மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி
2999ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம்தேதி,
ரோடுநம்பர் 12, பஞ்சாராகில்ஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தான் சிவா. மழை லேசாக தூரல் போட்டுக் கொண்டிருந்தது. இரவு பத்துமணி என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை. சிகப்புநிற பேக்-ரவுண்ட் நிறத்தின் மீது வெள்ளை நிறத்தில் 'சிகப்புவிளக்கு' என்று எழுதியிருந்த ஃப்ளக்ஸ்-போர்டு தொங்கவிடப்பட்டிருந்த வீட்டின் வாசற்கதவை திறந்து வீட்டினுள் சென்றான் சிவா.
"உங்களுக்கு எந்த ரகம் வேணும். 18யிலிருந்து 20வதா, 21லிருந்து 25, 26லிருந்து 30பதா இல்ல 31க்கு மேலேயா. நாங்க அரசாங்க அனுமதி பெற்ற நிறுவனம். எங்களிடம் இருக்கும் பெண்களுக்கு பாலியல் நோய்கள் கிடையாது. முறையான செக்ஸ் பயிற்சி பெற்றவங்க. அவங்க நிச்சயம் உங்களை சந்தோசப் படுத்துவாங்க" என்ற கூறிய ரிசப்ஷனிஸ்ட் சிவாவிடம் போட்டோ ஆல்பத்தை கொடுத்தாள்.
போட்டோவில் பெண்கள் பிங்கினியில் இருந்தனர். அதுவே அவர்களின் அதிகபட்ச ஆடையாக இருந்தது. ஒவ்வொரு பக்கங்களாக திருப்பினான். போட்டோ ஆல்பத்தின் கடைசி பக்கமும் வந்தது.
"உங்க பிறப்பு எண்ணை சொல்லுங்க?" என்று கேட்டாள் ரிசப்ஷனிஸ்ட்.
சிவா பதினைந்து இலக்க பிறப்பு எண்ணை ரிசப்ஷனிஸ்டிடம் கூறினாள். பிறப்பு எண்ணை கணிணியில் கொடுத்த உடன் சிவா பற்றிய முழுவிவரத்தையும் கணிணி தெரிவித்தது.
"வேற ஆல்பம் இருக்கா?"
"இல்லை. எங்களிடம் இப்ப இவ்வளவுதான்"
சிவா அறையை நோட்டமிட்டான். ஒரு பெண் கடற்கரை மணலில் ஆடையில்லாமல் படுத்திருக்கும் புகைப்படம் சுவரில் தொங்கியது. ஆடையில்லாவிட்டாலும் அந்தபெண் தன் இளமைகளை மறைத்தேயிருந்தாள். அவளை பார்த்தவுடன் சிவாவிற்கு பிடித்துப்போனது.
"சார், நீங்க ஓரினசேர்க்கையாளரா?"
சிவா அவளை ஏறஇறங்க பார்த்தான்.
"எங்களோட ஜீப்லிகில்ஸ் ஆபிஸ்ல நிறைய பேர் இருக்காங்க. நம்ம முதல்வர் சீனிவாசரெட்டியோட பாய் ப்ரெண்ட் பரந்தாமன் கூட அங்க அடிக்கடி வருவார்"
அப்படியெல்லாம் நான் கிடையாது என்பது போல் தலையை ஆட்டிவிட்டு சுவரில் இருந்த பெண்ணின் படத்தை காட்டினான்.
"அவங்க பெயர் காமினி. இப்ப வேற கஸ்டம்மர் கூட இருக்காங்க. நாளை மறுநாள் இரவு 10:30 மணி ஸ்லாட் காலியா இருக்கு. அதில் புக் செய்யவா?"
"நாளைக்கு காலையில ஃப்ரியா இருக்கா?"
"அவங்களுக்கு நாளைக்கு விடுமுறை. இரண்டு நாளைக்கு ஒருக்க தான் வேலை பார்ப்பாங்க. அவங்களும் மனுஷங்கதான?"
"பார்க்கிறது தேவ.... பிழைப்பு, இதுல உங்களுக்கு நேரம், ஸ்லாட், புக்கிங்க், என்னங்கடி கதவிடுறீங்க?"
