Thursday, July 1, 2010

திரைவிமர்சனம் : The Songs Of Sparrows

'The Songs Of Sparrows' என்ற ஈரானிய திரைப்படம் ஹைய்தராபாத் பிலிம் கிளப்பில் திரையிடப்பட்டது. திரைப்படமானது கிராமம் ஒன்றில் வசித்து வரும் கரீம் என்பவரின் குடும்பத்தின் கதை. கரீம் நெருப்புக்கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்கிறான். நெருப்புக்கோழிகள் தப்பித்துவிடாமல் இருக்கவும், நெருப்புக்கோழியின் முட்டையை சேகரித்து வேனில் ஏற்றி அனுப்புவதும் அவனது அன்றாட வேலையாக இருக்கிறது. கரீமுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள்.




கரீம் பையன் அவன் அக்காவின் செவிட்டு மிஷினை தவறுதலாக கிணற்றில் போட்டுவிடுகிறான். கரீமின் பையன் மற்றும் அவனது நண்பர்கள் கிணற்றினுள் இறங்கி தேடுகிறார்கள். கரீமும் இவர்களுடன் சேர்ந்து தேடுகிறான். கிணற்றில் ஆழம் குறைவாகவே இருக்கிறது. கிணற்றினுள் குப்பை, செருப்பு, பிஞ்சிப்போன ஷீ என்ற சாக்கடைக்கு ஈடாக கிடக்கிறது. கரீம் பையனின் நண்பர்கள் கிணறானது மீன் வளர்க்க நல்ல இடமென்று அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். மீன் அதிகம் வளர்த்து வியாபாரம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்கிறான் கரீம்பையனின் நண்பன் ஒருவன். இந்த அழுக்கான கிணற்றில் மீன்கள் வளர வாய்ப்பில்லை என்கிறான் கரீம். தேடிய செவிட்டு மிஷின் கிடைக்கவே எல்லோரும் வீட்டிற்கு திரும்புகின்றனர்.



கிணற்றிலிருந்து எடுத்துவந்த செவிட்டுமிஷினை சுத்தம் செய்து தன் மகளிடம் கொடுக்கிறான் கரீம். 'நான் பேசுவது கேட்குதா சொல், லிப் ரீடிங் செய்யாதே'என்று தன் மகளிடம் சொல்கிறான். அவளும் சரி என்று தலையாட்டி எழுந்து செல்கிறாள். வீட்டு வாசல் சென்று நின்றவளை திரும்பி நிற்க சொல்கிறான். கரீம் அவளின் முதுகுப்பக்கம் பார்த்து அமர்ந்திருக்கிறான். கரீம் பக்கத்தில் அவன் பையன் அமைதியாக அமர்ந்திருக்கிறான். கரீம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் மெளமாக நிற்கிறாள். மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று உணர்ந்த கரீம் தன் மகனை பார்க்கிறார். அடிப்பதற்காக கரீம் எழுந்திரிக்க அவனின் மகன் பயந்து வீட்டின் வாசலை கடந்து தெருப்பக்கம் ஓடுகிறான்.



அடுத்தமாதம் தன் மகளுக்கு பரிட்சை இருப்பதால் செவிட்டுமிஷினை சரி பார்த்து வர டாக்டரிடம் செல்கிறான். மிஷினிலுள்ள மைக்ரோ ப்ராஸசர் வேலை செய்யவில்லையென்றும் இனியும் இந்த மிஷினை உபயோகப்படுத்த முடியாதென்றும் டாக்டர் கூறுகிறார். புதிய செவிட்டு மிஷின் அதிகவிலையென்று டாக்டர் கூறியதால் அதற்கு பணத்தை புரட்ட வழி தேடிகிறான் கரீம்.



நெருப்புக்கோழி பண்ணை முதலாளியிடம் புதிய செவிட்டு மிஷினுக்கான பனத்தை அட்வான்சாக வாங்க நினைக்கிறான் கரீம். பண்ணையில் வேலை செய்பவர்கள் நெருப்புக்கோழியின் தலையை கருப்புதுணியால் மறைத்து பின்பக்கமாக நடக்க வைத்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகின்றனர். பின்பு நெருப்புக்கோழியின் தலையிலுள்ள கருப்பு துணியை அவிழ்த்து விடுகின்றனர். அப்படி கருப்புதுணியை அவிழ்த்துவிடும் போது நெருப்புக்கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பித்து காட்டுப்பக்கமாக ஓடிவிடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் தப்பிச்சென்ற நெருப்புக்கோழியை பிடிக்கமுடியாமல் போகிறது.



நெருப்புக்கோழி ஒன்றை தவறவிட்டதற்காக அவன் வேலை பறிபோகிறது. அவனை வேலைவிட்டு தூக்கிய அன்று அவனுக்குரிய சம்பளபணமும் கூடுதலாக ஒரு நெருப்புக்கோழி முட்டையும் கிடைக்கிறது. அன்றைய இரவு நெருப்புக்கோழியின் முட்டையால் செய்த ஆம்லெட்டை பகிர்ந்து பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு கொடுத்து வர சொல்கிறாள் கரீமின் மனைவி.



செவிட்டுமிஷினை சரி செய்துவர நகரம் சென்ற கரீமுக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கிறது. வேலை ஸ்கூட்டரில் சவாரி எடுப்பது. ஸ்கூட்டரில் ஒருவரை ஒரு இடத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வேறோரு இடத்தில் இறக்கிவிட்டு அவர் தரும் தொகையை வாடகையாக பெற்றுக்கொள்வான். இதுவே அவனுக்கு நாளடைவில் தொழிலாக ஆகிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தும் தன் மகளின் செவிட்டு மிஷினுக்கான பணத்தை அவனால் சம்பாதிக்கமுடியவில்லை.



