Thursday, February 18, 2010

பிரிவின் வலி - சிறுகதை

கழிவறைக் கதவை சாத்திவிட்டு சுவர் கடிகாரத்தை பார்த்தாள் அமுதா. சூரியன் உதயமாக இன்னும் அதிகம் நேரம் இருந்தது. கோடைகாலத்தின் வெப்பக்காற்றை மின்விசிறி அறை முழுவதும் நிரப்பி வைத்திருந்தது. வெளிக்காற்றை சுவாசிப்பதற்காக சன்னல் கதவை திறந்துவிட்டாள். வெளியே இருள் அப்பியிருந்தது. தூரத்தில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.மாடியில் சுவிட்ச் ஆன் செய்யும் சப்தம் கேட்டது. தண்ணீர் சிந்தும் சப்தம். மீண்டும் சுவிட்ச் ஆப் செய்யும் சப்தம் கேட்டது. மேல்மாடியில் அமுதாவின் மூத்த மகனும் மருமகளும் தங்கியிருக்கிறார்கள். நிசப்தம் தொடர்ந்தது.


அமுதா நடந்துவந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள். தூக்கம் வராமலே முழித்தபடி படுத்துக்கிடந்தாள். அமுதாவுக்கு இது ஒன்றும் புதிதானது அல்ல. பல நாட்கள் இவ்வாறு தூக்கம் வராமல் அதிகாலையிலே எழுந்துவிடுவாள். இப்படி சீக்கிரம் எழும் நாட்களில் அமுதாவின் மனது இளைய மகனை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கும்.


*
அன்று என் இளைய மகன் ராமு காலை சூரியன் எழுந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தான். நான் ரவாலட்டுவை பிய்த்து ராமுவின் வாயில் திணித்தேன். அவன் "தூ" வென்று துப்பினான். துப்பிய ரவாலட்டு துண்டுகள் என் கன்னத்தில் பட்டு கீழே விழுந்தது. நான் மீண்டும் ரவாலட்டினை பிய்த்து ராமுவுக்கு ஊட்டினேன். உட்கொள்ளாது துப்பினான்.


கண் முழித்த ராமு "என்னம்மா இது! கொஞ்சம் நேரம் தூங்க விடு."

நானோ, "எழுந்திரிடா, உனக்கு இன்னைக்கு பிறந்தநாள்." அனத்தல் தாங்காமல் எழுந்து கழிவறை சென்றான்.


 கழிவறையிலிருந்து வந்த பின்பு நான் அவனுக்கு தேநீர் பருக கொடுத்தேன். தேநீரை பருகிய படியே வீட்டுப்பாடம் செய்யத்துவங்கினான் ராமு.


ராமு குளிக்க செல்லும் முன்பு ரேடியோவை ஆன் செய்துவிட்டுத்தான் செல்வான். அவன் ஒரு இசைப்பிரியன். ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களை பாடியபடி குளிப்பான். இந்தப்பழக்கம் அவன் அப்பாவிடமிருந்து தான் வந்திருக்கக்கூடும். அவரும் இப்படித்தான் புதிதாக வரும் திரைப்படத்தின் பாடல் கேசட்டை உடனே வாங்கிவிடுவார். எண்ணிப்பார்த்தால் அவர் வாங்கிய கேசட் எண்ணிக்கை ஐந்நூறை தாண்டும். எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து ரேடியோ இருந்தது. இப்போதெல்லாம் அந்த கம்பெனி இருப்பதே சந்தேகம் தான்.


குளித்துவந்த ராமுவுக்கு சூடாக எட்டு இட்லி பரிமாறினேன். இட்லியை பிய்த்து தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பர் என்று மூன்றிலும் தொட்டுத் தின்றான். சாப்பாட்டு விசயத்தில் ராமு என்னைப்போல்தான்.


ராமுவுக்கு பிறந்த நாள் பரிசாக பேண்ட், சட்டை, பனியன் மற்றும் உள்ளாடைகள் வாங்கி வைத்திருந்தேன். அதற்கு முன்பு வரை அவன் அரைக்கால் டிரவுசருடன்தான் எங்கும் சென்றுவருவான். ராமுவின் ஆசிரியர் அவனை உள்ளாடை அணியாமல் வந்ததற்கு தண்டித்ததாக ஒரு நாள் இரவில் படுக்கையில் தூங்குவதற்கு முன்பு கூறினான். எனது பரிசை பெற்றுக் கொண்ட ராமு முத்தம் ஒன்று கொடுத்தான்.