"ஹாலோ மிஸ்டர் கொஞ்சம் மரியாதையா பேசுங்க. நாங்களாவது உடலவித்து சம்பாதிக்கிறோம். உன்னமாதிரி நாங்க ஒண்ணும் 35 வயசாகியும் வேலையில்லாம அரசாங்கம் கொடுக்கிற ஓசி பணத்தில ஜீவனம் செய்யல. விஷம் வச்சி கொன்னுட்டு நாட்டுக்காக செத்துட்டான்னு சொல்ற JAC கூட்டத்தோட சேர்ந்து போராட்டத்துல கலந்துட்டு போலீஸால நான்குமுறை கைது செய்யப்பட்டிருக்க"
"தெருக்கு தெரு விபச்சார விடுதி நடத்தி பணம் சம்பாதிக்கிற நீங்களும் உங்க அரசாங்கமும் சீ..... தூ......"
"நீ இப்ப வெளிய போறீயா இல்ல போலீஸ்க்கு போன் செய்யவா?"
சிவா சிகப்புவிளக்கு கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கட்டிடத்தின் மாடியை பார்த்தான். அவன் புகைப்படத்தில் பார்த்த பெண் நின்று கொண்டிருந்தாள்.
***********
கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு எழுந்து சென்று அறைக்கதவை திறந்தான் சிவா.
"உனக்கு எப்படி என் வீடு தெரிந்தது?"
"உன்னை பின் தொடர்ந்து வந்தேன்"
"உன் பெயர்..............., வாய்க்குள்ள வரமாட்டேங்குதே"
"காமினி"
முழுஆடையிலும் காமினி அழகாக இருந்தாள். தலை முதல் பாதம் வரை ஒரு முறை காமினியை பார்த்தான்.
"JACயில் உன்னோட பங்கு என்ன?"
"கவிதை எழுதித்தருவது. பேச்சாளர்களுக்கு வசனம் எழுதிக்கொடுப்பது. கவிதையை விட வசனத்திற்கே அதிக பணம் தருகின்றனர்"
"வேற?"
"B.Ed முடிச்சி எட்டு தடவை DSC பரிட்சை எழுதியிருக்கேன். ஒவ்வொரு வருஷமும் ஒரே ஒரு மார்க்குல அரசாங்க வாத்தியார் வேலை கிடைக்காம போயிடுச்சி. நான் வேற OC பிரிவை சேர்ந்தவன். இந்த வருஷம் நிச்சயம் வேலை கிடைச்சிடும்"
"இந்த வருஷம் நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும். ஆந்திரமாநிலம் உடைஞ்சி தனி தெலுங்கானா உருவாகும். நமக்காக ஒரு விடியல் காத்துட்டிருக்கு"
"நீங்க என்ன செய்றீங்க?"
"நீ, நான் என்பது அர்த்தமற்ற சொல். JACயில் மறைமுகமாக வேலை செய்து வருகிறேன். அகிம்சை முறையில் ஒன்றை அடைய அதிக வருடங்கள் பிடிக்கும். 150 வருட அகிம்சை போராட்டம் போதும். என்ன கிடைத்தது? நம் தரப்பில் மடிந்த உயிர்கள் எத்தனை? இனியும் அகிம்சை வேண்டாம். வாலை எடு லட்சியத்தை அடை. நம் லட்சியத்தை அடைய குறுக்கே நிற்பவர்களின் தலையை வெட்டி தெலுங்கானா காளிக்கு உயிர்பலி கொடுப்போம். ஜெய் தெலுங்கானா! ஜெய் தெலுங்கானா!" என்று உரக்க கத்தினாள் காமினி.
இரவின் நிசப்தம் கலைந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சப்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தனர். சிவாவிற்கு காமினியை முதன்முதலில் பார்த்த போது உருவான காம இச்சை முற்றிலும் வடிந்திருந்தது. அவளை இப்போது பார்க்கும் போது சிவாவினுள் ஒருவித பயம் உருவாகியிருந்தது.
*****************
காமினி தொலைப்பேசியில் பேசுவதற்காக நம்பரை டையல் செய்து கொண்டிருந்தாள்.
