உலகம். இங்க இல்லாதது எதுவுமேயில்லை. சரி நேரா கதைக்கு வாறேன். ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆணும் பெண்ணும் ராத்திரி வேலையில ஆத்தாங்கரை பக்கத்திலிருந்த மண் திண்டுல ஒக்காந்து பேசுறது வழக்கம். ரொம்ப நேரம் பேசுவாங்களாம், அவங்க பேசுறதையெல்லாம் வானத்திலிருந்த சந்திரன் ஒட்டு கேட்குமாம். ஒரு நாள் அந்த பெண் தனியா மண் திண்டுல உட்காந்திருந்ததாம். அப்ப வானத்திலிருந்த சந்திரன் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துச்சாம். சந்திரன் ‘என்ன உன்னோட காதலன் இன்னும் வரலையா?’ அந்தப்பெண் ‘ஆமாம் நேத்து அவனோட சண்டை போட்டேன் அதான் இன்னும் வரலைன்னு நினைக்கேன்’. சந்திரன் ‘எதுக்கு அவனோட சண்டை போட்ட?’ அந்தப்பெண் ‘அவரோட வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்திட்டாங்களாம். அவரும் அதை கேட்டுகிட்டு வந்துட்டு என்னை மறந்திடுன்னு சொல்றாரு’ என்று சொல்லிட்டு அழுதாள். சந்திரன் அதற்கு ஒரு தீர்வு சொன்னது. ‘நீ என்னோட உடலுறவு வச்சிகிட்டா அவனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும்’. அந்த பெண் பதில் சொல்லாமல் எழுந்து போயிட்டாள். தினமும் இதே போல் அவள் வருவதும் அவள் காதலன் வராமல் போவதும் சந்திரன் அவாகிட்ட தன்னோட விருப்பத்தை சொல்லுவதுமா கொஞ்ச நாள் போச்சி. ஒரு நாள் அந்தப் பெண்ணும் சரியென்று சந்திரன் சொன்னபடி அத்தாங்கரை மணல் திட்டுல சந்திரனோட உடலுறவு வெச்சிக்கிட்டா. அப்ப சந்திரன் அவ காதில ‘உனக்கு பிறக்கும் முதல் குழந்தை என்னைப் போல வெள்ளையா பிறக்கும்’. சந்திரன் சொன்னபடியே அந்த பெண்ணுக்கு அவள் காதலனோட கல்யாணமானது. அவங்களுக்கு பிறந்த குழந்தையும் சந்திரன் போல் வெள்ளை வெளேர்னு இருந்தது.” என்று நூரி கிழவி கூறிவிட்டு கிரணையும் நந்தாவையும் பார்த்தாள். கிரண் எதுவும் போசாமல் நூரி கிழவியின் கண்களை பார்த்தபடியிருந்தாள்.

