டிசம்பர் மாதம் 28ம் தேதி காலைப்பொழுதில்...
இரு சக்கர வாகனத்தில் சாய் அக்சித் அவன் மாமாவுடன் ஹைதராபாத் திலுள்ள கே.பி.ஹைச்.பி காலணியில் சென்று கொண்டிருந்தான். தெலுங்கானா பந்த் நடைபெற்று வருவதால் ஊரெங்கும் மெளனம் நிலவியது. ஆட்கள் நடமாட்டம் சாலையில் அவ்வளவாகயில்லை. சேர் ஆட்டோ மட்டும் ஆட்களை ஏற்றிய வண்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தது. கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தன. சாலைகள் சந்திக்கும் இடத்தில் முழுமையாக எரிந்து போயிருந்த டயர் அதன் சாம்பலை மட்டும் விட்டுப்போயிருந்தது. எதிர் பாராத விதமாக சாய் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதியது. சாய், அவன் மாமா, இருசக்கர வாகனம் மூவரும் தனித்தனியாக தரையில் சிதறிக்கிடந்தனர். சாலையின் சந்திப்பில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் விபத்தை பார்த்து சம்பவ இடத்தை நோக்கி ஓடி வந்தனர். சாயின் மாமாவை தூக்கி ஓரமாக உட்கார வைத்தனர். அவரின் ஒரு பக்கம் முழுவதும் சிராய்ப்பு, சிராய்ப்பிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சாய் எழுந்திரிக்க முடியாமல் சாலையில் படுத்தபடியே கிடந்தான். சாயின் இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. “யோவ் பையனுக்கு நாடித்துடிப்பு இருக்கு யாராவது 108க்கு போன் செய்ங்க” என்றார் ஒரு போலீஸ்காரர்.
ooo
சாயின் அப்பா ரவீந்திரபாபு கோயில் சன்னதி தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறார். வீட்டின் ஒரு பகுதியானது கடையாக மாறியிருந்தது. வீடானது ஒரே ஒரு நீண்ட அறை கொண்டது. சமையல்கட்டிற்கு மட்டும் தடுப்புச்சுவர் இருக்கும். சமையல்கட்டின் எதிரே குளியலறை சேர்ந்தார் போல் கழிப்பறை அதனுள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் நிற குண்டு பல்பு. இரவில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பு மேற்சுவருக்கும் குளியலறை கதவிற்கும் இடையே யுள்ள இடைவெளி வழியே வெளிவரும் மஞ்சள் நிற ஒளி சமையல் திண்டின் மேல் விழும். சாய் ஒரு நாள் பள்ளிக்கு சென்று திரும்பி வந்த போது ரவீந்திர பாபு அவன் கையில் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை மாட்டிவிட்டார். ஆனந்தத்தில் துள்ளிய சாய் ரவீந்திர பாபுவின் கன்னத்தில் பச்சென்று முத்தமொன்று கொடுத்தான். ரவீந்திர பாபு குள்ளமானவர், உருண்டை முகம் கொண்டவர், அவரின் கரிய நிறத்திற்கு நெற்றியில் பூசியிருக்கும் திருநீர் பளிச்சென்று தெரியும். சாய் படித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரி அவன் வீட்டிலிருந்து ஜந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. “அப்பா நான் இன்னிக்கு காலேஜிக்கு ரமேஸோட பைக்ல போறேன். என்னோட சைக்கிள் சாவி கண்ணாடி தட்ல இருக்கு” என்றான் சாய். கோயில் சன்னதி தெருவில் சாய் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல அவன் பின்னே ரமேஸ் அமர்ந்திருப்பதை ரவீந்திர பாபு தன் கடையிலிருந்து பார்த்தார்.
ooo
டிசம்பர் மாதம் 29ம் தேதி இரவுப்பொழுதில்...
சாய் வென்டிலேட்டரினுள் வைக்கப்பட்டிருந்தான். லைப் சப்போர்ட் இயந்திரங்களின் உதவியால் அவன் உயிர் பிழைத்துக்கொண்டிருந்தது. உடலில் சிராய்ப்பில்லை, தலையின் வலது பக்கம் பலமாக அடிபட்டு இரத்தம் வந்துள்ளதாக டாக்டர் ரவீந்திரபாபுவிடம் கூறினார். அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரினுள் வைக்கப்பட்டிருந்த சாயை கண்ணாடி கதவின் வழியே பார்த்தார் ரவீந்திர பாபு. விபத்து நடந்த அன்று அதாவது 28ம் தேதி சாயை சேர்த்திருந்த ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் 29ம்தேதி காலை வேறொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டிருந்தான். விபத்து நடந்ததிலிருந்து சாய் கோமாவிலிருந்து வருவதாகவும், எப்போதாவது உடலில் சிறுசிறு அசைவுகள் தென்படுவதாகவும், இருதயம் சரியாக செயல்படுவதாகவும், மூளை தண்டுவடத்தில் பலமாக அடிபட்டுள்ளதால் மூளை தன் செயல் திறனை முழுமையாக இழந்துவிட்டதாகவும் டாக்டர் சாயின் உடல் நிலை பற்றி ரவீந்திர பாபுவிடம் கூறினார்.