"நீங்கள் டையல் செய்த எண்ணை தொடர்பு கொள்ள உங்களின் பிறப்பு எண் மற்றும் பெயரினை பதிவு செய்யவும்" என்று சொன்னது ஆட்டோமேட்டிக் வாய்ஸ்.
காமினி தன் பிறப்பு எண் மற்றும் பெயரினை பதிவு செய்த பின்பு
"உங்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்படும். இது அரசாங்க உத்தரவு. நீங்கள் தொடர்பு கொண்ட நபருடன் இப்போது பேசலாம்" என்று கூறி ஆட்டோமேட்டிக் வாய்ஸ் நின்றது.
மறுமனையில் "ஹலோ காமினி, எப்படி இருக்க?"
"நான் நல்லாயிருக்கேன். என்னோட அடுத்த கட்ட வேலை?"
"காந்தி மருத்துவமனை"
*****************
காந்தி மருத்துவமனையில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் சீனிவாசரெட்டி மருத்துவமனையின் வாசலை கடந்து உள்ளே செல்ல அவருடைய பாய்-ப்ரண்ட் பரந்தாமன் முதல்வரை பின் தொடர்ந்து சென்றார். எம்.பி சபிதாரெட்டி இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையினுள் முதல்வர் சென்றார்.
மற்றொரு அறையில் வயது முதிர்ந்த பெண்ணிற்கு இ.சி.ஜி எடுத்துக் கொண்டிருந்தார் டாக்டர். டாக்டர் தட்டையான கைபிடி கொண்ட மிஷினை அந்த பெண்ணின் வயிற்றில் வைத்து அழுத்தினார். இ.சி.ஜி திரையில் அந்த பெண்ணின் குடல் தெரிந்தது.
"டாக்டர், வயித்துல எதும் புண் இருக்குதான்னு பாருங்க. எது சாப்பிட்டாலும் வயித்துல நிக்கமாட்டேங்குது. வயித்தால போகுது"
"அதாம்மா பாத்துட்டு இருக்கேன். வெளிய போகும் போது வயிறு வலிக்குதா?"
"ஆமா டாக்டர்"
"எங்க வலிக்குது. மேல் வயிறா இல்ல கீழ் வயிறா"
டாக்டர் தட்டையான மிஷினை வயிற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் வைத்து அழுத்தி இ.சி.ஜி திரையினை பார்த்தார். முதல்வர் மருத்துவமனைக்கு வந்திருப்பதாக கூறி டாக்டரை அழைத்துச் சென்றாள் அறையினுள் நுழைந்த நர்ஸ்.
"அம்மா, ஒரு பத்து நிமிஷம். முதல்வர் வந்திருக்கிறார். பாத்துட்டு வந்திடுறேன்" என்று கூறி அறையை விட்டு வெளியே சென்றார் டாக்டர்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கிவிட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
காமினி வெளியே குதித்த மறுநிமிடம் மருத்துவமனையில் வைத்திருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது.
*********************
வெடிவிபத்து நடந்த காந்தி மருத்துவமனையை சுற்றி நியூஸ் ரிப்போர்ட்டர்கள் சூழ்ந்திருந்தினர். அதிர்ஷ்ட வசமாக முதல்வர் சிறுகாயங்களுடன் தப்பித்துக்கொண்டார். விபத்தில் உயிரிழந்தோர்க்கு தலா 10 கோடி ரூபாய் பணமும், உடல் பாகங்கள் ஊனம் அடைந்தோர்க்கு 1கோடி ரூபாய் பணமும், சிறு காயங்கள் அடைந்தோர்க்கு 50 லட்சமும் முதல்வர் நிதியிலிருந்து வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. JAC அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருந்தது.
"ஹலோ காமினி, எப்படி இருக்க?"
