ஜீன் மாதம் 3வது ஞாயிறு உலகெங்கும் அப்பாக்கள் தினம் (Father's Day) கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் என் அப்பாவுடன் வாழ்ந்த கணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சாத்தூர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஊர். திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்பவர்கள் எங்கள் ஊரை கடந்தே செல்ல வேண்டும். எங்கள் ஊர் NH7ல் அமைந்துள்ளது. இரயில் பாதையும் எங்கள் ஊரில் உள்ளது. 1914 ல் அல்லது அதனை ஒட்டிய வருடங்களில் மகாத்மா காந்தி எங்கள் ஊரை கடந்து சென்ற போது எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் இறங்கியதாக இரயில் நிலையத்தின் வாசலிலுள்ள கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.
அப்பா சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் சேவுக்கடை வைத்திருந்தார். சாத்தூர் காரச்சேவிற்கு பெயர் போன ஊர். சென்னை, பம்பாய், டெல்லியென்று வெளியூர் செல்பவர்கள் நயஞ்சேவு, சீனி மிட்டாய், சக்கரைமிட்டாய், பக்கோடா தின்பண்டங்களை எங்கள் கடையில் வாங்கிச்செல்வார்கள். நயஞ்சேவு,சீனிமிட்டாய், சக்கரைமிட்டாயினை பனைஓலையினால் செய்த கொட்டானில் வைத்துக் கொடுப்பார் அப்பா. பனைஓலையினால் செய்யப்பட்ட கொட்டான் உள்ளிருக்கும் தின்பண்டங்களின் சுவையை அதிகப்படுத்துகிறது. அப்பா கல்லாவில் அமர்ந்திருப்பார். அப்பாவை தவிர மூன்று பேர் சரக்கு கட்டித்தர இருப்பார்கள். கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். கடையில் அதிகப்படியான நேரம் நின்றபடியே வேலை செய்வார் அப்பா.
கடையில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை வீட்டில் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டில் தயார் செய்வோம். அதனை பட்டறை என்று சொல்வோம். பட்டறையினுள் இரண்டு அடுப்பு, உயரமான புகைக்கூண்டு ஒன்று இரண்டு அடுப்புகளையும் இணைத்தபடி இருக்கும். சேவு, சீவல், அதிரசம் மாவு பிசைவதற்கென்று உயரமான திண்டு அமைக்கப்பட்டிருக்கும். உபயோகித்த எண்ணெய் ஊற்றி வைக்கப்பட்ட சட்டிகளும், சீனிப்பால் சட்டிகளும், கடலை எண்ணெய் டிங்களும், கடலைமாவு மூட்டைகளும், அரிசிமாவு மூட்டைகளும் ஓட்டு வீட்டினுள் இருக்கும். ஓட்டுவீட்டினுள் எண்ணெயும் அழுக்கும் ஒன்று சேர்ந்து கருப்பாக தரைமீது அப்பி இருக்கும். பட்டறையின் வெளியே வலதுபுறம் கிணறு, இடது புறம் அடுப்பில் எரிக்கப்படும் சில் மலை போல் கொட்டப்பட்டிருக்கும். எரிப்பதற்கு சில் அள்ளும்போது தேள் அப்பாவை இரண்டு மூன்று முறை கொட்டியிருக்கிறது.
அப்பா இசை பிரியர். புதிதாக வரும் படங்களின் ஆடியோ கேசட்டுகளை உடனே வாங்கிவிடுவார். அம்மாவிற்கு அப்பா கேசட் வாங்குவது பிடிக்காது. வீணாக காசை கரியாக்குவதாக சொல்வாள். அப்பா வாங்கிய கேசட்டுகள் மொத்தம் முண்ணூருக்கும் அதிகமாக இருக்கும். இன்னும் அந்த கேசட்டுகள் அட்டைப்பெட்டியினுள் பத்திரமாக இருக்கின்றன.
அப்பா வேலை ஆட்களை கடையில் வைத்துவிட்டு இரவு உணவிற்கு எட்டு மணிவாக்கில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அப்போது தூர்தஷனில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும். பொதுவாக இரவு உணவு பால்சோறாக இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு தூக்குசட்டியினுள் சேவு, சீவல், பக்கோடா என்று ஏதாவதொரு தின்பண்டம் எப்போதும் இருக்கும்.தூக்குசட்டியின் மூடியை தலைகீழாக தூக்குசட்டியின் மீது கவிழ்த்து வைத்து தூக்குசட்டி மூடி மீது சிலேபி, சீனிமிட்டாய், சக்கரைமிட்டாய் என்று ஏதாவதொரு இனிப்பு இருக்கும். அப்பா பால்சோற்றுடன் சிலேபியை வைத்து சாப்பிடுவார்.