கரீம் தன் தின ஸ்கூட்டர் சவாரியில் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறான். கேட்ட தொகைக்கு விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து சென்றவர், பணம் கொடுக்காமலே கொடுத்ததாக சொல்லி சண்டை செய்தவர், சட்டை கிழிந்து போன போது உபயோகித்த நல்ல சட்டையை கொடுத்து உதவி செய்தவர் என்று தினமும் ஒவ்வொரு விதமான மனிதர்களை சந்திக்கிறான். ஒரு முறை சிக்னனில் காத்திருந்த போது சாம்ராணி புகை போட்டு சிறுமி பணம் கேட்டு கொண்டிருந்தாள். கரீம் அவளுக்கு பணம் தர எண்ணி சட்டையில் பேண்டில் இருக்கும் பணத்தை பார்க்கிறான். சில்லரை இல்லாததால் ஒவ்வொரு காரின் கண்ணாடியை தட்டி சில்லரை கேட்கிறான். ஒரு கார்காரன் பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை தராமல் சென்று விடுகிறான். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கரீம் சிக்னல் சிகப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறிவிட சிறுமிக்கு பணம் எதுவும் போடாமல் சிக்னலை கடந்து சொல்கிறான்.



நகரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் இடது புறத்தில் சிறுவர்கள் ரோஜாபூக்கள் கொத்துகொத்தாக விற்பதை பார்க்கிறான். ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து இடது பக்கமாக ரோஜாப்பூக்கள் விற்கும் கூட்டத்தை நோக்கி செல்கிறான். சிறுவர்கள் கூட்டம் கரீமை பார்த்து பயந்தோடுகின்றனர். அந்த சிறுவர்கள் கூட்டத்தில் கரீமிம் மூத்த மகளும், மகனும் இருக்கின்றனர். மீன் குஞ்சுகள் வாங்க பணமில்லாததால் அதற்கான பணம் சேகரிப்பதற்காகவே இதை செய்தாக கரீமிடம் கூறுகிறான் கரீமீன் பையன்.



கரீம் கிணற்றுப்பக்கம் சென்று பார்க்கிறான். கிணறு சுத்தமாக இருக்கிறது. கிணற்றிலிருந்த குப்பைகள், மண் கழுவுகள் கிணற்றின் வெளியே கொட்டியிருப்பதை பார்க்கிறான். கிணற்று திண்டில் குருவி கூடு கெட்டியிருக்கிறது. கிணற்று மேல்வரை தண்ணீர் இருப்பதை பார்க்கிறான். தன் மகன் செய்யும் செயல்கள் யாவும் உபயோகமானவையே என்று எண்ணுகிறான் கரீம்.



நகரத்திலுள்ள ஒரு கட்டிட கழிவிலிருந்து எடுத்துவந்திருந்த ஜன்னல், கதவு, ஹீட்டர் போன்றவற்றை வீட்டு வாசலின் முன் போட்டு வைத்திருக்கிறான் கரீம். குளிர்காலம் தொடங்கவிருப்பதால் வீட்டிற்கு தேவையான சாமான்களை அதிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் கால் உடைந்து விடைகிறது. இதனால் நகரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே ஓய்வு எடுக்கிறான். கரீமின் மனைவி தையல் வேலை செய்து பணம் புரட்டுகிறாள். கரீமின் பையன் பூந்தொட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து சென்று சம்பாதிக்கிறான். கரீம் பையனின் மனதில் மீன்கள் வளர்த்து பணம் சம்பாதிக்கும் ஆசை மட்டும் அழியாமல் இருக்கிறது. நகரத்திலிருந்து மீன்கள் வாங்கிவரும் போது மீன்கள் எடுத்துவந்த பிளாஸ்டிக் பீப்பாயின் துளை வழியே நீர் கசிந்து வெளியேறுகிறது. மீன்களை காப்பாற்ற பிளாஸ்டிக் பீப்பாவிலிருந்து மீன்களை மாற்றும்போது பீப்பாய் சரிந்து விழுந்து மீன்கள் தரையில் விழுந்து மடிகின்றன. ஒரே ஒரு மீனை மட்டும் காப்பாற்றி பிளாஸ்டிக்கவரில் எடுத்து வந்து மீன் வளர்க்க அமைத்திருந்த கிணற்றினுள் விடுகின்றனர். கரீமின் உடல் நன்கு தேறி வருகிறது. ஓடிப்போன நெருப்புக்கோழி மீண்டும் பண்ணை வந்த சேதி கேட்டு பண்ணைக்கு செல்கிறான். மாலைப்பொழுதின் மஞ்சள் வெளியில் நெருப்புக்கோழி ஒன்று ஆனந்த நடனம் ஆடுவதை பார்க்கிறான்.



இத்திரைப்படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதையென்றாலும், அந்தக் குடும்பம் வாழும் கிராமம், கிராமத்திலுள்ள நெருப்புக்கோழி பண்ணை, பொட்டல்காடு, கிராமத்தின் மற்றொரு புறம் பச்சைபசேலென்று வயல்வெளிகள், கிணறு என்று வாழ்வியல் சார்ந்த திரைப்பட வரிசையின் பட்டியலிட்டால் இப்படம் நிச்சயம் சேரும். இப்படத்தில் ஹீரோவாக நடித்த 'Reza Naji'க்கு 'Asia Pacific Screen Awards 2008'ல் 'Best Performance by an actor' அவார்ட் கிடைத்துள்ளது.
 
வல்லினம் ஜீலை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது

No comments:

பார்வைகள்