"உங்களாள எப்படி இந்த நேரத்தில நலம் விசாரிக்க முடியுது. ஏதோ தவறுதல் நடந்திருக்கு. நான் சரியாதான் ப்ளான் செய்திருந்தேன்"
"நாம நம்ம வேலையை சரியா செய்திருக்கோம். அதனால தான் இந்த அளவாவது செய்ய முடிந்தது. ஆனா எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அது அடுத்தமுறை நடக்காம பார்த்துக்கோ"
"இது மாதிரியான தவறு நிச்சயம் அடுத்த முறை நடக்காது" காமினி சொன்னதும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
*********************
இரவு ஒருவித மயக்கத்தில் இருந்தது. கட்டிலின் மேல் இரண்டு உடல்கள் புரண்டு கொண்டிருந்தன. உடலின் வெப்பம் கூடிக்கொண்டே சென்றது. புணர்ச்சி முடிந்து கட்டிலிலிருந்து எழுந்த முதல்வர் சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தார். மணி 4:30யென காட்டியது. முதல்வர் தன்னுடைய லேப்-டாப்பை ஆன் செய்தார். JAC அமைப்பினரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. எழுத்துப்பதிவு இல்லாமல் ஆடியோ ஃபைல் இணைக்கப்பட்டிருந்தது. அந்த ஆடியோ ஃபைலை மின்னஞ்சலிலிருந்து டெஸ்க்-டாப்பிற்கு காப்பி செய்து கொண்டு ப்ளே செய்தார்.
"ஜெய் தெலுங்கானா! ஜெய் தெலுங்கானா! வரும் நூற்றாண்டில் தெலுங்கானா நிச்சயம் மலரும். அதற்கான அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு தெரியாமலே நடந்துவருகிறது. இதுவரை எத்தனை உயிர்கள் மண்ணில் மடிந்திருக்கின்றன. அத்தனை உயிர்களின் ஒரே லட்சியம் தனி தெலுங்கானா. ஆந்திர மாநிலம் இரண்டாக உடைய வேண்டும். தெலுங்கானா தனி மாநிலமாகவும், ராயல் சீமா, ஆந்திரா இணைந்து வேறொரு மாநிலமாகவும் வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைவரின் தலைகளும் துண்டிக்கப்படும். மாநிலம் முழுவதும் இரத்த ஆறு ஓடும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையற்று மூடப்படும், மாநிலத்தில் சட்டம் சீர்குலையும், சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மாநிலம் சுடுகாடாக மாறும். இன்று அதாவது நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் AP Formation day விழா மேடைக்கு நீ செல்லக்கூடாது. மாநிலம் முழுவதும் இந்த நாள் கொண்டாடகூடாதென்று சொல்ல வேண்டும். இதையும் மீறி நீங்கள் விழா மேடைக்கு சென்றால் உங்களின் தலை தெலுங்கானா பூமாதேவிக்கு காணிக்கையாக அளிக்கப்படும். காந்திமருத்துவமனையில் நீங்கள் தப்பித்தது போல் இந்த முறை நிச்சயம் நடக்காது"
ஆடியோ ஃபைல் நிறைவு பெற்ற பிறகும் சீனிவாச ரெட்டிக்கு பயம் அடங்கவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது போல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சுவர் கடிகாரத்தை பார்த்தார்.
கட்டிலில் படுத்திருந்த பரந்தாமன் "சீனி வந்து படு. இன்னும் விடிய ரொம்ப நேரம் இருக்கு" என்றார். சுவர் கடிகாரத்தில் மணி 5:30 ஆகி இருந்தது.
**********************
நவம்பர் 1 AP Formation day தினத்தில் முதல்வர் சீனிவாச ரெட்டி ஆற்றும் உரையை பார்ப்பதற்காக சிவா, காமினி இருவரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சியானது எந்தவித தாமதமும் இன்றி சரியான நேரத்தில் தொடங்கப்பட்டது. முதல்வர் தொலைக்காட்சியில் தோன்றினார். முடிகள் முழுவதும் நரைத்திருந்தன, தெளிவான முகம், மீசை தாடி முற்றிலும் மழிக்கப்பட்டிருந்தது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். முதல்வரின் வயதை ஒப்பிடும் போது அவரின் பின்னால் அமர்ந்திருந்த பரந்தாமனின் வயது குறைவாகவே இருக்கும்.
