Sunday, August 8, 2010

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)


ஹைய்தராபாத் ஃபிலிம் கிளப்பில் 'Mexican Film Festival' நடத்தப்பட்டது. ஜந்து தொகுப்புகள் கொண்டது. முதல் தொகுப்பாக மெக்சிகன் சூப்பர் ஹீரோ எல் சேன்டோ நடித்த ஜந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் நான்கு திரைப்படங்கள் பார்த்தேன்.


திரையிடப்பட்ட படங்கள் 1963 முதல் 1972 க்குள் வெளியானவை. எல் சேன்டோ மெக்சிகன் சினிமாவின் சூப்பர் ஹீரோ. சேன்டோ ஒரு மல்லியுத்த வீரன். அவனது முதன்மையான தொழில் மல்லியுத்தம் விளையாடுவது. இரவில் மல்லியுத்தம் விளையாடுவான் பகலில் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவுகிறான். சேன்டோ சூப்பர் ஹீரோ என்றாலும் மற்ற சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், பேட்மேன், சூப்பர்மேன் போன்றோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். இவர்கள் செய்யும் சாகசங்களான மணிக்கட்டிலிருந்து வலை வரவைப்பது, வவ்வால் போல் பறப்பது, ஆகாயத்தில் பறப்பது போன்ற எந்தவொரு அபார சக்தியும் இவனிடம் கிடையாது. சேன்டோ நல்லதேக பலமும் கூடுதலாக புத்தி கூர்மையும் கொண்டவன். சேன்டோவை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது அவன் முகத்தில் அணிந்திருக்கும் சில்வர் நிற கவசம்.

சேன்டோவின் அறிமுக காட்சியானது ஒவ்வொரு படத்திலும் மல்லியுத்த களத்திலிருந்து தொடங்குகிறது. சேன்டோ அரங்கினுள் நுழைந்தவுடன் பார்வையாளர்கள் உற்சாக குரலில் அவன் பெயர் சொல்லி வரவேற்கின்றனர். முதலில் அடி வாங்கினாலும் இறுதியில் சேன்டோவே ஜெயிக்கிறான். திரைப்படத்தில் காண்பிக்கும் மெக்சிகோ நகரிலுள்ள மல்லியுத்த களமானது நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் ரெஸ்லிங் மைதானம் போலவே உள்ளது. விளையாட்டின் விதிமுறை, முகத்தில் குத்துவிடுவது, மேலிருந்து வயிற்றின் மேல் விழுவது என எல்லாமே இப்போது பார்க்கும் மல்லியுத்தம் போலவே இருந்தது.

'Anonymous Death Threat' திரைப்படத்தில் சேன்டோ விளையாட்டு முடிந்து தன் அறையில் ஓய்வெடுக்கிறான். அப்போது அவனை தேடி ஒருவர் உதவி கேட்டு வருகிறார். தேடி வந்தவர் தன்னை கொலை செய்யப்போவதாக கடிதம் வந்ததாக சேன்டோவிடம் கூறுகிறார். தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று சேன்டோவிடம் கூறிவிட்டு செல்கிறார். தேடிவந்தவர் சில நாட்களில் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். அவரைப்போலவே நகரத்தில் இரண்டு பேர் கொலைமிரட்டல் கடிதத்தின் பின்னர் கொல்லப்படுகின்றனர். மொத்தம் மூன்று கொலைகள். கொலையில் பணமோ, நகையோ திருடு போகவில்லை. இன்ஸ்பெக்டர் ஒருவர் சேன்டோவுடன் சேர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார். மூன்று கொலைகளுக்கும உள்ள ஒரே ஒற்றுமை கொலைமிரட்டல் கடிதம்.

கதையின் நகர்வு, கொலையை பற்றி விவாதம் செய்வது சுஜாதா கதை சொல்லும் பாணியை ஒத்திருந்தது. சுஜாதாவின் கதாபாத்திரங்களான கணேஷ், வசந்த் போல இந்தப்படத்திலும் சேன்டோவிற்கு உதவியாக ஒரு ஆணும் பெண்ணும் உடனிருக்கின்றனர். மூவரும் கொலை பற்றி விவாதம் செய்கின்றனர். அதே நகரில் நான்காவதாக ஒருவருக்கு இதே போல் கொலை மிரட்டல் கடிதம் வருகிறது. கதை அதன் பின் விறுவிறுப்பாக செல்கிறது. கொலையை யார் செய்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

சேன்டோவை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். ஜேம்ஸ் பாண்ட் ஏற்று நடித்த உளவுத்துறை, போலீஸ் போன்ற பாத்திரங்களில் சேன்டோவும் நடித்திருக்கிறார். 'Santo Vs Blue Demon' என்ற மற்றொரு படத்தில் உலகை அழிக்க திட்டமிடும் விஞ்ஞானியின் திட்டத்தை முறியடிக்கிறான் சேன்டோ. இந்தப்படம் 1970ல் வெளியாகியுள்ளது. படத்தின் கதையானது மெக்சிகோ விஞ்ஞானி 1940ம் ஆண்டு ரஷ்யாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறான். பின்பு அவனிடமிருந்து ரஷ்யர்கள் நியூக்ளியர் பாம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு அவனை துரத்தி விடுகின்றனர். இதனால் கோபமடைந்த விஞ்ஞானி நியூக்ளியர் பாமை சந்திரன் கிரகத்திலிருந்து புவியில் வீசி உலகத்தையே அழிக்க திட்டமிடுகிறான். படத்தின் லாஜிக்கில் எந்தவொரு பிழையும் இல்லை. நூறு சதவீதம் நிகழக்கூடியதுதான். நாற்பது வருட இடைவேளைக்கு பின் பார்க்கப்படும், பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அதன் பிரமாண்டங்கள் இப்போது தெரியவில்லை.

உலக சூப்பர் ஹீரோக்களின் படங்களை பார்ப்பவர்கள் மெக்சிகன் சூப்பர் ஹீரோவான எல் சேன்டோவின் படங்களையும் பாருங்கள்.

வல்லினம் ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகியுள்ளது

No comments:

பார்வைகள்