நூரி கிழவி கூறியது போல் சந்திரன் வருவான் மலைக்குகைக்கு மூவரும் சென்றனர். மலைக்குகையின் வாசலில் முனிவர்கள் கூட்டம் படுத்து தூங்கிகொண்டிருந்தனர். அவர்களை கடந்து குகையினுள் சென்றனர். இருள் அப்பியிருந்தது. கிரண் “என்ன மனோஜ் இவ்வளவு இருட்டா இருக்கு. இதுல எங்க போய் விவரத்தை தேடுறது.” மனோஜ் “நானும் இந்த குகைக்கு இப்ப தான் வர்றேன். வாங்க அங்க இருக்கிற சாமியார் கிட்ட கேட்போம்.” சாமியார்கள் அவர்கள் தங்களை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். ஒரே ஒரு சாமியார் மட்டும் நகராமல் அங்கேயேயிருந்தார். மனோஜ் “ஏன் அவங்க எங்களை பார்த்ததும் பயந்து ஓடுறாங்க?” “பயந்தாங்கோளி பயக, நீங்க சொல்லுங்க என்ன வேணும்?” “இந்த குகைக்கு யாருமே வரமாட்டாங்களா? “வருவாங்க தம்பி முழு பௌர்ணமி நாள்ல சந்திரன் ஒளியில் இந்த குகையே பிரகாசமா இருக்கும். மித்த நாள் யாரும் வரமாட்டாங்க. நாங்க மட்டும் தான் இருப்போம். காசுயிருந்தா கொடுத்துட்டு போங்க.” என்றார் முனிவர். மனோஜ் பத்து ரூபாய் தர்மம் செய்தான். இனியும் இந்த இடத்திலிருந்து தேவையற்றதென அவர்கள் இடத்தை விட்டு நகர்ந்தனர். கிரண் “நூரி கிழவி கொடுத்திருந்த முதல் பேட்டியிலும் சரி நேற்று கொடுத்த பேட்டியிலும் சரி சந்திரன் பெண்களோடு உடலுறவு கொண்டது முன்பு தான் இப்போது இல்லை என்கிறாரே. இது பற்றி உன்னோட கருத்து என்ன?” என்று மனோஜிடம் கோட்டாள். மனோஜ் “என்னோட கருத்துனு இது வரைக்கும் இல்லை. ஏனென்றால் இந்த ஊரை பத்தி நான் இன்னும் தெளிவா தெரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த ஊர் மக்களை பொறுத்த வரையில் சிலர் சந்திரன் உடலுறவு கொள்வதால் வட்ட வடிவ கறுப்பு மச்சம் வருவதென்றும், சிலர் கடவுள் தான் இதை செய்வதென்றும் சொல்றாங்க. இதில் நூரி சொன்னது இரண்டாவது வகை.” மூவரும் பேசிக்கொண்டே சந்திரனூர் எல்லையை தாண்டியிருந்தனர். கிரண் “இங்க ஒரு ஓட்டு வீடு இருந்ததே, இப்ப எங்க அது?” மனோஜ் “இல்லீங்க, இந்த ஊர் எல்லையை தாண்டி வீடு எதுவும் இருந்ததில்லை. இந்த கல் மண்டபம் தவிர”. நந்தாவும், மனோஜ்ம் இல்லாத ஒன்றை இருந்ததாக கூறியதாக கிரணை கேலி செய்து சிரித்தனர்.

நந்தாவும், கிரணும் செகந்திராபாத் செல்வதற்காக சந்திரனூர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். கிரண் மனோஜிடம் “உங்களோட வேலையையும் ஒத்திவச்சிட்டு எங்களோட சேர்ந்து ஊரை சுத்தி காட்டினதுக்கு நன்றி.” என்றாள் மனோஜ் “நன்றியெல்லாம் தேவையில்லை முடிந்தால் இதுவரையில் நீங்க இரண்டு பேரும் இந்த ஊரை பத்தி தெரிந்து கொண்டதை இ-மெயில் எழுதி அனுப்புங்க. என்னோட ப்ராஜக்ட்ல உங்களோட இ-மெயிலை ரெபரண்ஸா எடுத்துக்குவேன்.” என்று கூறிவிட்டு இ-மெயில் போன் நம்பரை கிரணிடம் கொடுத்தான். கிரண் “நிச்சயமாக அனுப்புகிறேன். எனக்கு அடுத்த வாரம் கல்யாண நிச்சயதார்த்தம். இரண்டு மாதம் கழித்து கல்யாணம். கல்யாண பத்திரிக்கை அனுப்புவேன். கட்டாயம் வரணும்.” மனோஜ் “கண்டிப்பாக வருவேன்”. இரயில் செகந்திராபாத் நோக்கி நகரத்துவங்கியது.

கிரண் நந்தாவிற்கு போன் செய்தாள். கிரண் “நந்தா எல்லாவற்றையும் தெளிவாக யோசித்துவிட்டேன். ஒரே ஒரு கோள்வி மட்டும் என்னிடம் உள்ளது.” நந்தா “என்ன கேள்வி?” “என் அறைக்கதவு எப்படி தானாக திறந்து கொண்டது?” “அதற்கான விடையைத்தான் நாம் இருவரும் அன்று பார்த்தோமே. மறந்துவிட்டாயா நீ? சரி திரும்பவும் சொல்றேன். கதவிலிருந்த கொண்டி தளர்வாகயிருந்ததால் அதாவே மாட்டிய சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலையான கதவு திறந்த நிலையை அடைந்ததை தான் நாம் இருவரும் பார்த்தோமே. பிறகு நீ என்னுடைய அறையிலும்.” “இப்போது நியாபகம் வருகிறது” என்று கூறிவிட்டு மீண்டும் யோசனையில் மூழ்கினாள் கிரண். நந்தா “உன் தொப்புளுக்கு நேராக பின்புறத்தில் பௌர்ணமி நிலவு போல கறுப்பு நிற மச்சம் இருக்கிறதா?” கிரண் “என்ன நந்தா நீங்களும் கேலி செய்றீங்க? நீங்களும் அதை நம்புறீங்களா?” நந்தா “சிவியரா ஒரு இஸ்சு வந்திருச்சின்னா நாம எப்படி டெஸ்ட் பண்ணுவோம். அந்த இஸ்சு வருவதற்கான எல்லா காரணங்களையும் நாம யோசித்து பார்ப்பதில்லை. முதலில் மச்சம் இருக்கான்னு பார். அப்புறம் மனோஜ்க்கு போன் பண்ணி சந்திரனூர் மலைக்கோயிலில் எதும் தகவல் கிடைச்சுதான்னு கேள்”. கிரண் மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என்று சொல்லி செல்போன் இணைப்பை துண்டித்தாள்.

கிரண் கண்ணாடி பிரோவின் முன் நின்று உடைகளை அவிழ்த்தாள். நூற்றி எம்பது டிகிரி சுற்றி நின்று கொண்டு கழுத்தை திருப்பி கண்ணாடியை பார்த்தாள். ஆள் உயர கண்ணாடியில் அவளின் முதுகுப் புறத்தின் பிரதி தெரிந்தது. கறுப்பு நிற இரண்டு சென்டிமீட்டர் பௌர்ணமி நிலவு போன்ற மச்சம் தொப்புல் இருக்கும் இடத்தில் நேர் பின்புறத்தில் இருந்தது.

கிரண் மனோஜ்க்கு போன் செய்து மலைக்குகைக்கு சொன்றன என்று விசாரித்தாள். மனோஜ் “ஆமாம், சென்றிருந்தேன். கல்வெட்டில் ஒரு கவிதை எழுதியிருந்தது.” மனோஜ் அந்தக் கவிதையை சொல்ல கிரண் எழுதிக் கொண்டாள்.

பொழுது சாய்ந்ததும்
உலா வருவான் வானத்தில்
ராட்சஸ ஒற்றை கண்களோடு

காமம் கொண்டவன்
மூர்க்கமானவன்

விட்டுவைப்பதில்லை
எந்த கன்னிகளையும்
ஒரு முறை தான் சுவைப்பான்
ஒருத்தியை
வந்ததும் தெரியாது
சென்றதும் தெரியாது
ஆனாலும்
அவன் விந்து சென்றிடுமே
அவள் கருமுட்டையினுள்
வந்து சென்ற தடமோ விட்டுச்செல்வான்
அவளின் புட்டங்கள்
சந்திக்கும் இடத்தின் மேலே
கறுப்பு நிற பெளர்ணமியாய்

மந்திரக்காரி
ஓட்டு வீட்டுக்காரி
அவன் கை கூலி
காமக்கொடுரன்
சந்திரன்.

டாக்டர் சொல்லியிருந்த தேதியில் கிரணுக்கு வயிற்று வலி வந்தது. கதவை திறந்து கொண்டு டாக்டர் ஜெயராணி வெளியே வந்தார் புன்னகையுடன். “ஆணா? பெண்ணா?” என்று நந்தா, நந்தாவின் மனைவி, மனோஜ் டாக்டரிடம் கேட்டனர். “எதிர்பார்த்ததுதான்” என்று கூறிவிட்டு அவர்களை கடந்து சென்றார் டாக்டர். கிரண் மயக்கத்தில் இருந்தாள். கிரண் கட்டிலின் பக்கத்திலிருந்த தொட்டிலை ஒட்டி மூன்று பேரும் ஆளுக்கு ஒரு புறம் நின்று தொட்டிலினுள் பார்த்தனர். மூன்று பேரும் முகத்தை தூக்கி சிரித்தபடி ஒருவர் மற்றவரை பார்த்துக்கொண்டனர். “சந்திரன் வந்துவிட்டான்” என்று கூறிவிட்டு மூன்று பேரும் தொட்டினுள் தொடுவதற்காக விரல்களை தூக்கிச்சென்றனர்.

--- முற்றும் ---

தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

No comments:

பார்வைகள்