ஜாக்கிசான், புரூஸ்லி நடித்த ஆங்கில சண்டைப் படங்கள் தேவி தியேட்டரில் எடுப்பார்கள். இரவு நேர உணவின் போது அப்பா எங்களை இரவு ஆட்ட சினிமாவிற்கு அழைத்து போவதற்கான விவரம் பற்றி கூறுவார். அம்மா ' காயத்ரி எதுக்கு? நீங்களும் அருணும் போயிட்டு வாங்க.' என்று சொல்வாள். காயத்திரியை அம்மா விட மறுத்தாலும் அடம்பிடித்து எங்களுடன் படத்திற்கு வந்துவிடுவாள். சைக்கிளின் முன்னால் காயத்ரியையும், பின்னால் என்னையும் அமர வைத்து படத்திற்கு அழைத்து செல்வார். அந்நேரத்தில் சாலையில் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டம் இருக்காது. முகத்தில் படும் காற்றில் லேசாக குளிர் இருக்கும். வேகமாய் மதுரை செல்லும் பாண்டியன் பேருந்துகள் எங்களின் சைக்கிளை கடக்கும் போது கேட்கும் 'சரட்' என்ற ஓசையுடன் கூடிய வேகமான காற்று என் உடலில் பட்டு கைகளிலுள்ள மயிர்களை விறைக்கச் செய்திருக்கின்றன. காயத்ரி சைக்கிளில் செல்லும் போதே தூங்கி விடுவாள். திரைப்பட இடைவேளையின் போது அவளை எழுப்பி முறுக்கு வாங்கி தருவார். தின்று விட்டு மீண்டும் தூங்கிப்போவாள். நானும் அப்பாவும் திரைப்படம் பார்போம். திரைப்படத்தில் வெகுநேர முத்தக்காட்சிகளோ, ஆடை அவிழ்க்கும் காட்சிகளோ வந்தால் என் தலையை பிடித்து கீழே குனிய வைப்பார்.
அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மாடியில் பழைய சாமாங்கள் போட்டு வைத்திருக்கும் அறையில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும் போது கையில் புத்தகம் ஒன்று கிட்டியது. அந்த புத்தகம் முழுவதும் படங்களாக இருந்தது. படங்களிலுள்ளவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தனர். அவர்கள் வெவ்வேறு கோணங்களில் புணர்ச்சியில் இருந்தனர். ஒரு ஆண்-இரு பெண், இரு பெண்-ஒரு ஆண், ஒரு பெண்-ஒரு ஆண், ஒரு பெண்-பல ஆண், என்ற விகிதத்தில் படங்களில் இருந்தனர். என் உடலில் புதியதோர் ரசனமாற்றம் நிகழ்வதை உணர்தேன். பயத்தில் வேர்வை கொட்டியது. கைலியில் புத்தகத்தை மறைத்து மாடியிலிருந்து எடுத்து வந்து பள்ளி எடுத்து செல்லும் பையில் வைத்துக்கொண்டேன். மறுநாள் வகுப்பறையின் கடைசி பெஞ்சில் அமர்ந்து பாடபுத்தகத்தினுள் வைத்திருந்த படங்கள் கொண்ட புத்தகத்தை திரும்ப திரும்ப புரட்டினேன். வீட்டில் ஒரு வாரமாக காயத்திரியுடன் சண்டை போடாதது அப்பாவிற்கு என் நடத்தையின் மீது சந்தேகம் வந்தது. 'டேய் என்னாச்சி? உடம்பு சரியில்லையா? வவுத்தால போகுதா? ஏன் ஒரு மாதிரி இருக்க?' என்று அப்பா என்னிடம் கேட்டார். நம்பும் படியான பொய் சொல்லிவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு ஏறினேன்.
நான் அம்மா போல் இருப்பதாகவும், காயத்ரி அப்பா போல் இருப்பதாகவும் அப்பா அடிக்கடி சொல்வார். எங்கள் வீட்டில் நான் செய்வது எல்லாமே என் மீது திணிக்கப்பட்டவை. நான் இன்ஜினேயரிங் படித்தது, படிப்பு முடிந்த பின்பும் கூடுதலாக இரண்டு வருடம் கல்லூரிக்கு சென்று அரியர்ஸ் எழுதியது. ஆனால் காயத்ரி அப்படி இல்லை. அவள் என்ன படிக்க வேண்டுமென்பதை அவளை தீர்மானித்தாள். அதுபோலவே B.PHARM படித்தாள். அவள் B.PHARM மூன்றாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது அவள் திருமணம் பற்றிய பேச்சு தொடங்கியது. அப்பாவிற்கு தன் தங்கை மகன் மாரிமுத்துவை காயத்ரிக்கு திருமணம் முடிக்க ஆசை. அதுபோலவே அப்பா இரவுநேர உணவின் போது அவர் விருப்பத்தை எங்களிடம் கூறினார். மறுநாள் காலை பட்டறையில் சரக்கு போடும் மாஸ்டர் வரவில்லையென்பதால் அப்பா கோபமாக அவரே பட்டறையில் வேலை பார்த்தார். காரச்சேவிற்காக மாவை பெரிய சட்டியில் கொட்டி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து கொண்டிருந்தார்.