"அனைவருக்கும் வணக்கம். இந்த இனியதோர் நாளில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். AP Formation day பற்றி அனைவரும் அறிந்ததே. ஆந்திரமாநிலத்தின் பிறந்த நாள். ஆந்திரா, ராயல் சீமா, தெலுங்கானா என நாம் வேறுபட்டிருந்தாலும் ஆந்திரமாநிலத்தில் நாம் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மற்றொருவருக்கு அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ. நம்முள் பிரிவு வேண்டாம். நம்முள் பிரிவினை உண்டு பண்ண சில தேச துரோகிகள் முயற்சிக்கின்றனர். அவர்களிடம் பேசவோ, பழகவோ வேண்டாம். அவர்கள் JAC அமைப்பினர் என்று தெரியவந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தவும். JAC அமைப்பினர் வரும் நூற்றாண்டு 3000ம் ஆண்டின் முதல் நாள் ஜனவரி ஒன்றாம் தேதி தெலுங்கானா மலரும் என்று கூறியுள்ளனர். ஏன் தனி தெலுங்கானா தேவை? இப்போது எல்லாமே தனிதனியாகத்தானே இருக்கிறது. தெலுங்கானா பள்ளிகளில், கல்லூரிகளில் மற்ற மாணவர்கள் சேர முடியாது, அரசாங்க வேலைகளில் அந்தந்த பகுதியினரே வேலை செய்கின்றனர். வேறு எதற்கு வேண்டும் தெலுங்கானா? தனி தெலுங்கானா அர்த்தமற்ற வேண்டுகோள். இன்று காலை எனக்கு JAC அமைப்பினரிடமிருந்து ஒரு மிரட்டல் வந்தது. அந்த ஆடியோ ஃபைலில் இருப்பது ஒரு பெண்ணின் குரல். அந்த பெண் பற்றிய தகவல் தருவோர்க்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். இதோ அந்த ஒலிநாடா. நீங்களும் அவள் குறலை கேளுங்கள்"
ஆடியோ ஃபைல் ப்ளே செய்யப்பட்டது. "............................................................."
காமினியின் குரலும் அந்த பெண்ணின் குரலும் ஒன்று போல் இருந்தது.
காமினி சிவாவின் அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற போது காமினியிடமிருந்த துப்பாக்கி தரையில் விழுந்தது. சிவா விரைவாய் சென்று துப்பாக்கியை எடுத்தான்.
"ஸாரி... எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
"சிவா உனக்கு பணம் தேவையா? இல்ல நான் தேவையா?"
சிவா துப்பாக்கியை கீழே போட்டான். காமினி தன் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினாள்.
**********************
' முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமற் போய் ஆறுமணி நேரம் ஆயிற்று. பேகம்பேட் ஏர்போர்டிலிருந்து காலை கிழம்பிய முதல்வர் பகல் பனிரெண்டு மணிக்கு நெல்லூரில் நடக்க இருந்த கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் முதல்வர் இன்னும் நெல்லூர் வந்து சேரவில்லை. இப்போது ஹெலிகாப்டர் எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. முதல்வர் என்ன ஆனார் என்பதும் பதிலில்லா கேள்வியாகவே உள்ளது. முதல்வரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது ' என்று பெண் செய்திவாசிப்பாளர் கூறினார்.
டிவியை சுவிட்ச்-ஆப் செய்ய சென்ற சிவாவின் முதுகில் அவன் பின்னால் நின்றிருந்த காமினி ஓங்கி அடித்ததும் சிவா மயக்கம் போட்டு கீழே விழுந்தான்.
*********************
"ஹலோ காமினி, எப்படி இருக்க?"
"அது இருக்கட்டும் ஸார். முதல்வர் இப்ப எப்படி இருக்கார்?"
"இதுவரைக்கும் ஒரு முழுமையான தகவல் கிடைக்கலை. முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பாகங்கள் தரையில் சிதறி கிடந்ததாக சொல்றாங்க"
"என்ன சொல்றீங்க?" என்று கண்கள் விறிய ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி.
"சரி, நான் கேட்ட ஆள் கொண்டு வந்தியா?"
"ஆமாம்" என்று சிவாவை காட்டினாள்.