ooo
ரவீந்திர பாபு அடகுகடையில் தான் அணிந்திருந்த தங்கச்சங்கலி, கைவிரல் மோதிரம், கையில் கட்டியிருந்த தங்க கடிகாரம் அனைத்தையும் அடகு வைத்து சாய்க்கு பைக் வாங்கிவந்தார். ரவீந்திர பாபு நகையை அடகுகடையில் அடகு வைப்பது பற்றி மனைவியிடமோ, பைக் வாங்கப்போவது பற்றி சாயிடமோ ஒரு வார்த்தை பேசவும் இல்லை கேட்கவும் இல்லை. ரவீந்திர பாபுவின் மனைவி இது தெரிந்து கோபமாக திட்டினாள். சாய் தனக்கு பைக் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான்.
ooo
டிசம்பர் மாதம் 29ம் தேதி இரவுப்பொழுதில்...
“உங்க பையன் ப்ரைன் டெட்ல இருக்கார். ப்ரைன் டெட்னா மூளை செத்துப்போச்சின்னு அர்த்தம்” என்றார் டாக்டர்.
“அப்ப என் பையன் செத்துட்டானா?” என்று கேட்டார் ரவீந்திரபாபு.
“முழுமையா இன்னும் சாகலை, இருதயத்துடிப்பு இன்னும் இருக்கு”
“அப்ப என் பையனை எப்படியாவது காப்பத்துங்க டாக்டர்”
“மூளை வேலை செய்யாதப்ப மற்ற பாகங்கள் இயங்கி உபயோகமில்லை. வாழ்நாள் முழுக்க கோமாவில் தான் இருப்பான். உடலிலிருந்து எந்தவொரு அசையும் இருக்காது. இதே போல் வாழ் நாள் முழுக்க வென்டிலேட்டர்ல தான் வச்சிருக்கணும்”
“அய்யோ! டாக்டர் என் பையனை காப்பாத்துங்க, நீங்க தான் இப்ப எங்களுக்கு கடவுள்”
“சரி நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் என்னோட ரூம்க்கு வாங்க. உங்க மனைவி இங்கேயே இருக்கட்டும்”
ooo
பள்ளிப் பருவத்தில் சாய் பள்ளித்தோழி ஒருத்தியை நேசித்து வந்தான். அவளின் பெயர் கோமதி. கோமதி வெள்ளை நிறத்துடன் சற்று குண்டாக இருப்பாள். அவளைப்போலவே அவளின் எழுத்துக்களும் குண்டாகயிருக்கும். சாய் கோமதியை நேசிப்பதற்கு அவளின் எழுத்துக்களும் ஒரு காரணம். பள்ளிப்பருவம் முடிந்து பாலிடெக்னிக் சென்ற பிறகும் சாய் கோமதியின் நினைவாகவேயிருந்தான். விடுமுறை நாள் ஒன்றில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த கோமதியை பார்த்து பேசினான் சாய். அவளும் வேறொரு பாலிடெக்னிக்கில் ECE சேர்ந்துள்ளதாக கூறினாள். மெளனமாக நின்று கொண்டிருந்தவன் முன்பு ஒரு நாள் அவளை பற்றி எழுதிய காதல் கடிதத்தை அவளிடம் கொடுத்தான். பதற்றத்தில் கைகள் தவறி கீழே விழுந்த கடிதத்தை கோமதி எடுக்க முயன்ற போது முகத்தில் முத்துக்கள் போட்டிருந்த வேர்வை துளிகளோடு சாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.