'தேவடியா மவன், தண்ணிய போட்டு வீட்ல படுத்துக்கிடக்கான்.'
'இந்த மாஸ்டர் கூதியாங்கல நம்பி நம்ம வியாபாரம் செய்ய முடியாது.'
'மூணு மாசம் அட்வாண்ஸ் வாங்கியிருக்கான். இனி நம்ம தான் அவன் முன்ன போய் நிக்கணும்.' என்று மாஸ்டரை திட்டிக் கொண்டிருந்தார்.
காயத்ரி அப்போது அவர் அருகில் சென்று மவுனமாய் நின்றாள்.
'காயத்ரி என்ன?'
அவள் பதில் கூறாமல் மவுனமாய் நின்றாள்.
'உண்ணுமில்லேல்ல வீட்டுக்குள்ள போ, இங்க நின்னா மேல தண்ணி தெரிக்கும்' என்றார்.
'அப்பா, நான் காலேஜில ஒருத்தரை லவ் பண்றேன்.'
அப்பா மாவு பிசைவதை நிறுத்திவிட்டு அவள் சொல்வதை கேட்டார்.
'அந்த பையன் ரொம்ப நல்லவன். அவங்க அம்மா அப்பா கூட ரொம்ப நல்லவங்க. திருநெல்வேலி காரங்க. அவங்க அப்பா பேங்கல வேலை செய்றாங்க'
அப்பா ஓரே கேள்வி கேட்டார். 'என்ன சாதி?'
'நம்ம சாதியில்ல, ஆனா அவங்க நல்ல குடும்பம்'
'பெரிய பொண்ணு மாதிரி பேசக்கூடாது. காலேஜ் கடைசி வருஷம் நல்லபடியா படிச்சி முடி நம்ம மாரிமுத்துவை கட்டி வைக்கிறேன். '
'அந்த கோணவாயனையெல்லாம் கட்டிக்க முடியாது. நான் விரும்பின பையனைத்தான் கட்டிக்க போறேன்.'
கோபத்தில் அப்பா மாவு பிசைந்த கையால் காயத்ரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அறைந்ததில் கீழே விழுந்த காயத்ரி இரும்புச்சட்டையில் மோதி மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.
அதன்பின் அப்பாவும் காயத்ரியும் பேசிக் கொள்ளவில்லை. அவள் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். வார விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வருவாள். அவளின் காதல் விசயம் மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா என்று குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டது. காயத்ரி ஊருக்கு வரும் போதெல்லாம் ஏதாவதொரு பஞ்சாயத்து நடக்கும். அம்மா சாகப்போவதாக கூறி காயத்ரியை மிரட்டுவாள். காயத்ரி அதற்கெல்லாம் பயப்படாமல் 'நீ போகும்போது என்னையும் கூட்டிச்செல்' என்பாள். அதன்பின் இருவரும் சாவு பற்றிய பேச்சை சில வாரங்கள் பேசாமல் இருப்பார்கள். காயத்ரி ஞாயிற்றுக்கிழமையின் மாலைப்பொழுதில் இரயில்நிலையத்தின் அருகில் விற்கப்படும் சிக்கன் பக்கோடா விரும்பி சாப்பிடுவாள். இந்த சண்டையிலும் கூட அப்பா அவள் ஊரில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பக்கோடா வாங்கிவந்து தருவார். காயத்ரியை ஞாயிறுக்கிழமை இரவு காலேஜ்க்கு அனுப்பி வைக்க பஸ் ஸ்டாண்ட் வரை அப்பா செல்வார். ஆனால் இருவரும் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் நடப்பார்கள். காயத்ரி P.G முடித்த இரண்டு வருடம் கழித்து அவள் விரும்பிய பையனையே திருமணம் முடித்து வைத்தார் அப்பா.
இன்னும் அப்பாவை பற்றி பேச நிறைய விசயங்கள் உள்ளன. மீண்டும் அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருந்தால் அதிலும் இதே அப்பாவிற்கு மகனாக பிறக்க வேண்டும்.
-------------------------------------முற்றும்----------------------------------------------------------
கூடு இணைய இதழில் வெளியாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment