Monday, February 22, 2010

இருமல் - சிறுகதை

ராஜேஷ் காய்ச்சல் வந்தவன் போல் முடங்கிப்போய் படுத்துக் கிடந்தான். இருமல் அவனது தூக்கத்தை தடுத்தது. தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தான். அவன் அருகில் படுத்திருந்த செல்போன் சிணுங்கியது. இருமலையும் பொருட்படுத்தாது செல்போனை ஆன் செய்து பேசத்துவங்கினான். ராஜேஷ் 'யார் பேசுறது?' மறுமுனையில் 'நான் ராஜேஷிடம் பேசலாமா?' 'நான்தான் ராஜேஷ், சொல்லுங்கள்'. 'நான் யமுனா, போகஸ் டெக்னாலஜியின் ஹட்ச் ஆர் மேனேஜர், நீங்க சீனியர் டிசைன் இன்ஜினேயர் போஸ்டுக்கு நடந்த இன்டர்வியூல செலக்ட் ஆயிருக்கீங்க'. 'ரொம்ப நன்றி, என்னோட சம்பளம்?' 'நீங்க முன்பே கேட்டிருந்த சம்பளம் பத்துலட்சம்' 'உங்க கம்பெனியில நோட்டீஸ் பீரியட்ஸ் எத்தனை மாசம்?' 'இரண்டு மாசம்' 'உங்களுக்கு இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியிருக்கு, அதை முடிச்ச பிறகு தான் ஆஃபர் லெட்டர் அனுப்புவோம்'. தூங்கிகொண்டிருந்த இருமல் மீண்டும் வந்தது. வாயை துணியால் பொத்திக்கொண்டு இருமினான். இருமல் அடங்கவில்லை. இருமலால் யமுனாவின் பேச்சை சரிவர கேட்கமுடியாததால் அவளை திரும்பவும் பேசச் சொன்னான். அப்போதும் இருமல் வந்தது. 'உடம்பு சரியில்லையா?' என்று கேட்டாள். 'ஆமாம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி எல்லாம் ஒன்று சேர்ந்து வந்துவிட்டது. ஏதோ டெஸ்ட் பாக்கியிருப்பதாக சொன்னீர்களே என்ன அது?' 'மெடிக்கல் டெஸ்ட், இந்த வார இறுதியில் ஹேமதுர்கா டெஸ்ட் லேப் போய் டெஸ்ட் எடுத்துக்கோங்க. அதற்கான செலவை நாங்க கொடுத்துடுவோம். டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கி எங்களுக்கு கொரியர் செய்துடுங்க. எங்களுக்கு ரிப்போர்ட் கிடைச்ச இரண்டாவது நாள் உங்களுக்கு ஆஃபர் லெட்டர் கிடைக்கும். அதன் பிறகு நீங்க உங்க ஜாயினிங் டேட் சொல்லணும்'. ராஜேஷ் சரி என்று கூறியதும் யமுனாவுடனான தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராஜேஷ் காரி இருமியதும் கட்டி சளி வந்தது. சளியை துப்பிவிட்டு சூடான நீரை குடித்தான் தொண்டைக்கு இதமாக இருந்தது. கடிகாரத்தை பார்த்தான் மணி பத்தென காட்டியது.

ஹேமதுர்கா டெஸ்ட் லேபின் ரிசப்சனிஸ்ட் அழகாக இருந்தாள். கண்மை தீட்டியிருந்தாள். லைட்டாக உதடுகளுக்கு உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். ஒழுங்கான மடிப்புகளுடன் சேலை கட்டியிருந்தாள். வலது பக்க மார்பு சற்று தெரிவது போல் சேலை உடுத்தியிருந்தாள். ஆனால் கவர்ச்சியாகயில்லை. மொத்தத்தில் ஆரோக்கியமான அழகுடன் காணப்பட்டாள். ரிசப்சனிஸ்ட் 'ராஜேஷ்' என்று அழைத்தாள். அவன் எழுந்து அவள் அருகில் சென்றான். அவள் 'முதல்ல முதல் மாடிக்கு சென்று பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்துக்கோங்க. பிறகு இரண்டாவது மாடிக்கு சென்று இ.சி.ஜி எடுத்துக்கோங்க. கடைசியாக மூன்றாவது மாடிக்கு சென்று எக்ஸ்-ரே எடுத்துக்கோங்க. நாளை ஞாயிற்றுக்கிழமை ஆபிஸ் லீவ் ரிப்போர்ட்டை நீங்க திங்கள் கிழமை காலையில் பத்து மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளலாம்'. என்று ஒரே மூச்சில் பேசவேண்டியதை பேசி முடித்த அவள் அவனிடம் ஏதும் கேள்வி இருக்கிறதா என்று காத்திருந்தாள். ராஜேஷ் 'ஒகே' என்று கூறியதும் அவள் ராஜேஷ்க்கு நன்றி கூறிவிட்டு வேறொருவரின் பெயரை கூவினாள்.

ராஜேஷ் முதல் தளம், மற்றும் இரண்டாவது தளத்தை முடித்துவிட்டு மூன்றாவது தளம் செல்வதற்காக லிப்ட்டை எதிர்பார்த்து இரண்டாவது தளத்தில் காத்திருந்தான். லிப்டினுள் ஏறியதும் இருமல் வருவதற்கான அறிகுறிகளை உணர்ந்தான். அவன் நினைத்தது போல் இருமல் வந்தது. மூன்றாவது மாடி வந்தது. தொடர்ந்து இருமியபடியே எக்ஸ்-ரே அறையினுள் நுழைந்தான். லேப் டெக்னீசியன் ராஜேஷின் பனியன் சட்டையை கழட்டச் சொன்னான். டெக்னீசியன் 'உங்களுக்கு என்ன ப்ராளம்?' 'ப்ராபளம் எதுவும் இல்லை, புது கம்பெனி சேரப்போறேன் அதற்கான மெடிக்கல் டெஸ்ட்'. அவன் இருமல் இப்போதும் நிற்கவில்லை. 'மூச்ச நல்லா இழுத்துப் பிடிச்சிக்கோங்க, சொல்றப்ப விட்டுருங்க' என்று டெக்னீசியன் சொன்னது போல் செய்தான் ராஜேஷ். எக்ஸ்-ரே மெசின் ராஜேஷின் நுரையீரலை படம் பிடித்துக் கொடுத்தது. டெக்னீஷியன் எடுத்த படம் சரியாக வந்துள்ளதா என்று சரி பார்த்துவிட்டு ராஜேஷிடம் 'உங்களுக்குரிய எல்லா டெஸ்டும் எடுத்தாச்சி நீங்க போகலாம்'. அடங்காத இருமலை ராஜேஷ் வாயில் கைகுட்டையை வைத்து அடைத்தபடி ஹேமதுர்கா டெஸ்ட் லேபை விட்டு வெளியே வந்தான்.

ஹய் டூமா,

அதிகம்போனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஹதராபாத்தில் இருக்கப்போவதில்லை. ஆதலால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் ஏதாவது பங்களாவை பேசிமுடித்துவிடு. ஆமாம் நீ நினைத்தது சரிதான். எனக்கு புதியதோர் வேலை வாய்ப்பு வந்துள்ளது. அலுவலகமானது சோலிங்கநல்லூரில் உள்ளது. அதனால் தான் உன்னை இ.சி.ஆர் ஒரம் பங்களா பார்க்க சொல்கிறேன். இப்போது வேலை பார்க்கும் ஆபீஸில் சேர்ந்து மூன்று வருடங்களாகிறது. நன்றாகத்தான் உழைத்தேன். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. சரியாக சொன்னால் கழுதைபோலத்தான் உழைத்தேன். இந்த வருட அப்ரைஸ்ஸலில் எனக்கு நன்றாக குத்திவிட்டார்கள். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள மேனேஜரை அணுகினேன். மேனேஜர் கூறிய ஒரே காரணம் ரிசசன். இந்த வருடம் யாருக்குமே அதிகமாக தரவில்லை, உன்னைப்போல சீனியர் எம்பிளாயிக்கு மட்டும்தான் அதிகமாக ஊதிய உயர்வு தந்திருப்பதாக கூறினான். விசாரித்து பார்த்ததில் மேனேஜர் கூறியது பொய்யென்று தெரிந்தது. அதன் பிறகு வேறொரு வேலை தேட ஆரம்பித்தேன். மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் எனக்கு வேலைதர தயாராகயிருந்தன. அதன் சம்பள விபரம் பின்வருமாறு இருந்தது. ஆறுலட்சம், எட்டுலட்சம், பத்து லட்சம் முடிவாக பத்துலட்சம் தர சம்மதித்த பன்னாட்டு நிறுவனத்தில் சேருவதாக உள்ளேன். மெடிக்கல் டெஸ்ட் ரிசல்ட் கையில் கிடைத்தவுடன் இப்போது வேலை பார்க்கும் கம்பெனியில் பேப்பர் போட்டுவிடுவேன்.