ராமுவின் செயல்களில் அப்போதெல்லாம் பெரிய மாற்றம் இல்லை. பள்ளிக்கு செல்வது, படிப்பது, விடுமுறை நாட்களில் கிட்டுப்புல் விளையாடுவது, கோலிக்குண்டு விளையாடுவது, சில நேரங்களில் ஊர் நூலகத்தில் சென்று வார இதழ்கள் படிப்பது, இதுதான் அவனது உலகமாகயிருந்தது. வீட்டுக்கு டிவி வந்த பிறகு கிரிக்கெட் பார்க்கத் துவங்கினான். அதன் பின்பு தெரு பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி எதிர் வீட்டு நாயக்கர் வீட்டு சன்னல் கண்ணாடியை உடைத்தான். ராமுவின் செயல்பாடுகள் அனைத்தும் வேறொருவரின் செயல்களை ஒத்தே காணப்பட்டது. அவனுக்கு சுயமாக யோசிக்கும் சிந்தனை அப்போது வரவில்லை.


இப்படி இருந்த என் மகன் ராமுவுக்கு எப்படி அந்த செயலை செய்ய நெஞ்சழுத்தம் வந்தது?


ராமுவுக்கு பனிரெண்டாம் வகுப்பு முழுப் பரிட்சை முடிந்தது. திருவண்ணாமலையிலிருக்கும் மாமா வீட்டுக்கு சென்று வர அனுமதிகேட்டான். நானும் மனநிறைவோடு அனுப்பிவைத்தேன். இது தான் ராமுவுக்கும் எனக்குமான முதல் பிரிவு. ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தான். ரிசல்ட் வெளிவந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தான். சென்னையிலுள்ள ஐ.ஐ.டியில் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் சீட் கிடைத்திருப்பதாக கூறினான். நான் அவ்வளவு தூரம் வேண்டாம் அருகிலுள்ள அழகப்பாவில் சேர்ந்து படி என்றேன். அவன், "இல்லம்மா, ஐஐடி ரொம்ப பெரிய காலேஜ்ம்மா, படித்து முடிச்ச அடுத்த நாள் அமெரிக்கா போயிடலாம். டாலர்ல சம்பாதிக்கலாம்" என்று கூறினான். அவன் ஆசையை நிறைவேற்றி வைத்தேன்.


ராமுவுக்கும் எனக்குமான இடைவெளி அதிகமானது. நாட்கள் நகர்ந்தன. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பார்க்க வருவான். ஊருக்கு வரும் போதெல்லாம் சென்னை மனிதர்களை பற்றி கதை கதையாக கூறுவான். குறிப்பாக அவன் நண்பர்கள் பெண் தோழிகளை பற்றி கூறுவான். துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டை விரும்பி அணிவதாகவும் ஒருவர் அணியும் உள்ளாடையை தவிர மற்ற எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினான்.


நான், "நீ எப்படி?" என்றேன். "ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று யாரோ சொல்லியிருக்கிறாரே அதனால் நானும் அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டேன்" என்றான்.


மூன்றாம் ஆண்டுக்கான ஹாஸ்டல் பீஸ் கட்ட பணம் கேட்டான். கையில் பணமில்லை திருவண்ணாமலையிலுள்ள அண்ணனிடம் கேட்டேன். அவரும் மறுக்காமல் பணம் கொடுத்தார், எப்போது திருப்பித்தருவாய் என்று கேட்காமலே. நான் ராமுவிடம் "மாமாதான் நமக்கு உதவி செய்திருக்கிறார் அதற்காக அவரை மாதம் ஒரு முறையாவது சென்று பார்" என்றேன். ராமுவோ, "நான் இங்கு வந்த இரண்டு வருடங்களில் இருபது தடவைக்கு மேலாக சென்றிருக்கிறேன்" என்றான். நான் அப்போது அவன் பாசத்தினால் தான் சென்று வருகிறான் என்று கருதினேன். அதற்கு பின்னாலியிருந்த சூழ்ச்சி எனக்கு தெரியவில்லை. நான்காம் ஆண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதும் திருவண்ணாமலை அண்ணண் தான் உதவினார்.


ராமுவுக்கு கேம்பஸ் இண்டர்வியூல் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. படிப்பு முடிந்த ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்தான். முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டு என்னை பார்க்க சிங்கம்புணரி வந்தான். அவன் வருகையை எதிர்பார்த்து அதிகாலையிலே பஸ்நிறுத்ததிற்கு சென்று காத்திருந்தேன். எனக்கு சேலையும், அப்பாவுக்கு வேஷ்டி சட்டையும், உதவாக்கரை அண்ணணுக்கு ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டும் வாங்கி வந்திருப்பான் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.