ooo
கோமதியும் தன்னை காதலிக்கிறாள் என்று தன் கல்லூரி தோழிகள் மூலமாக தெரிந்து கொண்டான் சாய். கோமதியின் வீடு கோயில் சன்னதி தெருவிற்கு அடுத்த தெருவிலிருந்தது. நண்பனை பார்க்கச் செல்வது போல் கோமதியின் வீட்டை கடந்து செல்லும் ஒவ்வொரு முறைபும் அவள் இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள அவளின் வீட்டு முற்றத்தில் செருப்பை தேடித்திரிந்தன அவனின் கண்கள். இருவரும் வாரம் ஒரு முறை குசைன் சாகர் லேக்கில் சந்திப்பதாக முடிவு செய்தனர். ஜோடி ஜோடியாக லேக்கினை சுற்றி வரும் கூட்டத்தினருடன் இவர்களும் கலந்து கொண்டனர். கல்லூரியின் இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. சாய் மேற்கொண்டு படிக்க வராங்கள் சென்றான். கோமதி மேற்கொண்டு படிக்க முடியாத பொருளாதார சூழ்நிலையால் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். தெலுங்கானா பிரச்சனை காரணமாக சாய் படித்து வந்த கல்லூரிக்கு விடுமுறை விட்டிருந்தனர். கோமதி கொடுத்த நெருக்கடி காரணமாக சாய் தன் காதலை நேரடியாக ரவீந்திரபாபுவிடம் சொல்வதற்கு பதிலாக கடிதம் மூலம் தெரிவிக்க எண்ணி கடிதம் எழுதினான்.
டிசம்பர் மாதம் 28ம் தேதி காலைப்பொழுதில்...
“மாமா போஸ்ட் ஆபிஸ் போகணும் வர்றியா? ” என்று தன் தாய் மாமாவிடம் கேட்டான் சாய்.
“வா மாப்பிள்ளை போகலாம்”
தபாலை போஸ்ட்பாக்ஸில் போட்டுவிட்டு வந்தவன் மாமாவை இருசக்கர வாகனத்தை ஓட்டச்சொல்லிவிட்டு அவரின் பின்னால் அமர்ந்து கொண்டான்.
“என்ன மாப்பிள்ளை தபால் யாருக்கு கேள் பிரண்டுக்கா?”
“இல்ல மாமா பெஸ்ட் பிரண்டுக்கு”
ooo
ரவீந்திரபாபு டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தார்.
“லதா, டாக்டர் ஒரு யோசனை சொன்னார் எனக்கு அது சரின்னு படுது, உன்னோட விருப்பத்தை சொல்லு” என்று தன் மனைவியிடம் கேட்டார் ரவீந்திரபாபு.
“டாக்டர் என்ன சொன்னார்?”
“பையனோட உறுப்பை தானம் பண்ண சொன்னார்”
“எதுக்கு தானம் செய்யணும்?”
“லதா, பையனோட மூளை செயலிழந்து போச்சி. ஆனா மூளைய தவிர மத்த உறுப்புகள் நல்லா செயல்படுது. நம்ம இப்ப உறுப்பு தானம் செய்ய ஒத்துக்கிட்டா அவனோட ஏழு உறுப்புகள் மத்தவங்களுக்கு உபயோகமாயிருக்கும்”
“என்ன சொல்றீங்க? உயிரோட இருக்கிறவன கொன்னு அவனோட உறுப்பை எடுக்க போறீங்களா? நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். தம்பி இவர் என்ன சொல்றார்ன்னு கேள்”
“இவனுங்க இப்படி செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா நாம வேற ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம். மச்சான் இந்த ஆஸ்பத்திரி வேணாம்” என்று கூறினார் சாயின் தாய் மாமா.
“இது எங்க குடும்ப விசயம், நீங்க இதில தலையிடாதீங்க” என்றார் ரவீந்திரபாபு.
“அப்ப நீங்க உயிரோட இருப்பவனை கொல்லப்போறீங்க?” என்று கேட்டாள் லதா.
“நம்ம இதுக்கு சரின்னு சொல்லலைன்னா. அவங்க லைப் சப்போர்ட் இயந்திரங்களிலிருந்து நம்ம பையனை பிரிச்சிடுவாங்க. அதன் பிறகு ஒரு நாளோ இரண்டு நாளோ கூடப்போனா ஒரு வாரத்துல இறந்திடுவான். அப்படி சாகப்போற நம்ம பையனோட உறுப்பு மத்தவங்களுக்கு பயன்படலாமே”
“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். அய்யோ! என் பையனை விட்டுடுங்க. கொலைகார பாவி என் பையனை கொல்லாத” என்று லதா ரவீந்திரபாபுவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஓங்கி ஓங்கி குத்தினாள்.
ooo
டிசம்பர் மாதம் 31ம்தேதி காலைப்பொழுதில்...
சாயின் உடலில் இருந்து லிவர், இரண்டு கிட்னி, இரண்டு கண்கள், மற்றும் இரண்டு இருதய வால்வுகள் எடுக்கப்பட்டிருந்தன. டாக்டர் ரவீந்திரபாபுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சாயால் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். தூரத்தில் தபால்பையுடன் தபால்காரன் ரவீந்திரபாபுவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“உடலுறுப்புகளை தானம் செய்வோம், இப்பூவுலகில் மறுபிறவி எடுப்போம்”
--------------------------------------------------------------------------------
ஹைய்தராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட கதை.
No comments:
Post a Comment