மகள் தர்சிணி எப்படியிருக்கிறாள்? அவளுக்கு இரண்டு வயது முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் சார்பாக உன் மகளுக்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிடு. மனைவி எப்படியிருக்கிறாள்? கேட்டதாக சொல், உன் உடல் நலம் எப்படியிருக்கிறது? உடல் பூரண குணம் அடைந்துவிட்டதா? பதில் கடிதம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பங்களாவை பற்றி ஏதும் விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.

இப்படிக்கு,

ராஜேஷ

ஹதராபாத்.

என்று ராஜேஷ் நண்பன் ஒருவனுக்கு இ-மெயில் அனுப்பினான்.

ஹேமதுர்கா டெஸ்ட் லேபில் டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கச் சென்ற ராஜேஷ், டெஸ்ட் ரிசல்டில் ஏதோ ஒன்று நெகட்டிவாக வந்திருப்பதாக கூறிய ரிசப்சனிஸ்ட் ராஜேஸை கூகட்பள்ளியிலுள்ள டாக்டர் ரங்காரெட்டியை பார்த்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும்படி கூறினாள்.

டாக்டர் ரங்காரெட்டி செஸ்ட் ஸ்பெசலிஸ்ட். ராஜேஷ் அவரை பார்க்க சென்றிருந்தான். அவனுக்கு முன்னால் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். ஆறாவதாக சென்று பதிவு செய்து கொண்டான். அட்டைபெட்டியினுள் தெலுங்கு மற்றும் ஆங்கில வார இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து ஆங்கில வார இதழ் ஒன்றை எடுத்து பக்கங்களை புரட்டிடத் துவங்கினான். முன்னால் அமர்ந்திருந்த ஐந்து பேர் பார்த்த பின்பு ஆறாவதாக சென்று ராஜேஷ் ஹேமதுர்கா டெஸ்ட் லேபிலிருந்து அனுப்பியிருப்பதாக கூறி டெஸ்ட் ரிசல்ட்டை கொடுத்தான். டாக்டர் படித்துப் பார்த்துவிட்டு எக்ஸ்-ரேயை கேட்டார். செவ்வகவடிவ வெள்ளை நிற பிளாஸ்டிக் டப்பாவின் மேலேயிருந்த கிளிப்பில் எக்ஸ்-ரேயை சொருகினார். பிளாஸ்டிக் டப்பாவின் வலது புறமிருந்த ஸ்விட்சை தட்டினார். டப்பாவின் உள்ளேயிருந்த லைட் ஒளிர்ந்தது. டாக்டர் எக்ஸ்-ரேயை சிறிது நேரம் பார்த்துவிட்டு 'டிரீட்மெண்ட ஆரம்பித்து எத்தனை மாதம் ஆகுது'. ராஜேஷ்க்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. ராஜேஷ் 'நான் டிரீட்மெண்ட்டுக்காக வரவில்லை, நியூ எம்பிளாய்மெண்ட் மெடிக்கல் டெஸ்ட் எடுத்தப்ப, ஏதோ ஒரு டெஸ்ட் பெயில் ஆயிருந்ததா சொன்னாங்க. அதைப்பற்றி தெரிந்து கொள்ளத்தான் வந்திருக்கேன்'. டாக்டர் 'நல்லவேளை இப்பவாவது தெரிஞ்சிகிட்டீங்களே'. 'என்னது டாக்டர்?' 'உங்களுக்கு டியூபர் குளோசிஸ்ங்கர நோய் இருக்குது, குணப்படுத்திடலாம்' 'நான் புதிய கம்பெனியில் இன்னும் இரண்டு மாசத்துல ஜாயின் பண்ணணும். அதற்குள்ள சரியாகிடுமா?' 'இல்லப்பா, உனக்கு இப்ப இருக்கிறத பார்த்தா நோய் ஆரம்பித்து ஆறு மாதம் இருக்கும்போல தெரியுது. குறைந்தது ஆறு மாசம் முதல் ஒன்பது மாசம் ஆகும் முழுவதுமாக குணமாக'. 'நான் அப்படியே சென்னை போனகூட அங்கயிருந்து டிரீட்மெண்ட்டை எடுத்துக்கொள்ளலாமா?' 'இப்ப கிடைச்சிருக்கிற கம்பெனி சென்னையிலா இருக்கு?' 'ஆமா டாக்டர்' 'சில கம்பெனியில இந்த மாதிரி கேஸை எடுக்கமாட்டாங்க, ஏன்னா இது ஒரு தொற்றுவியாதி'. 'இதை முழுசா முடிவு செய்யுறதுக்கு ஸ்பவுட்டம் டெஸ்ட் எடுத்தா தெளிவா தெரிஞ்சிடும்'. 'எங்க டாக்டர் எடுக்கணும்?' டாக்டர் ராஜேஷ்க்கு ஸ்பவுட்டம் எங்க எடுக்க வேண்டும் அதை எப்படி எடுக்கவேண்டும் போன்ற விவரங்களையெல்லாம் அவனுக்கு கூறினார். ராஜேஷ் டாக்டருக்கு முண்ணூறு ரூபாய் பணம் செலுத்திவிட்டு எக்ஸ்-ரே, மெடிக்கல் ரிப்போர்ட் போன்றவற்றை பொறுக்கிக்கொண்டு டாக்டரின் கிளினிக்கை விட்டு மனபாரத்துடன் வெளியே வந்தான்.