கையை வீசிக் கொண்டு வந்திறங்கினான். அவன் முகத்தில் சோகம் தவழ்ந்தது. எந்தப் பேச்சுக்கும் பிடி கொடுக்காமல் பேசினான். இப்படிபேசுவதை கூட யாரிடமிருந்தோ கற்றுக் கொண்டிருக்கிறான். எனக்கும் என் கணவருக்கும் இது போல் பேசி பழக்கமில்லை.


இரவில் மாடியில் சேர் போட்டு அமாவாசை இருட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராமு. நான் தரையில் அவனருகில் அமர்ந்து கொண்டு பேசினேன்.


"என்னடா என்ன பிரச்னை?"

அவன் பதில் கூறவில்லை.


"யாரோடவாவது சண்டை போட்டியா?"


மீண்டும் அவனிடம் நிசப்தம் நிலவியது.


"உடம்பு ஏதும் சரியில்லையா?"


பதில் கூறாது ஊமையாய் அமர்ந்திருந்தான்.


நான் எழுந்து அவன் முன் நின்றேன்.


"ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டியா?"


அவன் முகத்தை பார்த்து பேசாமல் தலையை குனிந்தபடி பேசினான்.


"எனக்கு திருமணம் ஆயிடுச்சி" என்றான்.


மேற்கொண்டு அவன் கூறியதை என்னால் ஜீரணிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.


அதன் பிறகு அவன் என்னை பார்க்க ஊருக்கு வரவேயில்லை. அவன் திருமணம் செய்திருப்பது திருவண்ணாமலையிலுள்ள அண்ணணின் மூத்த மகளைத்தான். அவள் இவனை விட ஐந்து வயது மூத்தவள். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு பயமாக இருந்தது என்றான்.


உனக்கு திருமணம் செய்து வைத்தது "யார்?" என்று கேட்டேன். "மாமா" என்றான். அப்போது தான் முடிவு செய்தேன் உலகிலுள்ள சொந்தங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே உதவி செய்கின்றன என்று.


இந்த நிகழ்வு நடந்த ஒரு வருட காலத்துக்கு பின்பு சொந்தங்களின் வாய்களின் வழியாக என் காதுக்கு செய்தி எட்டியது. ராமுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார்கள். அரைக்கால் டிரவுசருடன் உள்ளாடை அணியாமல் திறிந்தவன் இன்று குழந்தை பெற்றிருக்கிறான் என்று அவன் குழந்தை பருவத்தை இப்போது நடந்த நிகழ்வுடன் ஒத்துப் பார்த்தேன்.


*


அமுதா நன்றாக தூங்கிப் போயிருந்தாள். எழுந்து மணியை பார்த்தாள் பத்தென காட்டியது. தேதியை பார்த்தாள் மனதில் புது சந்தோசம் உருவானது குளித்து முடித்து தலைவாரிக் கொண்டு கோயிலுக்கு சென்றாள். கடவுளிடம் கோரிக்கையை இட்டுவிட்டு கடைத்தெருவுக்கு சென்று ரவை, சீனி, தேங்காய், முந்திரிப்பருப்பு, வாங்கிக் கொண்டாள். ஐவுளிக் கடைக்கு சென்று பொம்மைக்கு மாட்டியிருந்த பேண்ட், சட்டையை வாங்கி வீடு வந்து சேர்ந்தாள்.


பத்து ரவாலட்டு உருண்டைகளை குண்டு சட்டியில் போட்டு வாசலில் நின்றிருந்தாள். கையில் புதிதாக வாங்கிவந்திருந்த பேண்ட், சட்டையுடன் வாசலில் நின்று ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தாள். ராமுவின் வயதை ஒத்த ஆள் யாருமே ரோட்டில் நடமாடவில்லை. மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரமானது. தூரத்தில் யாரோ ராமுவின் வயதை ஒத்த ஆள் வருவது போல் தெரிந்தது. அந்த ஆள் நேராக அமுதாவின் வீட்டை நோக்கிவந்தான். அந்த ஆணுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் கையில் குழந்தை இருந்தது. அவர்கள் இருவரும் அமுதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அமுதாவின் கண்களிலிருந்து வழிந்த நீர் அவர்களுக்கு அர்ச்சனையாக மாறியது.


அமுதா, "ராமு" என்றாள்.


*
யூத்புல் விகடனில் வெளியாகியுள்ளது 

No comments:

பார்வைகள்