"காமினி.... வெல்டன்.... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக்க கொன்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.
"நான் எந்த டைமண்டையும் கொண்டு வரல. இவன் ஒரு வேலையில்லா பட்டதாரி. JACயோட போராட்டத்துல கலந்துட்டு பல முறை போலீஸ் இவனை கைது செய்திருக்காங்க. இவனை இரண்டு தட்டு தட்டினா முதல்வர் எங்க இருக்காருக்கிற விஷயத்தை சொல்லலாம்"
"இல்ல காமினி. நீ தான் தப்பா புரிஞ்சிட்டிருக்க. இவர்தான் எங்க JAC அமைப்போட தலைவர் டைமண்ட் சிவா"
"என்ன சொல்றீங்க பரந்தாமன் ஸார்?"
"சின்ன பொண்ணு நீ. ரொம்ப கோபப்பட கூடாது. உனக்கு கொஞ்சம் தெளிவாகவே சொல்றேன். JAC அமைப்போட தலைவர் சிவா, அதன் செயலாளர் நான். எங்களுக்கு இந்த மாநிலம் வேண்டும். நாங்கள் இந்த மண்ணை ஆள வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். தனி தெலுங்கானா அமைவதற்கு சீனிவாசரெட்டி உயிருடன் இருந்தால் நடக்காது என்பது தெரிந்தது. முதல்வரை கொல்ல முதல்வரின் மறைமுக பாதுகாவலரான உன் உதவி எங்களுக்கு தேவைப்பட்டது. முதல்வரை கொலை செய்து அந்த பலியை உன் மீது போடுவது தான் எங்கள் நோக்கம். அதற்காக உன்னை தெலுங்கானாவிற்கு ஆதரவாக செயல்படுவது போல் உன்னை நடிக்கச்சொன்னேன். உன் குரலை பதிவு செய்தோம். காந்தி மருத்துவமனையில் கொல்ல திட்டமிட்டோம் உன் புத்திசாலி திறமையால் முதல்வர் பிழைத்துக் கொண்டார். அடுத்து உன் குரலில் ஆடியோ ஃபைல் ஒன்று அமைத்து முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தோம். இப்போது நீ மாநிலம் தேடும் ஒரு தீவிரவாதி" என்றார் பரந்தாமன்.
"எங்களின் அடுத்த கட்ட முயற்சியான பறக்கும் ஹெலிகாப்டரில் ராக்கெட் வீசி கொல்வது. அதுவும் இப்போது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இனி நாங்கள் இந்த தேசத்தை சுதந்திரமாக ஆளுவோம். எத்தனை உயிர்களை நாங்கள் கொன்றிருக்கிறோம். இஷான்ரெட்டியை நள்ளிரவில் ஓஸ்மானியா யுனிவர்சிட்டி லைப்ரரி முன்பு உயிரோடு தீயிட்டு கொன்றது, பலருக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை என்று நம்ப வைத்தது. இவற்றையெல்லாம் நாங்கள் எங்களுக்காக செய்யவில்லை. தெலுங்கானா பூமாதேவி மனித இரத்தம் வேண்டுமென்று கேட்கிறாள். உன்னையும் பூமாதேவிக்கே காணிக்கையாக கொடுக்கப்போகிறோம்." என்றான் சிவா.
காமினி சிரித்தாள்.
"சாகப்போவது நான் இல்லை. நீயும் உன் தெலுங்கானா கூட்டமும். உங்கள் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கவே நானும் முதல்வரும் போட்ட திட்டம் தான் இது" என்றாள் காமினி.
முதல்வர் இவர்கள் இருந்த அறையினுள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தார்.
போலீஸ் அவர்கள் இருவரின் அருகில் நெருங்குவதற்கு முன்பு பரந்தாமனும், சிவாவும் ஒருவர் மற்றவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டனர். பூமாதேவியின் இரத்த தாகம் இவர்கள் இருவரின் இரத்தம் குடித்ததும் அடங்கியது.
**********************
- 15/10/10
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
yapppppaaaaaaaaaaaaa
eppudi ellam yosikkureenga
Post a Comment