Wednesday, January 13, 2010

ஜெயமோகனின் குறுநாவல் அனல்காற்று

 

புத்தக காட்சி கிணற்றில் இறைத்துக் கொண்டிருந்த போது என் வாளிக்குள் சிக்கிய புத்தகம் அனல்காற்று. புத்தகத்தின் முதற்பக்க குறிப்பை படித்த பின் தெரிந்தது பாலுமகேந்திரா இயக்கவிருந்த படம் ஜெயமோகனின் கதையென்று. ஹிந்து பேப்பரில் சில மாதங்களோ அல்லது வருடங்களோ முன்னாடி அனல்காற்று படத்தின் போஸ்டர் பார்த்தது புத்தக காட்சியில் மு.மேத்தாவின் கவியரங்கம் பார்த்துக் கொண்டிருந்த போது மூளை எனக்கு நினைவூட்டியது. புத்தக காட்சியில் நிறைய புத்தகம் வாங்கியிருந்ததால் எதை முதலில் படிப்பதென்ற சிந்தனையிலிருந்தேன். படம் கைவிடப்பட்டாலும் பாலுமகேந்திரா இயக்கவிருந்த படத்திற்கு ஜெயமோகனின் கதை எப்படியிருக்கும் என்ற எண்ணத்தின் உந்துதல் என்னை அனல்காற்று முதலில் படிக்க வைத்தது. புத்தக கண்காட்சி முடிந்து வந்த அடுத்தநாள் காலை 7:50 மணிக்கு சென்னையிலிருந்து சாத்தூர் வழியே குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் D1 கோச்சில் அமர்ந்து கொண்டு அனல்காற்றை படிக்கத் துவங்கினேன்.

விமானநிலையத்தில் நின்று கொண்டு வானத்தில் பறந்து மறைந்து கொண்டிருக்கும் விமானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான் அருண். விமானத்தில் செல்வது அருணின் மாமன் மகள் சுசிலா. லண்டன் செல்கிறாள். மனஅழுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் அருண் வானத்தில் புள்ளியாக விமானம் மறைந்ததும் தன் காரில் ஏறி பாண்டிச்சேரிக்கு செல்கிறான். பாண்டிச்சேரியில் லாட்ச் ஒன்றில் ரூம் எடுத்து மணிக்கட்டை கத்தியால் அறுத்து விடுகிறான். மணிக்கட்டிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வழிகிறது. அருண் ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்? அப்படி அவனுக்கு என்ன நடந்தது? என்று வாசகர்களின் மனதில் கேள்வியை எழுப்பி கதையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்கிறது. தொடரும் கதையை அருண் சுசிலாவிடம் சொல்வது போல் எழுதுயிருக்கிறார் ஆசிரியர், சுசிலாவை சுசி என்றழைக்கிறான் அருண்.  

லண்டனிலிருந்து சென்னை வந்திருக்கும் சுசியை வரவேற்க செல்கிறான் அருண். சுசியை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறான். அப்போது சுசி ஆண்கள் பெண்களின் மார்பையே அதிகம் பார்ப்பதாகவும், ரசிப்பதாகவும் பார்ப்பதை பெண்கள் பார்த்தவுடன் ஆண்கள் வேறொரு பக்கம் திரும்பிக் கொள்வதாகவும் ஆண்களை பற்றி விமர்சனம் செய்கிறாள். அருண் அதை மறுக்கிறான். சுசியோ பல உதாரணங்கள் தருகிறாள். சுசி மார்பை பப்ஸ் என்று சொல்கிறாள். தோளில் சரிந்து விழும் துப்பட்டாவை சரி செய்யும் போதும், சேலையை சரி செய்யும் போதும் ஆண்களின் கண்கள் பெண்ணின் மார்பகங்களை பார்ப்பதாக கூறுகிறாள். அருண் இதையும் மறுக்கிறான். அருகில் அமர்ந்திருக்கும் சுசி ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் போது டீ-சர்ட்டினை முன் தள்ளிக் கொண்டிருக்கும் அவளின் மார்பகங்களை பார்க்கிறான் அருண். அருண் பார்ப்பதை சுசி பார்த்து விடுகிறாள் உடனே அருண் பார்வையை ரோட்டின் பக்கம் திருப்பி காரை செலுத்துகிறான். சுசியிடம் வசமாக மாட்டிக் கொண்ட அருண் அவளிடன் வதைபடுகிறான்.           