ஹய் அன்பு,

நீ இழுத்துவிட்ட சிகரெட் புகையை என்னுடைய நுரையீரலும் சுவாசித்துள்ளது. நீ என்னுடன் இருந்த ஆறு மாதங்களில் நீ புகைத்துவிட்ட சிகரெட் புகையைத்தான் அதிகம் சுவாசித்துள்ளேன்.

ஸ்பவுட்டம் டெஸ்ட் ரிசல்ட் காசநோய்க்கு சாதகமாக அமைந்தது. இதைப்பற்றி யமுனாவிடம் கூறினேன். கடவுள் உங்களை காப்பாற்றுவார் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டாள். கோட்டைக்கு ஆசைப்பட்டு கோமளியாக நிற்கிறேன்.

சென்னை வேண்டாம், இசிஆர் வேண்டாம், பங்களாவேண்டாம். எனக்கு ஹதராபாத்தே போதும். இங்கு கற்கள் அதிகமாக இருந்தாலும் மனிதர்கள் நல்லவர்கள். இன்னும் இரண்டு வருடம் இப்போது வேலை பார்த்துவரும் கம்பெனியிலே வேலையை தொடரலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

என்னுடைய இந்த வாழ்க்கை மாற்றத்துக்கு நீயும் ஒரு காரணம். உனக்கிருந்த காசநோய் எனக்கு வந்தது நீ புகைத்த புகையினால்தான் என்று புரிந்து கொண்டாயா?

இனிமேலும் நீ புகைக்க நினைத்தால் சுடுகாட்டில் உனக்கு குடிசை போட்டு தருகிறேன். எலும்பு கூடுகளுடன் சேர்ந்து கொண்டு நிம்மதியாக புகைக்கலாம். உனக்கு பின்னால் உன் குழந்தை தர்சிணி இருக்கிறாள். அவளுக்காவது நீ புகைப்பதை நிறுத்த வேண்டும்.

இப்படிக்கு,

ராஜேஷ

ஹதராபாத்.

இ-மெயில் அனுப்பிய பிறகு ராஜேஷ்க்கு இருமல் வந்தது. காரி இருமினான்.

- முற்றும் -

 உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

No comments:

பார்வைகள்