அருணின் அம்மா ஜி.சிவகாமி சுருக்கமாக ஜி.எஸ் சுசியை கொண்டாடுகிறாள். சுசியின் அப்பா லண்டனில் ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறார். அதனால் அவளும் நன்கு சமைக்க கற்றுருக்கிறாள். இந்தியா வந்த முதல் நாளே சமையல் கட்டினுள் நுழைந்து அருமையான தோசை சுட்டுக் கொடுத்து ஜி.எஸ் சிடம் நன்மதிப்பு பெறுகிறாள். அருணின் செல்போனிற்கு அழைப்பு வருகிறது. பதற்றமடைகிறான். செல்போனை சைலண்டில் போட்டுவிட்டு சுசி சுட்டுதரும் தோசையை தின்கிறான். சந்திரா அருணின் வீட்டிற்கு வருகிறாள். சந்திரா ஜி.எஸ் வேலை பார்த்த கல்லூரியில் உடன் வேலை பார்த்தவள். ஜி,எஸ்ஸை விட பனிரெண்டு வயது இளையவள். வெளியில் இளமையாக காட்டிக்கொள்ளும் சந்திரா சுசி வருவது தெரிந்து அவளுக்கு சுடிதார் வாங்கி வந்திருக்கிறாள். ஜி.எஸ்சும் அவர்களுடன் கலந்து கொள்கிறாள். இனிவரும் கதையானது இந்த மூன்று பெண்கள், அருணை சுற்றியே அமைகிறது.

 சந்திரா கொடுத்த சுடிதார் அணிந்து கொண்டு சுசி அருணுடன் பாண்டிபஜாரில் சாப்பிங் செய்கிறாள். பாண்டிபஜாரில் கூட்டத்தை பார்த்து சந்தோசப்படுகிறாள். இது போன்ற கூட்டத்தை லண்டனில் பார்த்ததில்லை என்கிறாள். எதிரே தன்னை கடந்து செல்லும் ஆண்கள் எல்லாம் தன்னை வெறித்துப் பார்ப்பதாகவும் அது தனக்கு மகிழ்ச்சிதருவதாகவும் அருணிடம் கூறுகிறாள். ஆண்கள் எல்லாம் தன் மார்பை பார்ப்பதாக கூறி மார்பு பற்றிய பேச்சை மீண்டும் தொடங்குகிறாள். அருண் கோவப்படுகிறான். இருவரும் சண்டை போடுகிறார்கள். சண்டையும் தற்காலிகமான சண்டை வெகுநேரம் நீடிப்பதில்லை.

 அருண் சந்திராவின் வீட்டிற்கு போயிருக்கும் போது சந்திராவின் மகன் நவீன் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கிறான். நவீன் குண்டான பையன், நவீன் அப்பா இறந்து ஒன்பது வருடம் ஆகியும் சந்திரா மறுமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறாள். சந்திரா, அருண் இருவருக்கும் டீ போட்டு கொண்டு வரும் நவீன் தன்னை ஸ்கூல் டென்னீஸ் டீமில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாகவும் அதற்கான காரணம் குண்டாக இருக்கிறேன் என்றும் சந்திராவிடம் சொல்கிறான். சந்திரா வெயிட் குறைக்கும் வழியொன்றை நவீனுக்கு கூறிவிட்டு தன் அறைக்குள் செல்கிறாள் அருணுடன் அதன்பின் நவீன் டிவி பார்ப்பதில் மும்மரமாகிறான். சந்திரா அருணை மிக நெருக்கமாக நெருங்கி ஏன் போன் செய்தால் பேசுவதில்லையென்றும்? புதிதாய் ஒருத்தி வந்ததும் தன்னை மறந்துவிட்டாயா? என்றும் கேட்கிறாள். அருண் இல்லையென்று சொல்கிறான். சந்திரா அருணிடம் நீ இல்லையென்றால் செத்துவிடுவதாக கூறி அழுகிறாள். இருவரும் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். உடலுறவு கொள்கின்றனர். கதையில் முதல் முடிச்சு இங்கே விழுகிறது.

அருணின் கதாபாத்திரமானது சிக்கலானது. ஊஞ்சல் போன்றது. சுசியுடன் அருண் மகாபலிபுரம் செல்லும் போது சுசி அருணை காதலிப்பதாக சொல்கிறாள். சுசி திரும்ப லண்டன் செல்ல விருப்பமில்லையென்றும் இங்கேயே தங்கி நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு தாயாக இருக்க விரும்புவதாக கண்ணீர் மல்க அருணிடம் கூறுகிறாள். அருண் மெளமாக இருக்கிறான். சுசி அவன் மெளனத்தை பார்த்து யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்கிறாள். அருண் இதற்கும் இல்லையென்று பதில் தருகிறான். கதையில் இரண்டாவது முடிச்சு இங்கே விழுகிறது. ஊஞ்சலின் இருமுனைகளிலும் கட்டப்பட்ட இறுக்கமான கயிறுகள் சந்திரா சுசிலா. ஒருமுனை ஊஞ்சலை தன்பக்கம் இழுக்க மறுமுனை ஊஞ்சலை அதன்பக்கம் இழுக்க ஊஞ்சலானது சமநிலையை அடையாமல் காமவெளியில் ஆடிக்கொண்டிருக்கிறது. முடிவில் எந்த முனை ஜெயித்ததென்பதே மீதிக்கதை.
 

No comments:

பார்வைகள்